தோழியர் – 1 – உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான் أم سليم بنت ملحان

Share this:

உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான்
أم سليم بنت ملحان

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவை வெற்றி கொண்டு இரண்டு வாரங்கள்கூட ஆகியிருக்கவில்லை. ஹுனைன் பள்ளத்தாக்கில் பெரியதொரு படை முஸ்லிம்களுக்கு எதிரான போருக்குத் தயாரானது. ஹவாஸின் எனும் பதுஉ கோத்திரத்தினர், தகீஃப் எனும் அவர்களின் உபகோத்திரத்தினர் எல்லாம் இணைந்துகொண்டு, ‘அழித்து ஒழிப்போம் இந்த முஸ்லிம்களை’ என்று போருக்குத் தயாராகிவிட்டிருந்தனர்.

மக்காவிலிருந்து பெரியதொரு படையெழுப்பி, ஹுனைன் சென்று அவர்களை எதிர்கொண்டார்கள் நபியவர்கள். அந்தப் போரில் முஸ்லிம் படைகளுடன் கலந்துகொண்டு பயணம் புரிந்தார் பெண்மணி ஒருவர். அவர் இடையில் உடைவாள். அதைக் கண்ட அவர் கணவர் நபியவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இதோ பாருங்கள். என் மனைவி உடைவாள் ஒன்று வைத்திருக்கிறார்” என்றார்.

அதற்கு, “ஆம்! வாய்ப்புக் கிடைத்தால் அல்லாஹ்வின் விரோதிகளின் குடலைக் குத்திக் கிழிப்பேன்” என்று விரைந்து பதில் வந்தது. அவர் உம்மு ஸுலைம், ரலியல்லாஹு அன்ஹா (அல் இஸாபா 8/229).

oOo

ருமைஸா பின்த் மில்ஹான் அந்-நஜ்ஜாரிய்யா என்பது உம்மு ஸுலைமின் இயற்பெயர். ருமைஸாவுக்கு வேறு சில பெயர்களும் உண்டு – ஸஹ்லா, ருமைலா, ருமைத்தா, மலிக்கா, குமைஸா என்று சிறு பட்டியல் அளவிற்குக் குறிப்பிடுகிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

ஆனால் வரலாற்றில் புகழ்பெற்று நிலைத்துப்போன பெயர், உம்முஸுலைம்.

யத்ரிபில் தம் கணவர் மாலிக் பின் அந்நள்ருடன் மனமொப்பி வாழ்ந்து கொண்டிருந்தார் உம்முஸுலைம். இவர்களுக்கு மகன்களும் இருந்தனர். இந்நிலையில் யத்ரிபிலிருந்து மக்காவிற்குச் சென்ற யாத்ரீகர்கள் முஹம்மது நபியைச் சந்தித்து முதல் அகபா உடன்படிக்கை ஏற்பட, அதைத் தொடர்ந்து முஸ்அப் இப்னு உமைர் (ரலி) இஸ்லாமியப் பிரச்சாரம் யத்ரிபில் துவங்கியது. அந்தப் பிரச்சாரம் உம்முஸுலைமின் வீட்டுக் கதவைத் தட்ட, செய்தி அவர் நெஞ்சில் சென்று பதிந்து கொண்டது. இஸ்லாத்தின் சத்தியத்தைப் புரிந்துகொண்ட அவர் இஸ்லாத்திற்குள் நுழைந்து விட்டார்.

ஆனால் அவருடைய கணவர் மாலிக்குக்கு மூதாதையரின் பழைய வாழ்க்கை முறையை விடமுடியவில்லை.
இஸ்லாத்தை ஏற்றதற்கான முதல் சோதனையை எதிர்கொண்டார் உம்முஸுலைம். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை உருவானது. மாலிக் தம் மனைவியைப் புதிய மார்க்கத்திலிருந்து மீட்டெடுத்துவிட மிகவும் பிரயாசைப்பட்டார். எதுவும் சரிவரவில்லை. உம்முஸுலைம் தமது கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்தார். அத்தோடில்லாமல், தம் மகன் அனஸ் இப்னு மாலிக்கையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி போதனை செய்ய ஆரம்பித்துவிட்டார்.

