உண்மையைத் தேடி… (மடலைப் பிரதியெடுத்துப் பரப்புதல்)

Share this:

எந்த ஒரு செய்தியையும் அதன் நம்பகத்தன்மை குறித்து எந்த ஓர் ஆய்வும் செய்யாமல் அப்படியே பிறருக்கு எடுத்துச் செல்வதனால் விளையும்தீமைகள் பற்றி அறிமுக உரையில் கண்டோம்.

இப்போது முஸ்லிம்களிடையே நிலவும் மிகப் பழமையான ஆனால் சில ஒழுங்கற்ற இடைவெளிகளில் உயிர் பெறக்கூடிய ஒரு வதந்தியைக் குறித்து அலசுவோம்.

ண்மைச் சம்பவம்! அதிசயம் ஆனால் உண்மை!! நான் ஒருநாள் மதீனா பள்ளியில் உறங்கிக் கொண்டிருந்தபோது பெருமானார் (ஸல்) அவர்கள் என் கனவில் தோன்றி “இவ்வுலகில் பாவங்கள் பெருகிவிட்டன. அநியாயம் தழைத்தோங்கி விட்டது. இதனால் நான் மிகக் கவலை அடைந்துள்ளேன். ஏழைகளைப் பணக்காரர்கள் பாடாய்ப்படுத்துகிறார்கள்.

(இன்னும் சில அநியாய நிகழ்வுகள் பட்டியலிடப்படும்)

இவையெல்லாம் தீர வேண்டுமானால் நீ தொழு; திக்ர் செய்; ஜகாத் கொடு.

(இதுவரை விஷமம் இல்லை. இனி வருவது தான் விஷமம்.)

இதனை நீ உடனடியாகத் தெரிந்தவர்களுக்குச் சொல்ல வேண்டும். இதனை ஒருவர் 40 பேருக்குச் சொன்னார், உடன் அவருக்கு 8000 இலாபம் கிடைத்தது (ரூபாயா? டாலரா?) இன்னொருவர் எவருக்கும் சொல்லாமல் உதாசீனப் படுத்தினார், அவர் தன் மகனை இழந்தார்; மற்றுமொருவரோ ஏற்கவும் இல்லை, வெறுக்கவும் இல்லை அப்படியே தன்னுடைய மின்மடற்பெட்டியில் வைத்திருந்தார், அவரும் காலி!

(மிரட்டியாகி விட்டது. இன்னும் படிப்பவரின் இறைநம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்கி விட்டால் வெற்றி தான்!)

இதனை நீ பொய்யென்று நினைக்காதே! நீ ஒரு உண்மையான முஸ்லிமாக இருந்தால் இதனை உனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் உடனடியாகச் சொல்!” என்று சொன்னதாக எழுதியிருக்கும்.

இவ்வகையான மடல்களின் நம்பகத் தன்மை குறித்து அலசுவதற்குமுன் இவற்றின் பொதுவான சில அம்சங்களைப் பட்டியலிடுவோம்.

1. இவ்வகை மடல்கள் அநேகமாக ஏதாவது ஒரு பள்ளி அல்லது தர்காவில் உறங்கும் போது மட்டுமே வந்ததாகச் சொல்லப்படும்.

2. இடத்திற்குத் தகுந்தாற்போல் இந்த மடல்கள் திருத்தப்பட்டிருக்கும் (customized). அதாவது மதீனாவை நாகூர் என்றோ, அஜ்மீர் என்றோ மாற்றி அவ்விடங்களில் அடக்கமாகி இருக்கும் நல்லடியார்களின் பெயர்களைப் பொருத்திவிட்டால், கொஞ்சமும் பொருள் மாறாது பொருந்தி வரும்.

3. மெலிதாக இழையோடும் பயமுறுத்தல் / மிரட்டல் தொனி இருக்கும். அதாவது இதனை நீ இத்தனை பிரதிகள் எடுத்து விநியோகிக்க வேண்டும், இல்லையேல் உன் தலை சுக்கு நூறாக வெடிக்கும் (நகைச்சுவை தான்), இன்ன பிற… இதற்கு ஒரு உதாரணமும் கொடுக்கப் படும். XYZ ஊரில் ABC என்பவர் இதனைத் துச்சமாக வீசியெறிந்தார், அதனால் அவர் ரத்த வாந்தி எடுத்து மாண்டு போனார் அல்லது அவரது உறவினர் ஒருவர் சாலை நேர்ச்சியில் (accident) இறந்தார், இன்னும் இது போல.

4. மிரட்டலுடன் ஒரு நிபந்தனைக்குட்பட்ட சன்மானமும் இவ்வகை மடல்களின் அடையாளங்கள். எடுத்துக்காட்டாக, DEF என்ற ஊரில் GHI என்பவர் இதனை x பிரதிகள் எடுத்து விநியோகித்தார், உடனே அவர் மகளுக்குத் திருமணம் நடந்தது. அல்லது அவர் பெரும் பணக்காரரானார். இன்னும் இது போல.

தற்போது இம்மடல்களின் அபத்தங்களை ஆராய்வோம்.

