பழகு மொழி (பகுதி-10)

பழகு மொழி 10
Share this:

தமிழ் + சொல் = தமிழ் சொல் என்று எழுதுவது சரியா?

தமிழ் + ச் + சொல் = தமிழ்ச் சொல் என ‘ச்’ எனும் மெய்யைச் சேர்த்து எழுதுவது சரியா? போன்ற மயக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அடுத்து வரவிருக்கும் சொல்லியல் பாடத்தில் ‘வலிமிகுதல்’, ‘வலிமிகா இடங்கள்’ ஆகிய இரண்டு பகுதிகளில் அவற்றை விரிவாகப் படிக்க இருக்கிறோம். இன்றைய பாடம் எழுத்து வகை மெய் மயக்கமாகும்.

(1):10 மெய் மயக்கம்

“அக்கம், அன்பு ஆகிய இரு சொற்களில் எத்தன மெய்கள் உள்ளன?” என ஒரு வினாவை எழுப்பினால், “முதல் சொல்லான அக்கம் இரு மெய்களையும் இரண்டாவது சொல்லான அன்பு, ஒரு மெய்யையும் கொண்டிருக்கின்றன” என்றே விடை சொல்வோம். ஆனால், இந்தப் பாடத்தைப் பொருத்த மட்டில் அந்த விடை தவறானதாம்.

(1):10:1 உடனிலை மெய் மயக்கம்

அக்கம் எனும் சொல், அ+க்+க்+அ+ம் எனப் பிரியும். எனவே, (‘அ’ எனும்) ஓர் உயிர், (‘க்’ எனும்) ஒரு தனிமெய், (‘க’ எனும்) ஓர் உயிர் மெய்,  (‘ம்’ எனும்) ஒரு தனிமெய் ஆகியன அக்கம் எனும் சொல்லில் அடங்கி இருக்கின்றன.

ஒரு சொல்லுக்குள் ஒரு (க்) தனிமெய்யும் அதையடுத்து (க் எனும்) அதே மெய், (அ எனும்) உயிர் கலந்து (க்+அ=க என்று) இரட்டித்து வருவதை, “உடனிலை மெய் மயக்கம்” எனக் கூறுவர்.

கீழ்க்காணும் காட்டுகள் பாடம் (1):8இல் கொடுக்கப் பட்டன:

பாக்கம் (பா+க்+க்+அ+ம்), அச்சம் (அ+ச்+ச்+அ+ம்), வாட்டம் (வா+ட்+ட்+அ+ம்), இங்ஙனம் (இ+ங்+ங்+அ+ன்+அ+ம்), அஞ்ஞானம் (அ+ஞ்+ஞ்+ஆ+ன்+அ+ம்), கண்ணன் (க+ண்+ண்+அ+ன்), பொய்யாமொழி (பொ+ய்+ய்+ஆ+ம்+ஒ+ழ்+இ).

(1):10:2 வேற்றுநிலை மெய் மயக்கம்

‘அன்பு’ (அ+ன்+ப்+உ) எனும் சொல்லில் (‘அ’ எனும்) ஓர் உயிரும் (‘ன்’ எனும்) ஒரு தனிமெய்யும் (‘பு’ எனும்) ஓர் உயிர் மெய்யும் உள்ளன. இவ்வாறு ஒரு தனிமெய்யை அடுத்து அதே மெய்யல்லாத வேறொரு மெய்(ப்), உயிர்(உ) கலந்து(பு) வருவதை. “வேற்றுநிலை மெய் மயக்கம்” எனக் கூறுவர்.

(1):10:3 இரு தனிமெய் எழுத்துகள்

உரைநடையில், தன்னை அடுத்து இன்னொரு தனிமெய்யை ஏற்றுக் கொள்ளும் தனிமெய்கள் ய்,ர்,ழ் ஆகிய மூன்றாகும். “ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற” – தொல்காப்பியம், எழுத்தியல் 15. (செய்யுள்களில் ஒற்றளபெடை எனும் விதிவிலக்கு உண்டு).

காட்டுகள்:

ய் : வாய்க்கால், பாய்ச்சல், காய்த்தல், வாய்ப்பு

ர் : பார்க்க, உணர்ச்சி, பெயர்த்து, ஈர்ப்பு

ழ் : வாழ்க்கை, மகிழ்ச்சி, வாழ்த்து, காழ்ப்பு

(1):10:4 ஏற்பன, மறுப்பன, சேர்ப்பன

ஒரு சொல்லுக்குள் ‘ச’கர மெய்(ச்)ஐ அடுத்து ‘ச’கர வரிசை (உயிர்) மெய் மட்டுமே இடம் பெறும். தன்னை ஒட்டி வேறு எந்த (உயிர்) மெய்யையும் சகர மெய் ஏற்காது.

காட்டுகள்:
ச்சை, கச்சு, இச்சை, தச்சு, குச்சி.

க,த,ப ஆகிய வல்லின மெய்களுள் எதுவும் தன்னை ஒட்டி, தன் இன (உயிர்) மெய்யைத் தவிர பிற இரண்டின் (உயிர்) மெய்களை ஏற்பதில்லை. அவ்வாறு ஏற்பவை தமிழ்ச் சொற்களாகா என்பதறிக.

காட்டுகள்:
க்தி, சப்தம், சமத்காரம் ஆகியன வடமொழிச் சொற்களாகும்.

வல்லின மெய்களை ஒட்டி வல்லினமே அல்லாது மெல்லின, இடையின (உயிர்) மெய் எழுத்துகள் இடம் பெற்றிருந்தால் அவை வடமொழிச் சொற்களாகவே இருக்கும்.

காட்டுகள்:
நாகரத்னம் (ன மெல்லினம்), சாத்வீகம் (வீ இடையினம்), வியாக்யானம் (யா இடையினம்) ஆகியன வடமொழிச் சொற்களாகும்.

இதனாற்றான், மேற்காணும் வடமொழிச் சொற்களோடு தமிழ்ச் சொல் இலக்கணத்துக்கு ஏற்ப முறையே நாகரத்தினம், சாத்துவீகம், வியாக்கியானம் என அச்சொல்லுக்குள் உள்ள மெய்யெழுத்து, இரட்டித்து உயிர் கலந்து எழுதப் படுகிறது.

வடசொற் கிளவிவடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே – தொல்காப்பியம், எச்சவியல் 5.


-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

அதி. அழகு

<முன்னுரை | பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3 | பகுதி-4 | பகுதி-5 | பகுதி-6 | பகுதி-7 | பகுதி-8 | பகுதி-9>


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.