மும்பைத் தாக்குதல் – கர்கரேயைக் கொன்றது யார்?

Who killed Hemanth Karkare
Share this:

அறிமுகம்:

முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்வத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரியும் விருப்ப ஓய்வு பெற்று பதவி விலகிய மகாராஷ்டிர அய்.ஜி.யுமான முஷ்ரப் அவர்கள் எழுதியுள்ள நூல்.

பல திடுக்கிடும் உண்மைகள், மறைக்கப்படும் செய்திகள், இவற்றிற்கெல்லாம் மூல காரணங்கள் பார்ப்பனப் பிடிப்புக்குள் சிறைப்பட்டுள்ள அல்லது பார்ப்பனமயமான இந்திய உளவுத் துறையும், இந்திய ஊடகத்துறையும், கடமை தவறி ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுநீதியின் மறு உருவங்களாகத் திகழ்கின்றன.

இந்நூல் முன்னுரை, மற்றும் முக்கிய சில அத்தியாயங்களை தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் தமிழாக்கம் செய்து தருகிறார்; படியுங்கள்; (பேச்சாளர்கள்) பரப்புங்கள்.

– கி.வீரமணி

மும்பை தாக்குதல்

கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றன. மும்பையின் புகழ் பெற்ற தாஜ் ஓட்டல் தாக்கப்பட்டது. மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் எனும் தொடர்வண்டி நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டலின் அருகில் உள்ள லியோபோல்ட் உணவகம் முதலியவையும் தாக்கப்பட்டன.

தாக்குதலை முறியடிக்க எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். அஜ்மல் அமீர் கசாப் எனும் பாகிஸ்தானியர் ஒருவர் மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டு வழக்கை எதிர்நோக்கியுள்ளார்.

எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டிருந்த மும்பை காவல் துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே என்பவர் காமா மருத்துவமனைக்குச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகக் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பயங்கரவாதிகளின் தாக்குதலில் இறந்து போனார். அவருடன் சென்ற மேலும் இரண்டு அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

ஹேமந்த் கர்கரே, மகாராட்டிர மாநிலத்தின் சிறப்புக் காவல் பிரிவுத் தலைவர். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குத் தலைமை வகித்தவர். இந்த (ATS) பிரிவுதான் புனேவுக்குப் பக்கத்தில் உள்ள மாலேகான் நகரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட இந்து பயங்கரவாதிகளைக் கண்டு பிடித்துக் கைது செய்தது. இராணுவத்தில் பணி புரிந்து கொண்டே இந்துப் பயங்கரவாதியாகச் செயல்பட்ட கர்னல் புரோகித், வெடிகுண்டுகளை வைக்கத் தனது இரு சக்கர வண்டியைக் கொடுத்த பெண் சாமியாரினி பிரதி-யுக்ஞா சிங் போன்றவர்களைக் கைது செய்தவர்.

எல்லா இசுலாமியர்களும் பயங்கரவாதிகள் அல்லர்; ஆனால் பயங்கரவாதிகள் எல்லோரும் இசுலாமியர்கள் என்று பசப்பு வார்த்தை கூறிக் கொண்டே பயங்கரச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இந்துத்துவ இயக்கங்களில் உள்ளவர்கள் என்பதை உலகுக்கு அம்பலப்படுத்தி உண்மைகளை வெளிக் கொணர உழைத்தவர். அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே, (அதனை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைப் போல) அவசரம் அவசரமாக வேறொருவர் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் புதிய நபர் தனது இந்துத் துவக் கொள்கைகளுக்குப் பெயர் பெற்றவர்.

இந்த நிலையில் ஹேமந்த் கர்கரேவைக் கொன்றது யார்? என்ற தலைப்பில் இங்கிலீஷில் நூல் ஒன்றை எழுதியுள்ளார் எஸ்.எம்.முஷ்ரீஃப் அய்.பி.எஸ். என்பார். இவர் மகாராட்டிர மாநிலத்தின் காவல்துறையில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (அய்.ஜி.) ஆகப் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

அந்த நூல் அண்மையில் ஃபாரோஸ் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலில் இருந்து சில பகுதிகள் தமிழில் தரப்படுகின்றன.

இந்தியாவில் பயங்கரவாதத்தின் உண்மை முகம் என வருணிக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்ட இந்நூலின் முன்னுரை இதோ:

காவல் துறையில் எனக்கிருந்த நீண்ட காலப் பணியின் அடிப்படையிலும், சமூகத் தளத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலும் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் இது. கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் நடந்த பயங்கரவாதம், மதவாதம் ஆகியவற்றின் தொடர்பான நாளிதழ், வார ஏடுகள் ஆகியவற்றில் வெளிவந்த செய்திகளும் இதற்குத் துணை புரிந்தன. இந்நூலின் நோக்கங்கள் இரண்டு: நான் காவல் துறையில் பணி புரிந்த காலத்தில் சிறப்பாகவும் மற்றும் என் வாழ்நாள்முழுவதும் என்னைத் துளைத்துக் கொண்டிருந்த பல வினாக்களுக்கு விடைகளைத் தேடுவது ஒன்று; நாட்டின் நலனுக்கு எதிராகப் பயங்கரத் திட்டங்களைப் போட்டுக் கொண்டிருப்பவர்களை அடையாளம் காட்டிப் பாராட்டத்தக்க செயல்கள் புரிந்த ஹேமந்த் கர்கரேவின் பணிகளின் சிறப்புகளைப் பதிவு செய்திடும் நோக்கம் மற்றொன்று.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வகுப்புவாதச் சூழலுக்கு நேர்மாறான, அமைதியான மதச்சார்பற்ற சூழ்நிலையில் நான் வளர்ந்த பின்னணியும் கூட, இந்நூலை நான் எழுதிடத் தூண்டுகோலாக அமைந்தது. மகாராட்டிர மாநிலம் கோல்காப்பூர் மாவட்டத்தில் காகல் எனும் நகரைச் சேர்ந்தவன் நான். நகர்ப்புறச் சாயல்கள் சிறிதளவு கொண்ட கிராமப்புற நகரமான அது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, மாவட்டத் தலைநகருக்கருகில் அமைந்துள்ளது.

நான் மாணவனாக இருந்த 1960, 1970 களில் நாட்டில் அதிலும் குறிப்பாக மத்திய, வட இந்தியப் பகுதிகளில் இந்து முசுலிம் கலவரங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இதற்கு மகாராட்டிரமும் விலக்கல்ல. என்றாலும் கோல்காப்பூர் மாவட்டத்தில் எதுவும் நடைபெறவில்லை. நாட்டின் பல பகுதிகளும் வகுப்புக் கலவரங்களினால் கொதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கோல்காப்பூர் அமைதிப் பூங்காவாக, சமூக நல்லிணக்கத்தைப் பேணி வந்தது என்றால், அதற்கு மூல காரணம் கோல்காப்பூர் சமஸ்தான மன்னராக இருந்து பல்வேறு சமூகப் பொருளாதாரக் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்திய சத்ரபதி சாகு அவர்களின் தொலை நோக்குக் கண்ணோட்டமே!

இந்திய வரலாற்றில் முதன் முதலாக 1902 ஆம் ஆண்டிலேயே, சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியிலும் பிற்படுத்தப்பட்டிருந்த பெரும்பான்மை மக்களுக்கு அரசுப் பணிகளில 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து ஆணையிட்டவர், சாகு மகராஜ் அவர் களே! ஜாதி, மத, வகுப்பு வேறுபாடுகள் எதுவும் கணக்கில் கொள்ளப்படாமல் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதன் காரணமாக இந்த மாவட்டம் மதச் சார்பின்மையும் அமைதியும் நிலவும் மாவட்டமாகவும், அதே போல மக்களும் வகுப்புக் கலவரங்களின் திடீர் வெப்பத் தாக்குதலுக்கு ஆளாகாமலும் வாழ்ந்தவர்களாகவும் இருந்தனர்.

நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக நான் 1975 இல் பணியில் சேர்ந்து, மிகக் குறுகிய காலப் பணியிலேயே 1981 இல் அய்.பி.எஸ். அதிகாரியாகி விட்டேன். 2005 இல் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றபோது, காவல் துறை அய்.ஜி. ஆக இருந்த நான், அதன் பின்னர் சமூகப் பணிகளில் ஈடுபட்டேன். பெரும்பாலும் களப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பைப் பெற்றவன். பணியாற்றிய இடங்களில் பெரும்பாலானவை வகுப்புக் கலவரங்களால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களாகவே இருந்தன என்பதால், வகுப்பு வாதப் பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் எனக்கு அதிகமாகவே ஏற்பட்டன.

சமூக அளவில் அமைதியான பகுதியான கோல்காப்பூர் வாசியான எனக்கு, நான் பணியாற்றிய பகுதிகளின் வகுப்பு வாத நெடியும், ஒரு பிரிவு மக்கள் மறுபிரிவினர் மீது தாக்குதல் நடத்-திக் கலவரம் விளைவிக்கத் தூண்டிவிடும் போக்கும், ஆரம்பத்தில் அதிர்ச்சியடையச் செய்தன. காலம் செல்லச் செல்ல மாறி சூழலுக்கு ஏற்ப நான் மாறி, நிலைமைகளைச் சமாளிக்கத் தேவையான துறைவாரி வழிகளைக் கையாளத் தொடங்கினேன். வகுப்பு மோதல்கள் நடந்திடும் பகுதிகளில் இசுலாமியஅதிகாரி பணிபுரிவது என்பது மிகவும் கடினமான ஒன்று என்றாலும், நெருக்கடியான நிலைமைகளில் மிகவும் நுட்பமாகப் பணி புரிந்து எனக்கு அளிக்கப்பட்ட கடமைகளை வெற்றிகரமாகவே நிறைவேற்றி வந்தேன். இதன் காரணமாகவே நான் இது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடத் தூண்டப்பட்டேன்.

காவல்துறை அதிகாரியாக, வகுப்புக் கலவரங்கள் தொடர்பான வழக்குகளை சட்டப்படி விசாரிக்கின்ற போதே, அவற்றைப் பற்றிய இடைக்கால வரலாற்றுக் கண்ணோட்டத்துடனும், சமூகவியல், அறிவு மற்றும் கும்பல்களின் மனோபாவம் போன்றவற்றுடனும் ஆய்ந்து பார்ப்பேன். அடிக்கடி நடத்தப்படும் இந்து முசுலிம் கலவரங்கள் இரு வகுப்பினருக்கிடையேஏற்பட்டு விட்ட கருத்து மோதல்களின் விளைவாகவோ, திடீர் என ஏற்பட்ட ஏதோ ஒரு நிகழ்ச்சியின் காரணமாகவோ ஏற்பட்டவை அல்ல என்பதும், மாறாக, சமூகத்தில் வகுப்புவாத நச்சுக் கிருமிகளால் படரவிடும் பார்ப்பனிய அமைப்புகள் வேண்டுமென்றே இடை விடாமல் செய்திடும் முயற்சிகளின் விளைவே எனக் காண முடிந்தது.இந்தப் பார்ப் பனிய அமைப்புகள்தான் இந்து அமைப்பு கள் என்ற பெயரில் முகமூடி அணிந்து வருகின்றன. மத்திய கால இந்திய வரலாற்றோடு பொருத்திப் பார்க்க முயன்றபோது, தர்க்க பூர்வ மான ஆதாரங்கள் எவையும் தென் படவில்லை.

