என்னைக் கவர்ந்த சொல்லாட்சி (தோழியர் நூல்)

Share this:

கோதரர் நூருத்தீன் எழுதி சத்தியமார்க்கம்.காம் வெளியிட்டுள்ள தோழியர் (நபித்தோழியரின் சீரிய வரலாறு) படித்தேன். நூலாசிரியர் பயன்படுத்தியிருந்த சொல்லாடல் என்னைப் பல இடங்களில் கவர்ந்தது. இத்தகைய சொல்லாடல்கள், வரலாற்று நிகழ்வைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, லயிக்க வைத்தது. என்னுடைய அனுபவத்தை சக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

வரலாற்றில் பெயர் பெற்ற 17 நபித் தோழியரின் வாழ்க்கைக் குறிப்புகளை அருமையாகத் தொகுத்துள்ளார் ஆசிரியர். அல்ஹம்துலில்லாஹ். மிகச் சிறந்த முயற்சி; மிகச் சிறந்த நூல். முஸ்லிம்கள் ஒவ்வொருவரும், குறிப்பாக முஸ்லிம் பெண்கள் தவறாமல் படித்தறிய வேண்டிய சிறந்த நூல்.

இந்நூலில் நான் கண்ட சிறந்த அம்சங்கள் மற்றும் தேவையற்ற அம்சங்கள் இரண்டையும் ஆய்வுக் கண்ணோட்டத்தோடு முன்வைக்கிறேன்.

சிறந்த அம்சங்கள்:

[+] ஒவ்வொரு தோழியரின் வரலாற்றைத் தொடங்கும் முன்பாக ஒரு முன்னோட்டம் (ஒரு highlight point) கொடுக்கப்பட்டிருப்பது. அதை படித்தவுடன் உள்ளே முழுமையாகப் படிக்க ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

தேவையற்ற அம்சம்:

[-] அதே செய்தி முழுமையாக உள்ளே Repeat ஆவது. சில இடங்களில் “மேற்கண்ட உரையாடல்” என்று உள்ளது. எல்லா இடங்களிலும் அவ்வாறு போட்டுவிட்டால் படிப்பவர்களுக்குச் சோர்வு ஏற்படாது. (சில நபித்தோழியர் வரலாற்றில் அந்த அறிமுக உரையே 2 பக்கம் 3 பக்கம் அளவுக்கு வந்துள்ளது).

வித்தியாசமான உவமைகள்:

நடைமுறையில் காணும் உதாரணங்களைக் கொண்டு விளக்கி இருத்தல்.

யாசிர்(ரலி) அவர்களது குடும்பத்தாரைப் பாலை மணலில் கொடுமைப் படுத்தினர் – இதை, கடலையைப் போல் வறுத்து எடுத்தார்கள் என்ற சொல்லாடல் மூலம் நாம் அன்றாடம் பார்க்கும் கடலை வண்டியில் மணலில் கடலையை வறுக்கும் நிகழ்வை நினைவூட்டி அந்த வெப்பத்தை practical – ஆக நம்மையும் உணரவைக்கப்பட்டுள்ளது. கொடுமைகளை அனுபவித்தார்கள் என்று எழுத்தால் எழுதி விடுகிறோம். அதன் உண்மையான வலியை உணர வைக்கப் பல இடங்களில் ஆசிரியர் சிறப்பான கவனம் செலுத்தியுள்ளார்.

அஸ்மா பிந்த் உமைஸ்(ரலி) அவர்கள் வரலாற்றில் உமர்(ரலி) நாங்கள் உங்களுக்கு முன் ஹிஜ்ரத் செய்தவர்கள் என்று கூறிவிட அஸ்மா அவர்களுக்கு ஏற்பட்ட வருத்தமும் நபி(ஸல்) அவர்கள் அபிசீனியா சென்று பின் மதினா திரும்பியவர்களுக்கு இரண்டு ஹிஜ்ரத் செய்த நன்மை உண்டு என்று சொன்னபின் ஆறுதலும் மகிழ்வும் ஏற்பட்ட செய்தி அருமை!

இரு உயிர்தியாகிகளின் பெயர்கள் மக்கத்துச் சுடுமணலில் அன்று எழுதப்பட்டது. பின்னர் வரலாற்றிலும் – அல்ஹம்துலில்லாஹ்! அழகான சொல்லாட்சி!

அபூ தல்ஹா(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதையே மஹராக ஏற்றுக்கொண்டு திருமணம் செய்ய சம்மதித்த உம்மு ஸுலைமா(ரலி) அவர்களின் வரலாறு அலாதியானது. அதைச் சொல்லும்போதே சமுதாயத்தில் தற்போதுள்ள (வரதட்சணை அவல) நிலையை ஒருபிடி பிடித்துள்ளது அருமை.

