தோழர்கள் – 1 – ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)

தோழர்கள்
Share this:

 

அன்பான சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

பரவலாக அறியப் படாத நாயகர்கள் வரலாற்றில் நிறையப் பேருண்டு. அவர்களுள் தியாகமும் நேர்மையும் எளிமையும் வாய்மையும் வாய்க்கப் பெற்று அவற்றைத் தம் வாழ்வில் வாழ்ந்து காட்டிய நபித்தோழர்கள் பலரை நம் சமுதாயம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறதா என்பது ஐயமே!

அந்தக் குறையைப் போக்கும் முகமாக சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மூலம் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான சிறந்த எழுத்தாளரான சகோதரர் நூருத்தீன், “தோழர்கள்” எனும் தலைப்பில் தொடராகப் பல வரலாற்று நாயகர்களை இன்ஷா அல்லாஹ் அறிமுகப் படுத்தவிருக்கிறார்.

பொதுவாக, வரலாறு என்பது வாசிப்பதற்கு மட்டுமன்று; எடுத்தும் தடுத்தும் வாழ்வதற்கான வழிகாட்டல் நிறையப் பெற்றதே வரலாறு என்பதாகும்.

வாருங்கள் வாசிப்போம்; முற்றாக இயலா விட்டாலும் முடிந்தவரை வாழ்ந்து விடுவோம்!

1. ஸயீத் இப்னு ஆமிர்سعيد ابن عامر (ரலி)

உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த காலகட்டம். சிரியாவின் ஹிம்ஸ் பகுதியிலிருந்து பிரதிநிதிக்குழு ஒன்று மதீனாவிற்கு வந்திருந்தது. அனைவரும் உமர் (ரலி) அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள். தனது கருவூலத்திலிருந்து உதவி வழங்க, ஹிம்ஸுப் பகுதியில் ஏழையாய் உள்ளவர்களின் பட்டியல் ஒன்றை அளிக்கும்படி அவர்களிடம் கேட்டார் உமர் (ரலி).

அடுத்த தேர்தலில் ஓட்டுக்காகவெல்லாம் இல்லாமல் உண்மையான இலவசம்! ஜகாத்தாகவும் வரியாகவும் பைத்துல்மாலில் சேகரம் ஆகும் பணம் கொண்டு ஏழைகளை நிசமாகவே மேம்படுத்தும் இலவசம்!

பட்டியலைப் பார்த்தவரின் பார்வையில் ஒரு பெயர் விளங்கவில்லை. ”யார் இந்த ஸயீத்?” என்று கேட்டார்.

“எங்கள் அமீர்” என்றனர். அமீர் என்றால் அந்தப் பகுதியின் கவர்னர் எனலாம்.

“என்ன, உங்கள் அமீர் ஏழையா?” என்ற உமரின் கேள்வியில் அதிர்ச்சி இருந்தது!.

“ஆமாம். அல்லாஹ்வின் மேல் ஆணையாக, பல நாட்கள் அவரது வீட்டு அடுக்களை நெருப்பின்றி இருப்பது எங்களுக்குத் தெரியும்” என்று அவர்கள் நிச்சயப்படுத்தினர்.

உமர் அழுதார்! மாநிலம் ஆளும் கவர்னர் ஏழையா? தடுக்க இயலாமல் உமர் அழுதார்!.

ஆயிரம் தீனார்கள் ஒரு பையில் கட்டி அவர்களிடம் கொடுத்து, “என்னுடைய ஸலாம் அவருக்குத் தெரிவியுங்கள். அமீருல் மூமினின் இந்தப் பணம் கொடுத்தார் என்று ஒப்படையுங்கள். அவரது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்”.

குழு ஹிம்ஸ் வந்து சேர்ந்தது. பை கொடுத்தார்கள். பிரித்துப் பார்த்து தீனார்கள் கண்டு உரத்த குரலில், “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” என்றார் ஸயீத்.  மரணம் போன்ற பேரிடரின் நிகழ்வில் முஸ்லிம்கள் வெளிப் படுத்தும் மனவுறுதிப் பிரகடனம். அதைத் தான் கூறினார் ஸயீத் இப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு.

