கூகுள் வழங்கும் “உள்ளூர் வழிகாட்டி”

டந்த பகுதியில் பார்த்தவாறு, மிகக் குறைந்த நபர்களை சம்பளம் கொடுத்து நேரடி ஊழியர்களாக நியமித்துள்ள கூகுள் நிறுவனம், உலகெங்கிலும் உள்ள சேவை மனப்பான்மையுள்ள தன்னார்வலர்களைக் கண்டு இரு கைகளை விரித்து வரவேற்று அரவணைக்கிறது. Win-Win Venture. எனக்கு நீ உதவு; உனக்கு நான் உதவுகிறேன் என்பதே இந்தத் திட்டத்தின் அடிப்படை.

ஒருவர், தாமறிந்த, நம்பகரமானத் தகவல்களை எளிமையான முறையில் அவரே கூகுளில் இணைத்து, பிறருக்கு உதவுவதே “உள்ளூர் வழிகாட்டி” (Local guide). இதில் அவர் எழுதும் பிரதான (Key words) வார்த்தைகளே கூகுள் இயங்குபொறிக்கு உணவு. உலக மொழிகள் அனைத்திலும் கோலோச்ச, இப் பிரதான வார்த்தைகளை அந்தந்த மொழி பேசும் நம்பிக்கையானவர்களிடமிருந்தே பெற்று வலுவான இணையத்தை கட்டமைக்கிறது கூகுள்.

உதாரணத்துக்கு அதிராம்பட்டினம் நகரத்தை எடுத்துக் கொண்டால் அங்கே ஹாஸ்பிடல் தெரு முக்கூட்டில் உள்ள பரோட்டா ஸ்டால் பற்றியோ, பைபாஸ் ரோட்டில் உள்ள செல்லியம்மன் கோயில் பற்றியோ விபரங்களை தாரளமாக உள்ளீடு செய்யலாம். அது எப்படி பயன் அளிக்கும்?

கடற்கரைத் தெரு பள்ளிவாசல் அருகேயுள்ள வீட்டினுள் தூக்க கலக்கத்தில் இருக்கும் நபருடைய மனைவிக்கு கூட்டமாக இருக்கும் அந்தக் கடை பரோட்டா உண்ணும் ஆவல் திடீரென மிகைக்கிறது. இல்லாளின் இரவு நேர நச்சரிப்பிற்கு எதிர்வினையாக முறைக்க முயற்சி செய்தாலும் முணுமுணுத்தாலும் பலனில்லை என்று தாமதமாகப் புரிந்து, கைப்பையோடு கிளம்பி ரெயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக சென்று இ-கோஸ்ட் ரோடு பிடிக்கும் முன், இவர் சற்று ஆசுவாசிக்கலாம். வீட்டில் இருந்தபடியே பரோட்டா கடை சாத்த இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதோடு கடைக்காரரின் செல் போன் எண்ணையும் கூகுள் மேப்ஸ் மூலம் அறிந்து கொள்ளலாம்.

“கடைக்காரரே! சரியா இன்னும் அஞ்சு நிமிஷத்துக்கு அப்புறம், சுள்ளுன்னு புதுசா எண்ணை தெளிச்சு சும்மா பஞ்சு மாதிரி ஆறு செட் பரோட்டாவை சூடா போட ஆரம்பிங்க… நானு ஒரு பத்தே நிமிஷத்துல… இ.. இருங்க, இப்ப உங்க தெரு பக்கம் டிராபிக் அதிகமா இருக்குறதால சின்ன தைக்கால் வழியா வந்து பதிமூன்று நிமிஷத்தில் வந்து வாங்கிக்கிறேன்” என்று சொல்லி கடைக்காரரை அதிர வைக்கலாம்.

அத்தோடு முடிந்ததா என்றால் இல்லை! பரோட்டா பற்றிய நட்சத்திர மதிப்பீட்டை இட்டு அதன் தரம் பற்றி பிறருக்குத் தெரியப்படுத்தலாம். பரோட்டா சற்று கருகலாகவோ, எண்ணை பழையதாகி நெடி தூக்கலோ இருந்தால் தயக்கமின்றி அதையும் எழுதலாம். “நல்ல ருசி, விலை மலிவு” என்று தட்டியோ, “சால்னாவில் உப்பு கம்மி, காரம் தூக்கல்” என்று குட்டியோ தாராளமாக எழுதலாம்.

இதை வாசித்தீர்களா? :   மொழிமின் (அத்தியாயம் – 6)

ஆனால் ஒன்று! பரோட்டா நன்றாக இருக்கும்போது, கடைக்காரர் நீங்கள் விரும்பாத ‘பங்காளி’ என்ற காரணத்தை மனதில் வைத்துக்கொண்டு பரோட்டாவை குறை கூறி எழுதிவிடாதீர்கள். ஏனெனில் கூகுள் விரும்புவது விருப்பு, வெறுப்பற்ற நியாயமான மதிப்பீடுகளை மட்டுமே! தவிர, தவறான தகவலை உள்ளீடு செய்தால், அவை கூகுளின் கவனத்திற்கு வரும் வாய்ப்புகள் உள்ளன.