எனினும், வகுப்புக் கலவரங்களின் 20 ஆம் நூற்றாண்டு சரித்திரத்தைப் புரட்டிப் பார்க்கும்போது இத்தகைய வகுப்புக் கலவரங்களின் தொடக்கம் 1893 இல் நடைபெற்றது என்றும் அதன் தொடர்ச்சியே பாபர் மசூதி இடிப்பும் 2002 இல் குஜராத்தின் நடந்த இனப் படுகொலைகளும் என நிர்ணயித்திட முடிந்தது. இதுதான் வகுப்புவாதத்தின் முதல் கட்டம் ஆகும்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நாடு முழுதும் நிறைய குண்டு வெடிப்புகள்வேண்டும் என்றே தவறான செய்திகள், மிகப்படுத்தப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வந்தன; வெளிப்படையாகவே அவை இந்தியாவின்முன்னணி உளவுத் துறை அமைப்பான அய்.பி. (I.B.) இன் தூண்டுதலின் பேரில் நிகழ்த்தப்பட்டன. கெடுதலான உள் நோக்கத்துடன் அய்.பி. இதில் ஈடுபட்டு 2006 நான்டெட் குண்டு வெடிப்புச் சம்பவம் பற்றியும் 2008 மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக வெளிப்படையான, உயர்வான முறையில் விசாரணை செய்து மகாராட்டிர காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே நாட்டளவில் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட சதிவலை; மும்பையில் நவம்பர் 26 இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக குறுக்கீடு செய்யப்பட்ட மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு விசாரணை; மும்பை தாக்குதலே கூட அய்.பி.யின் திட்டமிட்டு மறைக்கப்பட்ட உளவுச் செய்தியின் விளைவாக ஏற்பட்டதுதான். கோழைத்தனமாகவும் கொடுமையாகவும் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே; அவர் மறைவுக்குப் பின் அவசர அவசரமாக மிகவும் சர்ச்சைக்குரிய காவல் துறை அதிகாரியான கே.பி.ரகுவன்ஷி என்பவர் ஹேமந்த் கர்கரேயின் இடத்தில் நியமிக்கப்பட்டவர்; சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், காமா மருத்துவமனை, ரங்கபவன் சந்து ஆகிய இடங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அய்.பி. அமெரிக்க புலனாய்வு அமைப்பகம் (F.I.B.) ஆகியவற்றின் சந்தேகத்திற்கிடமான விசாரணை; மும்பை குற்றப் புலனாய்வுத் துறை பொம்மையாகச் செயல்பட வைக்கப்பட்டது போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம்.

இந்த நூலில் 1893 இல் திட்டமிட்டு முதன்முதலில் நடத்தப்பட்ட இந்து முசுலிம் பெருங்கலவரம் முதல் 26.11.2008 இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் வரையிலான சம்பவங்கள் தொடர்பாக எழுந்துள்ள வினாக்களுக்கு விடைகாண முயன்றிருக்கிறேன்.

(1) பார்ப்பனர்களின் பிரச்சினை பற்றி கவனிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பார்ப்பன அமைப்புகள் 1893 இல் திடீர் என இந்து முசுலிம் கலவரங்களைத் தூண்டிவிட்டு இந்து முசுலிம் விரோதச் சூழலை உண்டு பண்ணி அவர்களிடையே மத்திய கால வரலாற்றுக் காலத்திலிருந்து நிலவிய சமூகச் சூழ்நிலையைக் கெடுக்க வேண்டிய தேவை என்ன?

2) கெடுதலை விளைவிக்கக்கூடிய வகுப்பு விரோத அமைப்புகளான குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். போன்ற பார்ப்பன அமைப்புகளின் முசுலிம் விரோதச் செயல்கள் பற்றி இந்தியாவின் முன்னணி உளவுத் துறையான அய்.பி. தகவல்களை அளிக்காமல் அரசை இருட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பது ஏன்?

3) கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகவே வகுப்புக் கலவரங்கள் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தேவைப்படும் உளவுச் செய்திகளை காலாகாலத்தில் அரசுக்கு அளித்து ஆலோசனை கூறி அவற்-றைக் கட்டுப்படுத்த அய்.பி. தவறியது ஏன்?

4) மிக முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புக்கும் முக்கிய நிர்மாணங்கள், வழிபாட்டிடங்கள் ஆகியவற்றிற்கும் முசுலிம் பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்படும் என்கிற வதந்திகளைப் பரப்பும் செயலை 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அய்.பி. தொடங்கிச் செய்வது ஏன்?

5) பார்ப்பன பயங்கரவாத அமைப்புகள் தம் உறுப்பினர்களுக்குப் போர்ப் பயிற்சி தருவது, ஆயுதங்களை வாங்குவது, வெடிமருந்துகள் வாங்கி வெடி குண்டுகள் தயாரித்தல், வெடிப் பொருள்களை வாங்கிப் பல இடங்களுக்குக் கொண்டு போதல் போன்ற பயங்கரவாதச் செயல்களைச் செய்வது பற்றி அய்.பி. அரசுக்குத் தகவல் தராமல் இருப்பது ஏன்?

6) இந்துராஷ்ட்ரம் என்கிற நாட்டை அமைக்கும் செயலில் ஈடுபட்டு வரும் அபிநவ் பாரத் என்ற அமைப்பின் செயல்பாடுகள்பற்றி அரசுக்கு எதுவும் தெரிவிக்காமல், அய்.பி. இருட்டடிப்புச் செய்வது ஏன்?

7) உலகச் செய்திகளைத் தயாரித்து அளிக்க வேண்டிய முக்கிய பணியைச் செய்ய வேண்டிய அய்.பி.அதை விடுத்து குண்டு வெடிப்பு வழக்குகள் எல்லாவற்றிலும் தேவையில்லாமல் மூக்கை நுழைத்துத் தவறான, ஒருதலைப் பட்சமான விசாரணை செய்வது ஏன்?

8) மும்பை பயங்கரவாதத் தாக்குதல் பற்றிக் கிடைத்த மிக முக்கிய உளவுத் தகவலை, மும்பை காவல் துறைக்கும்,மேற்குத் திசை கப்பற் படையினர்க்கும் அய்.பி. தராமல் மறைத்தது ஏன்?

9) மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய 35 செல்பேசி எண்கள் அய்.பி.க்குத் தெரிந்திருந்தும் அவற்றைக் கண்காணிக்காமல் விட்டது ஏன்?

10) ஹேமந்த் கர்கரே இறந்து சில மணி நேரங்களுக்குள்ளாகவே, அவர் இடத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய வகுப்பு-வாதியான கே.பி. ரகுவன்ஷி என்பாரை நியமிக்கும்படி அய்.பி.ஏற்பாடு செய்தது ஏன்?

11) மும்பை தாக்குதல் வழக்கின் விசாரணையை அய்.பி. ஏன் தொடக்க முதலே கையாண்டு வெளிநாட்டு அமைப்பான எஃப். பி. அய். நம் நாட்டு விசாரணையில் தலையீடு செய்வதற்கான நிலையை ஏற்படுத்தியுள்ளது?

மேற்காணும் அய்ய வினாக்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவையாகவும் உள்ளன என்பதை என் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. வேதனைதரும் இந்த விளையாட்டில் முக்கிய பங்கு ஏற்பவர்கள் பார்ப்பனர்கள் – அதிலும் பார்ப்பனர்களில் மிகச் சிறு பிரிவைச் சேர்ந்தவர்கள் – இவர்களின் போதனைக்கு ஆட்பட்ட பார்ப்பனர் அல்லாதவர்கள் – பார்ப்பன மயமான அய்.பி.பார்ப்பனர்களின் செய்தி ஊடகங்கள் முதலியோர் உள்ளனர். அவர்களின் முக்கிய வேலைத் திட் டமே இந்தியச் சமூகத்தில் பார்ப்பனர்களின் வல்லாண்மையை நிறுவ வேண் டும் என்பது மட்டுமே. தொடக்கத்தில் இந்துக்களின் சமூக, மத விவகாரங்களைக் கட்டுப்படுத்திடும் சக்தியாக விளங்கவேண்டும்-என்றுதான் அவர்களின் குறிக்கோள். ஆனால் முசுலிம்களுக்கு எதிரான பிரச்சாரம் வெற்றி பெற்ற-தைத் தொடர்ந்து அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி அதன் காரணமாக வகுப்பு மோதல்களை மேலும் வேகமாகத் தூண்டிவிட்டு, ராமஜென்மபூமி போன்ற விஷயங்களைப் பெரிதாக்கினர். பாபர் மசூதியை இடித்த பிறகு அவர்களின் அரசியல் சக்தி அதிகமாகி, சுதந்திரத்திற்குப் பின் வகுப்பு வாத அரசியல் வளர்ச்சியின் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது.

அதிகார ருசியைச் சுவைத்தவுடன் பார்ப்பனர்களின் பேராசை கூடி விட்டது. ஆனாலும் பார்ப்பனர் அல்லாதாரின் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் பல பார்ப்பனர்களுக்குத் திருப்தியில்லை; தங்கள் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ள பார்ப்பனர் அல்லாதார் கூட்டு உதவாது என்பது அவர்களின் கருத்து. அவர்களுக்கு முழு அதிகாரமும் வேண்டும். அர சமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட மத்திய அரசைத் தூக்கி எறிந்து விட்டு, இந்து ராஷ்ட்ரம் என்கிற பெயரில் பார்ப்பன ராஷ்ட்ரத்தை அமைக்க பல்வேறு சதிகளில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் தொடர்ச்சியாகக் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தி, பழியை முசுலிம்கள் மீது போட்டு விடுவது என்பதும் அதற்கு அய்.பி. இல் இருக்கும் அபிமானிகள் உதவுவார்கள் என்பதும் அவர்களின் திட்டம். அதன் பிறகு பத்திரிகை, ஊடகத் துறை ஒரு கலவரமான குழப்பச் சூழ்நிலையை நாட்டில் ஏற்படுத்தும்; அதன்மூலம் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்பதும் திட்டத்தின் பகுதியாகும். ஆனால் நாட்டுக்கு நல்லதாகவும் அவர்களுக்குப் பொல்லாததாகவும் அமைந்துவிட்ட வகையில் 2008 மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவம் பற்றி விசாரித்த மகாராட்டிர பயங்கரவாதச் செயல் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே இவர்களின் சதித் திட்டத்தை அம்பலப்படுத்தி விட்டார். இந்தப் புலன் விசாரணை பாதியில் இருக்கும் போது நவம்பர் 26 இல் மும்பையில தாக்குதல் நடை பெற்றது; விசாரணை தடைபட்டது. சந்தேகத்திற்கு இடமான சூழ்நிலைகளில் ஹேமந்த் கர்கரே தாக்குதலின்போது கொல்லப்-பட்டார்.

அய்.பி. தனக்குக் கிடைத்த முக்கியமான தகவல்களைத் தொடர்புடைய-வர்களுக்கு அளித்திருந்தால் இந்தத் தாக்குதலையே தடுத்திருக்க முடியும். இதில் அய்.பி. இன் கெட்ட நோக்கத்தை மேலும் மெய்ப்பித்திடும் வகையில் மிகவும் சர்ச்சைக்கிடமான வகுப்பு வெறி பிடித்த அதிகாரியான கே.பி.ரகுவன்ஷி, கர்கரேயின் இடத்தில் அவர் இறந்த சில மணி நேரத்திற்குள்ளாகவே பணி அமர்த்தப்பட்டார். மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்- காமா- ரங்க பவன் சந்து பயங்கரவாதச் செயல்களில் பலத்த சந்தேகத்திற்கு ஆளாகியுள்ள அய்.பி. அமைப்பின் அதீத அவசரமும் ஆர்வமுமே இதற்குக் காரணம். இதன் மூலம் ரகுவன்ஷி விசாரணையை மேற் கொள்ளவும் வெளிநாட்டு உளவு நிறுவனமான எஃபி.அய். இன் உதவியுடன் விசாரணையை முடித்திடவுமான சந்தர்ப்பம் வாய்த்துவிட்டது.

மேற்காணும் நிகழ்ச்சிகளை, இந்த நூலில் நான் வரிசைப்படுத்தியுள்ளேன். செய்தித் தாள்களின் அறிக்கைகள், மற்றும் அதன் தொடர்புடைய விஷயங்கள் முதலியவற்றைப் பகுத்துப் பார்த்து, தர்க்க நியாயமான முறையில் கருத்துகளை நான் கண்டறிந்துள்ளேன். குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான இசுலாமிய இளைஞர்கள் கைது செய்யப்படுவதும், அதனால், குண்டு வெடிப்புகள் நின்று போகாததும், ஆனால் மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக உண்மை பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட பிறகு அவை நின்று போயின என்கிற உண்மைகளும் என் அனுமானக் கருத்துகள் எந்த அளவுக்கு நேர்மையானவை என்பதை ருசுப்பிக்கின்றன.

