கொடு…!

மூச்சுக் காற்றையே
முழம்போட்டு விற்றுவிடும் – வெறும்
பேச்சுப் பேசியே
பிறரை ஏமாற்றும்

அன்பை அடகு வைத்து
பாசத்தைப் பங்கு பிரிக்கும்!
ஈவு இரக்கம் வகுத்து…
மீதியும் பார்த்துவிடும்!
இருப்புக் கணக்கைப்

பெருக்க…
இருக்கும் கருப்பை
வெள்ளையாக்கும்!

சொந்த பந்தம்
கூட்டி…
சுயமாய்க் கொழிக்கும்!

எளிய உறவைக்
கழித்துப் போட்டு…
எஞ்சுவதும் புசிக்கும்!

உணர்வுகளைப் பின்னங்களாக்கி
உறவுகளைப் பிரித்துப் போட்டு
கூட்டிக் கழித்தே-
குடும்பம் நடத்தும் மனிதா,

உறவுகளின்
பாசமும் பற்றும்-
வரவு செலவுக் கணக்கில்
சமன் ஆகிவிடாது!

சுமந்த கூலியையும்
சுரந்த பாலையும்
அம்மா கணக்கிட்டால்…
முடிவற்ற கடனில்
மூழ்கிவிட மாட்டாயா?

தளர்ந்த தோளுக்கும்
உலர்ந்த தோலுக்கும்
தந்தை கணக்கிட்டால்…
தாங்கத்தான் முடியுமா?

முத்தக் கணக்கென்றும்
மெத்தைக் கணக்கென்றும்
பாராத மனைவிக்கு…
மாசப் பணமென்று
மழுங்கிப் போவதா?

கூடப் பிறந்தவர்க்கும்
கூட மணந்தவளுக்கும்
கூடக் குறையக் கொடுப்பதில்…
கூடாமல் குறையாது செல்வம்!

கொடு…
அது
படைத்தவன்
உன்னில் விதைத்த
பண்பென உணர்!

– சபீர்

இதை வாசித்தீர்களா? :   என்ன உன் தேவை? (கவிதை)