
கடந்த மூன்று அத்தியாயங்களில், தகவல் தொடர்பின்போது என்னென்ன கூடாது என்று ஏழு ஐட்டம் பார்த்தோம். இங்கு மேலும் சில கூடாதவைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றை முடித்துவிடுவோம்.
8. வன்மம் கூடாது – கருத்து வேறுபாடு, உரசல், எரிச்சல் ஏற்படாத நட்போ, உறவோ உலகில் உண்டா? பார்த்திருக்கின்றீர்களா? இருக்கவே முடியாது. சிறு வயதில் பள்ளிக்கூடத்திலேயே, ‘உன் பேச்சு கா’ என்று பல்பம், சாக்லேட், பிஸ்கோத்து மேட்டரிலிந்து அது தொடங்கிவிடும். ‘நான் அப்படியெல்லாம் இல்லை. இதுவரை எனக்கு யாருடனும் அப்படி எதுவுமே இருந்ததில்லை. என் மனசு பாலைவிட வெள்ளை’ என்று நீங்கள் சத்தியம் செய்தால், உங்களது விலாசத்தைத் தெரிவியுங்கள். சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும்.
கருத்து வேறுபாடு ஏற்படுவது, எரிச்சல், கோபம் தோன்றுவது இயற்கை. அவை தவிர்க்கவியலாத மனித இயல்புகள். தவறே இல்லை.. ஆனால், அவற்றை மனத்தில் தேக்கி வைத்துப் புழுங்கினால் நாள்தோறும் உள்ளுக்குள் அக்னி நட்சத்திரத்து வெப்பத்துடன் வாழ வேண்டியதுதான். எனவே அவற்றையெல்லாம் கடந்து சென்றுவிட வேண்டும். இல்லையெனில், ‘ஆகாத மருமகள் கைபட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம்’ என்பதுபோல் எதற்கெடுத்தாலும் நமது தகவல் தொடர்பில் விதண்டாவாதமே தலைதூக்கும்; சேதம் உண்டாக்கும்.
9. தோள் தவிர்த்தல் கூடாது – ஒவ்வொருவருக்கும் தத்தம் கவலைகளை, மனச் சுமைகளை இறக்கி வைத்து அழுது ஆறுதல் அடைய மனம் ஏங்குகிறது. சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்படுகிறது. ஆனால், அதை, போவோர் வருவோரிடமெல்லாம் செய்துவிட மாட்டோம். நம்பகமானவர்களைத் தவிர யாரிடமும் எளிதில் மனத்தைத் திறந்துவிட மாட்டோம். அதனால், ஒருவர் நம்மை நம்பி, தமது பொதியை இறக்கி வைக்க அணுகும்போது அவரைத் தவிர்ப்பது, அல்லது அந்த நேரத்தில் வேறு முக்கிய அலுவல் என்று விலகுவது அவரை அவமரியாதைக்கு உள்ளாக்கும் செயல். புண்பட்ட அவருடைய மனத்தை மேலும் காயப்படுத்தும்.
நாம் அவரது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதில்லை. அவரது புலம்பலை அக்கறையாய்ச் செவியுற்றாலே போதும். ‘இந்தா சாஞ்சுக்கோ’ என்று நம் தோளையும் ‘மூக்கைத் துடைச்சுக்கோ’ என்று பேப்பர் நாப்கினையும் தந்தால் அது அவருக்கு ஏராளம். இரக்கப்பட்டு மெய்யன்புடன் ஓரிரு ஆறுதல் வார்த்தைகள் உதிர்க்கிறீர்களா, உங்களது அன்பில் சுருண்டு விடுவார் மனிதர்.
10. பிளாக் மெயில் கூடாது – உறவைத் துண்டித்துக் கொள்வேன். நம் நட்புக்கு குட்பை. நம் குழுவைவிட்டு வெளியேறிவிடுவேன் என்றெல்லாம் சொல்வது, குறிப்பிடுவது கூடாது. நட்புறவு கொள்ளத் தகுதியில்லாதவரிடம் நட்பு பாராட்டாமல் இயல்பாக விலகிவிடுவது, கொலைகாரன், கொள்ளைக்காரன், கடன்காரன் என்று அடையாளம் தெரிந்தபின் பதறியடித்து ஓடிவருவதெல்லாம் வேறு விஷயம். அத்தகையோரிடம் அதைத்தான் செய்ய வேண்டும். இங்கு நாம் பார்ப்பது, “நீ மட்டும் என் வீட்டு விசேஷத்துக்கு வரல” அல்லது “உன் வீட்டு விசேஷத்துக்குக் கூப்பிடல நம்ம உறவைத் தலைமுழுகிட வேண்டியதுதான்” வகையிலான மிரட்டும் பிளாக் மெயில்.