* * * * * *

க்கா நகருக்குச் சற்று வெளியே உள்ளது தன்ஈம் எனும் பகுதி.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு அன்னை ஆயிஷா (ரலி) ஹஜ் செய்ய வந்தபோது ஹஜ்ஜுக் கடமைச் செயல்பாடுகளின் இடையில் அன்னைக்கு மாதவிடாய் ஏற்பட்டு, கஅபாவைத் தவாஃப் செய்ய இயலாமல் ஆகிவிட்டது. அவர்கள் தூய்மை அடைந்த பின்னர் தன்ஈமுக்கு வந்து இஹ்ராம் மேற்கொண்டு, கஅபாவுக்குச் சென்று தவாஃப் செய்து ஹஜ்ஜை முழுமைப் படுத்தினார். அந்த இடத்தில் இப்பொழுது ஆயிஷா (ரலி) பள்ளி என்ற பெயரில் ஓர் அழகிய பள்ளி உள்ளது.

தன்ஈமில் அன்று ஒரு சம்பவம். குபைப் இப்னு அதீ (ரலி) எனும் நபித்தோழர் ஒருவர் மக்கத்துக் குரைஷிகளால் கைப்பற்றப்பட்டு அன்று கொலைத் தண்டனைக்கு உட்பட்டிருந்தார். (இன்ஷாஅல்லாஹ் இவரைப் பற்றிய வரலாறு விரிவாய் பின்னர்). கொளுத்தும் சுடுமணலில் வெற்றுடம்பாய்ப் படுக்க வைத்து, மார்பில் பாறாங்கல்லை ஏற்றி வைக்கப் பட்ட பிலால் (ரலி) அவர்களை குதூகலத்துடன் வேடிக்க பார்த்த கூட்டமல்லவா? எனவே மக்கா நகரவாசிகள்  வேடிக்கை பார்க்கக் குழுமி விட்டிருந்தனர். ஸயீத் இப்னு ஆமிர் அப்பொழுது இளைஞர். முண்டியடித்துக் கொண்டு அவரும் கூட்டத்தில் புகுந்திருந்தார்.

சங்கிலிகளால் கட்டியிழுத்துக் கொண்டுவரப்பட்ட குபைபிடம் கடைசி ஆசை கேட்கப்பட்டது.

“இரண்டு ரக்அத் தொழ வேண்டும்”.

அனுமதியளிக்கப்பட்டது. மரணப் பயம் எதுவுமேயற்ற அமைதியான தொழுகை. குபைப் அழகாய் நிறைவேற்றினார். பின்னர் அநியாயத்திற்குத் துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்படுகிறார்.

“சரியில்லை, இது எதுவுமே சரியில்லை” என்று ஸயீத் மனம் நிச்சயமாய் சொன்னது. தொடர்ந்து வந்த நாட்களில் மனதை மரணம் வென்றது. ஒருநாள், ”போங்கடா நீங்களும் உங்க கொள்கையும்” என்று குரைஷிகளிடம் கூறிவிட்டு மதீனா சென்றுவிட்டார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் தஞ்சமடைந்து விட்டார். பிறகு கைபர் யுத்தத்திலும் அதன் பிறகு நடைபெற்ற போர்களிலும் கலந்து கொண்ட வீரர் ஸயீத்.

அபூபக்ரு மற்றும் உமர் இருவரும் ஸயீத் இப்னு ஆமிரின் (ரலியல்லாஹு அன்ஹும்) நேர்மையையும் இறைவிசுவாசத்தையும் நன்கு அறிந்திருந்தவர்கள். அவரது ஆலோசனைகளையும் அந்த இரு கலீஃபாக்கள் கேட்டறிந்து செயல்படுவர்கள். உமர் கலீஃபா பொறுப்பேற்றுக் கொண்டிருந்த ஆரம்ப நேரத்தில் ஒருமுறை ஸயீத் அவரிடம் ஆலோசனை பகர்ந்தார்.

”நான் உம்மிடம் மனப்பூர்வமாய்ச் சொல்கிறேன். மக்களிடம் நீங்கள் நடந்து கொள்வதன் பொருட்டு அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளுங்கள். ஆனால் அவனிடம் உமக்குள்ள உறவு குறித்து மக்களை அஞ்ச வேண்டாம். சொன்னதையே செய்யுங்கள். ஏனெனில் வாக்குறுதியில் சிறந்தது, அதை நிறைவேற்றுவதே. முஸ்லிம்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பவர்களைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எதை விரும்புவீர்களோ வெறுப்பீர்களோ அதையே அவர்களுக்கும் விரும்புங்கள்; நிராகரியுங்கள். சத்தியத்தை அடைய எத்தகைய இடையூறையும் சமாளியுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளை நிலைநாட்டுவதில் மற்றவர்கள் கூறும் குற்றச்சாட்டைப் புறந்தள்ளுங்கள்”. இதுவே அதன் சாராம்சம்.