நடந்து முடிந்த நவம்பர் 26 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஊடகங்களில் மும்பை குற்றப் பிரிவினாலும் அய்.பி. பிரிவினாலும் பரப்பப்படும் தப்பானதும் திரித்துக் கூறப்படுவதுமான செய்திகளின் மூலம் குழம்பிப் போயிருக்கும் மக்கள் இந்த நூலை எப்படி வரவேற்பார்கள் என எனக்குத் தெரியாது. ஆனால் நூல் முழுவதையும் கவனமாகப் படிக்கும் எவருக்கும் காவல்துறையினர் தரும் தகவல்களைக் காட்டிலும் நேர்மையாக நூலின் தகவல்கள் அமைந்துள்ளன என்பது விளங்காமல் போகாது. எழுதப்பட்டிருப்பவற்றை, அப்படியே ஆராயாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நான் கூறப் போவதில்லை. அளிக்கப்பட்டிருக்கும் புதிய செய்திகளின் அடிப்படையில், சுதந்திரமான ஓர் அமைப்போ, அல்லது விசாரணை ஆணையமோ (கமிஷன்) எல்லா விவரங்களைப் பற்றியும் விசாரிக்க வேண்டும் என்பதே என் அவா. இதே போன்ற கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவராக எல்.கே.அத்வானி அவர்களேகூட எழுப்பியிருக்கிறார் என்பதை நூலின் ஏழாம் படலத்தில் குறிப்பிட்டு உள்ளேன்.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அவர்கள், கீழ்க்காணும் மூன்றில் ஒரு வகையில் செயல்படுவார்கள். – ஒன்று, இதனை முழுவதும் அலட்சியப் படுத்திவிடுவர் (இந்த விசயத்தில் அப்படி நடக்காது. காரணம் இது மிகவும் உணர்ச்சிகரமானது.) இரண்டு, நூலில் எந்த ஒரு பகுதியையாவது எடுத்துப் போட்டு மக்களின்வெறியைத் தூண்டி விடுவார்கள். மூன்று அப்பாவி மக்களைத் தூண்டிப் போராடச் செய்து இவர்கள் பின்னால் பதுங்கிக் கொள்வார்கள். இந்து மதத்தின் முரண்பாடுகள் என்கிற பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நூலுக்காக இப்படித்தான் செயல்பட்டார்கள்.

முழு நூலையும் படித்து முடிக்காமல், எவ்வித பிரதிபலிப்பையும், வெளிக்காட்டாமல், பார்ப்பனர்களின் பொய்ப் பிரச்சாரத்திற்கு செவி சாய்க்காமல் இருக்குமாறு வாசர்களை கேட்டுக் கொள்கிறேன்.

அப்படி இல்லாமல் போனால், இந்த நூலை எழுதியதன் நோக்கமே சிதறிப் போகும். இந்துக்களை அடிமைப்படுத்திடும் பார்ப்பனர்களின் தற்காலத் தந்திரங்கள் ஏற்க முடியாதது என்றாலும், நாட்டின் வகுப்புவாதச் சூழ்நிலையைப் பார்க்கும்போது ஏற்பட்டுள்ள பொதுவான கருத்து என்னவென்றால், இந்திய முசுலிம்களில் பெரும்பான்மையோர் நாட்டுப் பற்று இல்லாமல், பாகிஸ்தான் மேல் பற்று கொண்டு இசுலாமியப் பயங்கரவாதிகளின் மீது அனுதாபம் காட்டி வருகின்ற காரணத்தால், நாட்டுப் பற்று மிக்க தேசியவாதிகளான பார்ப்பனர்கள் முசுலிம்களுக்கு எதிராக இருப்பதோடு இசுலாத்தின் அபாயங்கள் குறித்துச் சாதாரண இந்துக்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 700 ஆண்டு-களுக்கு மேலாக முகலாய மன்னர்கள் நடத்திய கொடுங் கோன்மைகளும் முசுலிம்களுக்கு எதிராகப் பார்ப்பனர்கள் இருப்பதற்கான மற்றொரு காரணம் என்றும் கூறுகின்றனர்.

மேற்காணும் வாதங்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது ஒரு புறமிருந்தாலும் இந் நாட்டையும் இந்து மதத்தையும் காப்பாற்ற வக்காலத்து இல்லாமல் வாதாடும் பார்ப்பனர்கள் யார் என்பது பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பார்ப்பனியர்கள் யார் என்றால், பார்ப்பனர்களில் ஒரு சிறு பகுதியினரும், மதவெறி கொண்ட பார்ப்பனர் அல்லாதவர்களில் மிகமிகச் சிறு அளவிலானவர்கள் (இவர்களைப் பூதக்கண்ணாடி கொண்டுதான் பார்க்கவேண்டும் என்கிற அளவுக்குக் குறைவான-வர்கள்) ஆவார்கள். இவர்கள் ஜாதிகள் பிறப்பின் அடிப்படையிலேயே வந்து சேர்கின்றன என்றும், பார்ப்பனர்கள் மிகஉயர்ந்த ஜாதியினர் என்னும் தெய்வீக புருஷர்கள் ஆன காரணத்தால் இந்தியச் சமுதாயத்தை ஆள்வதற்கான நிரந்தரத் தகுதி படைத்தவர்கள் என்றும் நம்பிக் கொண்டிருப்பவர்கள். பார்ப்பனர்கள் முசுலிம்களுக்கு எதிரானவர்களா? அப்படியென்றால் எப்போதிலிருந்து? என்பது இப்-போதைய மில்லியன் டாலர் கேள்வி. பார்ப்பனர்கள் முசுலிம்களுக்கு எதிரானவர்களாக இருந்ததே இல்லை என வரலாறு கூறுகிறது; ஆனால் 1893 இல் அவர்கள் திடீர் என முசுலிம்களுக்கு எதிராகத் திரும்பினார்கள் -அந்த ஆண்டுதான் இந்திய வரலாற்றின் வகுப்புவாதம் தலை விரித்த முக்கியஆண்டு. மத்திய கால வரலாற்றுப் பின்னணியில் இதனை ஆராயலாம்.

700 ஆண்டுக்காலமாக இந்தியாவை முசுலிம்கள் ஆண்டனர் என்பது வரலாற்று உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. தற்காலத்தை விடவும் கூடுதலாகப் பார்ப்பன ஆதிக்கம் பற்றி யாருமே கேள்வி கேட்டதில்லை என்பதும் உண்மையே! வலியமையற்ற இந்து மக்கள், அவர்களால் அடிமைப் படுத்தப்பட்டிருந்ததும், பார்ப்பனர்கள் விரும்பிய அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தனர் என்பதும் அன்றைய நிலை. முசுலிம் ஆட்சியாளர்களுக்கு வேண்டாதவர்களாகப் பார்ப்பனர்கள் இருந்திருப்பார்களேயானால், ஓராண்டுக் காலம்கூட அவர்களை ஆள்வதற்கு அனுமதித்திருக்க மாட்டார்கள். முசுலிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்துக்களைப் பார்ப்பனர்கள் எழுச்சி பெறச் செய்ததாகவோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர்களை ஆட்சியிலிருந்து அகற்ற முயன்றதாகவோ வரலாற்றுப் பதிவுகள் எதுவும் கிடையாது. மாறாக, மத்திய கால வரலாறு முழுவதும் பார்ப்பனர்கள் முசுலிம் மன்னர்களுக்கு உதவி புரிந்து ஆட்சியும் நிருவாகமும் சீராக நடை பெறுவதற்கு உதவியதாகத்தான் சான்றுகள் உள்ளன.

முகலாயப் பேரரசர் அக்பரின் அவையில் இருந்த நவரத்தினங்களில் பார்ப்பனர்கள் பலர் இருந்தனர். திப்பு சுல்தானின் ஆலோசர்களும் நிருவாகிகளும் பார்ப்பனர்களே! வகுப்பு வெறியைக் கிளப்பிவிடுவதற்கு தற்போதைய பார்ப்பனியவாதிகள் தாராளமாகப் பயன்படுத்திவரும், முகலாய மன்னர் அவுரங்கசீபின் தர்பாரில் கூட பாதிக்கு மேற்பட்டவர்கள் பார்ப்பனர்களாகவே இருந்துள்ளனர். உண்மையில், பார்ப்பனர்களின் ஆதரவினால்தான் 700 ஆண்டுக்கும் மேலாக முசுலிம்கள்இந்தியாவை ஆளமுடிந்தது; அக்பரும் அவுரங்கசீபும் தலா 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்திட முடிந்தது. மத்திய வரலாற்றுக் காலம் முழுவதும் பார்ப்பனர்கள் முசுலிம்களுடன் கொண்டிருந்த சுமுக உறவின் காரணமாகவே இது சாத்தியம் ஆயிற்று. இந்தப் பின்னணியில் பார்த்தால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக இருந்த எம்.எஸ்.கோல்வால்கர் நாம் அல்லது நமது தேசியத்திற்கான விளக்கம் எனும்-நூலில் எழுதியுள்ள இந்த நாட்டில் முசுலிம்கள் கால் வைத்த நாள் முதல் இன்று வரை இந்துச் சமூகம், கொள்ளையர்களான அவர்களை தீரத்துடன் எதிர்த்தே வந்துள்ளது என எழுதியிருப்பது அப்பட்டமான பொய். இந்துச் சமூகம் என்பதிலிருந்து பார்ப்பனர்களை நீக்கிட அவர் சம்மதித்தால் இது பொருந்தலாம். புனேயில் ஆட்சி செலுத்திய பேஷ்வா பார்ப்பனர்கள் ஆண்ட 1818 ஆம் ஆண்டு வரையிலும் கூட, 30 விழுக்காடு முசுலிம்கள் வாழ்ந்த நிலையிலும் இந்து முசுலிம் வகுப்புக் கலவரம் நடந்ததாக எந்தப் பதிவும் கிடையாது. பேஷ்வாக்களின் ஆட்சியில், இந்து தாழ்த்தப்பட்டவர்கள் எச்சில் துப்புவதற்கு மண் குவளைகளைத் தம் கழுத்தில் கட்டிக் கொண்டும் (தரையில் துப்பினால் தரை தீட்டுப்படும்) தம்முடைய பாவம் படிந்த பாதங்களின் சுவடு-களை அழிப்பதற்கு வசதியாக அவர்கள் தம் இடுப்பில் துடைப்பத்தைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும் என்றும் கொடுமைப்படுத்தப்பட்டிருந்த நாளில் கூட, முசுலிம்கள் கண்ணியமாகவே நடத்தப்பட்டனர்.

1857 இல் நடந்த முதல் சுதந்திரப் போர் எனப்படும் நிகழ்ச்சியில் இந்துக்கள், பார்ப்பனர்கள், முசுலிம்கள் முதலிய அனைவரும் ஒருங்கிணைந்து போராடினர் என்பதோடு தங்கள் அரசராக முகலாயப் பேரரசர் பகதூர் ஷாவையே அறிவித்தனர். சுருங்கச் சொன்னால் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக் காலம் வரை முசுலிம்களுக்கும் பார்ப்பனர்களுக்குமிடையே உறவு சுமுகமாகவே இருந்தது; அதற்குப் பிறகும்கூடப் பார்ப்பனர்கள் முசுலிம்களுக்கோ, முசுலிம் மன்னர்களுக்கோ எதிர்ப்பாக இருந்ததில்லை. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சரியாகச் சொன்னால் 1893 ஆம் ஆண்டில், பார்ப்பனர்கள் ஏன் முசுலிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டார்கள் என்றும், அத்தகைய நிலைப்பாடு இறுதியில் நாட்டைப் பிரிவினை செய்ததோடு, இன்றையநாள் வரையிலும் தூண்டிவிடப்பட்டுக் கொண்டேஇருக்கிறதே எனும் முக்கியமான கேள்வி எழலாம். 1893 முதல் வகுப்புக் கலவரங்களும் பயங்கரச் செயல்களும் இன்றைய நாள் வரை நடைபெற்று வருவதற்கான வரலாற்றை அறிந்து கொள்வதற்கு முன், பார்ப்பன ஆதிக்கச் சமூக நிலையை மாற்றுவதற்காக மகாராட்டிரத்திலும் தென்னாட்டிலும் நடைபெற்ற சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சமூகச் சீர்திருத்த இயக்கங்களிலிருந்து கவனத்தைத் திருப்பிடவே இந்து முசுலிம் பிரச்சினைகள் ஆதி காலத்திற்கு முன்பிருந்தே பார்ப்பனர்கள் இந்தியச் சமூக வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். அவர்களின் அந்தஸ்து ஆட்டம் காணும் போதெல்லாம் அவர்கள் பலவிதத் தந்திரங்களையும் திட்டங்களையும் செயல்படுத்திக் கொலை செய்தல், நாட்டை விட்டே புத்த பிக்குகளைச் செய்தது போன்று விரட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர்; ஜாதி முறைகளை ஏற்படுத்தித் தங்களைக் கடவுள்என்ற நிலைக்கு உயர்த்தும் தோத்திரப் பாடல்களையும் வேதங்களையும் தாங்களே எழுதி வைத்துக் கொண்டனர். மனுஸ்மிருதியை அதிகார பூர்வமானதாக ஆக்கி, அந்நூல் ஜாதி முறையை வலியுறுத்துகிறது என முன்னிலைப்படுத்தியதோடு, குருட்டுத்தனமான மூடநம்பிக்கைகளைப் பரப்பினர். நாட்டின் க்ஷத்திரிய மன்னர்களை எதிர்த்துப் போரிட வருமாறு வெளிநாட்டவர்களை அழைத்தும், தவறான வரலாற்றுக் குறிப்புகளைத் தயாரித்தும், எதிர்ப்புகளை எதிர் கொண்டு சமாளிக்க முயற்சிகளைச் செய்தும் சமூகத்தில் தங்களின் உயர்பீடத்தைத் தக்க வைத்துக் கொண்டனர்.

