இஸ்லாமோஃபோபியா – ஒரு பார்வை! (பகுதி 1)

Share this:

ஸ்மா அப்துல் ஹமீத், ஃபாலஸ்தீனில் பிறந்து டென்மார்க்கில் வசித்து வரும் 25 வயதான சமூக சேவகி. எதிர்வரும் 2009 டென்மார்க் பாராளுமன்ற தேர்தலில், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் பாராளுமன்றத்திற்கு ஹிஜாப் அணிந்து வருவதாக சமீபத்தில் கூறியுள்ளது டென்மார்க் எங்கும் விவாத அலைகளை எழுப்பியுள்ளது.

http://www.satyamargam.com/wp-content/uploads/2007/06/asmaa-120x150.jpgUnity List Party இன் உறுப்பினரான இவர், தமது சமூக சேவைகளின் மூலம் மக்கள் செல்வாக்கை பெருமளவில் பெற்று பாராளுமன்றத் தேர்தலில் நிற்பதற்கான ஆதரவை அவர்களிடமிருந்து பெற்று வரும் இந்நேரத்தில், டென்மார்க் எங்கும் எழுந்துள்ள பர்தா தொடர்பான அவரின் வாக்குறுதி சர்ச்சை அலை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

டென்மார்க்கிலுள்ள வலதுசாரிக் கட்சியான DPP (Danish People’s Party) இதனை எதிர்த்துக் குரல் எழுப்பியுள்ளது. ஹிஜாப் அணிதலை “சர்வாதிகாரத்தின் அடையாளம்” என்று கூறியுள்ளதோடு நில்லாமல், “அஸ்மா அப்துல் ஹமீத்துக்கு மனநோய் மருத்துவம் தேவை” என்றும் “இவரைப் பார்த்து தாங்கள் பரிதாபப்படுவதாகவும், இஸ்லாம் பெண்ணடிமைத்தனத்தை இளம் பெண்கள் மீது சுமத்தியுள்ளதாகவும்” கூறியுள்ளது சூடான விவாதங்களுக்கு வழிகோலியுள்ளது.

டென்மார்க் பாராளுமன்ற பண்பாட்டுத்துறையின் முந்தைய பெண் மந்திரியான எலிஸபெத் ஜெர்னர் நீல்ஸன் இதனை எதிர்த்துக் கடுமையாக சாடியுள்ளார். அத்துடன், டென்மார்க்கின் கடும் சமுதாய அமளிகளுக்கும் விமர்சித்தல்களுக்கு மத்தியிலும் தன் சுய விருப்பத்திற்கு மதிப்பளித்து தைரியமாக ஹிஜாபைத் தேர்ந்தெடுத்து அணியும் டென்மார்க்கின் இஸ்லாமிய பெண்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, டென்மார்க்கில் ஹிஜாப் அணியும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“பிறருக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவிக்காத, தன் விருப்பத் தேர்வான (Freedom of Expression) ஹிஜாபை எவ்வித காரணமும் இன்றி எதிர்க்கும் இத்தகைய அறிவீனர்களை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களையும் இஸ்லாமிய உலகம் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகில் பல பகுதிகளிலுள்ள மக்கள் அதீத காரமான அல்லது மிகவும் சூடான உணவை விரும்பிச் சாப்பிடும் அதே நேரத்தில் அத்தகைய காரமுள்ள உணவையும், சூட்டுடன் சாப்பிடுவதையும் கொடுமை என்று அடியோடு வெறுப்பவர்களும் உண்டு. அவ்வாறு வெறுப்படைவதால் ஒருவரின் தனிநபர் விருப்பத்தேர்வை மற்றொருவர் தவறு என்று கருத இயலாது. ஒவ்வொரு நாட்டிற்கும் பிரதேசத்திற்கும் சமுதாயத்திற்கும் உணவுகள் மாறுபடுவது போன்று உடைகளிலும் வித்தியாசம் உண்டு. இதில் சர்வாதிகாரத்தைக் காண்பது ஆச்சரியமான ஒன்றே.