இந்த நேர்மையெல்லாம்தான் ஹிம்ஸிற்கான அமீருக்குத் தகுதியான ஆள் தேர்ந்தெடுக்க உமர் யோசித்துக் கொண்டிருந்தபோது ஸயீத் இப்னு ஆமிரின் பெயர் கவனத்திற்கு வந்து உடனே டிக் செய்யப்பட்டது.

உமர் நிர்வாகப் பொறுப்பிற்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கும் லாவகமும் அதற்குரியவர்கள் பதவியை வெறுத்தொதுங்குவதும், அதெல்லாம் சுவாரஸ்யமான தனிக் கதைகள்.

“ஸயீத், உம்மை ஹிம்ஸிற்கு கவர்னராக நியமிக்கிறேன்” என்று உமர் அறிவித்தபோது மகிழ்ச்சி அடையாவிட்டாலும் பரவாயில்லை, அவரது பதில் தான் ஆச்சர்யம்! “உமர், கெஞ்சிக் கேட்கிறேன். என்னை உலக விவகாரத்திற்கெல்லாம் நிர்வாகியாக்கி அல்லாஹ்விடம் நஷ்டமாக்கி விடாதீர்கள்”.

உமருக்கு ஆத்திரம் எழுந்தது. “என்னை கலீஃபா பொறுப்பில் எல்லோரும் சேர்ந்து அமர்த்தி விடுவீர்கள். உலக விவகாரச் சுமையை என் தலையில் வைப்பீர்கள். ஆனால் உதவிக்கு வராமல் கைவிட்டுவிட்டு ஓடுவீர்கள்”.

பதவியையும் பணத்தையும் அந்தஸ்தையும் செல்வாக்கையும் விட்டு ஓடிய சமூகம் அது. முன்மாதிரிச் சமூகம். நம்மால் வரலாறுகளில் படித்துப் பெருமூச்செறிய மட்டுமே முடியும்!.

உமர் வாதத்தின் நியாயம் ஸயீத்திற்குப் புரிந்தது. “அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை நான் கைவிடமாடடேன்”. ஏற்றுக் கொண்டார் ஸயீத்.

கல்யாணமாகியிருந்த புதிது. புது மனைவியுடன் ஹிம்ஸ் புறப்பட்டார் ஸயீத். உமர் பணம் கொடுத்திருந்தார். புது இடத்தில் அமீர் குடும்பம் அமைத்துக் கொள்ள வேண்டுமே. ஹிம்ஸ் வந்து சேர்ந்தவுடன் அடிப்படைக்குத் தேவையான பொருட்கள் மட்டும் வாங்கிக் கொண்டார் ஸயீத். பிறகு மனைவியிடம் கூறினார். “நாமிருக்கும் நகரில் வர்த்தகத்தில் நல்ல இலாபம் கிடைக்கிறது. மீதமுள்ள பணத்தை நல்லதொரு வியாபாரத்தில் முதலீடு செய்கிறேன்”.

மனைவி கேட்டார், “வியாபாரத்தில் நஷ்டமேற்பட்டு விட்டால்?” வீட்டிற்கு மேற்கொண்டு சில பொருட்கள் வாங்கிக் கொள்ளலாமே என்ற எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை அவருக்கு இருந்தது. “யாரை நம்பி முதலீடு செய்கிறேனோ அவனை அதற்கு உத்தரவாதம் அளிக்க வைக்கிறேன்” என்று பதில் கூறிவிட்டார் ஸயீத்.

மீதமிருந்த அனைத்துப் பணத்தையும் ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் முற்றிலுமாய்க் கொடுத்துவிட்டார் அவர். பின்னர் அவரின் மனைவி வியாபாரத்தின் லாபம் குறித்துக் கேட்கும் போதெல்லாம், “அதற்கென்ன? அது பிரமாதமாய் நடக்கிறது. அதன் லாபமும் பெருகி வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது” என்று கூறிவிடுவார்.