இதேமாதிரியான தந்திர உபாயங்களைக் கைக்கொண்டு, முகலாயர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும்கூட தங்கள் ஆதிபத்யத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். ஆனால், 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் (பிற்காலத்தில் வரலாற்றிலேயேமுதல் முறையாக) மகாத்மா என்று அழைக்கப்பட்ட புனேயைச் சேர்ந்த ஜோதிராவ் புலே, பார்ப்பனர்களின் நீண்டகால துரோக வரலாற்றை அம்பலப்படுத்தினார். அதுவரை கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பெண்கள், ஒடுக்கப்பட்டோர், இந்துக்கள் ஆகியோர் கல்வி கற்றிட பள்ளிகளைத் திறந்து கற்பித்தார். நூல்கள் எழுதியும், பாடல்கள், நாடகங்கள் எழுதியும் சாதாரண இந்து மதத்தவரைக் கூடத் தட்டியெழுப்பினார்; அவர்கள், எப்படிப் பார்ப்பனர்களால் காலங்கலமாக அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை என்பதை எடுத்துக் கூறினார். உழவர்கள், கலைஞர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகிய அனைவரும் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் பார்ப்பனர்கள் எந்த வகையில் பொறுப்பு என்பதை விளக்கினார். ஒட்டு மொத்த சமூகத்தின் நலனுக்கு எதிராக, அவர்களின் செலவில் விரல் விட்டு எண்ணக் கூடியபெரும் சலுகைகளை அனுபவித்து வரும் நிலையில் பெரும்பாலான சமூக மக்களின் கல்வியில், பொருளாதாரத்தில், அறிவுத் திறனில் எவ்வாறு குறையுள்ளவர்களாக ஆக்கப்பட்டனர் என்பதை விளக்கிக் கூறினார். அவர் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி சமூகத்தின் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

புலேயின் இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வினாலும், மக்கள் அதற்குக் காட்டிய ஆதரவினாலும் உத்வேகம் பெற்ற கோல்காபூர் (மகாராட்டிரா) மன்னரான சாகுஜியும் (தற்போது குஜராத்தில் இருக்கும்) பரோடாவின் மன்னரான சாயாஜிராவ் கெய்க்வாட்டும் மக்களை எழுச்சி பெறச் செய்து அவரின் அறிவுரை-களின்படியே பார்ப்பனர் தவிர்த்த ஏனைய மக்களுக்குப் பல சமூகச் சீர்திருத்தங்களைச் செய்து உதவினர். அதே காலகட்டத்தில் தென்னாட்டில் பெரியார் ராமசாமி மற்றும் நாராயண குரு ஆகியோர் இதே போன்ற சீர்திருத்த இயக்கங்களைத் தொடங்கினர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்த இயக்கத்தின் தாக்கம் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் மகாராட்டிராவிலும், தென் மாநிலங்களிலும் ஏற்பட்டு, நாட்டின் பிறபகுதிகளுக்கும் பரவியது.

இத்தகு மாற்றமும் வளர்ச்சியும் பார்ப்பனியர்கள் மனதில் அச்ச உணர்வை ஏற்படுத்தி விட்டது. இத்தகைய இயக்கங்கள் நாடு முழுவதும் பரவி வளர்ந்தால், தங்களின் துன்ப, துயரங்களுக்குப் பார்ப்பனர்களே காரணம் என்பதைச் (சாதாரண) இந்து மதத்தவர் உணர்ந்து கொண்டால், நம்மை அவர்கள் சும்மா விடமாட்டார்கள்; பிரிட்டிஷார் இந்த நாட்டை விட்டு வெளியேறியதும் பழி தீர்ப்பார்கள் என்று அவர்கள் அச்சப்பட்டனர். ஆகவே, பார்ப்பனியத் தலைவர்களும் அறிவு ஜீவிகளும் ஒன்றாய் உட்கார்ந்து புதிய வியூகம் வகுத்தனர். சமூக நிலைமையையும் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியையும் எப்படி எதிர்கொண்டு சாதாரண மக்கள் தங்களது பித்தலாட்டங்களைப் புரிந்து கொள்ளவொட்டாமல் செய்து தங்கள் மேலாதிக்கத்தை நீடித்துக் கொள்வது எப்படி என்பது பற்றி விவாதித்தனர்.

புனேயிலிருந்து கலந்துகொண்ட சில பார்ப்பனியத் தலைவர்கள் விசித்திரமான யோசனை ஒன்றைத் கூறினர்; சீர்திருத்த இயக்கங்களின் தாக்குதல்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், சாதாரண இந்துக்களின் வெறுப்பைத் திசை திருப்பவும் இந்து முசுலிம் பிளவை ஏற்படுத்தி அவர்களுக்குள் மோதிக் கொள்ளுமாறு செய்திடவேண்டும் என்று யோசனை கூறினர். பார்ப்பனிய வாதிகள் இதனை ஏற்றுக் கொண்டு உடனே செயல்படுத்தத் தொடங்கினர். மும்பையில் நடந்த ஒரு சிறு சம்பவத்தைப் பெரிதாக்கி, புனேயில் 1893 இல் இந்துக்களை முசுலிம்களுக்கு எதிராக மோதும் செயலில் ஈடுபட வைத்தனர்.

அதன் பின்னர் பார்ப்பனியர்கள் சற்றேனும் பின்வாங்கவில்லை. நாம் அல்லது நம் தேசியம் பற்றிய விளக்கம் எனும் தன் நூலில் கோல்வால்கர் கூறியிருப்பதைப் பின்பற்றி வெளிப்படையான இனப்படுகொலைக்குத் தூண்டினர். இனத்தின் தூய்மையையும் கலாச்சாரப் பெருமையையும் காப்பாற்றுவதற்காக செமிட்டிக் இன யூதர்களைக் கொன்று ஒழித்திடும் பணியில் இறங்கி உலகம் முழுவதையும் ஜெர்மனி அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இனப் பெருமை என்பது முதன்மையானது என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

இந்துஸ்தானத்தில் இருக்கும் நமக்கெல்லாம் அது ஒரு நல்ல படிப்பினையும் அனுகூலமானதும் ஆகும் என்று கோல்வால்கர் எழுதியிருப்பதை இவர்கள் முன் உதாரணமாகக் கொண்டனர்.

அந்த வகையில், சாமான்ய இந்துக்கள் சீர்திருத்த இயக்கங்களின் பால் கவனம் செலுத்தாமல் தடுக்கவும் அவர்களைத் திசை திருப்பவும் பார்ப்பனர்களின் அட்டூழிய மான சமூகச் சமமற்ற நிலையை நீடித்துக் கொள்ளவும் 1893 இல் தொடங்கி வைக்கப்பட்ட வகுப்பு மோதல்களும் கலவரங்களும் இன்றளவும் நீடிக்கப்படச் செய்து வருவது என்பது பார்ப்பனியத் திட்டத்தின் பகுதியாகும். இந்தத் திட்டத்தில் சாமான்ய இந்துக்கள்தாம் தாக்கப்படவேண்டியவர்கள்; இதில் முசுலிம்கள் தூண்டிலில் கோக்கப்படும் இரையாகப் பயன்படுத்தப்படுகின்றனர். (எனவே அழிவு இருதரப்பாருக்கும் ஏற்படுவது நிச்சயம்).

1893 ஆம் ஆண்டு முதற்கொண்டே பார்ப்பனியர்கள் இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் வகுப்பு மோதல்களை அவ்வப்போது தூண்டிவிட்டுக் கொண்டே வந்தாலும், அவை நன்முறையில் திட்டமிட்டுச் செய்யப்படவோ, முறையாகச் செய்யப்படவோ இல்லை. இக் குறைபாட்டைச் சரி செய்திட பார்ப்பனர்களிடையே ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 1925 இல் உருவாக்கப்பட்டது. தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஊடகம், உளவுத்துறை ஆகிய இரண்டு நிறுவனங்களையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்தனர். ஏனெனில் இவைதாம் பொது ஜன அபிப்பிராயத்தை உருவாக்கி செல்வாக்கு செலுத்தும் அமைப்புகளாகும்.

1947 இல் இந்தியா விடுதலை அடைந்த நேரத்தில் இவ்விரண்டு அமைப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். கணிசமான அளவுக்கு ஆளுமை பெற்றிருந்தது. விடுதலைக்குப் பிறகு, அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தும் அளவுக்குச் செல்வாக்கு பெற்று, நாட்டில் வகுப்புவாதச் சூழ்நிலையைப் பெருக்கி, பொதுமக்களின் கவனத்தை முக்கியமான பிரச்சினைகளின் பக்கம் செல்ல விடாமல் தடுத்து, அதன் மூலம் எல்லா வகையான சமூக, கலாச்சார நிறுவனங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையை வளர்த்துக்கொண்டது.

கடந்த காலங்களில் ஊடகத் துறையிலும் உளவுத் துறையிலும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஊடுருவல் எந்த அளவுக்கு அதிகாரத்தை அவர்களுக்குத் தந்திருக்கிறது என்பதையும், பார்ப்பனியர்கள் எந்த அளவுக்கு அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தங்களின் சமூக, அரசியல் கொள்கைகளை நிறைவேற்றிக் கொண்டனர் என்பதையும் பார்க்கலாம்.

பார்ப்பனியர் பிடியில் ஊடகம்

ஊடகங்கள் பார்ப்பனியர்களின் கையில் சிக்கியுள்ள வலுவான ஆயுதம்; அவர்களும் அதனை மிக லாவகமாகவும் ஆதாயம் அடையும் வகையிலும் பயன்படுத்துகிறார்கள். அத்துறையைத் தங்களின் முழுக் கட்டுப்பாட்டிலும் கொண்டு வந்து, தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஊடகத் துறையின் எல்லாப் பகுதிகளிலும் அவர்களே முழுவதும் பரவி உள்ளனர். அச்சுஊடகங்களிலும் எலெக்ட்ரானிக் ஊடகங்களிலும் எவ்வளவு பாதுகாப்பாக அவர்கள் அமர்ந்து கொண்டு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருப்பது யார் என்றே யாரும் அறிந்து கொள்ள முடியாத வகையில் இருக்கின்றனர். கண்ணுக்குத் தெரியாமல் இருந்தாலும் செயல்பாட்டை அறிந்து கொள்ளத் தக்க வகையில் செயலாற்றும் எலக்ட்ரான் கள் போன்றவர்கள் அவர்கள். நாட்டின் பிரபல நாளேடுகளைப் படிக்கும் போதே, கண்ணுக்குப் புலப்படாத பார்ப்பனியச் சக்திகள் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன என்பதை (விலக்குகள் சில இருந்தாலும்) நம்மாலே உணர முடியும். (எலெக்ட்ரானிக்) மின்னணு ஊடகங்களைப் பொறுத்த மட்டிலும் கூட அதே நிலைதான். வலுவான இந்த ஆயுதத்தைத் தம் கையில் வைத்துக் கொண்டு, இவர்கள் அரசை, அரசியல்வாதிகளை, அதிகாரிகளை, காவல்துறையை, வணிகர்களை என எல்லாத் தரப்பினரையும் கட்டுப்படுத்தி வருகின்றனர் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும்!

ஊடகங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் நிலவுவதற்கான காரணமே அவர்கள் கல்வித் துறையில் செலுத்திய ஏகபோகமே! இதன் காரணமாக இதழியலும் அவர்களின் கட்டுப்பாட்டில் தொடக்கம் முதலே வந்துவிட்டது. ஆரம்ப கட்டத்தில், பார்ப்பன பத்திரிகையாளர்கள் பொது மக்களைப் பாதிக்கும் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் பற்றி எழுதி வந்தனர். ஏடுகள் மூலம் மக்களின் குறைகளைத் தெரியப்படுத்தி அரசின் கவனத்தை ஈர்த்து, அவற்றைக் களையும் நடவடிக்கைகளைச் செய்ய வைத்தனர். அதிகாரிகளின் எதேச்சாதிகாரப் போக்கிற்கும் ஆளுவோரின் பாரபட்சமான செயல்களுக்கும் எதிராகக் காவலர்களாகப் பத்திரிகைகள் பணியாற்றின.