யூதர்கள் அணியும் சிறு தொப்பியோ, சீக்கிய சமுதாய மக்கள் அணியும் தலைப்பாகையோ அல்லது இஸ்லாமிய ஆண்கள் அணியும் தொப்பியோ, ஆணடிமைத்தனத்தை ஏற்படுத்துவதாக குரல் எழுப்ப எண்ணாத இவர்கள், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய முன்வருகையில் மட்டும் கொதித்தெழுந்து துடிப்பதன் பின்னணி என்ன?

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகள் முஸ்லிம் பெண்கள் அணியும் உடைக்கு சற்றும் குறைவில்லாமல் தலையையும் உடலையும் முழுவதுமாக மறைக்கும் அங்கியை அணிகின்றனர். இவர்களை எவரும் பரிதாபமாக பார்க்கவோ, பெண்ணுரிமை பறிபோனதாகவோ கூக்குரல் எழுப்புவதில்லை. அதையே இஸ்லாம் செய்யச் சொல்கிறது என்றால் மட்டும் துடித்தெழுந்து “இஸ்லாத்தில் பெண்மை இழிவு படுத்தப்படுகின்றது” என்று அரற்றுவதன் உள்ளர்த்தம் என்ன?

‘ஸன்பாத் – சூரிய குளியல்” என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளின் கடற்கரை ஓரங்களில் பெண்கள் முழு நிர்வாணமாக பொது இடம் என்றும் பாராமல் மணல் வெளிகளில் புரள்வதைக் கண்டு கேள்விகளை எழுப்பாதவர்கள், இஸ்லாமிய பெண்கள் தன் விருப்பத் தேர்வாக அணியும் ஹிஜாப் என்ற கண்ணிய உடையைக் கண்டால் மட்டும் மனம் வெதும்புகின்றனர்; “மனம் பிறழ்ந்தவர்” என்று எள்ளி நகையாடுகின்றனர்.

பிரபல அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் சமீபத்தில் ஜெர்மன் தெருக்களில் பட்டப்பகலில் முழு நிர்வாணமாக சுற்றியலைந்தார். ஆச்சர்யம் மேலிட அவரை அணுகிக் கேட்டவர்களிடம் அவர் கூறிய காரணம், “போனால் போகிறது என்று அரைகுறையாக ஆடைகள் அணியும் ஜெர்மனில் இது ஏற்றுக்கொள்ளத்தக்கதே!” என்று கூறினார். இது பலருக்கு கூச்சத்தை ஏற்படுத்தியதாகவும், தவிர்க்கத்தக்க செயல் என்றும் அந்நாட்டு செய்திகளில் வெளியானதே ஒழிய “இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்” என்று சொல்லவோ “அநாகரீகமான செயல்” என கண்டிக்கவோ எவரும் முன் வரவில்லை.

இத்தகைய எள்ளிநகையாடல்களும், பரிகாசங்களும் இஸ்லாத்திற்கு இன்று புதிதான ஒன்றல்ல. இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம் இஸ்லாத்தைப் பற்றி இவர்களின் மனதில் எழுந்துள்ள அதீத பயம் – இஸ்லாமோஃபோபியா தவிர வேறில்லை.

மனித சமுதாயத்தில் புரையோடிக்கிடக்கும் வேறுபாடுகளை வேரோடு களையும் விதமாக இஸ்லாம், மனிதன் சக மனிதனுக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகள், செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகிய அனைத்திலும் தலையிட்டு சமநீதியை நிலைநாட்டியதன் காரணத்தால் இவ்வுலகில் இஸ்லாம் வேரூன்றி பரவிய நாள் முதல், நாகரீகம் தெரியாதவர்களாலும், மனிதத்தை மதிக்கத்தெரியாத மனிதநேயமற்றவர்களாலும், மற்றவர்களை அடக்கியாளத் துடிக்கும் அநியாயக்காரர்களாலும் தொடர்ந்து கல்லடிபட்டுக் கொண்டு தடைகளை உடைத்தெறிந்து வேகமாகவே மக்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது.

