சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26

Share this:

26. மெய்ச் சிலுவை

ரண்டாயிரம் மைல் கடந்து வந்து, படாத பாடுபட்டு ஜெருஸலத்தைக் கைப்பற்றியாகிவிட்டது. அது இலத்தீன் கிறிஸ்தவர்களுக்கு உரியதாகவும் ஆகிவிட்டது. இப்பொழுது அதைக் கட்டி ஆள வேண்டும்; பொத்திப் பாதுகாக்க வேண்டுமல்லவா? இவ்வுயரிய புனித நகரைக் கிறிஸ்தவத்தில் ஈடுபாடற்றவரிடமோ, மதச் சார்பற்ற யாரோ ஒருவரிடமோ அப்படியே தூக்கிக் கொடுத்து, ‘கோலோச்சுங்கள்’ என்று சொல்லி விட முடியுமா, விட்டுவிட முடியுமா என்ன? திருச்சபை சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும். ஜெருஸலம் அதன் தலைநகர். அதை நமது இலத்தீன் தேவாலயம்தான் வழி நடத்த வேண்டும் என்று கிறிஸ்தவ மதகுருமார்கள் வாதாடினர். இதற்கிடையே, சைப்ரஸுக்கு நாடு கடத்தப்பட்டிருந்த ஜெருஸலத்தின் முன்னாள் கிரேக்க தலைமைப் பாதிரியாரும் தமது ஆயுள் முடிந்து உலகைப் பிரிந்து போய்விட்டார். அதனால் தாங்கள் திட்டமிடும் திருச்சபை சாம்ராஜ்ஜியத்திற்குத் தலைவர் யார் என்ற பிரச்சினை பெரிதானது.

சிலுவைப் படைத் தலைவர்களுள் ஒருவரான ரேமாண்டிற்கு அந்தப் பதவியின் மீது கண். ஆனால் அர்கா நிகழ்விற்குப் பிறகு அவரது செல்வாக்கு இறங்கு முகத்திலேயே இருந்துவிட்டதால், இந்த வாய்ப்பு அவருக்கு எட்டாக் கனி ஆனது. சிலுவைப் போரின் இறுதிக் கட்டத்தில் படையைச் சாமர்த்தியமாக வழிநடத்தி, வெற்றியையும் சாத்தியமாக்கிய காட்ஃப்ரேதான் இப்பொழுது அனைவரின் கண்களுக்கும் கதாநாயகனாகத் தெரிந்தார். அவருக்கு மட்டும் அந்தப் பதவியின் மீது ஆசை இல்லையா என்ன? தாம்தான் ஏகோபித்த தேர்வு என்பதைப் போல் ஆனதும், தமது ஆசையையெல்லாம் மறைத்துக்கொண்டு, ‘மத குருமார்கள் சொல்கிறீர்கள். தட்டவா முடியும்? உங்களது கோரிக்கைக்கு அடிபணிகிறேன். ஜெருஸலத்தின் பாதுகாவலனாக நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’ என்றார். ‘இயேசுநாதரின் புனிதக் கல்லறையின் காப்பாளர்’ என்ற பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டது. புனித ஈட்டி பிரபலமாக இருந்தபோது அதை சந்தேகப்பட்டுக் குரல் எழுப்பிய அர்னல்ஃப் ஜெருஸலத்தின் திருச்சபை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெருஸல வீழ்ச்சி