மாலிக், மனைவியுடன் சண்டையிட்டார்; பொறுத்திருந்து பார்த்தார்; கடைசியில் கோபமாய்க் கிளம்பி சிரியா சென்றுவிட்டார். ஆனால் அவருக்கு அங்கு மரணம் காத்திருந்தது. அவருடைய எதிரி யாரோ ஒருவன் அவரைக் கொன்றுவிட இறந்துபோனார் மாலிக். இந்தச் செய்தி ஸைத் இப்னு சஹ்ல் அந்நஜ்ஜாரீ என்பவரை வந்தடைந்தது. அதுதான் கஸ்ரஜ் பெருங்குலத்தின் பிரிவான பனூ நஜ்ஜார் கோத்திரத்தின் தலைவர் அபூதல்ஹாவின் இயற்பெயர்.

உம்முஸுலைம் விதவையாகிப்போன துக்கச்செய்தி, அபூதல்ஹாவுக்குத் துக்கத்துக்கு பதிலாய் உற்சாகத்தை அளித்தது. காரணம் இல்லாமலில்லை. அப்போதைய யத்ரிபில் உம்முஸுலைம் மிகச் சிறந்த நல்லொழுக்கங்கள் நிறைந்த மாது. அறிவாற்றலில் மிகைத்திருந்தவர். இத்தகைய ஒரு மங்கையை மனைவியாக அடைவது பாக்கியம் என்று நிறைய ஆண்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அவர்களை, தாம் முந்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார் அபூதல்ஹா. அதற்குரிய தகுதிகளும் அவருக்கு இருந்தன.

அழகானவர்; அவர் சார்ந்திருந்த இனத்தின் தலைவர்; ஏராளமான சொத்து; சமூகத்தில் நல்ல அந்தஸ்து என்பதெல்லாம் இருக்க உம்முஸுலைமின் அதே பனூ நஜ்ஜார் கோத்திரம்தான் இவரும். தவிர அக்கோத்திரத்தின் மிகச் சிறந்த போர் வீரர். யத்ரிப் நகரிலேயே அவர் ஓர் அசாத்திய வில்லாளி.

இத்தகைய தகுதிகள் அமையப்பெற்ற தம்மை மணம் முடிக்க உம்முஸுலைமுக்கு ஆட்சேபம் இருக்க முடியாது என்று அவருக்குத் திட்டவட்டமாகத் தோன்றிவிட, உடனே பெண் கேட்கக் கிளம்பிவிட்டார் அபூதல்ஹா.

வழியில்தான் அவருக்கு அந்த எண்ணம் தோன்றியது. ‘மக்காவிலிருந்து வந்திருக்கும் முஸ்அப் பின் உமைர் எனும் முஸ்லிம் பிரச்சாரகரால் பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதைப்போல் இவரும் முஹம்மதை ஏற்றுக்கொண்டு அவரது மார்க்கத்தைத் தழுவியுள்ளாரே! அதனால் என்னை வேண்டாம் என்று மறுத்து விடுவாரோ?’

மனம் சமாதானம் பேசியது. ‘அதெல்லாம் மறுக்க மாட்டார்! அவருடைய முதல் கணவனே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கவில்லையே! எனவே அது ஒரு பிரச்சினையாக அமைய வாய்ப்பில்லை’

உம்முஸுலைம் வீட்டை அடைந்து, அனுமதிபெற்று உள்ளே நுழைந்தார் அபூதல்ஹா. அங்கு உம்முஸுலைமின் மகன் அனஸும் இருந்தார். சுற்றி வளைக்காமல் நேரடியாகத் தான் வந்த நோக்கத்தைத் தெரிவித்துவிட்டார் அபூதல்ஹா.

