சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -14

Share this:

சிலுவைப் படைத் தலைவர்கள்

க்களின் சிலுவைப் போருக்கு நேர்ந்த கதியைப் பார்த்தார் பைஸாந்தியச் சக்ரவர்த்தி முதலாம் அலக்ஸியஸ் காம்னெனஸ் (Alexius I Comnenus).

அது அடைந்த சீரழிவும் தோல்வியும் அவருக்கு அந்த இலத்தீன் கிறிஸ்தவர்கள் மீதான நல்லெண்ணத்தை மாற்றியது. அதனால், அதற்கடுத்து வந்து சேர்ந்த முக்கியப் படையினரையும் அவர்கள் நிகழ்த்திய முதலாம் சிலவை யுத்தத்தையும் ஒருவித ஏளத்துடனும் சந்தேகத் கண்ணோட்டத்துடனும் பார்க்க ஆரம்பித்துவிட்டார் என்று வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கிறார்கள். அந்தக் கருத்துக்கு அடிப்படை இல்லாமலில்லை.

அலக்ஸியஸின் மகள் அன்னா காம்னெனா (Anna Comnena). சுயசரிதையாளர். அவர் இது குறித்து எழுதி வைத்துள்ளது மிக முக்கியமானது. ‘கட்டுக்குள் அடங்காத சிலுவைப் படையினரின் வெறி, ஒழுங்கீனம், தீர்மானமற்ற போக்கு, போதாததற்கு அவர்களுடைய பேராசை – இவற்றையெல்லாம் அலெக்ஸியஸ் நன்கு அறிந்துகொண்டதால், பரங்கியர்களின் வருகையைக் கண்டு மிகவும் திகிலடைந்தார், பேரச்சம் கொண்டார்.’

அன்னாவின் நூலின் மற்றோர் இடத்தில், ஒட்டுமொத்த சிலுவைப் படையினரை, ‘அனைவரும் மேற்குலகின் காட்டுமிராண்டிகள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் அன்னா காம்னெனா. சிலுவைப் படையினரின் முக்கியமான தலைவரான பொஹிமாண்ட்-ஐ (Bohemond) விவரிக்கும்போது அன்னாவின் சொல்லாட்சி கடுமையானதாக உள்ளது. ‘அயோக்கியத்தனத்தையே பழக்கமாகக்கொண்டிருந்தவன், பொய் பேசுவதையே இயல்பாகக் கொண்டிருந்தவன்‘ என்று எழுதி வைத்திருக்கிறார்.

சிலுவைப் படையினரின் இலட்சணத்தை அறிந்துகொள்ள இது போதாது?

கி.பி. 1096-1097ஆம் ஆண்டுகளில் கிரேக்க கிறிஸ்தவர்களுக்கும் லத்தீன் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நிகழ்வுற்ற சந்திப்புகள் அப்பட்டமான  அவநம்பிக்கை, ஆழ்ந்த விரோதம் ஆகியனவற்றால் சூழப்பட்டிருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் சித்திரிக்கிறார்கள். மேற்கிலிருந்து திரண்டுவந்த சிலுவைப் படையினருக்கும் உதவி கோரிய பைஸாந்திய அரசுக்கும் இடையே உறவு உருவானாலும் அதன் ஆழத்தில், அவர்களின் உள்மனத்தில்  அதீத எச்சரிக்கையுணர்வும் இனந்தெரியா வெறுப்பும் இயல்பாகவே அமைந்து விட்டன. அதன் விளைவாக அவ்வப்போது அவர்களுக்குள் மோதலும் ஏற்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் விலக்கி வைத்துவிட்டு, ஆயிரம் குறைகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு என்ற பெயரில் சாயம் பூசித் தங்களது நடவடிக்கைகளை இருதரப்பினரும் ஒன்றிணைத்துக்கொண்டார்கள்.

அந்த அரசியல் வினோதங்களைப் பார்க்கத்தான் போகிறோம். அதற்குமுன், திரண்டெழுந்த சிலுவைப் படையினருக்குத் தலைமை ஏற்ற ஐவரை நாம் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதலாம் சிலுவை யுத்தத்தில் அவர்கள் வெகு முக்கிய பாத்திரங்கள்.

oOo

போப்பின் க்ளெர்மாண்ட் உரையை வாசித்தோமில்லையா? அந்த உரையைத் தொடர்ந்து அதன் பின்னர் ஐரோப்பாவில் சங்கிலித் தொடரைப்போன்ற தொடர் வினை உருவானது. படையில் சேர அலை அலையாய்த் திரண்ட மக்களுக்கு மத்தியில் அவர்களின் ஒவ்வோர் உயர்குடி மகனும் சிலுவையை ஏந்தி மையமாக நின்றிருந்தான். முன்னரே நாம் பார்த்ததுபோல் அரசர்கள் இதில்  நேரடியாகக் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு இடையேயான அரசியல் பிரச்சினைகளில் அவர்கள் சிக்கிக் கிடந்தனர். ஆனால் மேட்டுக்குடியினர் முழு வீச்சில் இணைந்தனர்.

பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, இத்தாலி, ஐரோப்பாவின் வடமேற்கு நாடுகள் ஆகியனவற்றின் உயர்குடிப் பிரபுக்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அரச வம்சத்திற்கு அடுத்தபடியான செல்வாக்கும் வலிமையும் இருந்தன. அந்தப் பிரபுக்களுக்கு ஏகப்பட்ட அதிகாரம் இருந்தது. அவர்களுள் சிலருக்கு மன்னர்களை விஞ்சும் அளவிற்குக்கூட அதிகாரம் அமைந்திருந்தது. அவர்களுக்குக் கோமான் (Count or Duke) என்று பட்டம். இளவரசர்கள் என்ற அந்தஸ்து. இலத்தீன் கிறிஸ்தவப் படையில் பலர் இத்தகு அடைமொழியுடன் அறிமுகமாகப் போவதால், நமக்கு நம் வழக்கில் பரிச்சயமான மன்னன்-இளவரசன் உறவின் அடிப்படையில் அவற்றை விளங்கக்கூடாது என்பதற்காகவே இந்த முன் குறிப்பு.

அந்தக் கோமான்கள், பிரபுக்கள் தலைமையில் அவரவர் படை அணி உருவானாது. அவற்றுக்கு அந்தந்தக் குழுவின் முன்னணித் தலைவர்கள் தலைமை. அவர்களிடம் அதன் கட்டுப்பாடு இருந்தது. தத்தம் இனத்தின் அடிப்படையில் படை அணியை அமைத்தாலும் குல / கோத்திரத் தொடர்பு, ஏதேனும் குடும்ப உறவு, பிரபுத்துவ அரவணைப்பு என்ற அடிப்படையில் உதிரியாகக் கிடந்த மற்ற மக்களையும் அவர்கள் தம்முடன் இணைத்துக்கொண்டனர்.
 
துலூஸின் ரேமாண்ட் (Raymond of Toulouse) தென் கிழக்கு ஃபிரான்ஸில் அதிகாரமிக்க பிரபு. சிலுவை யுத்தத்திற்குத் தம்மை அர்ப்பணித்த முதல் இளவரசர் இவரே. போப்பின் உரைக்குப் பிறகு பாதிரியார் அதிமார் என்பவர் போப்பின் முன்னிலையில் தம்மைப் புனிதப் போரில் இணைத்துக்கொண்டார் என்று பார்த்தோமில்லையா? அந்தப் பாதிரியார் அதிமாரின் நெருங்கிய நண்பர்தாம் ரேமாண்ட். திருச்சபை சீர்திருத்த இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் அவர். ஐம்பது வயதைத் தாண்டிய அவர்தாம் சிலுவைப் படையின் மூத்த அரசியல்வாதி. பெருமைப்படும் அளவிற்குச் செல்வம், நெஞ்சழுத்தம், இறுமாப்பு, அதிகாரம், ஏகப்பட்ட செல்வாக்கு எல்லாமாகச் சேர்ந்து மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் அவருக்கு ஒளிவுமறைவற்ற வெறுப்பு. அவர் வசம் பிரெஞ்சுப் படைகளின் தலைமை வந்து சேர்ந்தது.
 
ரேமாண்டுக்கு அப்பட்டமானப் போட்டியாளராக வந்து சேர்ந்தார் இத்தாலியின் தரான்தோவைச் சேர்ந்த பொஹிமாண்ட் (Bohemond of Taranto). தமது விலைமதிப்பற்ற அங்கியைக் கிழித்து, சிலுவை தைக்கத் தந்தவர் என்று வாசித்தோமே அவர்!. ஆயிரத்து எண்பதாம் ஆண்டுகளில் பொஹிமாண்ட் தம் தந்தையுடன் இணைந்து போர்களில் கலந்துகொண்டவர். இராணுவம், போர்த் தலைமை, முற்றுகைப் போர்கள் ஆகியனவற்றில் அவருக்கு அறிவு, அனுபவம் இருந்தது. இராணுவத் திறன் வாய்த்திருந்தது. எல்லாம் இருந்தும் அவரிடம் செல்வம் இல்லை. அதுமட்டும் ஒட்டுமொத்தமாக அவருடைய சகோதரனுக்குச் சென்றுவிட்டது.
 