உறவினர்கள் மத்தியில் இப்படியான சச்சரவுகள் ஏற்பட்டு, உறவைத் துண்டித்துக் கொண்டு, காலங் காலமாய்ப் பேச்சுத் தொடர்பின்றி இருப்பதையெல்லாம் கவனித்திருப்பீர்கள். இதை அடிப்படையாக வைத்து, இந்தப் பக்கம் நாயகி, அந்தப் பக்கம் நாயகன், இருவருக்கும் இடையில் காதல் என்று நம் தமிழ் சினிமா கதை எழுதி படம் காட்டுவது தனி விஷயம். அப்படியான எமோஷனல் மிரட்டல் தவறு. கூடாது என்பது நமக்கான பாடம்.
11. பல பிரச்சினைகளை ஒரே நேரத்தில் பேசுவது கூடாது – ஒருவரிடம் பல பிணக்குகள் இருந்தால், ஒரு பிரச்சினையைப் பற்றி பேசும்போது அதை மட்டுமே பேசி முதலில் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதில் மட்டும் கவனத்தை ஒருமுகப்படுத்தி, அப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க முயல வேண்டும். அதை விட்டுவிட்டு, அவரிடம் நமக்கு உள்ள பல பஞ்சாயத்துகளையும் ஒரே நேரத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, ஒரே நேரத்தில் அத்தனையையும் கலந்து விவாதித்தால் தீர்வு ஏற்படாது. மேற்கொண்டு பிரச்சினைகளைத்தான் அதிகப்படுத்தும்.
12. எதிர்மறைப் பேச்சு, எள்ளல், கேலிப் பேச்சு கூடாது – அவை அவமரியாதை மட்டுமல்ல. வார்த்தைகளின் மெல்லியல் தீவிரவாதம். நேரடியாக விஷயத்தை அலசி சரி செய்வதைவிடுத்து, அவரை மட்டந்தட்டி கேவலப்படுத்தும் செயல் அது. நம்மை ஒருவர் மட்டந்தட்டினால் அவரிடம் நமது எதிர்வினை என்னவாக இருக்கும்? அவர் பக்கம் நியாயம் என்றாலும் விட்டுக் கொடுத்துவிடுவோமா என்ன?
13. அனைத்து உணர்ச்சிகளையும் கொட்டக் கூடாது – ஆத்திரம் ஏற்படலாம், கோபம் ஏற்படலாம். ஆனால் அனைத்தையும் வடிகட்டி, தகவல் தொடர்புக்குத் தேவையான விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொள்வதே சிறப்பு. நோக்கமானது மக்களிடம் சிறப்பான உறவை ஏற்படுத்திக்கொள்வது என்பதாக இருக்க வேண்டுமே தவிர வில்லன்களை அடித்துத் துவைத்து வெளுக்கும் கதாநாயகனைப் போல் நினைத்துக்கொண்டு வார்த்தைகளால் சிலம்பம் ஆடுவது வன்முறை.
இதுவரை நாம் தெரிந்து கொண்டவற்றின் சாரமாக ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம். நாம் தகவல் தொடர்பு கொள்பவர் நம்மைப் போன்ற ஒரு மனிதர். அவரது குருதி குரூப் வேறாக இருக்கலாம். ஆனால் அதில் கலந்திருக்கும் உணர்ச்சி நம்முடையதற்கு எவ்விதத்திலும் குறைந்ததன்று. அவருக்கு மரியாதை முக்கியம். நாம் நமக்கு எதிர்பார்க்கும் மரியாதைக்குச் சற்றும் சளைக்காத மரியாதை அவருக்கும் தேவை.
இவற்றின் அடிப்படையில் நமது தொடர்பை அமைத்துக்கொள்ளத் தொடங்கினால் சிறப்பான தகவல் தொடர்புக்கு என்னென்ன செய்யலாம் என்பது விளங்க ஆரம்பிக்கும். அவற்றை அடுத்துப் பார்ப்போம்.
தொடரும் …
-நூருத்தீன்