ஜெருஸலத்தில் இருந்த பாதிரியார்கள் அர்னல்ஃபை முதல்வராகத் தேர்ந்தெடுத்திருந்த போதும் அது ஐரோப்பாவில் ரோம் நகரில் உள்ள போப்பால் அங்கீகரிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் அது சிறிது தாமதமானது. அதற்குக் காரணம் இருந்தது. முதலாம் சிலுவைப் போரின் மூலகர்த்தாவாகத் திகழ்ந்தாரே போப் அர்பன் II, அவர் மரணமடைந்து விட்டார். ஜெருஸலத்தை மையமாக வைத்துத் தமது பரப்புரையை நிகழ்த்திச் சிலுவைப் படையை உருவாக்கி அனுப்பி வைத்திருந்தவர், அவர்கள் ஜெருஸலத்தைக் கைப்பற்றி விட்டார்கள் என்ற செய்தி வந்து சேரும்முன் 1099 ஆம் ஆண்டின் கோடைப் பருவத்தில் மரணமடைந்துவிட்டார். அவரையடுத்து போப்பாகப் பதவி ஏற்றவர் பேஸ்கல் II (Paschal II). அடுத்த இருபது ஆண்டுகளுக்கு – தம் மரணம்வரை நீண்ட காலம் – போப்பாகத் திகழ்ந்தார் இவர். ரோமில் நிகழ்ந்து கொண்டிருந்த இந்த மாற்றங்கள் அர்னல்ஃபின் தேர்வு அங்கீகாரத்தைத் தாமதப்படுத்தியிருக்க, அதற்கெல்லாம் காத்திருக்காமல் தமது அடுத்தக் கட்ட வேலையை ஆரம்பித்தார் அர்னல்ஃப்.

என்ன வேலை?

எந்தக் கிழக்கத்திய பைஸாந்திய கிறிஸ்தவ சகோதரர்களைக் காப்பதற்காகப் படை திரண்டு வந்திருந்தார்களோ, அவர்களைக் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கினார். அர்மீனியர்கள், கிப்தியர்கள், யாக்கோபியர்கள் அனைவரும் இயேசுநாதரின் புனிதக் கல்லறைப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். உதவிக்கு வாருங்கள் என்று நாம் அழைத்து வந்த இலத்தீன் கிறிஸ்தவர்கள் ஜெருஸலத்தையும் கைப்பற்றிவிட்டார்கள்; அதன் புனிதப் பதவிகளில் தங்களது இலத்தீன் கிறிஸ்தவர்களையே அமர்த்தியும் விட்டார்கள் என்று தெரிய வந்த போதே கிழக்கத்திய கிறிஸ்தவர்களின் கிரேக்கத் திருச்சபை திகைத்துப் போனது. தங்களது உரிமைகள் பறிபோனதாகக் கருதியது. இப்பொழுது அந்தப் புண்ணில் அர்னல்ஃப் இப்படியொரு வேல் பாய்ச்சினால்? பைஸாந்தியர்களும் இலத்தீன் கிறிஸ்தவர்களும் ஏற்படுத்திக்கொண்டிருந்த கூட்டணிக் கொள்கை கேள்விக்குறியாகிப் போனது.

இந்த அராஜகத்தில் கிரேக்க பாதிரியார்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். கடுமையான சித்திரவதைக்கு உள்ளானார்கள். அதற்கான காரணம் ஒரு விசித்திரம். புனித ஈட்டி என்று கண்டுபிடிக்கப்பட்ட வஸ்து, போலியானது என்று தெரியவந்து அதன் மகிமை தொலைந்து போனதிலிருந்து சிலுவைப் படையினருக்குள் தவிப்பு இருந்து வந்தது. மந்திர சக்தி வாய்ந்த, புனிதம் பொருந்திய இரட்சை, தாயத்து போன்ற ஒன்று அவர்களுக்குத் தேவைப்பட்டது. அதாவது ஆன்ம பலத்திற்கு – பலம் என்று சொல்வதைவிட ஆக்ரோஷத்திற்கு – தேவையான ஒரு கிரியாஊக்கி. அது அவர்களுக்கு ஒரு சிலுவையில் இருந்தது. True Cross எனப்படும் மெய்ச் சிலுவை!