ஆனால், 19 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் இந்நிலை மாறி பார்ப்பனிய வெறி கொண்ட பார்ப்பனர்கள், பார்ப்பனியர்களின் எண்ணங்களை நிறைவேற்றிடவும், சீர்திருத்த இயக்கங்களின் பக்கம் பொதுமக்களின் கவனம் செல்லாமல் திசை திருப்பிடவும் பயன்படுத்தி, பழங்காலங்களைப் போல சமுதாயத்தைத் தம் ஆதிக்கத்தின் கீழ் வைத்திடும் எண்ணத்தில் இந்துக்களும் முசுலிம்களும் மோதிக்கொள்ளும்படிச் செய்து விட்டனர். சமுதாயத்தில் நிலவி வந்த சுமுகச் சூழ்நிலையைக் கெடுத்து பொதுமக்களிடையே தவறான தகவல்களைத் தந்து பொதுமக்களைக் கேடான வழியில் திசை திருப்பிவிட்டனர்.சுதந்திரத்திற்குப் பிறகு, உள்ளூர் (மாநில) மொழிகளில் நடத்தப்படும் பத்திரிகைகளில் பார்ப்பனியர்கள் முழு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தக் காலகட்டத்தில் வேறு ஜாதி, இனம், கொள்கை ஆகியவற்றைக் கொண்டோர்களும் பத்திரிகைத் துறையில் நுழைந்தார்கள். என்றாலும் அவர்கள் மிகச் சிறுபான்மையினராகவும் தங்கள் எண்ணத்தை எடுத்துச் சொல்ல இயலாதவர்களாகவும் இருந்தனர்.

பார்ப்பனியர்களே இத்துறையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதை அறிந்திருந்த கார-ணத்தால், பார்ப்பனியர்களின் நடவடிக்கைகளுக்கு மாறாகவோ எதிராகவோ எதுவும் செய்ய இயலாதவர்களாகவும் அவர்களை அனுசரித்துப் போக வேண்டிய நிலையிலும் அவர்கள் உள்ளனர். எவராவது மாறாகச் செல்லவோ, எதிர்க் கருத்து கூறவோ முயன்றால், அவர்கள் ஓரங்கட்டப்பட்டு இதழியல் துறையிலிருந்தே அப்புறப்படுத்தப்பட்டுவிடுவர். உள்ளூர் (மாநில) மொழிப் பத்திரிகைத்துறை எப்படி இருந்தபோதிலும், இங்கிலீஷ் செய்தித் தாள்கள் அவர்களின் பிடியில் சிக்காமல் சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் செயல்பட்டு வந்தன என்பதுதான் சீர்திருத்தவாதிகள், மதச் சார்பற்றவர்கள், சிறுபான்மையர் ஆகியோருக்கு இருந்த ஒரே ஆறுதல்.

இதுவும் கூட, அந்த ஏடுகள் பெரிய நகரங்களில் இருந்து வெளிவந்த காலத்தில் மட்டும்தான் நிகழ்ந்தது. மாநிலங்களின் பிற நகரங்களிலிருந்தும் வெளிவரத் தொடங்கியபோது பார்ப்பனியர்கள் பெருமளவில் ஊடுருவிவிட்டனர். இன்றைய நிலையில் இங்கிலீஷ் ஏடுகளையும் மின்னணு ஊடகங்களையும் பார்ப்பனர்களே தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். அதன் விளைவாகப் பார்ப்பனியர்கள் எல்லா ஊடகங்களிலும் பரவி அரசாங்கத்தின் உயர் அதிகாரி முதல் கீழ் நிலைப் பணியாளர் வரை மிரட்டி வருகின்றனர்; வியாபாரிகளையும் பொது மக்களையும் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை.

அய்.பி.அய்க் கைப்பற்றியது ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசின் முதன்மையான உளவு நிறுவனம் அய்.பி. ஆகும். இன்னும் சொல்லப் போனால், அரசின் கண்களும் காதுகளுமாக இருப்பவை. எனவே, ஆரம்பத்திலிருந்தே இந் நிறுவனத்தில் ஊடுருவப் பார்ப்பனியர்கள் முயன்று, நாடு விடுதலை பெற்ற 10 ஆண்டுகளுக்குள்ளேயே அய்.பி. அய்யின் முழுக் கட்டுப்பாட்டைப் பெற்று விட்டனர். அரசு நிறு-வனம் ஒன்றை வகுப்புவாத அமைப்பு ஒன்று எப்படி கபளீகரம் செய்ய முடியும் என்பதற்கும் சிறந்த எடுத்துக் காட்டு இது. இதனை அவர்கள் நிறைவேற்றிய விதம் சுவாரஸ்யமானது. அய்.பி. இல் அதிகாரிகள், பணியாளர்கள் என இரு பிரிவு உண்டு. சிலர் நிரந்தரமானவர்-கள்; சிலர் தற்காலிகமாக, அதுவும் உயர்நிலை, இடைநிலை அதிகாரிகளாக இருப்போர் மாநிலக் காவல்துறையில் இருந்து எடுக்கப்பட்டவர்கள் எனவும் இருவகை உண்டு. பார்ப்பனியர்கள் அய்.பி.இன் உயர் நிலைப் பதவிகளில் நுழைந்து நிலையான பதவிகளில் அமர்ந்து கொண்டனர். மாநிலங்களில் அய்.பி.எஸ். அதிகாரிகளாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். எண்ணங்கொண்ட இளம் அதிகாரிகளை மாநிலப் பணியில் இருந்து அய்.பி. பணிக்குச் செல்லுமாறு பார்ப்பனிய அமைப்புகள் பணித்து வந்தன.

இது குறித்து மராத்தி மொழிப் பத்திரிகையான பகுஜன் சங்கார்ஷ் எனும் ஏடு 30.4.2007 இல் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். சார்புள்ள அதிகாரிகள் அய்.பி. இல் உயர்நிலையில் உட்கார்ந்து கொண்டு, அதிகாரிகளை அடையாளம் காட்டித் தேர்ந்தெடுத்ததால், அப்படிப்பட்டவர்கள் அய்.பி. இல் 15 முதல் 20 ஆண்டுகள் வரையில் பதவியில் இருக்கவும் சில பேர் தம் பணிக்காலம் முழுமையும் நீடிக்கவுமான நிலை உள்ளது. வி.ஜி. வைத்யா எனும் மகாராட்டிர மாநிலக்காரர், தாம் ஓய்வு பெறும் வரை அய்.பி.இல் இருந்து மிக உயர்ந்த பதவியான இயக்குநர் பதவியை வகித்தார். அதே சமயத்தில் அவருடைய சகோதரர் எம்.ஜி.வைத்யா மகாராட்டிர மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்தார். அய்.பி.இல் பணிபுரியும் அய்.பி.எஸ்.காரர்களைப் பற்றிய விவரங்களைக் கூர்ந்து நோக்கினால், அவர்களில் பெரும்பாலோர் ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகள் என்பதும் அதனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பதும் அதன் எண்ணங்களை நிறைவேற்றிட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டளைப்படி அவர்கள் அய்.பி. ரா (RAW) அமைப்புகளில் சேர்ந்து பணியாற்றுகின்றனர் என்பதும், தெரிய வரும். ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாக இல்லாதவர்களும் கூட அய்.பி.இல் இருந்தாலும் அவர்கள் முக்கியமற்ற பதவிகளில் அமர்த்தப்பட்டு உள்ளனர் என்பதும் விளங்கிவிடும்.

ஆர்.எஸ்.எஸ். பணியில்

ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அய்.பி. அமைப்பு, ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டங்களை நேர்த்தியாக நிறை வேற்றி வருகிறது; ஆர்.எஸ்.எஸ். ஒரு தேசிய அமைப்பு எனும் பிரச்சாரத்தைச் செய்வதில் வெற்றி பெற்று வருகிறது. இடதுசாரிகள் ஆட்சிக்கு எதிராகக் கலகம் ஏற்படுத்துவோம் என்றும் முசுலிம்கள் மத அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள், தேசிய நலனுக்கு எதிரானவர்கள் என்றும் உண்மையை மறைத்துப் பொய்யைப் பரப்புகிறவர்கள் என்னும் வாசகப்படி அவர்களின் எண்ணத்தை ஈடேற்றி வருகிறது.

அதற்கான எடுத்துக்காட்டுகள் இதோ:

1. ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் துணை அமைப்புகளும் செயல்பட்டு வரும் விதம் குறித்து எதையும் அரசுக்குத் தெரிவிக்காமல், வெளிநாடுகளில் இருந்து அவை பெற்று வரும் ஏராளமான நிதி பற்றியோ, சமூக, கல்வி, கலாச்சார இயக்கங்களிலான அவர்கள் ஊடுருவல் பற்றியோ, அரசு, மின்னணு ஊடகங்களில் அவர்கள் செய்து வரும் மதவாத நச்சுப் பிரச்சாரம் பற்றியோ அறிக்கை அளிக்காமல் இருந்து வருதல். ஆயிரக்கணக்கான கிளை அமைப்புகளில் நாடெங்கும் நடத்தப்பட்டு வரும் ஷாகாக்களின் மூலம் இரவு பகல் பாராது பரப்பப்படும் விஷமங்கள்பற்றிகூட எதுவும் அறிவிக்கப்படுவதில்லை. இதற்கு மாறாக ஆர்.எஸ்.எஸ். ஒரு தேசியவாத இயக்கம், சமூக கலாச்சார இயக்கம் என்று கூறி அவ்வியக்கத்தை முன்னிலைப்படுத்துதல். கடந்த ஆண்டுகளில் அரசுக்கு அய்.பி. அளித்துள்ள எல்லா அறிக்கைகளையும் பார்வையிட்டாலே, இதன் மெய்த் தன்மை விளங்கிவிடும்.

2. மதச் சார்பற்ற, இடது சாரி அமைப்புகள் விசயத்திலும் முசுலிம் அமைப்புகள் பற்றியும் நேர்மாறான அணுகுமுறையை அய்.பி. கடைப்பிடிக்கிறது. இத்தகு இயக்கங்கள்பற்றி முழுதும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளோ, சில வேளைகளில் முழுவதும் பொய்ச் செய்திகளையோ அளித்து வருகிறது. இத்தகைய இயக்கங்களும் அமைப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.சைவிட அதன் துணை அமைப்புகளைவிட, நாட்டு நலனுக்குக் குறைந்த அளவே ஊறு விளைவிப்பவையாகவே உள்ளன. அய்.பி. தரும் தகவல்களையே சார்ந்து இருக்க வேண்டியிருக்கும் அரசுகள் தொடர்ந்து அவற்றை நம்பிச் செயல்பட்டு இடதுசாரி, மதச்சார்பற்ற அமைப்புகளின் நடவடிக்கைகளைத் தடுக்கும் செயலிலும் அவற்றைத் தீவிரவாத அல்லது பயங்கரவாத அமைப்புகள் எனவும் கூறி ஓரங்கட்டி வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ்.சைக் காட்டிலும் பார்ப்பனிய அமைப்பு இளைய தலைமுறையினரின் அரசியல் ஆசைகளுக்கு வடிவம் தந்திட தன்னுடைய பார்ப்பனிய சிந்த-னைக்கு இந்து முகம் தந்து, சில சமரசங்களைச் செய்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.கட்சியும் பார்ப்பனிய நலனைக் கூட கொஞ்சம் நீர்த்துப்போகச் செய்துவிட்டன. அய்.பி.இல் இருந்த பார்ப்பனியர்கள் நிலை அப்படியல்ல. சங் பரிவாரங்களின் வேலைத் திட்டம் பற்றி அவர்கள் நினைவிற் கொண்டு முழு ஈடுபாட்டுடன் நாளுக்கு நாள் வேகமுடன் பணியாற்றிட முடிந்தது; அரசு அதிகாரிகளுக்கு இவர்களிடமிருந்த பயபக்தியே இதற்குக் காரணமாக இருந்தது. படிப்படியாக ஆர்.எஸ்.எஸ்.சின் சிப்பாயாகவும் மனச்சாட்சியின் பாதுகாவலர் போன்றும் அய்.பி. ஆகிவிட்டது. அய்.பி.இல். உள்ள பார்ப்பனிய அதிகாரிகளின் உணர்வும் ஈடுபாடும் கிடைத்திருக்காவிட்டால், ஆர்.எஸ்.எஸ்.சின் வேகம் மறைந்து போய்விட்டிருக்கும்; சமூகத்தின் மீதான அதன் பிடிப்பும் தளர்ந்து விட்டிருக்கும்.

