அமாவாசை நிலாக்கள்! – புதிய தொடர் அறிமுகம்

Share this:

லகிலா அருளும் அளவிலா அன்பும் இலகுமோ ரிறையின் இனியபேர் போற்றி !!!
உலகெலாம் படைத்தே உயர்வுறக் காக்கும் புலமையோன் தனக்கே புகழெலாம் உரிய !!!

பேரா. அப்துல் கஃபூர்[1]

புதிய தொடர் அறிமுகம்

ஸ்ஸலாமு அலைக்கும்.

“பதியப்பட்டுள்ள உலக வரலாற்றில் ஏறத்தாழ 1600 ஆண்டுகளுக்கான பக்கங்கள் வெறும் தாள்களாக இருக்கின்றன” என்றால் நம்ப முடிகிறதா? ஆம்! உண்மை அதுதான். அத்தனை ஆண்டுகளில் உலகில் நடத்தப்பட்ட ஆய்வுகள், புதிய கண்டுபிடிப்புகள், மனித குல நாகரிகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய நிகழ்வுகள் என்பன எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவை? அவற்றை நிகழ்த்தியவர்கள் யாவர்? அவர்களின் சேவை எத்துணை மகத்தானது? என்பனவற்றை அலசி ஆய்வு செய்து சகோ. அபூபிலால் (அப்துர் ரஷீத்) தம் தேர்ந்த எழுத்து நடையால் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு அளிக்கின்றார். – சத்தியமார்க்கம்.காம்

நான் எழுத்தாளனல்லன்; குறிப்பிடும் படியாக இதற்குமுன்  எழுதியதுமில்லை. சிறு வயதிலிருந்தே வாசிக்கும் பழக்கமுள்ளவன். தொடக்கத்தில் கையில் கிடைத்ததையெல்லாம் வாசிக்கத் தொடங்கி, பின்னர் புதினங்கள்,  வரலாறு, பண்டைய நாகரிகம், அறிவியல் கண்டுபிடிப்புகள் என்று பல தளங்களில் வாசிக்கக் கற்றுக்கொண்டவன்; இன்றும் வாசித்துக் கொண்டிருப்பவன், ஆகவே இது ஓர் எழுத்தாளன் எழுதிய நூலில்லை. மாறாக,  ஒரு வாசகன், தான் படித்து வியந்தவற்றிலிருந்து, பிரமிப்படைந்தவற்றிலிருந்து, குறிப்பெடுத்து எழுதிய ஒரு தொடர்.

வாசகர்களெல்லாம் புத்தகம் எழுதிக் கொண்டா இருக்கிறார்களென்றால் இல்லை. பின் ஏன்? ஏனென்றால் இந்தத் தொடரின் வழியாக நான் பார்த்துப் பரவசமடைந்து பிரமித்து நின்ற காட்சிகளையெல்லாம் கண்டுகளிக்க வாசகர்களைக் கூட்டிச் செல்லவேண்டும் என்பதும் தமிழில் இந்தக் குறிப்புகளை ஆவணப்படுத்தவேண்டும் என்பதும் மட்டுமே நோக்கம்.

பலவாறான இன்னல்களுக்கிடையே குழப்பத்திலும் ஆயாசத்திலும் தவித்துக் கொண்டு ஊருக்கொரு பிரிவாக, ஆக்கபூர்வ சிந்தனை ஏதுமின்றி ஒருவருக்கொருவர் வீண் தர்க்கங்கள் செய்து, குரோதப் பார்வையுடனும் தினந்தோறும் புதுப்புதுத் தகராறுகளுடனும் சுயநலவாதத் தலைவர்களின் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் இளைய சமுதாயத்திற்கு ஒரு சிறிய ஒளிக்கீற்றாக நன்னம்பிக்கை கொடுப்பதற்கு, அவர்கள்  ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்கு இவ்வுலகில் ஓர் உன்னதமான பண்பாடும் நாகரீகமும் கல்வியும் கொண்டிருந்த ஒரு சமூகத்தின் வரலாற்றினூடாகப் பயணிக்கக் கூட்டிச் செல்லப்போகிறேன். அது எத்தகைய வரலாறு என்பதை முன்னாள் Hewlett – Packard சி,இ.ஓ Carly Fiorina [2] சொல்வதைக் கேளுங்கள்:

“உலகில் உன்னதமான (greatest) ஒரு நாகரிகம் இருந்திருக்கிறது. ஒரு சமுத்திரக்கரையிலிருந்து இன்னொரு சமுத்திரக்கரைவரை, வடக்கின் குளிர்ப் பிரதேசம் முதல் சுட்டெரிக்கும் வெப்பப் பிரதேசப் பாலைவனங்கள் வரை நீண்டு பரந்து கிடந்த நிலப் பரப்புகளைக் கொண்ட – பல தேசங்களை உள்ளடக்கிய  – ஒரு சாம்ராஜ்யத்தை அந்த நாகரீகத்தால் உருவாக்க முடிந்திருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள், பல சமயத்தவர்கள், பல்வேறு இன குழுக்களைச் சார்ந்தவர்கள் இதன்கீழ் வாழ்ந்திருக்கிறார்கள்.

