சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34

Share this:

34. சென்னாப்ரா யுத்தம்

லெப்போவின் ரித்வான் விடுத்த அபயக்குரல் அப்பழுக்கற்ற வஞ்சகம். அச்சதியை அறியாமல் மவ்தூத் தலைமையிலான படை அலெப்போவை நெருங்கிய போது, இழுத்து மூடப்பட்ட நகரின் வாயில்கள்தாம் அவர்களை வரவேற்றன. உதவிக்கு விரைந்து வந்தவர்கள் வழிந்த வியர்வையைத் துடைத்து உதறிவிட்டு, திகைத்துப்போய் நின்றார்கள். மவ்தூதைத் திசை திருப்பி இழுத்தது மட்டுமல்லாமல், அலெப்போ நகரில் உள்ளவர்கள் அவருக்கு ஆதரவாகப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று தொடங்கிவிடாமல் இருக்க அவர்களுள் பல முக்கியஸ்தர்களை முன்னெச்சரிக்கையுடன் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார் ரித்வான்.

அந்தாக்கியாவிலிருந்த டான்க்ரெட்டுக்கு என்னதான் அலெப்போவும் ஷைஸாரும் அடிபணிந்திருந்தாலும் அவற்றைக் கைப்பற்றித் தம் கொடியைப் பறக்கவிட வேண்டும் என்பதுதான் டான்க்ரெட்டின் தீராத ஆசை. அவரது படை அச்சமயம் ஷைஸாரை முற்றுகை இட்டிருந்தது. அதனால் அலெப்போவின் உதவிக்கு வந்த மவ்தூதின் படை தெற்கே உள்ள ஷைஸாரை நோக்கித் திரும்பியது. போகிற போக்கில் பரங்கியர்கள் கைப்பற்றி வைத்திருந்த பல பகுதிகளை மீட்டார் மவ்தூத்.

ஷைஸாரைக் கைப்பற்ற அந்நகருக்கு எதிரே முகாமிட்டிருந்த டான்க்ரெட், மவ்தூதின் படை வருவதை அறிந்ததும் அஃபாமியா பகுதிக்குத் தம் படையைப் பின் நகர்த்தி, ஜெருசல ராஜா பால்ட்வினுக்கும் அந்தாக்கியாவுக்கும் உடனே செய்தி அனுப்பினார். அத்தகவல் அறிந்த ராஜா பால்ட்வின் பல பகுதிகளிலும் இருந்த சிலுவைப் படையின் சேனாதிபதிகளுக்கு, ‘உடனே வந்து சேருங்கள்’ என்று துரிதத் தகவல் அனுப்பிவிட்டு, தம் படையுடன் ஷைஸாருக்கு விரைந்தார். ஆங்காங்கிருந்து ஏராளமான சேனாதிபதிகளும் ஷைஸாருக்கு வந்து சேர்ந்தனர்.

தங்களுக்குள் முரண்கள் இருந்தாலும் அவை தங்களுக்குள் பிரிவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அவற்றையெல்லாம் அச்சமயம் தள்ளி வைத்துவிட்டு ஜெருஸலம், எடிஸ்ஸா, திரிப்போலி பகுதிகளிலிருந்து பரங்கியர் படைகள் கிளம்பி வந்து அஃபாமியாவில் ஒன்று கூடின. ஜெருஸலம் ராஜா பால்ட்வின் தலைமையில் 16,000 வீரர்கள் அடங்கிய படை உருவானது. பெரும் ஆயத்தம், பலத்தத் தற்காப்புடன் திரண்டு நின்றது அச்சிலுவைப் படை.

ஷைஸாருக்கு மவ்தூத் தம் படையினருடன் வந்து சேர்ந்த நேரத்தில் டமாஸ்கஸிலிருந்து துக்தெஜினும் அங்கு வந்திருந்தார். ஜெருஸலம் ராஜாவின் உதவியுடன் திரிப்போலியைச் சிலுவைப்படை கைப்பற்றியதல்லவா? அதை மீட்பதற்கு பாக்தாதில் உள்ள கலீஃபாவிடம் உதவி கேட்போம் என்று அவர் சென்று கொண்டிருந்தார். ஆனால் அவருக்குத் தீடீரென்று ஒரு தயக்கம். இதுதான் வாய்ப்பு என்று அங்கிருக்கும் சுல்தான் உதவிக்குப் படையை அனுப்பி டமாஸ்கஸைத் தம்மிடமிருந்து அபகரித்துவிட்டால் என்னாவது என்று அவருக்கு அச்சம்.