“அபூதல்ஹா! உம்மைப் போன்ற ஒரு கண்ணியவானை மணமுடிப்பது நற்பேறு. தட்டிக்கழிக்க முடியாத வரன் நீர். ஆயினும், நான் உம்மை மணந்து கொள்ள முடியாது. ஏனெனில் எனக்கு நீர் வேற்று சமயத்தவராக ஆகிவிட்டீர்” என்று பதிலும் நேரடியாக வந்தது.

அபூதல்ஹாவுக்கு ஆச்சரியம். அவரால் நம்ப முடியவில்லை. மதத்தைக் காரணமாகக் கூறுவது ஒரு சாக்குபோக்காகத்தான் இருக்க வேண்டும். அனேகமாய்த் தம்மைவிட செல்வந்தனையோ, தமது கோத்திரத்தைவிட சக்தி வாய்ந்த கோத்திரத்தைச் சார்ந்த வேறு எவரையோ அவர் முன்னரே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.

“உண்மையைச் சொல்லுங்கள். ஏன் என்னை மணம் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் உம்முஸுலைம்?”

“வேறு காரணம் ஏதும் இருக்கும் என்று நினைக்கிறீர்களா என்ன?”

“ஆம். மஞ்சளும் வெள்ளையும்”

“அதாவது?”

“மஞ்சளும் வெள்ளையும். தங்கமும் வெள்ளியும்”

“தங்கமும் வெள்ளியுமா?” ஆச்சரியமாகக் கேட்டார் உம்முஸுலைம்.

“அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது”

“அபூதல்ஹா! அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் சாட்சியாகக் கொண்டு பகர்கிறேன். நீங்கள் மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் நான் உங்களிடமிடமிருந்து ஒரு குன்றிமணி தங்கம், வெள்ளி என்று எதுவும் பெறாமல், நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதை மட்டுமே மணக்கொடையாக (மஹ்ராக) ஏற்றுக் கொண்டு நான் உங்களை மணந்து கொள்வேன்”.

கார், பங்களா, நகை, நட்டு என்று கொஞ்சங்கூட  அருவருப்போ, கூச்சமோ இல்லாமல் பெண்வீட்டாரிடம் வரதட்சனை கேட்டுவாங்கும் நம் சமுதாய மக்களுக்கு இதில் நிறைய விஷயம் அடங்கியிருக்கிறது. மணக்கொடையை மணமகன்தான் அளிக்க வேண்டியது கட்டாயம் என்பது ஒருபுறம் இருக்க, இங்குக் குறிப்பாய் மணமகள் கோரியது இஸ்லாமிய வரலாற்றில் ஓர் அற்புத நிகழ்வு. பணமாவது, நகையாவது, என்று இகலோக வஸ்துகளை உதறித் தள்ளிவிட்டு, மணம் புரிய இருவுலகிற்கும் மேன்மை சேர்க்கும் மனமாற்றம் கேட்டார் உம்முஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா. வாழ்க்கைக்குத் தேவையான சௌகரியங்களை மனைவியர் தம் கணவரிடம் கேட்டுப் பெறுவதில் தவறேதும் இல்லைதான். ஆனால் கணவனிடம் அடிப்படையாய் என்ன விழைய வேண்டும்; முன்னுரிமை எதற்கு அளிக்க வேண்டும் என்பதையெல்லாம் நம் பெண்கள் உணர்ந்துகொள்ள இதில் அளவற்ற பாடம் ஒளிந்திருக்கிறது.

உம்முஸுலைமின் பதிலைக் கேட்டு அபூதல்ஹா மிகவும் யோசித்தார். அரிய, விலையுயர்ந்த மரத்தால் வடிக்கப்பெற்ற கடவுள் சிலை ஒன்று அவரிடம் இருந்தது. அது அவரது நினைவிற்கு வந்தது. அவர் குலத்தின் மேட்டிமையின் அடையாளமான அதை எப்படித் துறப்பது?