இனி, கூகுள் மேப்ஸ்-இல் எந்தெந்த வகையில் நாம் பங்களிப்பு செலுத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.

https://2.bp.blogspot.com/-0nkNlL2s-EY/VkTvYBMjTaI/AAAAAAAAEnU/k7QWscU2o0Q/s1600/en_user-actions-with-pins+%25282%2529.gif1. மதிப்பீடு வழங்குதல் (Writing a review)

கூகுள் மேப்ஸில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள ஒரு இடத்திற்கு நீங்கள் சென்றிருந்தால், உங்களது அனுபவங்களை அந்த இடத்தைக் க்ளிக் செய்து ஓரிரு வரிகளில் தெரிவிக்கலாம். நட்சத்திரங்களை மதிப்பீடாக இடுவதோடு அனுபவக்குறிப்பு ஓரிரு வரி எழுதி சப்பை, குப்பை, அபாரம், மொக்கை போன்ற ஒருசில வார்த்தைகளை இணைத்தால் நிச்சயமான மதிப்பெண் புள்ளிகளை கூகுள் வழங்கும்.

2. புகைப்படத்தை பதிவேற்றம் செய்தல் (Uploading pictures for a location)

நீங்கள் விரும்பிய இடத்தின் புகைப்படம் உங்கள் கையில் உள்ளதா? எனில், அவற்றை கூகுள் மேப்ஸ் இல் பதிவேற்றம் செய்யலாம். உங்களின் புகைப்படத்துடன் கூடிய தேடல் முடிவுகள் கூகுளில் தேடுபவர்களுக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.

3. பிழையைச் சரி செய்தல் (Correcting information of a place)

கூகுள் மேப்ஸ் இல் ஏற்கனவே பதியப்பட்டுள்ள தகவல்களில் பிழைத் திருத்தங்கள் தேவைப்பட்டால், அவற்றை இணைக்கலாம்.

4. புதிய இடத்தை இணைத்தல் (Adding new places)

உங்களுக்கு விருப்பமான ஒரு இடம், கூகுள் மேப்ஸ் இல் காணவில்லை எனில், அந்த இடத்தை நீங்களே இணைக்கலாம்.

5. ஐயங்களுக்கு தெளிவை அளித்தல் (Answering questions)

நீங்கள் பங்களித்த இடங்கள் பற்றி அவ்வப்போது தானியங்கி முறையில், சில எளிமையான கேள்விகள் மேலெழும்பும். திரையைத் தொட்டு எளிமையாக இவற்றிற்கு நீங்கள் விடையளிப்பதன் மூலம் புள்ளிகளைப் பெறலாம்.

ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மதிப்பெண் கிடைப்பதெல்லாம் சரி, மெனக்கெட்டு இதைச் செய்தால் அதுக்கும் மேலே எனக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்கும் வழிகாட்டிகளுக்கு சில ஊக்கப்பரிசுகளை வழங்குகிறது கூகுள்.

பங்களிப்பைப் பொறுத்து, உலகின் பல்வேறு நாடுகளில் கூகுள் நிறுவனம் நடத்தும் மாநாடுகளில் கலந்து கொள்ள விமான பயணச்சீட்டு முதல் உணவு, தங்கும் விடுதிகள் வரை அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது. மேலும் கூகுள் நிறுவனம் அளித்துக் கொண்டிருக்கும் 1 TB கூகுள் டிரைவ் போன்ற பல்வேறு வர்த்தக தயாரிப்புகளை, வழிகாட்டிகளுக்கு இலவசமாக வழங்குகிறது. அதுவல்லாமல், பல்வேறு ஊக்கப்பரிசுகளை (promotional materials) அவ்வப்போது நம் வீட்டுக்கு அனுப்பி மகிழ்விக்கிறது.

இதை வாசித்தீர்களா? :   மொழிமின் (அத்தியாயம் – 2)

“சரி, சரி… பங்களிக்க நான் ரெடி! இதுக்கு என்னவெல்லாம் தேவைப்படும்?” என்று கேட்போருக்கான விடை:

1) ஆர்வமும் நேரமும்

2) மிகச்சொற்ப ஆங்கில அறிவு

3) இணைய தொடர்பு கொண்ட கூகுள் மேப்ஸ் ஆப் (செயலி) நிறுவப்பட்ட ஸ்மார்ட்ஃபோன் அல்லது கம்ப்யூட்டர்

கூகுளின் கணக்கில் உள்நுழைந்தபின்னர், கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்து, “உள்ளூர் வழிகாட்டி”யாக இணைந்து, எளிய வகைகளில் பங்களிப்புச் செய்யலாம்.

https://www.google.com/local/guides/

கூகுள் மேப்ஸ் செயலியை திறந்து, மேலே விளக்கப்பட்ட ஐந்து வழிமுறைகளில் பங்களிப்பு செய்து பாருங்கள். இவற்றில் ஏதேனும் ஐயங்கள் இருப்பின் அவற்றை, (Satyamargam.com) சத்தியமார்க்கம்.காம் தள பதிவில் அல்லது (Facebook.com/Satyamarkam) ஃபேஸ்புக் பதிவில் கருத்துக்களாக தெரிவியுங்கள். அவற்றிற்கான விளக்கத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

முந்தைய பகுதியை வாசிக்க…

– அபூ ஸாலிஹா