இந்த நாகரிகத்தின் மொழிகளுள் ஒன்று உலகப் பெரும்பான்மையின் பொதுமொழியாக நூறு நிலங்களில் வாழ்ந்த மக்களை இணைத்திருந்தது. பல தேசத்தவர்களைக் கொண்ட இதன் சிப்பாய்களும் இந்த நாகரிகம்  அளித்த  ராணுவப் பாதுகாப்பும் செழிப்பும் மனித குலத்திற்கு இதற்கு முன் தெரிந்திராதவை. இதன்  வணிகத்தொடர்புகள் இலத்தீன் அமெரிக்காவிலிருந்து சீனாவரையிலும் மற்றும் அதற்குட்பட்ட மொத்த நிலப்பரப்புகளிலும்  வியாபித்திருந்தது.

எல்லாவற்றையும்விட, புதிய கண்டுபிடிப்புகளால் முன்னேறிக் கொண்டிருந்த நாகரிகம் அது. புவிஈர்ப்பு விசையை மீறிய கட்டடங்களை இதன் கட்டடவியலாளர்கள் வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். கணிதவியலாளர்கள்,  பின்னால் வடிவமைக்கப் படவிருக்கும் கணிப் பொறிகளுக்கும்  தரவு மறையாக்கத்திற்கும் (Data Encryption) உதவப்போகும்  அல்ஜிப்ரா மற்றும் கணித வழிமுறைகளைக்  (Algorithms) கண்டுபிடித்திருந்தார்கள். மருத்துவர்கள் மனித உடல்களை ஆராய்ந்து தீரா நோய்களுக்குப் புதிய மருந்து கண்டுபிடித்திருந்தார்கள். விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் புதிய நட்சத்திரங்களுக்குப் பெயரிட்டுக்கொண்டும் பின்னாட்களில் நடக்கவிருக்கும் விண்வெளிப் பயணங்களுக்கும் ஆய்வுகளுக்கும் வழிகோலிக் கொண்டிருந்தனர். எழுத்தாளர்கள் ஆயிரக்கணக்கான புதினங்கள் எழுதிக் குவித்தனர். கவிஞர்கள் அன்பைப் பாடுபொருளாக்கிக் கவிதை புனைந்தார்கள்.

மற்ற சமூகங்கள் சிந்திக்க அச்சமுற்று இருந்த வேளையில் இந்த நாகரிகம் புதிய சிந்தனைகளில் தன்னைத் திடமாக வளர்த்துக் கொண்டு முன்னேறிச் சென்று  கொண்டிருந்தது. கட்டுப்பாடுகள் அறிவை அழிப்பதற்காக அச்சுறுத்திக் கொண்டிருந்த வேளையில் இச்சமூகம் அறிவை வாழவைத்து அது பிறருக்குக் கிடைக்கும்படி கைமாற்றிக் கொண்டிருந்தது.
 
தற்கால மேற்குலக நாகரிகம் வரித்துக் கொண்டிருக்கும் அம்சங்களைக் கொண்ட இந்த நாகரிகம்தான் கி.பி 800லிருந்து 1600  வரை உதுமானியப் பேரரசும் பக்தாத் அரசவையும் டமாஸ்கஸ் கெய்ரோ மற்றும், அறிவிலும் ஆன்மீகத்திலும் ஒப்பில்லாத சுலைமான் (Suleyman The Magnificient) போன்ற ஆட்சியாளர்கள் ஆட்சி செய்த இஸ்லாமிய உலகம் கண்ட நாகரிகமாகும்.
 
இந்த நாகரிகத்திற்கு நாம் கடன்பட்டிருப்பதை அறிந்திருக்காவிட்டாலும் அது நமது பாரம்பரியத்திற்கு அளித்த கொடைகள் மிகப் பெரியது. அன்றைய அரபுக் கணிதவியலாளர்களின் பங்களிப்பில்லாமல் இன்றைய  தொழில்நுட்ப உலகம் இத்துணை விரிவடைந்திருப்பது சாத்தியமில்லை.“

சரித்திர ஆர்வலரும் கலிபோர்னிய மாகாணக் குடியரசுக் கட்சியின் முன்னாள் வேட்பாளருமான லேடி பியூரினா மேற்கோள் காட்டிய, உலகின் மிகச் சிறந்த நாகரிகங்களுள் ஒன்றான, மத்திய ஆசியாவிலிருந்து அட்லாண்டிக் சமுத்திரக்கரை வரை பரவியிருந்த, அறிஞர்களும் கல்வியாளர்களும் கணிதவியலாளர்களும் செழித்திருந்த இஸ்லாமிய ஆட்சியின் பொற்காலத்திற்குள் உங்களையும் அழைத்துச் சென்று அந்த மேதைகளோடு அறிமுகம் ஏற்படுத்திக்கொள்வதே இத்தொடரின் நோக்கம்.
 
ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின்  ஐரோப்பா முழுவதும் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்தது. உயிர்க்கொல்லி நோயான பிளேக்கில் மக்கள் கொத்துக் கொத்தாக மாண்டுகொண்டிருந்தனர்.  பஞ்சம், கொலை கொள்ளை, அக்கிரமங்கள், அநியாயங்கள், குழப்பம், மூட நம்பிக்கைகள் எல்லாம் மலிந்து காணப்பட்ட  இக் காலத்தைச் சரித்திர ஆசிரியர்கள் அனைவரும் “இருண்ட காலம்” (The Dark Ages) என்றே சித்திரிக்கிறார்கள்.

ஏறக்குறைய ஐரோப்பாவின் இந்த இருண்ட காலத்தில்தான் ஸ்பெயினிலும் இஸ்லாமியப் பேரரசின் மற்ற ராஜ்ஜியங்களிலும் உலகின் மிகச் சிறந்த நாகரிகங்களுள் ஒன்றான,  மேற்சொன்ன இஸ்லாமிய நாகரிகம் தழைத்தோங்கி வளர்ந்திருந்தது.

அறிவியலின் வரலாற்றை எழுதும் போது, இந்த இருண்டகாலத்தை அப்படியே அனாயாசமாகத் தாண்டிச் சென்று விடுவது மரபாகிவிட்டது. அதாவது, Empedocles (Circa 490-430 BCE) Democritus (460-370 BCE) Hippocrates (460-377 BCE) Aristotle (383-322 BCE) Archemedis (287-212 BCE) Johennes Gutenberg (1400-1468CE) அப்படியே டாவின்சி என்று வரிசையாகப் போய்க்கொண்டிருக்கும். ஆர்கிமிடிஸிலிருந்து கூட்டென்பெர்க் வரையிலுமான சுமார் 1600 வருட பொற்காலம் என்பது பெரும்பாலும் மறைக்கப்பட்டோ அல்லது மறக்கப்பட்டோ இருக்கும்[3].

ஸர்ரே சர்வகலாசாலையின் இயற்பியல் பேரசிரியர் ஜிம் BBCயின் இஸ்லாமும் அறிவியலும் தொடரில் இப்படிச் சொல்கிறார்:- “ஐரோப்பா இருண்ட காலத்தில் மனநோய் பிடித்த நிலையிலிருந்தது என்பதால், உலகின் மற்ற பகுதிகள் எல்லாம் ஸ்தம்பித்து விடவில்லை. சொல்லப்போனால், ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரையான காலம்  இஸ்லாமிய உலகில் விஞ்ஞானத்தின் பொற்காலமாகத் திகழ்ந்தது”

உலகின் முதல் விஞ்ஞானி யார் என்று கேட்டால்  ஆர்கிமிடீஸ், அரிஸ்டாட்டில், டாவின்சி, சர்.ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன், கலீலியோ கலீலி போன்ற  பெயர்கள்தாமே ஞாபகத்திற்கு வரும்? அப்படித்தான் நமது பாடப் புத்தகங்களும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.  ஆனால் பாருங்கள்,   பல பரிசுகளைத் தம் எழுத்திற்காக வென்ற அமெரிக்க எழுத்தாளர் ப்ராட்லீ ஸ்டீஃபன்ஸ் (Bradley Steffens) எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பு  இப்னுல் ஹைதம் – முதல் விஞ்ஞானி (Ibn Al-Haytham: First Scientist). ஆம், நூலின் தலைப்பே அப்படித்தான். சும்மா குருட்டாம்போக்காக எழுதவில்லை. இராக்கில் பிறந்த ஓர் அறிஞர் இப்னுல் ஹைதம் மனித குலத்திற்கே முதல் விஞ்ஞானி என்பதை ஆதாரங்களுடன் தமது கூற்றை நிறுவுகிறார் ப்ராட்லீ ஸ்டீஃபன்ஸ். உலகின் தலை சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவரான அந்த அறிஞரின் கண்டுபிடிப்புகளையும் மேதமையையும் இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம்.