அதைப் புரிந்துகொண்ட உம்முஸுலைம், “அபூதல்ஹா! நீங்கள் கடவுள் என்று வணங்கும் அந்தச் சிலை பூமியிலிருந்து முளைத்தது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்தானே?” என்று கேட்டார்.

“ஆம்”

“ஒரு மரத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஒரு பகுதியைச் சிலையாக வடித்துத் தாங்கள் கடவுள் என்கிறீர்கள். மீதப் பகுதிகளை எடுத்துச் சென்றவர்கள் அதை நெருப்புக்காகப் பயன்படுத்திக் குளிர்காயவோ, சமையலுக்கோ உபயோகப்படுத்துகிறார்கள். இது தங்களுக்கு விந்தையாகவோ, சங்கடமாகவோ தோன்றவில்லையா? அபூதல்ஹா! மீண்டும் கூறுகிறேன், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அதுவே தாங்கள் எனக்களிக்கும் மணக்கொடை”
பலமான யோசனைக்குப்பின் இணங்கினார் அபூதல்ஹா. “நான் முஸ்லிம் ஆக வேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்?”

“கூறுகிறேன். மிக எளிது. ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர்’ என்று சத்தியத்தை ஏற்றுக்கொண்டு தாங்கள் வாயால் சாட்சி பகர வேண்டும். அவ்வளவே! வீட்டிற்குச் சென்றதும் தங்களது சிலைகளை அப்புறப்படுத்தி விடுங்கள்”

“வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சி பகர்கிறேன். முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்கிறேன்”.

பூரண திருப்தியுடன் இஸ்லாத்தினுள் அடியெடுத்து வைத்தார் அபூதல்ஹா அல்அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு. அடுத்த சிலநாட்களில் இருவருக்கும் திருமணம் நிகழ்வுற்றது.

அதற்குமுன் யாரும் கேள்விப்பட்டிராத விசித்திரமில்லையா அது? வியந்தது மதீனா. நகரெங்கும் அதே பேச்சு. “கேட்டியா செய்தியை! உம்முஸுலைம் அடைந்ததைப்போல் சிறப்பான மணக்கொடையை இதுவரை எந்தப் பெண்ணுமே பெற்றதில்லை. தன்னை மணக்க விரும்பியவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது மட்டுமே போதும் என்று கேட்டு வாங்கியிருக்கிறார். என்னே சிறப்பு!”

வரலாற்றுப் புகழ்மிக்க இரண்டாவது அகபா உடன்படிக்கை பற்றி ஹபீப் பின் ஸைத் வரலாற்றில்  பார்த்தோமே? நபியவர்களை அகபாவில் சந்தித்து, சத்தியப் பிரமாணம் செய்த 75 பேர்கொண்ட குழுவில் முக்கியமானவர்கள் அபூதல்ஹாவும் அவருடைய மனைவி உம்முஸுலைமும். அன்றைய உடன்படிக்கையின்போது யத்ரிபில் ஏற்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்திற்கு 12 பேர்களைத் தலைவராக நியமித்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அதில் அபூதல்ஹாவும் ஒருவர்.

oOo

உம்மு ஸுலைம் தம் முதல் கணவருக்கு ஈன்றெடுத்த மகன் அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹுவுக்கு அப்பொழுது பத்து வயது இருக்கும். ஒருநாள் அவரை அழைத்துக்கொண்டு, தம் கணவர் அபூதல்ஹாவோடு நபியவர்களிடம் வந்தார் உம்மு ஸுலைம். “அல்லாஹ்வின் தூதரே! இதோ என் மகன் அனஸ்; தங்களுக்கு பணிவிடை செய்ய ஒப்படைக்கிறேன்” என்று ஒப்படைத்துவிட்டுச் சென்று விட்டனர்.