அவ்வித மனநிலையில் இருந்த அவர் சுல்தானின் தளபதியான மவ்தூதுடன் ஒத்துழைக்காமல், ‘சிரியாவிலிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து ஃபலஸ்தீனுக்குச் சென்று அப்பகுதியைக் கைப்பற்றுவோம்’ என்பதைப்போல் தட்டிக் கழிக்கும் வகையில் சில நிபந்தனைகள் விதித்தார். இது ஒருபுறம் இருக்க, முஸ்லிம்களின் கூட்டணிப் படையில் இருந்த குர்து தளபதி புர்ஸுக் திடீரென நோய் வாய்ப்பட்டார். அதனால் அவர், தம் படையுடன் ஊருக்குத் திரும்புவதாகச் சொல்லிவிட்டார். அடுத்து, கூட்டணியில் இருந்த மற்றொரு முக்கிய ஆட்சியாளரான சுக்மான் திடீரென இறந்துவிட்டார். அதனால் அவருடைய படை அவரது சடலத்தைச் சுமந்துகொண்டு தம் ஊருக்குக் கிளம்பிச் சென்று விட்டது.

இவ்விதம் மவ்தூதுக்கு துக்தெஜினின் ஒத்துழைப்பும் கிடைக்காமல், கூட்டணிப் படையின் ஆதரவும் குறைந்து, வலுவான படை பலத்துடன் நிற்கும் ராஜா பால்ட்வினுடன் மோதுவதைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால், அவர்களுடன் நேரடிப் போரில் ஈடுபடாமல் ஷைஸாரின் கோட்டைக்குள் தம் படைகளுடன் நுழைந்து தற்காப்பை பலப்படுத்திக் கொண்டார். அதே நேரத்தில் சிலுவைப் படையும் மவ்தூதுடன் போர் புரிவதைத் தவிர்த்தது. அவர் அங்கிருந்து அகன்றால் போதும் என்பது மட்டுமே அவர்களது நோக்கமாக இருந்தது. முஷ்டியை மட்டும் முறுக்கிக் கொண்டு அவர்கள் நிற்க, அவர்கள்மீது பாய முடியாமல் மவ்தூத் நின்றுவிட, சில நாட்களில் அந்த உஷ்ணம் அப்படியே தணிந்தது. அச்சமயம் குளிர் காலமும் நெருங்கிவிட, அக்குளிரில் அங்கு எதிரிகள் மத்தியில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க, தமது படைகளுடன் மவ்தூத் மோஸூல் திரும்பினார்.

தமக்கு ஏற்பட இருந்த தோல்வியிலிருந்து டான்க்ரெட் அப்பொழுது மீண்டுவிட்டாலும் அவரது கனவான அலெப்போவும் ஷைஸாரும் அத்துடன் அவருக்கு எட்டாக் கனியாகவே ஆகிவிட்டன. அந்நிகழ்வுக்குப் பிறகு அவரது ஆரோக்கியம் கெடத் துவங்கி, மோசமடைந்து, தமது 36ஆவது வயதில் மரணமடைந்தார் டான்க்ரெட். அத்துடன் அவரது வாழ்க்கை முடிவுற்றது.

அவரது மரணத்தைத் தொடர்ந்து சிலுவைப் படைத் தரப்பில் சில விறுவிறுப்பான மாற்றங்கள் நிகழ்வுற்றன. வம்ச வாரிசுப் போட்டி, அரசியல் சூழ்ச்சி ஆகியனவற்றின் கலவை அவை. சிலுவைப் படையின் ஆட்சித் தலைவர்கள் இடையே பின்னிப் பிணைந்து உருவான திருமண உறவுகள், நம் தலையைச் சிறிது கிறுகிறுக்க வைக்கும். சில தகவல்களும் அத்தலைவர்களின் பெயர்களும் இவ்வரலாற்றின் அடுத்தடுத்த அத்தியாயங்களுக்குத் தேவைப்படுவதால் மேலோட்டமாக நாம் அவற்றைப் பார்த்து விடுவோம்.