மனிதர்களின் இன, சமூக, பொருளாதார ரீதியிலான பிண்ணனியை அறிந்து அதற்கேற்றார் போல் பாகுபாடு காட்டிடாமல், சமத்துவத்தை பேணுவதாலேயே இத்தகைய விமர்சனங்களுக்கு இஸ்லாம் உள்ளாகிறது என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை.

அனைத்து சவால்களையும் வென்று உலகெங்கிலும் மிக வேகமாகப் பரவி வரும் ‘இஸ்லாத்தை’, நேரடியாக அதன் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றி விமர்சித்து ஜெயிப்பது இயலாத காரியம் என்று பல நூற்றாண்டுகளாகவே புரிந்து வைத்திருக்கும் இத்தகைய அறிவுஜீவிகள், இஸ்லாத்திற்கு எதிராக முடக்கி விட்டிருக்கும் பிரச்சாரங்களில் முக்கியமாக கையில் எடுத்திருப்பது இந்த ஹிஜாப் பற்றிய விமர்சனங்களை தான்.

“உலகெங்கும் மனித சமுதாயத்தில் அமைதியும் ஒத்திசைவும், பூர்த்தி பெற்ற சமநிலைச் சமுதாயத்தைத் தோற்றுவிக்கும்படியாக இஸ்லாம் தனது அடிப்படைக்கோட்பாடுகளில் மிக உறுதியான கட்டமைப்பைக் கொண்டிருப்பதாலேயே இஸ்லாமிய எதிரிகள், அதன் அடிப்படையைக் குறித்து பேச அஞ்சுகின்றனர்” என்று யூதராக இருந்து இஸ்லாத்தை தழுவியுள்ள முஹம்மத் ஆசாத் தாம் எழுதியுள்ள Islam at the cross Roads எனும் புத்தகத்தில் இதைப் பற்றி குறிப்பிட்டுப் பேசுகிறார்.

இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக முஸ்லிம் நாடுகள் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் எவ்வித பிரயோசனமும் தராது என்று முடிவெடுத்திருக்கும் ஏகாதிபத்திய நாடுகள் கூட, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கான சமீபத்திய புள்ளி விபரத் தொகுப்பைக் கண்டு “இஸ்லாம் வாளால் பரவியது” எனும் தங்களது பொய்ப் பிரச்சாரங்கள் இனியும் பயனளிக்காது என்பதை புரிந்து கொண்டு, ஹிஜாபின் பக்கம் தம் முழு கவனத்தையும் முயற்சியையும் திருப்பி விட்டுள்ளன.

ஆனாலும் இஸ்லாமிய எதிரிகளின் சூழ்ச்சிகள் நடைபெறும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதனால் அவர்களுக்குப் பாதகமான விளைவுகளே அவர்களின் செயல்களால் விளைகின்றன என்பதை தற்போதுதான் தாமதமாக உணர்ந்து வருகின்றனர்.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்கர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேல் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. “அதிக அளவில் இஸ்லாம் விமர்சிக்கப்படுவது ஏன்” என்ற ஐயம் எழுந்தததன் காரணத்தால் அதனைத் தெரிந்து கொள்ள முயன்று இஸ்லாமிய புத்தகங்களை தேடிப்பிடித்து படித்த பொழுது தான் இஸ்லாத்தைப் பற்றிய முழு அறிவு தமக்கு கிடைத்தது என்பதே செப்டம்பர் 11 2001 க்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கர்களில் பெரும்பாலோனோர் கூறிய கருத்துக்கள் ஆகும். இதே காலகட்டத்தில் அமெரிக்க புத்தககடைகளிலும் லைப்ரரியிலும் அதிகம் விற்றுத்தீர்ந்து தட்டுப்பாடு ஏற்பட்ட ஒரே புத்தகம் திருக்குர்ஆன் என்ற செய்தி வெளிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதே விகிதத்தில் இஸ்லாம் உலகில் பரவும் என்றாலே 2020ஆம் வருடத்தில் இஸ்லாம் உலகின் மிகப் பெரிய சமயமாகும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாத்தின் எதிரிகளுக்கு இப்புள்ளிவிவரங்கள் வயிற்றில் புளியை கரைப்பதால் தங்களிடமிருக்கும் ஊடகங்களின் மூலம் இட்டுக்கட்டப்பட்ட இஸ்லாத்திற்கு எதிரான செய்திகளை பரப்புவதிலும், கண்ணியத்தை தரும் ஹிஜாபை அடிமைத்துவத்தின் சின்னம் போன்று சித்தரிப்பதிலும் தற்போது முனைப்புடன் செயல்படுகின்றனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் வரலாற்றில் இஸ்லாத்திற்கு எதிரான பல்வேறு சூழ்ச்சிகள் முழு அளவில் ஊடகங்கள் மூலம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. செய்திகள், பிரச்சாரங்கள், விவாத அரங்கங்கள், கருத்துக் கணிப்புகள் ஆகியவை முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்டன. அமெரிக்காவின் ஆசிகளை பெற்றுக்கொண்டு பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் இந்த எழுத்து வன்முறைகள் நடந்தேறின.

சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றி பேசுவதானால், குறிப்பாக செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, ஊடக வன்முறையுடன் சேர்ந்து வீடுகளிலும், தெருக்களிலும், பொதுவிடங்களிலும், இஸ்லாமிய மையங்கள் மற்றும் பள்ளிவாசல்களிலும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். வழமை போன்று ஊடகங்கள் இச்செய்திகளை கண்ணுக்குப் புலப்படா எழுத்துருவில் வார்த்து ஒரு மூலையில் பிரசுரித்து இருட்டடிப்பு செய்தன. ஒரு பக்கம் இஸ்லாத்தை வம்புக்கிழுத்து இஸ்லாமியர்களின் உணர்வுகளோடு விளையாடும் அதே நேரத்தில் மறுபக்கம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களை அவமானப்படுத்தவும், கொடுமைப்படுத்தவும் செய்வதற்கும் இவை தயங்கியதில்லை. இதன் ஒருபகுதியாகவே அஸ்மா அப்துல் ஹமீது அவர்களுக்கு எதிரான DPP யின் அநாகரீகமான தூற்றலை காணமுடிகிறது. இதற்கு இஸ்லாத்தின் மீதான இஸ்லாமோஃபோபியா எனும் அதீத பய நோயன்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

இந்த இஸ்லாமோஃபோபியா எனும் மேற்குலகின் இஸ்லாத்தைக் குறித்த பயமனநோய் கீழைதேசமான இந்தியாவை கூட விட்டுவைக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தை எடுத்துக் கொண்டால் குறிப்பிட்டு எடுத்துக் கூறத்தக்க விதத்தில் இஸ்லாமோஃபோபியாவிற்கு பல்வேறு நவ அறிவுஜீவிகள் எனக் கூறிக்கொள்பவர்கள் பலியாகியுள்ளனர்.

இஸ்லாமோஃபோபியா

இஸ்லாமோஃபோபியா எனும் பெயர் புதிதாக புனையப்பட்டது 1990-ன் மத்தியில் தான். உலகின் பல்வேறு பண்பாடு மற்றும் பன்முகத்துவம் அமைந்த சூழல்களில் தோன்றியதே இந்த சொல்லாடல்.

Phobia என்ற கிரேக்க சொல்லுக்கு “திகில் அல்லது பெரும் அச்சம் கொள்ளல்” எனத் தமிழாக்கம் செய்யலாம். இஸ்லாமோஃபோபியா எனும் வார்த்தைப் பிரயோகத்தை கட்டமைக்க அடிப்படையாகக் கொள்ளும் Xenophobia எனும் வார்த்தைக்கு “புதிய அறிமுகத்தைக் கண்ட அதீத பயம்” அல்லது “புதியவர்களைக் கண்டவுடன் எழும் திகில்” என்று அர்த்தம்.

இஸ்லாமோஃபோபியா என்பது ஏதோ புதிதாய்த் தோற்றுவிக்கப்பட்ட நவநாகரீக வார்த்தைப் பிரயோகம் போல் தோன்றினாலும், அதன் கருப்பொருள் கிறித்துவத்திற்கு எதிரான சிலுவைப்போரில் முஸ்லிம்கள் பெற்ற வெற்றியும், அவ்வெற்றி முழு மேற்கத்திய உலகையும் அதிர்ச்சியடைய வைத்த காலத்திலேயே தோன்றிவிட்டது எனக்கூறலாம்.