ஆர்.எஸ்.எஸ்.சும், அய்.பி.யும் எந்த அளவுக்குப் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதைக் கீழ்க் காணும் எடுத்துக்காட்டு மூலம் அறியலாம். நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தாலும், உச்சநீதி மன்றத்தாலும் விடுதலை செய்யப்பட்டுவிட்ட டில்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி, 22-.11-.2008 ஆம் நாளது தெகல்கா ஏட்டில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:

இந்த உளவு நிறுவனத்தை மிக நெருக்கத்தில் இருந்து நான் பார்த்தேன். அவர்களுடன் அமர்ந்து இருந்தபோது ஓர் அரசு அலுவலகத்தில் இருப்பதாகவோ, ஒரு ஜனநாயக நாட்டில் வசிப்பதாகவோ என்னால் ஒரு போதும் நினைக்க முடியவில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்.

அய்.பி.யோடு ராவை ஒப்பிட இயலாது. ரா அமைப்புடன் அய்.பி. அய். ஒப்பிட்டு கூறத் தயாராக இல்லை; ஏனெனில் இரண்டுக்கும் தன்மையில் வேறுபாடுகள் உள்ளன; அதற்கான காரணங்கள் பின் வருமாறு:

1. விடுதலை பெற்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு அன்றையப் பிரதமர் இந்தியா காந்தியால் ஏற்படுத்தப்பட்ட ரா அமைப்பு (RAW- ஆராய்ச்சி மற்றும் கூர்ந்தாய்வுப் பிரிவு) என்பதால், அய்.பி. போல அது பார்ப்பனிய மயமாக்கிட முயன்றும் முடியவில்லை. பார்ப்பனிய பாசம் பிடித்த அதிகாரிகள் பலர் இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து இதற்காக உழைக்க இயலாதவர்கள். எனவே அய்.பி. இல் உள்ளதைப் போன்று இதில் அவர்களால் சித்தாந்த ரீதியாக உள்ளே புகமுடியவில்லை.

2. முக்கியமாக பாகிஸ்தான், வங்காள தேசம், சீனா, சிறீலங்கா மற்றும் சில வெளி நாடுகள்பற்றி மட்டுமே ரா கவனம் செலுத்தக் கடமைப்பட்டு இருப்பதால், உள்நாட்டுப் பிரச்சினைகளில் நாட்டம் காண்பிக்க இயலாத நிலையில், அய்.பி. இல் இருப்பதைப் போல இங்கேயும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை.

3. பல்லாண்டுக் காலமாக இந்த இரு அமைப்புகளுக்கிடையே ஏற்பட்டு வளர்ந்துள்ள தொழில் போட்டி உச்சத்தை அடைந்து சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திட முயலும் மனப்பான்மை இருக்கிறது.இதனால்தான், ராவில் நிறைய அளவுக்குப் பார்ப்பனிய அதிகாரிகள் இருந்தாலும் கூட, ஆர்.எஸ்.எஸ்.சும் மற்றைய அமைப்புகளும் அதனைத் தங்கள் சொந்த அமைப்பாகக் கருதாததால் அதன் மீது நம்பிக்கை வைத்திட முடியவில்லை; என்றாலும் சில சந்தர்ப்பங்களில் அம்மாதிரி நம்பிக்கை கொண்டதுண்டு. எனவே, அய்.பி. மட்டுமே, தனித்த வலுவுள்ள அமைப்பாக வளர்ந்துவிட்டது.

பார்ப்பனியக் கட்டுப்பாட்டில் அய்.பி.

தொடர்ந்து ஆண்ட ஆட்சிகள் எல்லாம் தங்கள் அரசியலைக் கவனித்துக் கொண்டிருந்ததால், பார்ப்பனியர்கள் அய்.பி.அய்க் கைப்பற்றியுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள மிகவும் தாமதம் ஆகி விட்டது. இந்தக் கால கட்டத்தில் அய்.பி. இறுக்கமான நடைமுறைகளைக் கொண்ட அமைப்பாக வளர்ந்து விட்டதால், அது முடிந்து போய்விட்ட விசயம் என்று அரசு சும்மா இருக்க வேண்டியதாகிவிட்டது. அய்.பி.இன் தலைமை அதிகாரியை அரசுதான் நியமிக்க உரிமை படைத்தது என்றாலும், நடைமுறையில் அதற்கான வாய்ப்பே இல்லை. பதவியிலிருந்து வெளிச் செல்லும் இயக்குநரே, தனக்குப் பின்னால் இன்னாரை நியமிக்கலாம் எனப் பரிந்துரைப்பதும் எந்தக் கேள்வியும் இல்லாமல் அரசு அதனை ஏற்றுக் கொள்வதும் நடைமுறையாகிவிட்டது. இரண்டே சந்தர்ப்பங்களைத் தவிர்த்து, மீதியெல்லாம் இதுவே நடைமுறையாகிவிட்டது.

பார்ப்பனரல்லாத ஒருவர் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டாலும் அதனால் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. வெளியிலிருந்து வரும் அப்படிப்பட்டவர்கள் எந்த வித மாறுதல்களையும் செய்து விடாதபடி தடுக்கும் அளவுக்குப் பார்ப்பனர்கள் செல்வாக்கு உள்ளது; அப்படியும் புதியவர் பிடிவாதமாக இருப்பாரேயானால் அவருக்கும் அரசுக்கும் தர்மசங்கடமான சூழ்நிலைகளை உண்டு பண்ணி, தங்கள் வழிக்குக் கொண்டு வந்து விடுவார்கள்.

இந்தியப் பிரதமர் தினமும் 15-20 நிமிடங்கள் அய்.பி. இயக்குநரிடம் செலவிட்டு, நாட்டில் ஏற்பட்ட முக்கிய சம்பவங்கள் குறித்தும் எதிர்காலத்தில் நடைபெறக்கூடியவை பற்றியும் கேட்டு அறிவார்; சமூக, அரசியல், இன, வகுப்புப் பிரச்சினைகள், சர்வதேச உளவுச் செய்திகள் போன்றவை இதில் அடங்கும். இதேபோல தினந்தோறும் அய்.பி. இயக்குநர், உள்துறை அமைச்சரிடமும் விளக்குவார். பாதுகாப்பு மற்றும் அயல் உறவுத் துறை பற்றிய செய்திகள் இருந்தால் அவை பற்றி அந்தந்த அமைச்சர்களிடையே விளக்குவார்.

இப்படி, நாள்தோறும் பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் தெரிவிப்பதை பார்ப்பனிய சக்திகள் கடந்த சில வருடங்களாகப் பெருமளவு தவிர்த்து, தங்களை பிற துறைகளிலிருந்து துண்டித்து காப்பு வலையில் வைத்துக் கொண்டுவிட்டனர். எப்படியென்றால்,

1.”மிக முக்கிய மந்தனத் தகவல்” என்றும் “ரகசிய நடவடிக்கை” என்ற பெயரிலும் பல செய்திகளை பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், அயல் உறவு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் போன்றவற்றிற்குத் தங்கள் செயல்பாடுகள்பற்றி எதுவும் தகவல் அளிப்பதில்லை.

2.பாதுகாப்பு கருதியும், நாட்டின் கவுரவம் காத்திடவும் பல செய்திகளை மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், உயர்நிலை அதிகாரிகள், காவல்துறையின் உயர் நிலை அதிகாரிகள், நீதித் துறையினர் போன்றவர்களுக்கு அளிக்காமல் இருக்கும் செயலுக்குப் பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருக்கிறாற் போன்ற தோற்றத்தை உருவாக்கி இருக்கின்றனர்.

3.மறைமுக நடவடிக்கை, ரகசிய நடவடிக்கை, ஆட்சிக்கெதிரான கலவரங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை, பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை, உள் நாட்டுப் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் பாதிப்பு என்றெல்லாம் பல பதப் பிரயோகங்களைச் செய்து தங்கள் நடவடிக்கைகளை முழுவதுமே வெளிப்படையற்ற தன்மையில் அமைத்துக் கொண்டுள்ளனர்.

இத்தகைய நிலைமைகளின் காரணமாக, மத்திய மாநில அரசுகள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் போன்றோர் அய்.பி.இன் அறிவுரைகளை அணுவளவும் பிசகாமல், அது ஏதோ பிரதமரின் அலுவலகத்தினின்று வந்ததைப் போன்று கடைப்பிடிக்கின்றனர். அத்தகைய அறிவுரைகளின் நம்பகத் தன்மை குறித்து எந்தவித சந்தேகமும் கொள்ளாமல், பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டு சரி பார்த்துக் கொள்ளாமலும் அப்படிச் செய்தால் “உச்ச ரகசியம்” கசிந்துவிடும் என்பதைப் போலக் கீழ்ப்படிகின்றார்கள். அப்படிச் செய்யாவிட்டால் தங்கள் மீது 1923 ஆம் ஆண்டின் ரகசியக் காப்புச் சட்டம் பாயும் என்று அஞ்சி அதன் நம்பகத்தன்மை பற்றிக் கவலைப்படுவதில்லை.

அய்.பி.இன் மூடி-மறைக்கும் செயல்கள் இந்த வகையில் எந்த விதமான சிக்கலும் கேள்வியும் இல்லாமல் நடைபெற்று வருகின்றன. “உச்ச ரகசிய” செய்திகள் பற்றி சுதந்தரமான செய்திப் பரிமாற்றம் ஏதும் இல்லாத நிலையில் அவை பிரதமர் அலுவலக ஒப்புதல் பெற்றவையா என்பதை ஒருவர் தெரிந்து கொள்ளும் வாய்ப்பே கிடையாது. பிரதமர் அலுவலகம், உள்துறைஅமைச்சர்அலுவலகம் ஆகியவற்றிற்கு சில விஷயங்கள் பற்றி எதுவும் தெரியாத நிலை கூட இருக்கலாம். அந்த வகையில் கடந்த கால அய்.பி.இன். நடவடிக்கைகள் மிகவும் தடிமனாகி விட்டதால், பிரதமரோ உள்துறை அமைச்சரோ அவற்றை ஊடுருவிப் பார்த்திட முடியாது என்கிற அய்யமே ஏற்பட்டுள்ளது.

அய்.பி.இன் அடாவடி

1993 வரை அய்.பி.இல் முசுலிம் ஒருவர் அதிகாரியாக இருந்ததே கிடையாது என்கிற உண்மை ஒன்றிலிருந்தே அது எந்த அளவுக்கு வகுப்பு வாதத்தன்மை வாய்ந்தது என்பதை விளங்கிக் கொள்ளலாம். (“கம்யூனிசம் கம்பாட்” ஏடு செப்டம்பர் 1993, “தி டெலிகிராப்”, “கல்கத்தா” 18.3.1994 மற்றும் “தி சன்டே” 27 மார்ச் – 2 ஏப்ரல் 1994 ஏடுகள்). 1993 க்குப் பிறகு சில முசுலிம் அதிகாரிகள் பணிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டும், காவல்துறையிலிருந்து அனுப்பப்பட்டும், பணி புரிந்தார்கள் என்றாலும் அவாகள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதும் அவர்கள் மீது எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதும் வேறொரு செயலின்மூலம் விளங்கிக் கொள்ள முடியும்.

முசுலிம் உள்துறை செயலாளருக்கு, அவர் அய்.பி.க்குத் தலைமை அதிகாரியாக இருந்த நிலையிலும் எந்தவித அறிக்கையையும் அனுப்பாமல் இருந்தார்கள் என்பதிலிருந்தே விளங்கிக் கொள்ளலாம். மத்திய உள்துறைச் செயலாளராக முதன் முதலில் நியமிக்கப்பட்ட முசுலிம் அதிகாரி, தம்மிடம் அய்.பி. எந்த அறிக்கையையும் கண்களில் காட்டுவதில்லை என்று புகாரே கூறினார்: அவர்-தான் அந்த அமைப்பின் தலைவராகக் கருதப்பட வேண்டிய உயர்நிலை அலுவலர் என்று காவல்துறை டைரக்டர் ஜெனரல் ஆக இருந்து ஓய்வு பெற்ற கே.எஸ். சுப்ரமணியம் முசுலிம் இந்தியா எனும் ஏட்டின் நவம்பர் 2008 இதழில் எழுதியிருந்தார்.

உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகம்மது சயீதை எப்படி நடத்தினார்கள் என்பது தெரியவில்லை. இவர்கள் அலட்சியப்படுத்தி இருக்க முடியாது. ஏனென்றால் அப்போதைய பிரதமரான வி.பி.சிங் அவர்கள் பார்ப்பனர்களின் ஜாதகத்தை நன்கு தெரிந்து வைத்திருந்தவர் என்பதால்.-அவர் ஆட்சிக் காலத்தில் அய்.பி. அடக்கி வாசித்திருக்கும்; ஆட்சி மாறினால்தான் விசை கொடுத்த பொம்மை போல திருப்பித் தாக்கலாம் என்ற நினைப்புடன்.அய்.பி.பொறியில் அரசுமராத்தி மாதமிருமுறை ஏடான “பகுஜன் சங்கர்ஷ்” (30-5-2008) இதழில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளது:

1990 இல் பதவி வகித்த பிரதமரும் உள்துறை அமைச்சரும் சில முக்கிய விசயங்களில் கமுக்கமாக விசாரணை செய்து, சிலரின் தொலைப் பேசிகளை ஒட்டுக் கேட்டு கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்ட காரணத்தினால், அய்.பி. பலம் பொருந்திய அமைப்பாகக் கருதிக் கொண்டு, பாகிஸ்தானின் அய்.எஸ்.அய். அமைப்பைப் போல அரசுக்கே கட்டளையிடவும் சில வேளைகளில் மிரட்டவும் தொடங்கிவிட்டது.