தவிர்க்கப்படவேண்டிய சொற்கள்:

மீளெழுச்சி போன்ற அழகிய சொற்களுக்கு மத்தியில் இகலோக வஸ்துகள் போன்ற சொற்களைத் தவிர்த்திருக்கலாம். இகலோக என்றால் சிலருக்குப் புரியாது. வஸ்து என்ற சொல்லும் பலருக்குப் புரியாது. (உலகாதாயப் பொருட்கள் என்று குறிப்பிட்டிருக்கலாம்)

(அஸ்மா பிந்த் அபீபக்ர்(ரலி) வரலாற்றில் பக்.118 ல் “உலகாதாயத்திற்காக” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேசொல்லை “இகலோக” என்று வரும் இடங்களில் பயன்படுத்தினால் நல்லது)

அபூ தல்ஹா, உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் குழந்தை இறந்த பிறகு அவர்களின் இல்லறம், நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் ஆசீர்வதித்தது என்ற நிகழ்வைத் தொடர்ந்து தற்காலத்தில் நிகழக்கூடிய பாலியல் தீமைகளை – சமூகத்தை அழித்துக் கொண்டிருக்கும் மாபெரும் புற்று என்று மிகச் சரியாக கூறியுள்ளார்.

உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்கள் வரலாற்றைக் கூறும்போது ஈமானிய வலுவில் ஆணோ, பெண்ணோ பால் வேற்றுமையின்றி வாழ்ந்திருக்கிறார்கள் என்று கூறி பெண்களின் ஈமானிய உறுதியைத் தெளிவுபடுத்தி இருக்கிறார் ஆசிரியர்.

ஈமானிய உணர்வில் நாங்களும் சளைத்தவர்களில்லை என பெண் சஹாபியரும் நிரூபித்துள்ளதை நூலின் பல இடங்களில் தெளிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர்!

எழுத்துப் பிழை இரண்டே இடத்தில்தான்! நூல் முழுவதும் வாசித்து முடித்தபின் வெறும் 2 இடங்களில்தான் எழுத்துப் பிழை.

1. பக்கம் எண் 31 “என் சகேதரர் மகனே! என்றுள்ளது; “சகோதரர்” என்றிருக்க வேண்டும்.

2. பக்கம் 153 பைஸாந்தியர்கள் ஒரிலட்சம் என்றுள்ளது; “ஒரு லட்சம்” என்றிருக்க வேண்டும்.

அபூ ஜஹ்லைத் தாக்கிய இளம் வயது சஹாபிகள் இருவரைப் பற்றிக் குறிப்பிடும்போது வல்லூறு  போலப் பாய்ந்தார்கள் என்று மட்டும் குறிப்பிடாமல் வல்லூறின் வேகம் மணிக்கு 320 கி.மீ. என்ற தகவலையும் கொடுத்ததன் மூலம் ஒரு செய்தியையும் தந்து அவர்களின் வேகத்தையும் உணர வைத்தது மிகச் சிறப்பானது.

அபூ ஜஹ்லின் காலை ஒரு சஹாபி தாக்கிய நிகழ்வை பாதாம் கொட்டை உடைத்தால் ஏற்படும் சப்தம் மற்றும் கொட்டையிலிருந்து பருப்பு வெளிப்பட்டு விழுதல் என்ற உவமையின் மூலம் அந்த நிகழ்வை அப்படியே visualize செய்துள்ளார் ஆசிரியர்.

உம்மு வரக்கா அவர்களின் இறுதி முடிவைக் கூறிவிட்டு குர்ஆனை ஓதுகின்ற குரலே அவருடைய இருப்பிற்கும் இறப்பிற்கும் அடையாளமாகிப் போனது எனக் கூறியிருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது!

கனஸா பின்த் அம்ரு (ரலி) அவர்களின் வரலாற்றைக் கூறும்போது :- அரபுக்குலங்களுக்கு மத்தியில் இஸ்லாத்திற்கு முன்பு சிறிய விஷயங்களுக்கெல்லாம் தலையைச் சீவி விடுவார்கள் என்பது நாம் கேள்விப்பட்டதே. அதை தலைவாரி (சீவி)க் கொள்வது போல் தலை கொய்து (சீவி) வாழ்ந்து மடிந்து கொண்டிருந்தார்கள் என்று கூறியிருப்பது சிறப்பானது.

அதே வரலாறில் கனஸா (ரலி) யாத்த கவிதையைத் தமிழில் கொடுத்திருக்க, நாம் படித்தபோது அப்படியொன்றும் விசேடமாகத் தெரியவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டது. இது ஆசிரியருக்கும் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே வாசகருக்கு இதே எண்ணம் ஏற்படுமென்பதால் அதை மூல மொழியில் படித்தால்தான் அதன் “கனத்தை“ உணரமுடியும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ள ஆசிரியரின் முன்னேற்பாடு அருமை!