Related imageஇஸ்லாம் பற்றிய எதிர்மறை சிந்தனைகளை தன்னுள் அடக்கியிருக்கும் மேற்கத்திய உலகம், இஸ்லாத்தின் மீதான அச்சம் மற்றும் எதிர்ப்பு விஷயத்தில் மிகவும் தொன்மையான வரலாற்றைத் தன்னுள் கொண்டுள்ளது. அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாமும் முஸ்லிம்களும் மேற்கத்திய ஊடகங்களால் திட்டமிட்டு சித்தரிக்கப்படும் மோசமான முறைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஒரு விஷயத்தில் ஒருவருக்கு அதீத அச்சம் தோன்ற அவ்விஷயத்தைக் குறித்த முழுமையான விஷய ஞானம் இல்லாமல் இருப்பதோ அல்லது அதனைக் குறித்த தவறான வழிகாட்டல்கள் மற்றும் பிரச்சாரங்களோ தான் முழு காரணமாக அமைய முடியும் என்பதோடு, தான் வேறூன்றி இருக்கும் ஒரு நம்பிக்கையின் மீதான அழுத்தமான விடாப்பிடியான சிந்தனை ஓட்டமும் என்று கூறலாம். ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் இஸ்லாமோஃபோபியா என்னும் இஸ்லாத்தின் மீதான அதீத அச்ச மனப்பாங்கு இஸ்லாத்தை தவறாக விளங்கியுள்ளவர்களின் மனதில் மட்டும் காணப்படவில்லை. மாறாக, இவ்வாறு இஸ்லாத்தை தவறாக மக்கள் விளங்க வேண்டும் என்பதற்காகவே முழுவீச்சில் பணியாற்றும், இஸ்லாத்தைக் குறித்த முழு அறிவும் உடைய, அதன் வளர்ச்சியை எவ்வகையிலாவது தடுத்து நிறுத்த பாடுபடும் சிலரிடையே தான் அது அதிகமாக காணப்படுகிறது. இதற்கு, இஸ்லாத்தின் அணுகுமுறையும், அது வழங்கும் தீர்க்கமான வாழ்க்கைத் திட்டமும் சுகபோகமாக வாழத்துடிக்கும் சர்வாதிகார மனப்பாங்கு உள்ளவர்களின் மனதில் ஏற்படுத்திய இஸ்லாமோஃபோபியாவே முக்கிய காரணமாகும்.

மாஸ் மீடியா எனும் மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலம், இஸ்லாத்தைப் பற்றியும், அது முன்வைக்கும் வாழ்க்கைத் திட்டத்தை முறையாக கடைபிடிக்கும் முஸ்லிம்கள் பற்றியும் பெருமளவில் வெறுப்பை உமிழ்ந்த/உமிழும் பிரதிநிதித்துவப்படுத்துதலை, உலக அரசியல் அரங்கில் இஸ்லாமோஃபோபியா தோற்றுவித்த மிக முக்கியமான நிகழ்வு எனக்கூறலாம். ஓரியண்டலிஸ்ட் எனப்படும் கீழைத்தேய மொழிப்புலமையாளர்களின் பட்டியலில் பெருவாரியாக பங்கு வகித்திருந்த யூத , கிறித்துவ இலக்கிய மேதைகள் ஒன்று சேர்ந்து இஸ்லாத்தைத் திரித்து எழுதத் துவங்கியதற்கு இஸ்லாமோஃபோபியா மிக முக்கிய காரணமாய் அமைந்திருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாம் கூறும் வாழ்வியல் திட்டத்தையும் அதன் கொள்கைகளையும் மிகத்தெளிவாகவே விளங்கியிருந்தனர் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். இவர்கள் இஸ்லாத்தின் மீது அடிப்படையற்ற பலபொய்களை மிக உயர்ந்த இலக்கியத் தரத்தில் முன்வைத்த பாணி, அவர்கள் அடிமனதில் வேரூன்றி இருந்த குரோத மனப்பான்மைக்கு தடுப்பாக அமைந்திருந்தது.