அது வெள்ளியும் தங்கமும் கலந்து உருவாக்கப்பட்ட சிலுவை. முத்துக்களும் விலைமதிப்பற்ற கற்களும் பதிக்கப்பட்டிருந்த அதில் மரத்துண்டு ஒன்றும் கலந்திருந்தது. அந்த மரத்துண்டு இயேசு கொல்லப்பட்ட சிலுவையின் ஒரு பகுதி என்பது அனைத்து கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. அதனால் அது அவர்களுக்கு மெய்ச் சிலுவை. அச்சிலுவைக்கு அவர்கள் மத்தியில் ஒப்பற்ற புனித அந்தஸ்து. அந்தப் புனித மெய்ச் சிலுவை இயேசுநாதரின் புனிதக் கல்லறையில் எங்கோ ஓர் இரகசிய இடத்தில் பத்திரமாக இருந்தது. அந்த இடத்தை கிரேக்க வைதீகப் பாதிரியார்கள் அறிந்திருந்தார்கள். இலத்தீன் கிறிஸ்தவர்களான பரங்கியர்களின் நடவடிக்கைகளை எல்லாம் பார்த்துப் பார்த்து அவர்கள் மீது ஒவ்வாமை ஏற்பட்டு விட்டதால் அந்த கிரேக்கப் பாதிரியார்களோ அந்த இடத்தைக் காட்ட முடியாது என்று மறுத்தார்கள். இப்புனிதக் கல்லறையின் பாதுகாவலனே இனி நான்தான், எனக்கே மறுப்பா, என்று உக்கிரத்துடன் அர்னல்ஃப் அவர்கள்மீது சித்திரவதையைக் கட்டவிழ்த்துவிட, கொடூரம் எல்லை மீறியது. தாங்க முடியாமல் இறுதியில் அவர்கள் அந்த இடத்தைக் காட்டிவிட்டனர்.

இயேசுவைக் குத்திய ஈட்டி என்று நம்பப்பட்ட வஸ்துவே முன்னர் அப்படியொரு உணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தபோது, இயேசுநாதர் அறையப்பட்ட சிலுவையின் மரத்துண்டு கலந்த மெய்ச் சிலுவை இது என்றால் அவர்களுக்கு எப்படி இருக்கும்? அலாதி உணர்ச்சி அவர்களுக்குள் திகுதிகுவென்று பற்றிப் பரவியது. பரங்கியர்கள் அதைத் தங்களது வெற்றிச் சின்னமாகப் பார்த்தார்கள். ஜெருஸல இலத்தீன் கிறிஸ்தவ ராஜாங்கத்தின் மரபுச் சின்னமாக அது உருவானது. தங்களது சிலுவைப் போரின் வெற்றிக்குக் கிடைத்த மாபெரும் பரிசு இது என்று அவர்கள் அனைவரிடமும் ஆனந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு உருவானது.

அதன்பின் சிலுவைப் படையின் ஒவ்வொரு போரிலும் அந்த மெய்ச் சிலுவை முன்னணி வகித்தது. அதற்குச் சொல்லி மாளாத முக்கியத்துவம் தந்தனர் . வணங்கி வழிபாடு செய்யப்பட்டது அச்சிலுவை. பின்னர் 89 ஆண்டுகளுக்குப் பிறகு 1187 ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஹத்தீன் யுத்தத்தில் ஸலாஹுத்தீன் அய்யூபி சிலுவைப் படையைத் தோற்கடித்து, மெய்ச்சிலுவையையும் கைப்பற்றியபோதுதான் முதுகெலும்பு உடைந்ததைப் போல் ஆனார்கள் அவர்கள். அதன்பின் சிலுவைப் படையினருடனான பேச்சு வார்த்தைகளில் அந்தச் சிலுவையை ஸலாஹுத்தீன் அய்யூபி துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தியது எல்லாம் சுவையான நிகழ்வுகள். பல்லாண்டு வரலாற்றைக் கடந்து அதை அப்பொழுது பார்ப்போம்.