[-] உம்மு அய்மன் (ரலி) அவர்கள் வரலாறில் புது மணப்பெண் நான். மருதாணியின் கறை கூட மறையவில்லை…. என்று வந்துள்ளது. மருதாணி அந்த நாளிலேயே இருந்ததா? அல்லது புது மணப்பெண் என்பதை உணர்த்துவதற்காக நம் நாட்டுப் பெண்களின் பழக்கத்தை குறிப்பிட்டுள்ளாரா? என்ற கேள்வி எழுகிறது.

சொர்க்கத்திற்குரிய அந்த மங்கையின் முகமெல்லாம் மணற்புழுதி ஒப்பனை பூசியிருந்தது சிறப்பான சொல்லாட்சி.

நுஸைபா பின்த் கஅப் (ரலி) முஸைலமாவின் கோரிக்கையை ஏற்காத ஹபீப் (ரலி) அவர்களின் வெட்டியபோதும் அவரது விடாப்பிடியான கொள்கையைப் பார்த்து கூட்டத்தாருக்கு வியர்த்துக் கொட்ட இவருக்கோ குருதி கொட்டிக் கொண்டிருந்தது மிகச் சிறப்பான சொல்லாட்சி.

கடையில் தொங்கும் ஆட்டிறைச்சியை வெட்டுவது போல ஹபீப் (ரலி) அவர்களின் உடலைப் பாகம் பாகமாக வெட்டிக் கொண்டிருந்தான் என்ற சொல்லாட்சியின் மூலம் அந்த நிகழ்வையும் அப்படியே visualize செய்துள்ளார் ஆசிரியர்!

[-] அதே வரலாற்றில் (பக்கம் 82) நபியவர்களின் ஹிஜ்ரத்துக்குப் பிறகு யத்ரிப், மதீனாவானது என்ற இடத்தில் (நபியின் நகரம்) மதினத்துன் நபி என்ற தகவலையும் கொடுத்திருக்கலாம். அதன் சுருக்கமே மதினா என்றால் நன்றாக இருந்திருக்கும்.

போரில் பட்ட காயங்கள் என்று சாதாரணமாக எண்ணிவிடாமல் அதன் வைத்திய முறைகளை எடுத்துக்கூறி அந்த வலியையும் வேதனையையும் உணர வைத்துள்ளார் ஆசிரியர். வைத்தியத்தைவிட உடலுறுப்பை இழந்துவிடுவது எவ்வளவோ மேல் என்று கூறிய நுஸைபா (ரலி) அவர்களின் கூற்று மூலம் அதன் வீரியத்தை உணரச் செய்துள்ளார்.

உம்மு குல்தூம் பின்த் உக்பா (ரலி) அவர்களின் வரலாற்றில் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது என்ற நமது நாட்டுப் பேச்சை வேதாளங்கள் ஈச்சமரம் ஏறின! என்று அரபுப் படுத்தியிருப்பது அருமை!

அஸ்மா பின்த் அபீபக்ரு (ரலி) அவர்களின் வரலாற்றில் “பெண்களின் குடும்பப் பொறுப்பு என்பது கொச்சைப் படுத்தப் படாத காலம் அது” என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் தற்காலத்தில் நேர் எதிரான நிலை உள்ளது என்பதைச் சொல்லாமல் சொன்னவிதம் அருமை!

உம்மு மஅபத் (ரலி) வரலாற்றில் குட்டி ஈன்றால் பால்; அறுபட்டால் இறைச்சி. மடி இருந்தது கனமில்லை போன்ற சொல்லாட்சிகள் அருமை.

[-] ஹவ்வா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் வரலாற்றில் (பக் 138) “நான் ஒரு பெண்ணுக்குச் சொல்வதும் ஆயிரம் பெண்களுக்குச் சொல்வதும் ஒன்றே” என்பது நபி (ஸல்) அவர்களின் கூற்றா என்பது தெளிவு படுத்தப்படாமல் உள்ளது.

அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) வரலாற்றில் அவரை இறுதியாக அலீ (ரலி) அவர்கள் மறுமணம் புரிந்து கொண்டார் என்ற செய்தி உள்ளது. அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் இருந்தார்களா? அவர்கள் இறந்த பின்பா என்ற தகவல் சேர்த்திருக்க வேண்டும். (ஏனெனில் ஃபாத்திமா (ரலி) உயிருடன் இருந்தவரை வேறு திருமணம் அலீ (ரலி) செய்து கொள்ளவில்லை. அவ்வாறு செய்யக் கூடாதென ஃபாத்திமாவை (ரலி) திருமணம் செய்யுமுன்பே நபி (ஸல்) வாக்குறுதி வாங்கியிருந்தார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.)

வாசகனாக, என் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

– சையத் இபுராஹீம்

 


 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.