சிலுவை யுத்தம் உருவாக ஆரம்பித்ததும் அவருடைய மனத்தில் பேராசை, பொருளாசை உருவாக ஆரம்பித்தன. எப்படியும் அதை ஈட்டிவிட வேண்டும் என்று வெறியானது. இஸ்லாமியர்களின் பகுதிகளைக் கைப்பற்றினால் தமக்கும் ஆட்சி, அதிகாரம் புரிய நிலப்பரப்பு, செல்வத்தில் கணிசமான பங்கு ஆகியன கிடைக்கும், பிரபுத்துவம் வந்து சேரும் என்ற பெருங் கனவுடன், சப்புக்கொட்டும் நாவுடன் சிலுவையைத் தூக்கினார் பொஹிமாண்ட்.
 
ஹாட்வில்லைச் சேர்ந்த டான்க்ரெட் (Tancred of Huteville) பொஹிமாண்டின் உடன்பிறந்தாரின் மகன். அச்சமயம் அவருக்கு இருபது வயதிருக்கும். படு சுறுசுறுப்பான பேர்வழி. அரபு மொழியும் பேசத் தெரிந்திருந்தது. தெற்கு இத்தாலியின் நார்மன் படைகளின் இரண்டாம் கட்டத் தளபதியாகப் பதவியேற்ற டான்க்ரெட், பொஹிமாண்டுடன் சேர்ந்து கொண்டார். சிலுவை யுத்தங்களில் இவருக்கு முக்கியமான பங்கு காத்திருந்தது.
 
பெல்ஜியம் நாட்டில், தெற்கே பிரான்ஸின்  எல்லையில் உள்ள நகரம் போயான். இந் நகரத்தைச் சேர்ந்தவர் காட்ஃப்ரெ (Godfrey of Bouillon). பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி எல்லைப்புறப் பகுதிகள் லோர்ரெய்ன் என்று அழைக்கப்பட்டது. அப்பகுதியின் பிரபு காட்ஃப்ரெ. ஆனாலும் கட்டுக்கடங்காத அந்தப் பகுதியை அவரால் தம்முடைய திட்டவட்டமான அதிகாரத்தின்கீழ்க் கொண்டு வருவது இயலாததாகவே இருந்தது. புனித நிலமான ஜெருசலத்திலாவது தமக்குச் சிறப்பான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையுடன் சிலுவையைத் தூக்கினார் காட்ஃப்ரெ. லோர்ரெய்ன், ஜெர்மனி படையினருக்கு அவர்தாம் முன்னணித் தலைமை.

அவருடன் அவருடைய சகோதரர் பால்ட்வின் சேர்ந்து கொண்டார் (Baldwin of Boulogne). மேற்சொன்ன டான்க்ரெட்டைப்போல் இவரும் அடையாளம் தெரியாமல் இருந்தவர்தாம். ஆனால், முதலாம் சிலுவை யுத்தம் இவரைப் பிரபல்யமான ஒருவராக ஆக்கிவிட்டது.

ரேமாண்ட், பொஹிமாண்ட், காட்ஃப்ரெ, டான்க்ரெட், பால்ட்வின் – இந்த ஐந்து இளவரசர்களும் முதலாம் சிலுவை யுத்தத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தவர்கள். பிரெஞ்சுப் படைகளின் மூன்று முக்கியப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கியவர்கள். சிலுவை யுத்தங்களின் தொடக்கத்தை வடிவமைத்தவர்கள்.

மேற்சொன்னவை போல மற்றொரு பிரிவு இருந்தது. அது மேட்டுக்குடி வகுப்பைச் சேர்ந்த மூன்று நெருங்கிய உறவினர்களால் தலைமை தாங்கப்பட்டது. நார்மண்டியின் பிரபு ராபர்ட் (Robert, duke of Nomandy), புலுஆவின் பிரபு ஸ்டீபன் (Stephen, count of Blois), ப்ளாண்டர்ஸின் பிரபு ராபர்ட் II (Robert II, count of Flanders).

இவ்விதமாக, சிலுவைப் படை பல நாட்டின் கோமான்களும் பிரபுக்களும் இளவரசர்களும் மக்களும் கலந்த கலவையாகத் திகழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகப் பரங்கியர்கள், பிரெஞ்சுப் படைகள் என்றே அழைக்கப்பட்டனர்; குறிப்பிடப்பட்டனர். இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களில் எல்லாம் அவர்கள் ‘ஃபிரங்கி’.

பைஸாந்தியம் நோக்கிக் கிளம்பியது சிலுவைப் படை.

oOo

வருவார், இன்ஷா அல்லாஹ் …

– நூருத்தீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.