டான்க்ரெட் இறந்ததும் அந்தாக்கியாவின் ஆட்சி அதிகாரம் அவருடைய உடன் பிறந்தாரின் மகனான ரோஜர் (Roger of Salerno, son of Richard of Salerno) என்பவரிடம் சென்றது. அவர் எடிஸ்ஸாவின் ஆட்சியாளரான இரண்டாம் பால்ட்வினின் சகோதரியைத் திருமணம் செய்துகொண்டார். டெல் பஷிரின் ஆட்சியாளரும் இரண்டாம் பால்ட்வினின் நண்பருமான ஜோஸ்லின் அந்தாக்கியாவின் புதிய அதிபர் ரோஜரின் சகோதரியை மணந்துகொண்டார்.

ரேமாண்டின் மரணத்திற்குப் பிறகு ஒருவாறு திரிப்போலியின் ஆட்சியாளராகப் பட்டமேற்று அதிக காலம் ஆளாமல், வாழாமல் கி.பி. 1112ஆம் ஆண்டில் பெர்ட்ராண்ட் அகால மரணமடைந்தார். அதையடுத்து அவருடைய இளவயது மகன் போன்ஸ் திரிப்போலியின் ஆட்சியில் அமர்ந்தார். அமர்ந்த வேகத்தில், பைஸாந்தியத்திற்குத் திரிப்போலி அடிபணியும் அணுகுமுறையை அவர் மாற்றிக்கொண்டார். அவருக்கு முந்தையவர்கள் மேற்கொண்டிருந்த போக்கிற்கு அது நேர்மாற்றம். அடுத்து அந்தாக்கியாவிடம் திரிப்போலிக்கு இருந்த விரோதப் போக்கையும் அவர் கைவிட்டார். அதுவும் எப்படி? அந்தாக்கியாவின் டான்க்ரெட் இறந்தபின் விதவையாகிப்போன அவருடைய மனைவி செசெலியாவை போன்ஸ் மறுமணம் செய்துகொண்டார். அதன் பலனாக அந்தாக்கியாவின் முக்கியமான ரூஜ் பள்ளத்தாக்கின் அதிகாரம் அத்திருமணக் கொடையாக அவருக்குக் கிடைத்தது.

இவை யாவும் பரங்கியர்கள் இடையே இயல்பான ஒற்றுமைக்கும் ஒத்துழைப்புக்கும் வழி ஏற்படுத்திவிட்டன.

இந்தக் கூட்டணி இப்படி என்றால் அங்கு அலெப்போவில் ரித்வான் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணி தலை வேதனை. தாம் சிலுவைப் படையினருக்கு இணங்கிக் கப்பம் கட்டி அடைந்த இழுக்கு போதாது என்பதுபோல் இஸ்மாயிலி அஸாஸியர்களுடனும் அவர் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டார். ஈவிரக்கமற்ற தொழில்ரீதிக் கொலைகாரக் கூட்டம் என்று பதினோராம் அத்தியாயத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டோமே, அந்த அஸாஸியர்கள். அலெப்போவில் அஸாஸியர்களுக்குப் பரப்புரை மையங்கள் உருவாகவும் அனுமதி அளிக்கப்பட்டன. அவர்கள் வலிமையடைந்து எண்ணிக்கையில் பெருகினர். செல்வாக்குப் பெருகி ரித்வானின் ஆட்சியில் முக்கியப் பதவிகளில் இடம் பெற்றனர்.

அதுவும் போதாதென்று ஃபாத்திமீக்களின் கலீஃபா அல்-முஸ்தாலீ, அவருடைய அமைச்சர் அல்-அஃப்தல் ஆகியோருடன் ரித்வானுக்கு இணக்கம் அதிகரித்தது. விளைவாய், அலெப்போவில் வெள்ளிக்கிழமையின் குத்பா உரைகளில் ஒலிக்கத் தொடங்கின அந்த பனூ உபைதி ஃபாத்திமீக்களின் புகழாரம்.