oOo

காட்ஃப்ரேயும் அர்னல்ஃபும் தங்களது புதுப் பதவியையும் வெற்றியையும் களிப்புடன் அனுபவிக்கப் பெரிய அவகாசம் எதுவும் அமையவில்லை. ஃபாத்திமீக்களின் மந்திரி அல்-அஃப்தல் தம் படையுடன் எகிப்திலிருந்து கிளம்பி வந்து ஃபலஸ்தீனின் தெற்கே உள்ள அஸ்கலான் (Ascalon) துறைமுகத்தில் இறங்கியுள்ள செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. முரட்டுத்தனமான 20,000 வீரர்கள் வந்திருக்கிறார்கள். அங்கிருந்து ஜெருஸலம் சில நாள் நடைபயணத் தூரம்தான். வந்து மோதப் போகிறார்கள் என்றதும் சிலுவைப் படை அடுத்த போருக்கு தயாராக வேண்டிய நிலைக்கு உள்ளானது. அசாத்திய வெற்றியை ஈட்டியிருந்தாலும் அச்சமயம் பரங்கியர்கள் மத்தியில் பிரிவு வாதம் பரவியிருந்தது. படை வீரர்கள் எண்ணிக்கையும் பரிதாபகரமான நிலை. அவர்கள் நிர்மூலமாகும் சாத்தியம் பலமாக இருந்தது. தங்களது சாதனை வேதனையில் முடியப் போகிறது என்றே அவர்கள் முடிவு கட்டிவிட்டார்கள்.

ஃபாத்திமீக்கள் முன்னேறி வந்து ஜெருஸலத்தை முற்றுகையிட்டு, தாங்கள் உள்ளே சிக்கிக்கொள்வதைவிட முற்கூட்டியே நாம் படையுடன் சென்று அவர்களைத் தாக்கினால் என்ன என்று யோசித்தார் காட்ஃப்ரே. அதுவே சரியான யோசனை என்று முடிவானது. பதவியோ பொறுப்போ கிடைக்காமல் வெறுத்து நொந்து போயிருந்த ரேமாண்டுடன் எப்படியோ பேசி சமாதானம் செய்து அவரது படை அணியையும் காட்ஃப்ரே தம்முடன் ஒன்று சேர்த்து, கணக்கிட்டுப் பார்த்ததில் 1200 சேனாதிபதிகள், 9000 காலாட்படையினர் தேறினர். ஆகஸ்ட் 9ஆம் நாள் ஜெருஸலத்திலிருந்து தெற்கு நோக்கி அஸ்கலானுக்குக் கிளம்பியது அந்தப் படை. நாம் இயேசுவிடம் பிராயச்சித்தம் தேடும் வீரர்கள் என்று வெறுங்காலுடன் தொடங்கியது அவர்களது அணிவகுப்பு. கூடவே சுமந்து செல்லப்பட்டது மெய்ச் சிலுவை. அதைப் பார்த்துப் பரவசத்தில் உரமேற்றிக்கொண்டது சிலுவைப் படை.

ஆகஸ்ட் 11ஆம் நாள் மாலை. வழியில் எகிப்தியர்கள் சிலர் சிலுவைப் படையினரிடம் எக்குத்தப்பாக மாட்டினர். பிடித்து விசாரித்ததில் அவர்கள் ஃபாத்திமீக்களின் உளவாளிகள் என்று தெரிய வந்தது. அந்த அரிய வாய்ப்பை விடுவார்களா? விசாரனை சித்திரவதையாக மாறியதும் தாங்க முடியாத கட்டத்தில் அந்த உளவாளிகள் அஃப்தலின் படை வியூகம், படையினர் எண்ணிக்கை என்று அனைத்து முக்கியத் தகவல்களையும் தெரிவித்துவிட்டனர். தங்களைவிட அஃப்தலின் படை இருமடங்கு பெரிது என்பது தெரிய வந்ததும் ஆலோசனை நடந்தது. எகிப்தியர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் தாக்க வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் திகைப்பும் அதிர்ச்சியும்தான் நமக்கான சிறந்த வெற்றி வாய்ப்பு என்று முடிவானது. செயல்திட்டம் வகுக்கப்பட்டது. மறுநாள் பொழுது புலரும் நேரத்தில், ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த ஃபாத்திமீ துருப்புகளின்மீது திடுமெனப் பாய்ந்தது சிலுவைப் படை.