ஒருநாள் ஸயீத் பற்றிய விஷயம் அறிந்த உறவினர் முன்னிலையில் அவர் மனைவி இப்பேச்சை எடுக்க நேர்ந்தது. உறவினரின் பலமான சிரிப்பு மனைவிக்கு சந்தேகத்தை அளிக்க, வற்புறுத்தலில் உறவினர் உண்மையைச் சொல்லிவிட்டார். மனைவியின் கேவலும் அழுகையும் ஸயீத்திடம் இரக்கம் ஏற்படுத்த,

“என்னுடைய நண்பர்கள் எனக்கு முன்னர் மரணித்து விட்டார்கள். இந்த உலகமும் அதிலுள்ள அனைத்தும் அதற்கு ஈடாக கிடைப்பினும் சரியே, அவர்களின் நேர்வழியிலிருந்து நான் விலகிவிட விரும்பவில்லை” என்றார். அழுகையிலும் மனைவியின் அழகு அவரை ஈர்த்தது. சுதாரித்துக் கொண்டவர், “சுவர்க்கத்திலுள்ள அழகிய கண்களையுடைய ஹுருல் ஈன்களைப் பற்றி உனக்குத் தெரியும். அவர்களில் ஒருவர் பூமியை நோக்கினாலும் அதன் சக்தியில் முழு பூமியையும் பிரகாசப்படுத்தும். சூரிய சந்திர ஒளிகளையும் மிகைத்தது அது. உன்னை அவர்களுக்காக விட்டுக் கொடுப்பது என்பது சிறந்ததுதான்”.

ஸயீதின் மனைவி அமைதியானார். தன் கணவரின் எண்ணமும் மனவோட்டமும் அவருக்குப் புரிந்தது.

இப்படி வாழ்ந்து கொண்டிருந்த ஸயீத் இப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் புதிதாய் தீனார்கள் வந்தால்?

* * * * * *

“இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” என்ற சத்தம் கேட்டு ஓடி வந்த ஸயீதின் மனைவி கேட்டார், “என்ன? கலீஃபா இறந்து விட்டார்களா?”

“அதை விடப் பெரிய சோகம்”.

“முஸ்லிம்களுக்குப் போரில் தோல்வியேதும் ஏற்பட்டுவிட்டதா?”

“அதை விடப் பெரிய இடர், ஒரு பேரிடர். என்னுடைய மறுமை வாழக்கையைக் கெடுத்து, என் வீட்டினுள் குழப்பத்தை ஏற்படுத்த வந்திருக்கிறது”.

“எனில் அதனை விட்டொழியுங்கள்” என்றார் மனைவி தீனார் பற்றி அறியாமல்.

“அப்படியானால் எனக்கு உதவுவாயா?”

மனைவி தலையாட்ட அனைத்து தீனார்களையும் ஒரு பையில் போட்டு நகரில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் அளித்து விட்டார்.

என்ன சொல்வது? போதாமையில் உள்ளதே போதும் என்ற வாழ்க்கையை நம்மால் முழுதும் உணர்ந்து கொள்ள முடியுமா எனத் தெரியவில்லை.

ஹிம்ஸ், ஈராக்கிலுள்ள கூஃபாவிற்கு இணையாய் ஒரு விஷயத்தில் திகழ்ந்தது. கூஃபா நகரின் மக்கள் அதன் ஆட்சியாளர்களைக் குறை சொல்லிக் கொண்டே இருந்தனர். அதைப் போல் ஹிம்ஸ்வாசிகளும் குறை சொல்ல, இது சிறு கூஃபா என்றே அழைக்கப்படும் அளவிற்கு ஆகிவிட்டது.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சிரியா வந்தடைந்தார்கள். ஹிம்ஸ் மக்களுக்கு ஸயீத் பின் ஆமிர் அவர்களின் மீது மிகப் பிரதானமாய் நான்கு குறைகள் இருந்தன. நமது ஆட்சியாளர்களைப் பார்த்துப் பழகி விட்ட நமக்கு அவையெல்லாம் கிறுக்குத் தனமான குறைகள்.

ஆனால் குறைகளைக் கேட்ட உமர் அவர்கள் மிகவும் அதிர்ச்சியுற்றார்கள். அது பொறுத்துக் கொள்ள முடியாத குறைகள். ஸயீத் மேல், தான் கொண்டிருந்த நம்பிக்கைக்குக் கேடு வந்து விடுமோ என்று கலீஃபாவை கவலை கொள்ள வைத்த குறைகள். மக்களுக்குப் பதிலளிக்க கவர்னரை அழைத்தார்.

“இவர் அலுவலுக்கு வருவதே சூரியன் உச்சிக்கு வருவதற்குச் சற்று முன்னர்தான்” என்று முதல் குறை தெரிவிக்கப்பட்டது.