ஒருவாறாக, ஹி. 507ஆம் ஆண்டு ரித்வான் மரணமடைந்து அவருடையை மகன் அல்ப்-அர்ஸலான் பதவிக்கு வந்த பிறகுதான் அலெப்போவில் இஸ்மாயிலி அஸாஸியர்களின் செல்வாக்கு நசுக்கப்பட்டது. அக்கொலைகாரக் கும்பல்களின் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த அல்ப்-அர்ஸலான் ஓர் ஊமை என்பதும் அதனால் அவர் அல்-அஃக்ரஸ் என்று அழைக்கப்பட்டார் என்பதும் துணைச் செய்தி.

oOo

ஹி. 505/கி.பி. 1112ஆம் ஆண்டு மீண்டும் படை திரட்டிப் பரங்கியர்களை எதிர்த்துப் போருக்குக் கிளம்பினார் மவ்தூத். இந்த மூன்றாவது முயற்சியிலும் அவரது முதலாவது குறி எடிஸ்ஸாதான். அதை முற்றுகையிட்டார். இப்போதும் எடிஸ்ஸா அம்முற்றுகையை எதிர்த்துத் தாக்குப் பிடித்தது. இது நீண்டு நீடிக்கும் என்பதால் எடிஸ்ஸாவைச் சுற்றிப் படையின் ஒரு பகுதியை நிறுத்திவிட்டு, யூப்ரட்டீஸ் நதிக்குக் கிழக்கில் உள்ள சுரூஜ் (Surooj) கோட்டையை மவ்தூத் தாக்கினார்.

அந்நேரத்தில் அவருக்கொரு நல்வாய்ப்பாக எடிஸ்ஸாவில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. அங்கு குடிமக்களாக இருந்த அர்மீனியர்களுக்குச் சிலுவைப் படையுடன் ஒத்துப்போகவில்லை. பரங்கியர்கள் மீது பெரும் அதிருப்தியுடனும் வெறுப்புடனுமே வாழ்ந்து வந்தனர். அவர்கள் இரகசியமாக மவ்தூதைத் தொடர்பு கொண்டு, நகரின் கிழக்குப் பகுதியில் இருந்த முக்கியமான கோட்டையை அவர் கைப்பற்றத் தாங்கள் உதவ விரும்புவதாகத் தூது அனுப்பினர்.

மவ்தூத் இத்தகவலைப் பெற்று, எடிஸ்ஸாவுக்கு விரைவதற்குள், விஷயம் கசிந்து, பரங்கியர்கள் விழித்துக்கொண்டனர். தம் நண்பன் இரண்டாம் பால்ட்வினுக்கு ஆதரவாக டெல் பஷிரிலிருந்து ஜோஸ்லின் ஓடிவந்து கைகோர்க்க, அவர்கள் இருவரும் அர்மீனியர்களின் அத்திட்டத்தை முறியடித்தனர். மட்டுமல்லாது, முஸ்லிம்களின் படையணி பிரிந்திருந்ததும் அவர்களுக்கு அனுகூலமாகி விட்டது. அதனால் மவ்தூத் வந்து சேர்வதற்குள் எடிஸ்ஸாவைச் சுற்றி நின்ற முஸ்லிம் படையில் அனேகரைக் கொன்று, அப்படைப் பிரிவுக்குப் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்திவிட்டார் ஜோஸ்லின்.

இப்பொழுது மவ்தூதுக்கு இரண்டாவது முறையாக சிரியாவிலிருந்து உதவி வேண்டித் தகவல் வந்தது. முன்னர் அழைப்பு விடுத்தவர் அலெப்போவின் ரித்வான் என்றால் இம்முறை டமாஸ்கஸின் துக்தெஜின். அவர் ஷைஸாரில் தமக்குப் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற போதிலும் இப்பொழுது அவருக்குச் சிலுவைப் படையினரை எதிர்க்க உதவி தேவைப்படுகிறது என்றதும் உடனே தம் படையினருடன் விரைந்தார் மவ்தூத்.