அதீத நம்பிக்கையில் போதுமான வீரர்களைக்கூடப் பாதுகாவலுக்கு அமர்த்தத் தவறியிருந்தார் அஃப்தல். திகைத்துப் போய் உறக்கம் கலைந்த ஃபாத்திமீப் படையினர் அதிர்ச்சியில் மிரண்டனர். தாக்கப் படை திரட்டி வந்திருந்ததர்களுக்கு, தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கே சரியான வாய்ப்பின்றிப் போனது. அவர்களைப் பயிரை வெட்டுவதுபோல் வெட்டிச் சீவ ஆரம்பித்தனர் சிலுவைப் படையினர். பீய்ச்சிப் பாய்ந்தது இரத்தம். அப்படியே பெரும் வெறியுடன் தாக்கிக்கொண்டே முன்னேறி, ஃபாத்திமீப் படை முகாமின் மையப் பகுதியையும் எளிதாக எட்டியது சிலுவைப் படை, அஃப்தலின் பதாகை, பொருள்கள் என அனைத்தும் கைப்பற்றப்பட்டு, அரங்கேறியது சூறையாடல்.

திகிலடைந்து நிலைகுலைந்து போன ஃபாத்திமீப் படையின் இதர வீரர்கள் உயிர் பிழைக்க மரங்களில் ஏறித் தஞ்சம் தேடப் பார்த்தனர். அவர்களை நோக்கிச் சிலுவைப் படை அம்புகளைப் பாய்ச்சி, ஈட்டிகளை எய்து தாக்குதலைத் தொடர, மரக் கிளைகளிலிருந்து பறவைகளைப் போல் பொத்பொத்தென்று இறந்து விழுந்தார்கள் ஃபாத்திமீக்கள். இறந்து விழுந்தவர்களையும் சிலுவைப் படை விடவில்லை. அவர்களது தலைகள் துண்டாடப்பட்டன. அதைப் பார்த்து மரத்திலிருந்து குதித்துத் தப்பி ஓட முனைந்தவர்கள், ஆடு, மாடுகள்போல் போல் வெட்டித் தள்ளப்பட்டனர். அகோர ஆட்டம். எங்கெங்கும் மரண ஓலம். எதுவுமே மிகையில்லை. போரில் பங்கேற்ற சிலுவைப் படை வீரன் ஒருவன் தெரிவித்துள்ள விபரங்கள்தாம் அவை.

பேரதிர்ச்சி அடைந்த அஃப்தல் , அஸ்கலானிலிருந்து தப்பித்து, கப்பல் ஏறி எகிப்திற்குத் திரும்பினார். அவர் விட்டுச் சென்ற பொருள்களைத் துடைத்து எடுத்துக் கொண்டார்கள் பரங்கியர்கள். அவற்றுள் அஃப்தலின் விலைமதிப்பற்ற வாளும் ஒன்று. இப்படியாக முதலாம் சிலுவைப் போரின் இறுதிக் கட்ட ஆட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றியது சிலுவைப் படை. ஆனால், அத்தனை ஆண்டுகளாக அத்தலைவர்களுக்குள் புகைந்துகொண்டிருந்த பொறாமை, கருத்து வேறுபாடு, சிறு சிறு சச்சரவுகள் ஆகியன ஒன்று சேர்ந்தன. பெரிதாகின. மேலதிக விபரீதம் முஸ்லிம்களுக்கு ஏற்படாமல் பாதிப்பைக் குறைத்தன. முக்கியமாக அஸ்கலான்.