வெகுஜன ஊடகங்கள் இஸ்லாம் பற்றிய செய்திகளை விவரிக்கும் பாணியின் இரட்டை மனப்பாங்கை ஒரு உதாரணத்திற்கு, வெறும் பிரிட்டனின் ஊடகங்களைக் கையில் எடுத்து மட்டும் பார்த்தோமானால் கூட ஏகப்பட்ட சான்றுகளுடனான உதாரணங்களைக் காட்ட இயலும். Runnymede Trust Commission எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணங்களில் மிக முக்கியமாகக் கருதப்படும் British Muslims and Islamophobia – வில் பிரிட்டன் சமூகத்தில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் மீது அதீத வெறுப்பு ஏற்படும் வகையிலும், அங்கு பெரும் பிளவை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் இஸ்லாம் பற்றிய எதிர்மறை கருத்துக்களை திரித்து திணித்துள்ள ஊடகங்களின் தகிடுத்தனங்களை பட்டியல் போட்டுக் காட்டியுள்ளனர்.

இத்தகைய ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகளைப் படம் பிடித்துக்காட்ட வேண்டும் என்ற குரல்கள் பல்வேறு இடங்களில் எழுந்தாலும், தற்போதைய மோசமான சூழ்நிலையை அது மாற்றிவிடப் போவதில்லை என்பது தான் உண்மை.

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்கள், அங்குள்ள முஸ்லிம்களை எதிர்கொள்கின்ற மனோபாவமும், நடத்தைப் போக்குகளும் வாதத்திற்கு இடமற்ற வகையில் வேறுபாட்டுணர்ச்சி கொண்டவை. சுருக்கமாகச் சொல்வதென்றால் முஸ்லிம்கள் மீதான வெறுப்பும் பயமும் கலந்த உணர்வுகள் இந்நாடுகளில் பிரதிபலிப்பதைக் கண்கூடாகக் காண முடியும். இவ்வாறு பிற மதங்கள், சமூகங்கள் இஸ்லாத்தின் மீதும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் மீதும் செயல்படுத்தும் பகுத்தறிவை மீறிய வேறுபாட்டுணர்ச்சிகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இஸ்லாத்தின் மிகத் தெளிவாகக் கட்டமைப்பக்கப்பட்ட அதன் கோட்பாடுகள் தான் எவ்வித சந்தேகமும் இல்லை.

உலகத்தில் அதிக அளவில் வளர்ந்து வரும் ஒரு சமயமான இஸ்லாத்தைத் தழுவும் மக்கள் தொகை பற்றிய புள்ளிவிபரங்களும், அவை தரும் அதீத பயமுமே உலக அளவில் இஸ்லாமோஃபோபியாவின் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாகும். தவறான சித்தாந்தங்களும், எதிர்மறை கருத்துக்களும் வெகுஜன ஊடகங்களால் மிகப்பரவலாக திட்டமிட்டே உருவகப்படுத்தப்பட்டாலும் அதனையும் மீறிய இஸ்லாமிய வளர்ச்சியைக் கண்ட பிரமிப்பு தரும் உள்ளுதறல், மேற்குலகுக்கு “இஸ்லாமோஃபோபியா” எனும் அச்சத்தை மேலும் மேலும் அதிகப்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது.

ஒருவிதத்தில் இஸ்லாத்தின் அதிவேக வளர்ச்சி எவ்வளவுக்கெவ்வளவு இஸ்லாமோஃபோபியாவை அதிகரிக்க வைக்கின்றதோ, அதனைவிட வீரியமாக இஸ்லாத்தின் பரவலுக்கும், வளர்ச்சிக்கும் அதே இஸ்லாமோஃபோபியா தூண்டுகோலாக அமைகின்றது என்று கூறலாம்.

இஸ்லாமோஃபோபியா எனும் உருவகம் அவப்பெயரிலும் இஸ்லாத்திற்கு ஓர் நற்பேறு என்பது உண்மை தான் போலும்.

 

ஆக்கம்: அபூ ஸாலிஹா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.