என்னதான் இணங்கிப் போகிறேன் என்று முஸ்லிம் ஆட்சியாளர்கள் சிலுவைப் படையினருக்கு அடிபணிந்து போனாலும், சிலுவையினரின் தலையாய இலக்கு, முஸ்லிம்களின் பகுதிகளை முழுவதும் அபகரிக்க வேண்டும்; தங்களது ஆட்சியை அங்கு உருவாக்க வேண்டும்; சிலுவைக் கொடியை அங்குப் பறக்கவிட வேண்டும். அதுவே சிலுவைப் படைத் தலைவர்களுக்கு நோக்கமாக இருந்து வந்தது. அதற்கு டமாஸ்கஸும் விதிவிலக்காக அமைந்துவிடவில்லை.

கலீலி கடலுக்கு வடக்கிலும் கிழக்கிலும் அமைந்திருந்த டமாஸ்கஸுக்கு உரிய பகுதிகளைப் பரங்கியர்கள் அடிக்கடி உக்கிரமாகத் தாக்க வந்தனர். துக்தெஜினுக்குத் தொடர்ந்து குடைச்சல் அளித்து வந்தனர். ஓயாத இத்தொல்லையால் துக்தெஜின் நிலைப்பாட்டில் சிறு மாற்றம் நிகழ்ந்தது. மோஸூலிடமிருந்தும் செல்ஜுக் சுல்தானிடமிருந்தும் டமாஸ்கஸைக் காப்பாற்றி எதேச்சையாகத் தாம் ஆட்சி செலுத்த வேண்டும் என்பதே அவரது வேட்கை. ஆனால் அந்த டமாஸ்கஸ் தம் கைநழுவிச் சிலுவைப் படையினரிடம் போய் விடும் அபாயம் ஏற்பட்டதும் அவர்களிடம் நட்பு பாராட்டுவதைவிட முஸ்லிம்களுடன் இணைந்து அவர்களை எதிர்த்து, டமாஸ்கஸைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று அவர் முடிவெடுத்து விட்டார்.

அதன் விளைவுதான் அவர் மவ்தூதுக்கு அனுப்பிய உதவி கோரிக்கை. மவ்தூத் தம் படையினருடன் கிளம்பி வர, பெரும் எண்ணிக்கையிலான தம் படையினருடன் துக்தெஜின் அவருடன் இணைய, ஆரவாரத்துடன் தெற்கே கலீலி கடற்பகுதியை நோக்கி அணிவகுத்தது முஸ்லிம்களின் அக்கூட்டணிப் படை.

அது ஹி. 507/கி.பி. 1113. அச்சமயம் கலீலி கடலுக்கு மேற்கே, மத்தியதரைக் கடல் நகரமான ஏக்கரில் இருந்தார் ஜெருஸல ராஜா பால்ட்வின். அவருக்கு இத்தகவல் வந்து சேர்ந்தது. உடனே அவர் அந்தாக்கியாவின் ரோஜருக்கும் திரிப்போலியின் போன்ஸுக்கும், “படைகளுடன் உடனே கிளம்பி வாருங்கள்” என்று தகவல் அனுப்பிவிட்டு யோசித்தார். அவர்கள் வரும் வரை காத்திருப்பதா என்று அவருக்குக் குழப்பம். அதற்குள் மவ்தூதின் தலைமையிலான படை எல்லைப் பகுதிகளைச் சூறையாடிவிடும் அபாயம் இருந்தது. அதைத் தடுக்க வேண்டும் என்றால் தம்மிடம் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான படையினருடன் முஸ்லிம்களின் படையை எதிர்க்க வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தவர், காத்திருக்காமல் களத்தில் இறங்கி விடுவோம் என்று முடிவெடுத்தார். அது தமக்கு ஏற்படுத்த இருக்கும் பாதகத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. காத்திருக்கும் ஆபத்தை நோக்கி ஏக்கரில் இருந்து கிளம்பியது அவரது படை.