ஸ்பெயினில் உமய்யாத் கலீஃபாவின் அமைச்சரவையில் இருந்த இப்னு ஃபிர்னாஸ் மனித வரலாற்றின் முதல்[4] “பறக்கும் இயந்திர”த்தை வடிவமைத்தது மட்டுமின்றி அதில்  சில நிமிடங்கள் பறந்தும் காட்டினார். அதாவது, லியர்னோ டாவின்சி  தனது உலகப் புகழ்பெற்ற பறக்கும் இயந்திரம் என்ற ஓவியத்தை வரைவதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்னரே!.  ஆச்சரியமென்னவென்றால் இப்னு ஃபிர்னாஸ் வடிவமைத்த இயந்திரமும் டாவின்சி வரைந்த ஓவியமும் ஏறக்குறைய ஒன்றுபோலிருந்ததுதான்!!!. இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களுள் தலையாயது டாவின்சியைத் தெரிந்த அளவுக்கு உலகம் இப்னு ஃபிர்னாஸைத் தெரிந்திருக்கவில்லை.

கணிதவியலில் அல்காரிதம் (Algorithm) என்பதை இப்படி எளிமைப்படுத்தலாம்: “படிப்படியாக ஒரு கணக்கைத் தீர்ப்பதற்கான கணித வழிமுறையின் சூத்திரம்”. Algorithm இல்லையென்றால் தற்கால உலகம் இல்லை. ஆம், இணையம் இல்லை. உலகையே புரட்டிப்போட்ட இணையத்திற்கு(Internet), மென்பொருட்கள் (Softwares) தாம் அச்சாணி. மென்பொருட்கள் எழுதுவதற்கு, கூகுள் தேடலுக்கு, பெரிய அளவிலான தகவல்களிலிருந்து (Data) சரியான தீர்வைக் கண்டுபிடிப்பதற்கு  என, கணினி உலகில் எல்லாவற்றிற்கும் அல்காரிதம், அல்காரிதம், அல்காரிதம் தான். இதன் பெயர்க்காரணம் தெரியுமா? 1200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த அல்ஜீப்ராவின் தந்தை என்று அறியப்படும் அல்-குவாரிஸ்மி என்ற கணித மற்றும் வானியல் அறிஞனின் இலத்தீனியக்  கடைசிப் (Algorizm) பெயரைத்தான் அல்காரிதம் என்ற கணித வழிமுறையை வடிவமைத்ததற்கான நன்றிக் கடனாக கணித உலகம் சூட்டியிருக்கிறது.

உலகின் முதல் ‘அட்லஸை’ உருவாக்கிய அல்-இத்ரீஸி, மார்க்கோ பொலோவுக்கு 200 வருடங்களுக்கு  முன்னேயே உலகைச் சுற்றிவந்த இப்னு பதூதா, ஹைட்ரொகுளோரிக், சிட்ரிக், நைட்ரிக் அமிலங்களை உருவாக்குவதற்குச் செயல்முறைகளும் விளக்கங்களும் அளித்த இப்னு ஜாபிர், சுமார் 500 வருட காலம் ஐரோப்பாவின் மருத்துவ வரலாற்றின் மூல நூலாக விளங்கப் போகும் 14 தொகுதிகளைக் கொண்ட “கானன் ஆப் மெடிசின்” எழுதிய நவீன மருத்துவத்தின் இளவரசன்[5] இப்னு சீனா என்ற அவிசென்னா … என இந்தப் பட்டியல் மிக மிக நீளம். இதன் மேற்பரப்பை மட்டும் உரசிப் பார்க்க இத் தொடர் உதவும்.

பத்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக அறிவியலிலும் ஆன்மீகத்திலும் செழித்தோங்கி இருந்த  உன்னத நாகரிகம், ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக்கு எவ்வாறு காரணம் ஆயிற்று என்பதைப் பற்றி கடைசி இரண்டு அத்தியாயங்கள் பேசுகின்றன.

இத் தொடர் எழுதுவதற்காக உதவிய எல்லா மூலங்களும் தொடரின் இறுதியில் பட்டியலிடப்பட்டும். இஸ்லாமிய உலகில் இது போன்ற அறிவுத் தேடல்கள் இன்னும் நிகழவேண்டும் என்ற பிரார்த்தனையோடு…

– அபூபிலால்
_____________

[1] . பேரா. கா. அப்துல் கஃபூர் அவர்கள் தமிழில் வடித்த அல்குர்ஆனின் தோற்றுவாய் வசனங்கள்.
[2] . Former CEO of HP & former California Republican candidate for the United States Senate
[3] . The Enduring Legacy of Muslim Civilization
[4] . “Ibn Firnas was the first man in history to make a scientific attempt at flying.” —Philip Hitti, History of the Arabs.
[5] The Discovery of India – Pandit Jawahalal Nehru


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.