உலகில் பிறந்த எவருக்கும் எந்த ஒரு குறிப்பிட்ட நாளையோ அல்லது நேரத்தையோ நல்லது என்றோ கெட்டது என்றோ வரையறுக்க இயலாது. ஒருவருக்கு நல்ல நேரமாக இருப்பது இன்னொருவருக்குக் கெட்ட நேரமாக இருக்கலாம். இது தான் உலக நடப்பு. எனவே மேற்கண்ட மடலில் உள்ளது போல ஒருவர் உண்மையில் பணக்காரராகி இருந்தாலோ அல்லது வேறு ஒருவருக்கு மரணம் நேர்ந்திருந்தாலோ அந்நிகழ்வுகள் நிச்சயமாக இறைவனின்நாட்டப்படி நடந்தவையே அன்றி இந்த மடல்களுக்குத் துளியும் தொடர்பில்லாதவை என அறிவுள்ள எவரும் எளிதில் உணரலாம்.

தற்போது இஸ்லாமிய அடிப்படையிலும் இம்மடல்கள் எவ்வாறு அபத்த வகையினைச் சாரும் எனக் காண்போம்.

………இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்…….அல்குர்ஆன் 5:3″

இந்த வசனத்தைச் சரியாக உணர்ந்த எவரும் இவ்வகை மடல்களைக் குப்பையில் உடன் வீசி எறியத் தயங்க மாட்டார். இஸ்லாத்தில் நன்மை தரும் ஏதேனும் ஒரு செயலுக்கு நம்மைப் படைத்த இறைவன் தன் மறையிலோ அல்லது அவனது தூதரவர்கள் சொல் செயல் அங்கீகாரத்திலோ ஆதாரம் காட்டித் தராத எந்த ஒரு செயலும் இஸ்லாமிய அடிப்படையில் இருக்கவே இயலாது.

வஹீயின் வாசல் முழுமையாக அடைக்கப் பட்ட பிறகு, இது போன்ற கனவுகள் உண்மையில் ஒரு வகை மனப்பிரமை ஆக இருக்க வேண்டும் அல்லது பொய்யாக இருக்க வேண்டும்.

விசுவாசிகளே அநேகமான சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் ஏனென்றால் நிச்சயமாக சந்தேகங்களில் சில பாவமானவைகளே…. (அல்குர்ஆன் 49:12)

மேலும்

(நபியே!) நீர் அறியாத யாதொரு விஷயத்தையும் நீர் பின்தொடராதீர்! ஏனென்றால் நிச்சயமாக கண், காது, இருதயம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன் 17:36)

இறைத்தூதருக்கு இறைவன் கூறிய வாக்கை நாமும் பின்பற்றுவது அவசியமாகிறது. தான் அறியாத விஷயங்களைப் பேசுவதும் உறுதியாகாதவரை எந்த விஷயத்தையும் தீர்மானிப்பதும் அதனைப் பிறருக்கு பரப்புவதும் குற்றத்தில் சமமே.

இனி இது போன்ற ஆதாரமற்ற பொய் மடல்களினால் ஏற்படும் விளைவுகளை காண்போம்.

இது போன்ற ஒரு மடல் ஒரு மார்க்க ஞானம் அதிகமில்லாத ஒரு பாமரன் கையில் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். அவன் நன்மையை எதிர்பார்த்து உடன் இதனை ஒரு குறிப்பிட்ட அளவு பிரதியெடுத்து கொடுக்கிறான் எனில் அதனால் உடனடி இலாபத்தை அச்சகம் நடத்துபவர் பெறுகிறார். அந்த ஏழைக்கோ அதனால் தன்னுடைய ஹலாலான சம்பாத்தியம் வீணடிக்கப்படுகிறது.

இன்றைய இணைய யுகத்தில் இவ்வகை வதந்திகள் நவீன வடிவம் பெற்றுள்ளன. எனவே நேரம், பட்டையகலம் (bandwidth), படியெடுத்தல் (backup) போன்ற வளங்கள் (resources) பெருமளவு வீணடிக்கப்படுவதுடன் இணையத்தில் தேவையற்ற தகவல் நெரிசலுக்கும் (data congestion) இவை வழிகோலுகின்றன.

இதற்குத் தூண்டுகோலாக அம்மடலை முதலில் பிரதி எடுத்துக் கொடுத்தவரும் அதனைப் பரப்பியவரும் ஆகிறார். இவ்வுலகில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாளை மறுமையில் இறைவனிடம் பதில் கூற கடமைப்பட்டுள்ள முஸ்லிம்கள் இந்த ஏழையின் உழைப்பை நாசமாக்கியதற்கும் இது போல் எத்தனை பேர் செய்கிறார்களோ அத்தனை பேருடைய உழைப்பை நாசமாக்கியதற்கும் இவ்வாறு செய்பவர் பதில் கூறவேண்டும்.

மேலும் அவ்வாறு ஒருவர் பிரதியெடுத்துக் கொடுத்தபின் அவர் என்ன எதிர்பார்த்து அதனைச் செய்தாரோ அது நடந்து விட்டால் அவருக்கு மார்க்க ஞானம் அதிகமில்லாத காரணத்தினால் சில நேரங்களில் நடந்த சம்பவம் அல்லாஹ்வினால் என்பதனை மறந்து அவ்வாறு பிரதியெடுத்துக் கொடுத்ததினால் தான் நடந்தது என்ற தவறான சிந்தனைக்குள் விழ சாத்தியமிருக்கிறது.

எனவே இது போன்ற தவறான வழிநடத்தல்களுக்கு மற்றவர்களுக்கு வழிகாட்டாமல் பொய் மடல்களை புறந்தள்ள நாம் தயாராக வேண்டும்.

– அபூஷைமா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.