கலீலி கடலுக்குத் தெற்கே, ஜோர்டான் ஆற்றின்மீது சென்னாப்ரா பாலம் உள்ளது. அதன் அருகே அவரது படை முகாமிட்டது. தமது படையினருக்குத் தேவையான நீர் ஆதாரம் அங்கு உள்ளதால், அங்குத் தங்கி, முஸ்லிம் படையினரை நோட்டமிட்டு, தமக்கு உதவி வரும்வரை அவர்களை அங்குத் தடுத்து நிறுத்தி வைப்பது எளிது என்று அவர் நினைத்தார். ஆனால் அதற்குமுன் அப்பகுதிக்கு அண்மையில் வேறோர் இடத்தில் முஸ்லிம் படைகள் வந்து இறங்கி முகாமிட்டுவிட்டன.

அதை அறியாமல் ஜெருஸல ராஜா பால்ட்வின் சென்னாப்ரா பாலத்துக்கு வந்து சேர்ந்ததும் அது மவ்தூதுக்குத் தெரியவந்தது. சற்றும் தாமதிக்காமல் முஸ்லிம் படைகள் உடனே களத்தில் இறங்கின. சரேலெனக் கிளம்பிச் சென்று சிலுவைப் படையினர் மீது உக்கிரமாகத் தாக்குதல் தொடுத்தனர். திகைத்துப் போன பரங்கியர்கள் சுதாரிப்பதற்குள் இரண்டாயிரம் வரையிலான சிலுவைப் படையினரை மளமளவென்று முஸ்லிம் படையினர் கொன்று குவித்தார்கள். முப்பது சேனாதிபதிகள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் குதிரைப் படையினரிடமிருந்து தப்பிக்க ஜோர்டான் ஆற்றில் குதித்து உயிரிழந்தவர்களோ ஏராளம்.

ஜெருஸல ராஜா பால்ட்வின் பெருமிதத்திற்குரிய அரசப் பதாகையையும் தமது கூடாரத்தையும் விட்டுவிட்டு அவமானப்பட்டு ஓடும் நிலை ஏற்பட்டது. கலீலி கடலுக்கு மேற்கே உள்ள டைபீரியாஸைத் தாண்டி, தபோர் மலையடிவாரத்திற்கு தப்பித்து ஓடினார் அவர்.

இத்தனை களேபரத்திற்கும் பிறகுதான், அவருக்கு உதவியாக அந்தாக்கியா, திரிப்போலியிலிருந்து படைகள் அங்கு வந்து சேர்ந்தன. ராஜா பால்ட்வினுக்கு ஆசுவாசம் ஏற்பட்டது. பால்ட்வினைத் துரத்திக் கொண்டே வந்த முஸ்லிம்களின் படையும் டைபிரியஸை அடைந்தது. அதற்குள், சிலுவைப் படை மிகக் கவனமுடன் தற்காப்பு வியூகத்தைத் திட்டமிட்டுக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொண்டது. ஆனால், ராஜா பால்ட்வின் மவ்தூதுடன் நேரடியாக மோதுவதைக் கைவிட்டுவிட்டு, வேண்டுமானால் நீ வந்து மோதிப்பார் என்று அங்கு நின்று கொண்டார். உதவிப் படையினரின் துணையுடன் ராஜா பால்ட்வினின் படை வலிமை அதிகரித்ததைக் கவனித்தார் மவ்தூத். அவர்களிடம் மோதும் அளவிலான படையினர் எண்ணிக்கை தம்மிடம் இல்லாததையும் உணர்ந்தார். அடுத்த நான்கு வாரங்கள் இருதரப்பும் நின்ற நிலையில் கழிந்து, அத்துடன் அங்கு அந்தப் போர் முடிவுக்கு வந்தது.

சென்னாப்ரா போரில் முஸ்லிம்கள் அடைந்த பெருவெற்றிச் செய்தி செல்ஜுக் சுல்தானுக்குச் சொல்லி அனுப்பப்பட்டது. கூடவே, சிறை பிடிக்கப்பட்ட பரங்கியர்கள் கைதிகளாக அனுப்பி வைக்கப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் தலைகள் சில பரிசாக அனுப்பி வைக்கப்பட்டன.