இஸ்லாத்தை ஏற்றோமா, கடமைகளை நிறைவேற்றிவிட்டு வாழ்க்கையை வாழ்ந்தோமா என்றெல்லாம் நின்றுவிடாமல், நபியவர்களை நேசித்தார்கள் அவர்கள். மூச்சும் பேச்சுமாய் ஆகிப் போனார்கள். தன்னலம், இகலோக பெருமை, உலக வாழ்க்கையில் போட்டி என்பதையெல்லாம் மறுத்து மறந்துவிடும் பக்குவம் ஏற்பட்டுப் போயிற்று அவர்களுக்கு. எனவே மகனையே அல்லாஹ்வின் தூதரிடம் முழுக்க முழுக்க ஒப்படைத்துவிடும் அளவிற்கு உறுதி ஏற்பட்டுப் போனார்கள்.

அவரை அன்பாய் அரவணைத்து ஏற்றுக்கொண்டார்கள் நபியவர்கள். அதன்பின் நபியவர்களின் ஆயுள் காலம் முழுவதும் அவர்களுக்குப் பணிவிடை செய்தே வளரலானார் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு. கூடவே சிறப்பாய் வளர்ந்தோங்கிக் கொண்டிருந்தது அவரது ஞானமும். நபியவர்கள் மதீனாவில் இருந்தாலும் சரி, பயணம் செல்ல நேரிட்டாலும் அவர்களை விட்டு அனஸ் பிரிந்ததே இல்லை.

உம்மு ஸுலைமுக்குச் சகோதரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் உம்மு ஹராம் பின்த் மில்ஹான், ரலியல்லாஹு அன்ஹா. உம்மு ஹரமின் கணவர் உபாதா இப்னு ஸாமித் நபியவர்களின் மற்றொரு சிறப்புத் தோழர். இந்தக் குடும்பத்தினர்மீது நபியவர்களுக்குச் சிறப்பானதொரு கரிசனம் இருந்து வந்தது. அதற்குக் காரணம், அவர்கள் இருவரின் கணவர்களும் தம்முடைய சிறப்பான தோழர்கள் என்பதால் மட்டும் அல்ல. அக்குடும்ப உறுப்பினர் ஒருவரின் உயிர் தியாகமும் ஒரு காரணம்.

“இவர்களுடைய சகோதரன் எனக்காகப் போரிட்டுக் கொல்லப்பட்டுவிட்டான்” என்று அவ்வப்போது நபியவர்கள் நினைவு கூருமளவிற்கு ஒரு பெருநிகழ்வொன்று நிகழ்ந்திருந்தது.

அந்தச் சகோதரன் யார்? அது என்ன நிகழ்வு? பார்ப்போம்.

oOo

உம்மு ஸுலைம், உம்மு ஹராம் ஆகிய இருவருக்கும் சகோதரர் ஒருவர் இருந்தார். ஹராம் இப்னு மில்ஹான் ரலியல்லாஹு அன்ஹு. ஓதுவதும் தொழுவதும் சிறப்பான ஆன்மிக வழிபாடுமாய் வாழ்ந்துகொண்டிருந்த தோழர்களில் ஒருவர் அவர்.

ஒருநாள் அபூபரா எனும் ஆமிர் இப்னு மாலிக் என்பவன் நஜ்துப் பகுதியிலிருந்து மதீனா வந்து நபியவர்களைச் சந்தித்தான். அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுபோல் அவனுக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள் முஹம்மது நபி (ஸல்). அனைத்தையும் கேட்டுக் கொண்டான் அவன். ஆனால் அதில் அவனுக்குத் தீர்மானமான முடிவு ஏற்படவில்லை. எனவே அவன் அந்த இஸ்லாமிய அழைப்பை ஏற்கவுமில்லை; மறுக்கவுமில்லை. “அல்லாஹ்வின் தூதரே! உங்களின் தோழர்கள் எங்கள் ஊருக்கு வந்து இந்தச் செய்தியை சொன்னால் என் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். எனவே என்னுடன் சிலரை அனுப்பி வையுங்கள்” என்று கோரிக்கை வைத்தான்.

