அற்புதமா, அற்பமா?

றுமையை நம்பும்
மார்க்கம் எனது

உயிருடல் ஒடுங்கி
உணர்வுகள் ஒன்றி
ஒருவனை வழிபடும்
வாழ்க்கை எனது

குறுகிய இம்மையையும்
இறுதியில் தீர்ப்பையும்
உறுதியாய் ஏற்கும்
உள்ளம் எனது

இறைச்செய்தியை
நிறைவாய்த் தந்த
இறுதித் தூதருக்கு
ஸலவாத் மொழியும்
நாவுதான் எனது

கடைசித் தூதரின்
காலகட்டத்தோடு
கடந்து முடிந்தது
ஆண்டவன் அருளால்
அவனடியார் நிகழ்த்திய
அற்புதங்களும் அதிசயங்களும்

இயல்பிலிருந்து
சற்றே விலகி
எதார்த்தமாய் அமையும்…

காய்கறி வடிவில்
கடவுளின் பெயரும்

மீனின் செதில்களில்
ஓரிறை நாமமும்

மேக வடிவங்கள்
மஸ்ஜிதாய்த் தோன்றலும்

வான்வெளி காட்டும்
வேதியல் மாற்றமும்

கடற்கண்ணி ஒதுங்கிய
கடற்கரைப் படங்களும்

உலகம் அழிவதன்
அறிகுறி யூகங்களும்

என
உலகைச் சுருக்கிய
ஊடகம் வாயிலாக
பதிந்தும் பகிர்ந்தும்
எதை நிறுவத்
தவிக்கிறாய் சகோதரா?

மாமறையும் மாநபியும்
கூறாத ஒன்றை
மார்க்கத்தில் நுழைத்து
நிரந்தர நெருப்பில்
நுழைந்துவிடாதே;
நிழல்மிகு சுவனம்
இழந்துவிடாதே!

– சபீர்

இதை வாசித்தீர்களா? :   நிலையில்லா இம்மை....!