மவ்தூத் சென்னாப்ராவில் சாதித்துக் காட்டிய வெற்றி பிரம்மாண்டமானது. எனினும் முஸ்லிம்கள் அதைத் தொடர்ந்து உடனே பெரும் பலனை ஏற்படுத்திக் கொள்ளாமல் போனது வாய்ப்புக்கேடே. தொடர்ந்து அடுத்தடுத்து அவர்கள் முழுவீச்சுடன் சிலுவைப் படையினர் மீது போர் தொடுத்திருந்தால், தோல்விகளிலிருந்து சிலுவைப் படையினர் தம்மைத் தேற்றிக் கொள்வதற்குள் பெரும் இழப்பை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் நிலவிவந்த அரசியல் பிளவுகள், பூசல்கள், போட்டி பொறாமை ஆகியன அதற்குத் தடைக் கற்களாய் அமைந்துவிட்டன.

முஸ்லிம் படையினர் ஊர் திரும்பினர். துக்தெஜினுடன் சேர்ந்து தாமும் டமாஸ்கஸுக்குச் சென்றார் மவ்தூத். அங்கு அவரை வரவேற்க அவரது விதி காத்திருந்தது.

oOo

டமாஸ்கஸ். ரபீஉல் அவ்வல் மாதம். ஒரு வெள்ளிக்கிழமை. அங்குள்ள ஜாமீஆ மஸ்ஜிதுக்கு துக்தெஜினுடன் தொழுகைக்குச் சென்றார் மவ்தூத். தொழுது முடித்தார்கள். இருவரும் நட்புடன் கையைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்தார்கள். அப்பொழுது எங்கிருந்தோ பாய்ந்து வந்தான் ஒருவன். தன்னிடமிருந்த ஆயுதத்தால் மவ்தூதைத் தாக்கினான். வெகு ஆழமாக நான்கு காயங்களை ஏற்படுத்தினான். காவலர்கள் உடனே அவனை மடக்கிப் பிடித்து அவனது தலையைக் கொய்தார்கள். அதைத் தீயிட்டும் கொளுத்தினார்கள்.

பெருக்கெடுத்துப் பீய்ச்சிய இரத்தத்துடன் துவண்டு விழுந்த மவ்தூத், துக்தெஜினின் இல்லத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டார். அன்றைய நாள் நோன்பு நோற்றிருந்தார் அவர்.அவரிடம் நோன்பை முறித்துவிடும்படி துக்தெஜின் கூற. ‘நோன்பு நோற்ற நிலையில் நான் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்று மறுத்துவிட்டார் மவ்தூத். அதே நிலையில் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மரணமடைந்தார்.

டமாஸ்கஸில் துயரம் சூழ்ந்தது. ஆதிக்கம் செலுத்தி வந்த சிலுவைப் படையினரின் கொட்டத்தை அடக்கி, ஜெருஸல ராஜா பால்ட்வினை எதிர்த்துப் போரிட்டு, வெற்றியையும் சாதித்துக் காட்டியிருந்த மவ்தூதின்மீது அபரிமிதமான மதிப்பில் இருந்த மக்களால் இத்துயரத்தைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. கோபத்தில் கொந்தளித்தனர்.

கொலைகாரன் உடனே கொல்லப்பட்டுவிட்டதால், அவன் என்ன நோக்கத்தில் மவ்தூதைக் கொன்றான், அவனை யாரேனும் ஏவினார்களா என்பது தெரியாமலேயே போய்விட்டது. அவன் அஸாஸியர்களைச் சார்ந்தவன் என்பது மட்டும் வலுவான யூகம். ரித்வானின் ஆட்சியில் அலெப்போவில் அவரது ஆதரவுடன் செழித்திருந்த அஸாஸியர்கள் அவர் இறந்ததும் அங்கிருந்து விரட்டப்பட்டதும் துக்தெஜினுடன் நட்பு பூண்டதாகத் தெரிகிறது. அதனால் அவர் அஸாஸியரைத் தூண்டி மவ்தூதைக் கொன்றிருக்கலாம் என்பது பலமான வதந்தி. அது உண்மையோ, பொய்யோ. ஆனால் அது டமாஸ்கஸுக்கும் பக்தாதுக்கும் இடையிலான உறவை முறித்தது; டமாஸ்கஸுக்கும் ஜெருஸலத்திற்கும் இடையே புதிய உறவுக்கு வழிவகுத்தது என்பது மட்டும் உண்மை.

oOo

வருவார், இன்ஷா அல்லாஹ் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.