ஆஸிம் இப்னு தாபித் (ரலி) அவர்களின் வரலாற்றில் அர்-ராஜி எனும் இடத்தில் நயவஞ்சகமாய் நான்கு தோழர்கள் கொல்லப்பட்டதையும் இருவர் சிறை பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டதையும் படித்தது நினைவிலிருக்கிறதா? சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த அந்நிகழ்வின் துக்கம் மறையாமல் இருந்த நேரம் அது. எனவே இத்தகைய கோரிக்கையை ஏற்று தம் தோழர்களை அனுப்புவதில் நபியவர்களுக்கு நிறையத் தயக்கம் இருந்தது.

“நஜ்துவாசிகளால் என் தோழர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்று அஞ்சுகிறேன்” என்று கூறிவிட்டார்கள் அவர்கள்.

“அப்படியெல்லாம் ஏதும் நிகழாமல் இருக்க நான் உத்தரவாதம் அளிக்கிறேன்” என்றான் அபூபரா.

ஒரு குலமோ, கோத்திரமோ யாருக்கேனும் தாம் பாதுகாவல் என்று அறிவித்துவிட்டால் இதர கோத்திரத்தினர் அவர்மீது கை வைக்காமல் தவிர்த்துக்கொள்வது வழக்கம். எனவே, அபூபராவின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்டு சிறந்த எழுபது தோழர்களை தேர்ந்தெடுத்து நஜ்துப் பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள் நபியவர்கள்.

எழுபது பேரும் சிறந்தவர்கள் என்றால் மிகச் சிறந்தவர்கள். குர்ஆன் கற்றுத் தேர்ந்தவர்கள். பகலில் விறகு பொறுக்கி அதை விற்று – திண்ணைத் தோழர்கள் என்று படித்தோமே நினைவிருக்கிறதா? – அவர்களுக்கு உணவு வாங்கி வருவார்கள். இரவில் குர்ஆன் ஓதுவதும் தொழுவதும் என்று படு ஈடுபாட்டுடன் கூடிய ஆன்மிக வழிபாடு. இப்படியாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் அவர்கள். இந்த எழுபதுபேரில் ஒருவர் ஹராம் இப்னு மில்ஹான்.

அனைவரும் புறப்பட்டு பிஃரு மஊனா – மஊனா கிணறு – எனும் இடத்தை அடைந்தனர். அந்த இடம் பனூ ஆமிர், ஹர்ரா, பனூ ஸுலைம் எனும் கோத்திரத்தினருக்கு மத்தியில் அமைந்திருந்தது. எல்லோரும் அங்குத் தங்கிக்கொண்டு உம்மு ஸுலைமின் சகோதரர் ஹராம் இப்னு மில்ஹான் ரலியல்லாஹு அன்ஹுவிடம் நபியவர்களின் கடிதத்தைக் கொடுத்து, ஆமிர் இப்னு துஃபைல் என்பவனிடம் அனுப்பினர்.

ஆமிர் இப்னு துஃபைல் என்பவன் அவனுடைய கோத்திரத்தின் முக்கியப் புள்ளி. கடிதத்தைப் படித்துவிட்டு, செய்தி பிடிக்கவில்லையென்றால், “எனக்கு இதெல்லாம் ஒத்துவராது; நீங்கள் உங்கள் ஊருக்குப் போகலாம்” என்று ஏதாவது சொல்லியிருக்கலாம் அவன். ஆனால் கொடூரத்தனம் புரிந்தான் அந்த அயோக்கியன். ஹராம் அளித்த கடிதத்தைப் படிக்கவுமில்லை; தன் ஆளுக்குக் கண்சாடை புரிய, அவன் சிறு ஈட்டி ஒன்றை எடுத்தான்; ஹராம் இப்னு மில்ஹானின் முதுகுப் புறத்திலிருந்து குத்தினான். முடிந்தது. சடுதியில் அனைத்தும் நிகழ்ந்து முடிந்தது.