ஃபாத்திமீக்கள் தோல்வியுற்றதும் அச்சத்தில் மூழ்கிய அஸ்கலான் நகரம் பரங்கியர்களிடம் சரணடைந்து விடுவோம் என்றுதான் தயாரானது. ஆனால் உங்களின் தலைவர் ரேமாண்டிடம்தான் நாங்கள் அதற்கான பேச்சுவார்த்தையை நடத்துவோம் என்றார்கள். ஜெருஸலம் வீழ்ந்தபோது, சிறிதளவாவது மனமிரங்கி முஸ்லிம்களைப் போர்க் கைதிகளாய் மட்டும் பிடிக்கப் பார்த்தவர் அவர் என்று அவர்மீது அவர்களுக்குச் சிறு நம்பிக்கை இருந்தது.. அத்தகு முக்கியத்துவம் ரேமாண்டுக்கு அமைய காட்ஃப்ரே விட்டுவிடுவாரா? இதுதான் சாக்கு என்று ரேமாண்ட் தமக்கென ஒரு சுயராஜ்ய சிற்றரசை அந்தக் கடலோரம் அமைத்துவிட்டால் என்னாவது என்று திகைத்தார் அவர். அப்படியெல்லாம் ரேமாண்ட் வளர இடம் தரக்கூடாது என்று முடிவெடுத்து, இடையில் புகுந்து அவர் ஆட்டத்தைக் கெடுக்க அஸ்கலான் நகரின் சரணாகதிப் பேச்சுவார்த்தை நொறுங்கியது. சற்றும் எதிர்பாராமல் அமைந்த இந்த அரிய வாய்ப்பால், அஸ்கலான் பரங்கியர்களிடம் பறிபோகாமல் இஸ்லாமியர்கள் வசமே தங்கியது. மட்டுமின்றி, ஃபலஸ்தீனின் கால்மாட்டில் அமைந்திருந்த இந்த முக்கியப் பகுதி, ஜெருஸலத்தில் உருவான புதிய கிறிஸ்தவ இராஜ்ஜியம் எகிப்தியர்களின் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு ஏதுவாய் அமைந்து போனது.

ஜெருஸலத்தைக் கைப்பற்றியாகிவிட்டது, வலிமை மிக்க ஃபாத்திமீக்களின் படையை அஸ்கலானில் வெற்றிகொண்டு அவர்களைத் துரத்தியாகிவிட்டது என்ற பின் சிலுவைப் படை தனது பணி முடிந்ததாகக் கருதியது. சிலுவைப் போர் என்ற முழக்கத்துடன் சிலுவை ஏந்தி வந்திருந்த பல்லாயிரக் கணக்கானோருள் இப்பொழுது மிஞ்சியிருந்தவர்கள் சிறு பகுதியினரே. அவர்களில் பலரும் கூட, “சோலி முடிந்தது. ஊருக்குப் போக வேண்டும்” என்ற மன நிலைக்கு வந்துவிட்டனர். காட்ஃப்ரே ஃபலஸ்தீனைப் பாதுகாக்கட்டும் என்று அவர் வசம் 300 சேனாதிபதிகள், 2000 காலாட்படையினரை விட்டுவிட்டுப் பெரும்பாலான மற்றவர்கள் ஐரோப்பா திரும்பிச் செல்ல சிரியாவிலிருந்து கப்பலேறினர்.

முதலாம் சிலுவைப் போர் ஒருவாறாக முடிவுக்கு வந்த போது, ஜெருஸலம், சிரியாவின் வெகு முக்கிய நகரங்களான அந்தாக்கியா, எடிஸ்ஸா ஆகியனவற்றை இஸ்லாமியர்கள் இழந்திருந்தனர். அவையாவும் இலத்தீன் கிறஸ்தவ மண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டன.

oOo

வருவார் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.