அய்.பி. சேகரித்துவைத்துள்ள ரகசியத் தகவல்களும் தொலைப்பேசிப் பேச்சுகளும் கசிந்து வெளியே செல்லக் கூடிய வாய்ப்பு உள்ளது எனக் கூறி அரசை சரிப்படுத்தி அதிகாரப் பூர்வமற்ற முறையிலும் கூட தொலைப்பேசிப் பேச்சுகளைக் கேட்கவும் கமுக்க விசாரணைகள் நடத்திடவும் (அதற்குத் தங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத நிலையிலும்) அவர்களாகவே அதிகாரத்தை எடுத்துக் கொண்டார்கள்.

தங்களைப் போன்றே கொள்கை கொண்ட அதிகாரிகள் தொலைப் பேசித் துறையில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, இதே செயலைத் தொடர்ந்து செய்து அதனை ஒரு வழக்கமாகவே ஆக்கிக் கொண்டுவிட்டனர். இதற்கான ஆணைகள் அரசிடமிருந்து பெறப்பட்டனவா என்பது தெரியவில்லை;

அதேபோல, இப்படி ஒரு செயல் நடைபெறுகிறது என்பதாவது அரசுக்குத் தெரியுமா என்பதும் தெரியவில்லை. ஆனால் அந்தப் பழக்கம் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அய்.பி.க்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆயுதம் இருபுறமும் கூர்மையுள்ளது என்பதும் அரசுக்கு எதிராகவே அது பயன்படுத்தப்படக்கூடும் என்பதையும் அரசு விளங்கிக் கொள்ளவில்லை.

தொலைப் பேசித் துறையில் முக்கிய பதவியில் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவரை நியமித்து விட்டால், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவராலும், அதிகாரம் உடையவராக இருந்தாலும், அவரது தொலைப் பேசிப் பேச்சுகளை ஒட்டுக் கேட்டு அய்.பி. மிரட்டும் அளவுக்கும் போகக்கூடிய மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும். அந்த வகையில் அரசு வைத்த பொறியில் அதுவே மாட்டிக் கொண்டது.

வேறொரு அமைப்பின் மூலம் அரசுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்கான வழி இல்லாத காரணத்தால் அய்.பி. சொல்வதையெல்லாம் முழு உண்மை என்றே எடுத்துக் கொள்ளவும் அதனைச் சரிபார்க்கவும் கூட வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. ஒருவகையில் இதனை, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த அமைப்பாக அரசு கருதுவதால் அது சர்வசக்தி உள்ளதாகஆகி, அரசின் ஏனைய முக்கிய அங்கங்களையும் பயன்படுத்தி பார்ப்பனியர்களின் செயல்களை நாட்டில் ஒருங்கிணைக்க ஏதுவாயிற்று. சுருங்கச் சொன்னால், பாகிஸ்தானின் அய்.எஸ்.அய். அமைப்பைப் போன்று தன் எஜமானனையே விழுங்கும் ஆயிரம் தலை நாகம் அளவுக்கு அய்.பி. நாட்டில் வளர்ந்து விட்டது.

ஊடகங்களின் பெரும்பான்மை மற்றும் அய்.பி. உளவுத்துறை ஆகிய இரண்டு வலுவான ஆயுதங்களைக் கொண்டு, மிகக் குறைந்த காலத்திற்குள்ளாகவே, ஆர்.எஸ்.எஸ். தன் கூரிய நகங்களை நாட்டின் குறுக்கும் நெடுக்குமாகப் பரப்பிப் பற்றிடச் செய்துவிட்டது. இன்றைய நிலையில் 30 ஆயிரம் நகரங்களில் 44ஆயிரம் (ஷாகா) கிளைகளைக் கொண்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. 70 முதல் 80 லட்சம் வரை இருக்கலாம்.

‘அவுட்லுக்’ ஏட்டில் (22-.11.-2008) ஒன்பது, பதினொன்று அல்ல; நவம்பர் செப்டம்பர் அல்ல எனும் தலைப்பிலான தம் கட்டுரையில் பிரபல எழுத்தாளர் அருந்ததிராய், ஆர்.எஸ்.எஸ். 45 ஆயிரம் கிளைச் சங்கங்கள் மற்றும் 70 லட்சம் உறுப்பினர்களின் மூலமாக வெறுப்புக் கொள்கையை இந்தியா முழுவதும் பரப்புகிறது என்று எழுதியுள்ளார்.

முழுக்கவும் தீங்கான நோக்கங்கள் கொண்ட ஆர்.எஸ்.-எஸ்.சுக்குக் கீழ்க்காணும் துணைஅமைப்புகள் இருக்கின்றன:

1. பஜ்ரங்தள் – போராடும் பிரிவு

2. இந்து ஜாக்ரான் மஞ்ச் – போராடும் பிரிவு

3. பாரதிய ஜனதா கட்சி – அரசியல் பிரிவு

4. ஏ.பி.வி.பி.- மாணவர் பிரிவு

5. வித்யா பாரதி – கல்விப் பிரிவு (13ஆயிரம் பள்ளிகள், 70 ஆயிரம் ஆசிரியர்கள், 170 லட்சம் மாணவர்கள்).

6. அகில பாரதிய கிரகக் பஞ்சாயத் – நுகர்வோர் அமைப்பு

7. வனவாசி கல்யான் ஆசிரமம் – பழங்குடியினர் நலம்

8. அகில பாரதிய சாகித்ய பரிஷத் – இலக்கியம்.

9. பிரக்யா பாரதி – சிந்தனை மய்யம் (கொள்கை உருவாக்கம்).

10 தீன்தயாள் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்

11. பாரதிய இதிகாச சங்கலன் யோஜனாலயா – வரலாற்று ஆய்வு

12 சான்ஸ்கிரிட் பாரதி – மொழி

13. சேவா பாரதி – குடிசைப் பகுதி-யினர் நலம்

14. இந்து சேவா பிரதிஸ்தான்

15. சுவாமி விவேகானந்தா மெடிகல் மிஷன் -உடல் நலம்

16. தேசிய மருத்துவர் அமைப்பு

17. பாரதிய குஷ்ட நிவாரண சங்கம் – குட்ட நோயாளிகள் பராமரிப்பு

18. சாகர் பாரதி – கூட்டுறவு இயக்கம்

19. பாரத் பிரகாசன் – செய்தி ஏடுகள், பிரச்சார வெளியீடுகள் அச்சிட்டு வெளியிடுதல்

20. சுருசி பிரகாசன் – அச்சிடல், வெளியிடல்

21. கோகித் பிரகாசன் – அச்சிடல், வெளியிடல்

22. ஞானகங்கா பிரகாசன் – அச்சிடல், வெளியிடல்.

23. அர்ச்சனா பிரகாசன் – அச்சிடல், வெளியிடல்

24. பாரதிய விசார் சாதனா – அச்சிடல், வெளியிடல்

25. சாதனா புஸ்தக் – அச்சிடல், வெளியிடல்

26. ஆகாஷ்வாணி சாதனா – அச்சிடல், வெளியிடல்

27. சமாஜிக் சம்ரசதா மஞ்ச் – சமூகக் கூட்டமைப்பு

28. விஸ்வ இந்து பரிசத் – மதச்சார்புப் பணி

29. விவேகானந்த கேந்திரம் – தத்துவப் பிரிவு

பட்டியல் நீளும்…………..

ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் மூர்க்கத்தனமான துணை அமைப்புகளான விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள், இந்து ஜாக்ரான் மஞ்ச் ஆகியவை நாட்டை இந்து நாடு ஆக்குகிறோம் எனக்கூறி பார்ப்பனர் நாடு என ஆக்கிப் பார்ப்பனர்களைச் சமூகத்தின் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வந்து மதத்தை மட்டும் அல்லாமல் அரசையும் கட்டி ஆள எண்ணுகிறார்கள்.

இந்த எண்ணத்தை மனதில் கொண்டு, மேலே விவரித்தவாறு, சீர்திருத்த இயக்கங்களின்பால் மக்களின் ஈர்ப்பு செல்லாது தடுக்கும் நோக்கில், பல நூற்றாண்டுக் காலமாக இந்துக்கள் மீதும் தாழ்த்தப்பட்டோர் மீதும் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளை மறைத்திடும் தன்மையில், இந்து மக்களுக்கும் சிறுபான்மையர்க்கும் பிளவு உண்டாக்கும் வகையில், கமுக்கமாக (ஜாதி) இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் மோதலை உருவாக்கி வருகின்றனர்.

சிறுவயது முதலே மூளைச் சாயம் ஏற்றப்பட்டு ஆர்.எஸ்.எஸ். ‘ஷாகா’க்களால் பயிற்சி அளிக்கப்பட்ட பார்ப்பனிய தொண்டர்கள் இருபால் இந்து இளைஞர்களைஅணுகி அவர்களிடம் தங்களின் நச்சுக் கருத்துகளைப் பரப்பி இந்திய வரலாற்றைத் திரித்துக் கூறி, குறிப்பாக முசுலிம்கள், கிறித்துவர்கள் ஆகிய சிறுபான்மை யரைப் பற்றித் தவறாகத் தகவல்கள் தருகின்றனர். வகுப்பு மோதலை உருவாக்க எந்தச் சர்ந்தர்ப்பத்தையும் நழுவவிடாத அவர்களுக்கு கூட்டம் நிறைந்த திருவிழா, மத நிகழ்ச்சிகள் போன்றவை பெரும் வாய்ப்பை நல்குகின்றன.

தொண்டர்களைத் தவிர தொழில் செய்பவர்கள், கற்றறிந்த வரலாற்றாளர்கள், எழுத்தாளர்கள், நாடகாசிரியர்கள், இதழாளர்கள், அரசு அலுவலர்கள் உள்பட ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஆதரவாளர்களாக இருப்பவர்கள் என அனைவரும் வகுப்பு மோதல் போக்கினை ஊதி வளர்த்து, பார்ப்பனியர்களின் பெருமையைப் போற்றிப் புகழ்ந்து அவரவர் ஈடுபட்டுள்ள துறைகளில் கடமையைச் செய்கின்றனர். தாங்கள் பங்கு கொள்ளும் எந்தவொரு விருந்து, விழாக்கள், பயணங்கள் போன்ற அனைத்திலும் முரண்பாடான தங்கள் கொள்கைகளைத் திணித்து முசுலிம்களுக்கு எதிர்ப்பான சூழலை உருவாக்கிடத் தவறுவதே கிடையாது.நச்சுக் கிருமிகளை இடைவிடாமல் பார்ப்பனிய அமைப்புகள் பரவவிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சமூக நிலை மிகவும் இறுக்கமாகி, சிறிய பொறி கூடப் பற்றிக் கொள்ளும் பெரு நெருப்பாகி வகுப்புவாத விபத்துகளை உற்பத்தி செய்துவிடும். அப்படித் தொடரும் கலவரங்களில் இந்துக்களும் தாழ்த்தப்பட்டோரும் பெரும் துன்பங்களை அனுபவித்து, அவர்தம் குடும்பங்களிலும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து, இருபால் இளைஞர்களும் வழக்கு, காவல் நிலையம், வழக்குமன்றம் என்று அலைந்து, தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்ளும் நிலை. இதற்கு நேர் மாறாகப் பார்ப்பனிய வன்முறையாளர் கள் இதனைத் தூண்டி விட்டுவிட்டு, கலவரம் தொடங்கும்போது காணாமல் போய் மறைந்து கொண்டு விடுவார்கள்; அகப்பட்டுக் கொண்ட முசுலிம்களும் இந்துக்களும் மாட்டிக் கொண்டு பல ஆண்டுகளுக்கு போலீஸ்,கோர்ட் என்று அலையும் நிலை.