ஊடுருவிய ஈட்டியையும் குருதி பெருக்கெடுப்பதையும் உணர்ந்த ஹராம் உரத்து, தெளிவாய் உரைத்தார், “அல்லாஹு அக்பர். கஅபாவின் இறைவனின் மீது சத்தியமாகக் கூறுகிறேன், நான் வெற்றி பெற்றுவிட்டேன்”

சற்றும் எதிர்பாராமல் குத்தப்பட்டு, ரத்தம் பெருக்கெடுக்கும் அத்தருணத்தில் அது தம் மரணத்தின் ஒப்பற்ற வெற்றி என்று சட்டென ஒருவர் சொல்ல முடியுமென்றால் ஈமானின் வலு எத்தகையதாக இருந்திருக்க வேண்டும்? உலக வாழ்க்கையை எவ்வளவு உதாசீனமாகக் கருதியிருக்க வேண்டும்?

அபூபராவின் பாதுகாப்பு உடன்படிக்கை அந்த நபித்தோழர்களுக்கு இருப்பதையெல்லாம் சட்டையே செய்யாமல், சில கோத்திரத்து மக்களைத் துணைக்கு அழைத்து வைத்துக்கொண்டு அனைவரையும் சுற்றி வளைத்தான் ஆமிர் இப்னு துஃபைல். எதிர்த்து கடுமையாகப் போரிட்டனர் அந்தத் தோழர்கள். படை பலத்தில் மிகைத்திருந்த எதிரிகள் அந்தத் தோழர்கள் அனைவரையும் கொன்று போட்டனர். படுகாயங்களுடன் வீழ்ந்த கஅபு இறந்துவிட்டதாகக் கருதியதால் அவரும், தன் தாய் ஏதோ ஒருகாலத்தில் நேர்ச்சை செய்திருந்தாள் என்பதற்காகக் கைது செய்யப்பட்ட அம்ரு இப்னு உமைய்யாவை ஆமிர் இப்னு துஃபைல் விடுவித்ததாலும் கஅபு இப்னு ஸைது இப்னு நஜ்ஜார், அம்ரு இப்னு உமைய்யா அத்-தமரீ ஆகிய இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

இந்த நிகழ்வு எக்கச்சக்க துக்கத்தை அளித்தது நபியவர்களுக்கு. அதனால் இந்தப் போரில் கொல்லப்பட்ட ஹராமின் சகோதரிகளிடம் தனிச் சிறப்பான அக்கறையும் பாசமும் ஏற்பட்டிருந்தது நபியவர்களுக்கு.

oOo

அபூதல்ஹா (ரலி), உம்மு ஸுலைம் (ரலி) தம்பதியருக்குப் பிறந்த ஆண் குழந்தை நோய்வாய்ப்பட்டிருந்தது. மருத்துவமனை வசதி இல்லாத காலம் அது. எனவே வீட்டில் வைத்துச் சிகிச்சை புரிந்துகொண்டிருந்தனர். இருந்தாலும் பலனின்றி ஒருநாள் குழந்தை இறந்துவிட்டான். அப்பொழுது அபூதல்ஹா வீட்டில் இல்லை. வீட்டில் இருந்த மற்றவர்களிடம், “நான் இந்தச் செய்தியை என் கணவரிடம் தெரிவிக்கும்வரை யாரும் எதுவும் சொல்லக் கூடாது” என்று சொல்லிவிட்டார் உம்மு ஸுலைம், பிறகு அந்தக் குழந்தையை குளிப்பாட்டி, கஃபனிட்டு வீட்டின் ஓரத்தில் வைத்துவிட்டார்.

மாலை வீட்டிற்கு வந்த அபூதல்ஹா (ரலி) தம் மகனைப் பற்றி விசாரித்தார். “இதற்குமுன் இருந்ததைப் போலன்றி அவன் மிகவும் அமைதியாகவும் சாந்தியாகவும் இருக்கிறான்” என்று பதிலளித்தார் உம்மு ஸுலைம்.