“இதற்கு என்ன பதில் சொல்கிறாய் ஸயீத்?” என்று கேட்டார் உமர்.

சற்று நேரம் மௌனமாயிருந்தார் அவர். “அல்லாஹ்வின் மேல் ஆணையாக! நான் இதனை வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஆயினும் இப்பொழுது பதில் சொல்ல வேண்டியது கடமையாகி விட்டது. எனது குடும்பத்திற்கு ஒத்தாசை புரிய வேலையாட்கள் யாரும் கிடையாது. ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும் ரொட்டிக்கு மாவு பிசைவேன். மாவு உப்பி வரும்வரை காத்திருந்து, பிறகு அதனை அவர்களுக்குச் சமைத்துக் கொடுத்துவிட்டு வருவேன்”.

“இரவில் இவர் எங்களைச் சந்திப்பதே இல்லை” என்று அடுத்த குறை தெரிவிக்கப்பட்டது.

மிகவும் தயக்கத்திற்குப் பிறகு ஸயீத் இதற்கு பதிலளித்தார். “இதனையும் நான் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. பகலெல்லாம் எனது நேரத்தை இவர்களுக்காக அளித்து விடுகிறேன். ஆகவே இரவு நேரத்தை என் இறைவனுக்காக அவனது பிரார்த்தனையில் கழிக்கிறேன்”.

“மாதத்தில் ஒரு நாள் இவர் எங்களைச் சந்திப்பதே இல்லை” என்று மூன்றாவது குறை சொல்லப்பட்டது.

“அமீருல் மூமினீன்! எனக்கு வீட்டு வேலையில் உபகாரம் புரிய வேலையாட்கள் யாரும் இல்லை. உடுப்பு என்று என்னிடம் இருப்பது, நான் உடுத்தியிருக்கும் இந்த ஆடை மட்டும்தான். மாதத்தில் ஒருமுறை இதனைத் துவைத்துக் காயவைத்து உடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால்தான் அன்றைய தினம் என்னால் பொது மக்களைச் சந்திக்க முடிவதில்லை”.

“அடுத்து என்ன குறை?” வினவினார் உமர்.

“அவ்வப்போது இவர் மயக்கமடைந்து விழுந்து விடுகிறார்”.

அதற்கு பதிலளித்தார் ஸயீத். “நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்முன் குபைப் இப்னு அதீ (ரலி) கொல்லப்படுவதை என் கண்ணால் பார்த்தேன். குரைஷிகள் அவரை அறுத்து, வெட்டி, குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கிக் கொண்டிருந்தனர். ரத்தம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அவரிடம் கேட்டனர், ‘உனக்கு பதிலாக இப்பொழுது இங்கு முஹம்மத் இருந்திருக்கலாமே என்று நினைக்கிறாய்தானே?’ அதற்கு குபைப், ‘முஹம்மத் மீது ஒரு முள் குத்த விட்டுவிட்டுக்கூட நான் எனது குடும்பத்துடன் பாதுகாப்பாய் இருந்து விட மாட்டேன்’ என்று கூறினார். அவர்களது ஆக்ரோஷம் அதிகமடைந்து அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றனர். ஒரு சாட்சியாக நின்று கொண்டு அவரைக் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேனே, என்ற எண்ணமும் கைச்சேதமும் ஏற்படும் போதெல்லாம் அல்லாஹ்வின் தண்டனையை நினைத்து உள்ளம் நடுங்கி விடுகிறது! என்னையறியாமல் மயங்கி விழுந்து விடுகிறேன்”.

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த உமர் கூறினார், “அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! நான் ஸயீத் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்குக் களங்கம் ஏற்படவில்லை”.

நாளும் பொழுதும் கொலைகளும் அட்டூழியங்களும் சகாய விலைக்குப் பார்த்து மரத்துப் போன நம் உள்ளங்களுக்கு இந்த வரலாறு கூறும் செய்தியையும் அதன் தாக்கத்தையும் புரிந்து கொள்வது சற்றுச் சிரமம்தான்.

ஸயீத் இப்னு ஆமிர் பின் ஹதீம் பின் ஸலாமான் பின் ரபீஆ அல் குறைஷி அவர்கள் ஹிஜ்ரீ 20இல் மரணமடைந்தார்கள்;

ரலியல்லாஹு அன்ஹு!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.