105 யானைப் படையினர்

133

யானைப் பல கொண்ட சேனை – இறை
ஆலயம் இடிக்க வந்த வேளை
அப்படையை உம்மிறைவன்
அழித்த தெங்ஙனம், அறியாததா?

பெருத்த பலம் கொண்ட அவர்தாம்
வகுத்தக் கொடும் சூழ்ச்சிதனை
நிகழ்த்த விடாமல் எதிர்த்துத்
தடுத்தவன் உம் இறை யன்றோ?

இறையில்லம் தகர்க்கும் தோன்றலில்
குறைஷியருக் கெதிரான சூழ்ச்சியை
யாவற்றிலும் மிகைத்த இறைவன்
வென்று வீழ்த்திய தறியாததா?

சதிகாரக் கூட்டத்திற் கெதிராக
அதிகாரம் மிக்க இறைவன்
விதித்தது போலவே விரைந்து
எதிர்த்தன வானில் பறவைகள்

சுடப்பட்டச் சிறுசிறுக் கற்களைச்
சுமந்துவந்த பறவைகள் கூட்டம்
திரண்டு வந்தப் யானைப் படை
மிரண்டுவிட வீசின வேகமாய்

கல்லெறிப் பட்டுக் குலைந்தனப் படைகள்
எள்ளளவேனும் எதிர்க்க இயலாமல்
விலங்குகள் மென்று விழுங்கிய மிச்ச
வைக்கோலைப் போல வீழ்ந்தனவே!

oOo

(மூலம்: அல்-குர்ஆன் / சூரா 105: அல்-ஃபீல்)

இதை வாசித்தீர்களா? :   முல்லைப் பெரியாறு
முந்தைய ஆக்கம்இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!
சபீர்
கவிஞர் சபீர் (அஹ்மது அபூ ஷாரூக்) எளிய வரிகளில் ஆழமான பொருளைத் தரும் கவிதைகளைப் புனைவதில் வல்லவர். யதார்த்த மயக்கம் எனும் தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார். அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கவிஞர் சபீர், ஷார்ஜாவின் பிரபல பணிமனை நிறுவனத்தின் மேலாளர் ஆவார்,