கவலை குறைந்த அபூதல்ஹா உணவு உண்டு முடிக்க, தம் கணவனை மகிழ்விக்க தம்மை அலங்கரித்துக்கொண்டு நறுமணம் பூசிக் கொண்டார் உம்மு ஸுலைம் (ரலி). அன்றிரவு கணவன், மனைவி தாம்பத்யத்தில் ஈடுபட்டனர். பின்னர் காலையில்தான் கணவனிடம் விஷயத்தைக் கூறினார் உம்மு ஸுலைம். “உங்களுடைய வெகுமதியை அல்லாஹ்விடம் தேடிக் கொள்ளுங்கள். உங்கள் மகன் இப்பொழுது அல்லாஹ்வின் வசம்”

இந்த இழப்பில் மிகவும் மனவருத்தமடைந்து போனார் அபூதல்ஹா. இத்தகு சோகத்தை யாரிடம் சொல்லி ஆறுதல் தேடுவது? விரைந்தார் அல்லாஹ்வின் தூதரிடம். இழப்பையும் நடந்ததையும் விவரித்தார்.

“உங்கள் இருவரின் அந்த இரவை அல்லாஹ் ஆசீர்வதிப்பானாக” என்று இறைஞ்சினார்கள் நபியவர்கள்.

முற்றும் நிறைவேறியது அந்தப் பிரார்த்தனை. பிறகு கருவுற்ற உம்மு ஸுலைம் (ரலி) அப்துல்லாஹ் என்ற மகனைப் பெற்றெடுத்தார். பின்னர் அப்துல்லாஹ்வுக்குப் பல குழந்தைகள். அவர்களில் பத்துப் பேர் குர்ஆன் முழுவதுமாய் ஓதித் தேறியவர்கள்.

தாம்பத்யம், இல்லறம், மரணம் என்பதன் இலக்கணமெல்லாம் வேறாக வாழ்ந்து கொண்டிருந்த சமூகம் அது. மாசுபடிந்த இன்றைய நம் சூழல் பல விஷயங்களைத் தலைகீழாக்கி வைத்துள்ளது. சபிக்கப்பட்ட ஷைத்தான் இருக்கிறானே அவனது தலையாயப் பணி என்ன? ஆகுமானதை ஆகாதவையாக்கி, தடுக்கப்பட்டவற்றைக் கவர்ச்சியாக்கிக் காட்டுவது. அதன் பலன்? கவர்ச்சி, அலங்காரம் என்பதெல்லாம் கணவரைத் தவிர பொதுப் பார்வைக்கு கடைவிரிக்கும் கொடுமை ஒருபுறம். தம் தேவைகளை ஹலாலான தாம்பத்ய வட்டத்தை மீறித் தேடி அலையும் ஆண், பெண்ணின் ஹராமான போக்குகள் மறுபுறம். குடும்பங்களை, சமூகத்தை அழித்துக் கொண்டிருக்கும் மாபெரும் புற்று இது.

oOo

போர்க் காலங்களில் களைத்து, அடுப்படியில் அடங்கி விடவில்லை உம்மு ஸுலைம் (ரலி). பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதி வரையறைக்குட்பட்டு களங்களில் வீரபவனி வந்த பெண்மணி அவர். ஹுனைன் போரின்போது முஸ்லிம் படைகளுடன் கலந்துகொண்டு பயணம் புரிந்தார் அவர்; இடையில் உடைவாள். அதைக் கண்ட அபூதல்ஹா நபியவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இதோ பாருங்கள். உம்மு ஸுலைம் உடைவாள் ஒன்று வைத்திருக்கிறார்” என்றார்.

அதற்கு “ஆம்! வாய்ப்புக் கிடைத்தால் அல்லாஹ்வின் விரோதிகளின் குடலைக் குத்திக் கிழிப்பேன்” என்று விரைந்து பதில் வந்தது.

வீரம் அடுக்களையில் முடங்கிவிடவில்லை. மட்டுமின்றி, பல நபி மொழிகளை அறிவித்து ஹதீஸ் நூல்களிலும் பதிவாகிப்போனார் உம்மு ஸுலைம்.

ரலியல்லாஹு அன்ஹா!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

 

< தோழர்கள்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.