இப்படிப்பட்ட வகையில் இந்துக்களும் முசுலிம்களும் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் நிலையை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பனிய அமைப்புகள் ஏற்படுத்துகின்றன. 1893 இல் நடைபெற்ற வகுப்பு மோதல் பற்றி விரிவாக இந்நூலில் எழுதிடத்தேவையில்லை. ஆனாலும், சுருக்கமாகச் சொன்னால் அந்தக் கலவரத்தின் மூலம், பார்ப்பனியச் சக்திகள் பொது மக்களிடம் சமூக, மதப் பிடிப்பை வலுப்படுத்திக் கொண்டு பலவித ஆதாயங்களை அடையும் நிலை ஏற்பட்டுவிட்டது.

1818 இல் பிரிட்டிஷார் புனேயின் பார்ப்பன பேஷ்வாக்களின் ஆட்சிப் பகுதியைத் தம் பகுதியுடன் இணைத்துக் கொண்டனர். சத்ரபதி சிவாஜியின் வம்சத்தினரைத் தள்ளிவிட்டுப் பார்ப்பனிய பேஷ்வாக்கள் உண்மையான ஆட்சித் தலைமையில் இருந்த நிலை திரும்பவும் வரவேண்டும் என்கிற ஆசையில இருந்தனர். மக்களாட்சிக் காலத்திலும் அதிகாரத்தைப் பிடிக்க ஆசைப்பட்டு, அதற்கான அரசியல் வலிமை அவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ அந்த நிலையை அடைவதற்கு ஆசைப்படுவதைக் கீழ்க் காணும் செய்தியால் அறியலாம். சுமிதா குப்தா எனும் பத்திரிகையாளர் எழுதியுள்ள சிறு விவரக் குறிப்பு இதனை விளக்கும்.

அவுட் லுக் (30-3-2009) இதழில் அந்த அம்மையார் எழுதுகிறார்:

என்னுடைய பார்ப்பன சகா ஒருவர் வி.என். காட்கிலிடம் அரசியல் அரங்கில் பார்ப்பனர்களின் பிடி தளர்ந்திருப்பதைப் பற்றிக் கூறினாராம். வெளிநாட்டில் படித்துப் பாரிஸ்டர் பட்டம் பெற்று மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்த காட்கில் சிரித்துக் கொண்டே, மகாராட்டிராவில், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே பார்ப்பனர்கள் (பேஷ்வாக்கள்) மராத்தியர்களை ஆட்சியில் அமர அனுமதித்து அவர்களே உண்மையில் ஆட்சி செய்ததன் மூலம் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டனர்” என்று கூறினாராம்.

மிகவும் முற்போக்கானவர் எனக் கருதப்படும் பார்ப்பனரின் கருத்தோட்டமே இப்படி என்றால், வன்முறையாளரான பார்ப்பனர்கள் எப்படி இருப்பார்கள் என்பதைக் கண்டு கொள்ளலாம்.

கடந்த 115 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த ஜாதிச் சண்டைகள், வகுப்புக் கலவரங்கள் ஆகியவற்றைக் காணும் போது (பட்டியல் கீழே தரப் பட்டுள்ளது) 1893 இல் திட்டமிட்டுச் செய்யப்பட்ட வகுப்புக் கலவரம் முதல், தற்போதைய மும்பை, சி.எஸ்.ட்டி, காமா, ரங்கபவன் சந்து பயங்கரச் செயல் (நவம்பர் 2008) வரை ரகசிய, மெல்லிய இழை ஒன்று எல்லாவற்றிலும் இணைந்திருப்பதை அறிந்து கொள்ள முடியும்; அந்த மெல்லிய இழை மகாராட்டிரப் பார்ப்பனச் சக்தி தவிர வேறில்லை.

1. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மகாராட்டிரத்தில் மகாத்மா ஜோதிராவ் புலே தொடங்கிய சமூக சீர்திருத்த இயக்கத்திடம் பொது மக்கள் ஈர்க்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் 1893 இல் மராத்தியப் பார்ப்பனர்கள் திட்டமிட்டுத் தூண்டிய இந்து முசுலிம் கலவரம்.

2. சமூகத்தின் முசுலிம்களுக்கு எதிராக வெறுப்புக் கிருமிகளைப் பாய்ச்சும் பார்ப்பனிய அமைப்புகளான இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்றவை மகாராட்டிரத்தில் தொடங்கப்பட்டன.

3. இந்து மகா சபாவின் ஸ்தாபகர் வி.டி.சவர்க்கார் ஒரு மராத்திப் பார்ப்பனர். அதன் தலைமையகம் மகராட்டிரத்தில் உள்ள புனே.

4. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தோற்றுவித்து அதன் முதல் தலைவராக இருந்த டாக்டர் ஹெக்டேவர் ஒரு மராத்திப் பார்ப்பனர். அதன் தலைமையிடமும் மகாராட்டிராவில் உள்ள நாக்பூர். (அப்போதைய மத்திய மாகாணம்). டாக்டர் ஹெக்டேவரின் பின் வந்த இரண்டு தலைவர்களான கோல்வால்கர் (குருஜி) மற்றும் பாலாசாகேப் தேவரஸ் ஆகியோரும் மராத்திப் பார்ப்பனர்கள். தற்போதைய தலைவர் மோகன் பகவத் மகாராட்டிரத்துக்காரர் தான். சர்சங்சாலக் எனப்படும் தலைமைப் பொறுப்பில் ராஜேந்திரசிங்ஜி மற்றும் கே. சுதர்சன் ஆகிய இருவரைத் தவிர அனைவரும் மராத்திப் பார்ப்பனர்களே! அண்மையில் தி இந்து ஏட்டில் வெளிவந்த செய்தியின்படி ஆர்.எஸ்.எஸ்.சின் முக்கிய பொறுப்பாளர்களில் 57 விழுக்காட்டினர் மகாராட்டிரத்தைச் சேர்ந்த பார்ப்பனர்களே.

5. மகாத்மா காந்தியைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டப்பட்டதும் மகாராட்டிரத்தில்தான்; ஏறத்தாழ சதிகாரர்கள் அனைவரும், முக்கிய கொலைக் குற்றவாளியான நாதுராம் கோட்சே உள்பட, மகாராட்டினப் பார்ப்பனர்களே!

6. சாவுக்குப் பிறகும் கூட மகாத்மா காந்தியை விடவில்லை. கொலை செய்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் பொன்விழாவைக் கொண்டாடுவது போல, நான் நாதுராம் கோட்சே பேசுகிறேன் எனும் தலைப்பில் நாடகம் நடத்தி, கொலை செய்தவனை நாயகனாக்கி, அமைதியின் காவலரான காந்தியைக் கொன்றதற்கு, பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயைக் கொடுக்கச் சொன்னதுதான் காரணம் எனக் கூறி, கொலைகாரனைப் பெரிய தேசபக்தன் போலக் காட்டினர்.

இந்த நாடகம் நடந்த கொட்டகையில் முதல் வரிசையில் பார்ப்பனர்களே உட்கார்ந்து கொண்டு கதாநாயகன் (வேறு யார் கோட்சேதான்) சொல்லும் வசனங்களுக்கெல்லாம் பலத்த கைதட்டல் கொடுத்துக் கொண்டு இருந்ததால் பின் வரிசையில் இருந்தவர்களும் அதைப் பின்பற்றினர்; இந்தியச் சமூகத்தில் கூட ஒரு விழுக்காடு கூட இல்லாத பார்ப்பனர்களை மீதி 99 விழுக்காடுப் பேர் பின்பற்றும் அவலத்தைப் போல!

இந்த நாடகத்திற்கு மகாராட்டிரத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லை, இங்கொன்றும் அங்கொன்றுமாக வைக்கப்பட்ட பதாகைகளைத் தவிர! சில மதச்சார்பற்ற, சீர்திருத்த இயக்கங்கள் அவற்றை வைத்தன. பாபு, உங்களைக் கொன்றவர்கள் இன்னமும் உயிருடன் இருப்பதைக் கண்டு நாங்கள் வெட்கப்படுகிறோம் என்ற வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டன. என்றாலும் காந்தியின் தீவிர அனுதாபியான குஜராத்தைச் சேர்ந்த சுனிபாய் வைத்யா சிறு நூல் ஒன்றை சூரஜ் சேம் துல் என்ற தலைப்பில் எழுதினார்; நாடகத்தை சகட்டு மேனிக்குக் கண்டனம் செய்திருந்தார். அவர் எழுதியவாறு, 1934 முதல் காந்தியின் உயிரைப் பறிக்க ஆறுமுறை பார்ப்பனர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நான்கு முயற்சிகள் நடந்தபோது, நாட்டுப் பிரிவினை என்ற பேச்சே கிடையாது. பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் தருவது என்கிற பிரச்சினையே எழவில்லை. இத்தகைய முயற்சிகளில் நான்கு மகாராட்டிரத்தில் நடந்தன. அவற்றில் மூன்று முயற்சிகளில் நாதுராம் கோட்சே சம்பந்தப்பட்டுள்ளார். இரண்டு சம்பவங்களில் மகாராட்டிரத்தின் பிற்போக்குத் தனமான இயக்கங்கள் ஈடுபட்டன.

7. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நடந்து கடைசியில் பாபர் மசூதியை இடிப்பதிலும் 2002 குஜராத் கலவரத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கும் வகுப்புக் கலவரங்களைத் திட்டமிட்டுத் தூண்டிவிட்டுக் கொண்டு இருப்பவர்கள் மராட்டியப் பார்ப்பனர்கள்.

8. முக்கியமான 48 வகுப்பு மோதல்களில் 35 மகாராட்டிராவில் நடந்துள்ளன. சாதாரண இந்துக்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ள மாதிரி தெரிந்தாலும், தீவிர விசாரணை செய்தால், இதில் பார்ப்பனர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் எனும் உண்மை வெளிவரும்.

9. அரசமைப்புச் சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட மக்களாட்சி அரசை இறக்கி விட்டு இந்து ராஷ்ட்ரம் எனும் பெயரில் பார்ப்பன ராஷ்டிரம் அமைத்திட நடைபெற்ற சதித்திட்டங்கள் மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது கூட, மகாராட்டிரத்தில் திட்டமிடப்பட்ட சதிதான்; சதியில் ஈடுபட்ட முக்கிய ஆளான லெப். கர்னல் சிறீகாந்த் புரோகித் மகாராட்டிரப் பார்ப்பனர்தான்.

10. நாட்டில் நடைபெற்ற பல பயங்கரச் செயல்களுக்கு ஊற்றுக் கண்ணாகவும் சதிகளின் பிறப்பிடமாகவும் இருக்கும் அபிநவ்பாரத் எனும் பயங்கரவாத இயக்கம் மகாராட்டிரத்தில் தோன்றியதுதான். அதன் தலைவராக பச்சைப் பார்ப்பனியவாதி ஹிமானி சவர்க்கார் என்பவர் வி.டி.சவர்க்காரின் சகோதரரின் மருமகள். இவரும் மகாராட்டிராக்காரரே.

11. 2008 ஆம் ஆண்டு ஜூலையில் நடந்த அகமதாபாத் குண்டு வெடிப்பு, சூரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட வெடி குண்டுகளை வைத்தது போன்றவற்றிற்கும் மகாராட்டிரா மாநிலத் தொடர்பு உண்டு. குண்டுகள் வெடிப்பதற்குச் சில நிமிடங்கள் முன்பு தொலைக் காட்சிகளுக்கு அனுப்பப்பட்ட இ-மெயில் செய்திகள் புதிய மும்பையிலிருந்து அனுப்பப்பட்டன. இதற்குப் பயன்படுத்தப்பட்ட வண்டிகள் நவி மும்பையிலிருந்து திருடப்பட்டு தலசாரி வழியாகச் சென்றன. இந்த நகரம் மகாராட்டிரத்தின் தானே மாவட்டத்தில் உள்ளது. தணிக்கைச் சாவடியில், உள்ள கண்காணிப்புக் காமிராவில் ‘தில்லு முல்லு’ செய்து விட்டு, மராத்தி செய்தித் தாள்களில் மூடி வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் எடுத்துக் செல்லப்பட்டிருக்கின்றன. ஆனாலும் கூட மகாராட்டிரப் பார்ப்பனியர்கள் இதனை மறைத்து விசாரணை செய்திட அய்.பி. உதவி செய்து முற்றிலும் எதிர்மறையான திருப்பத்தை உண்டாக்கியிருக்கிறது.

12. டில்லியில் பட்லா ஹவுஸ் பகுதியில் நடந்த என்கவுண்டரில் தொடர்புடைய செல்பேசி சிம் கார்டுகள் மகாராட்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவை. அவுரங்காபாதில் உள்ள சிலருடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கு இந்த சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் கூட மிகவும் மேம்போக்கான விசாரணை நடத்தப்பட்டு சதிகாரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஆழ்ந்த விசாரணை நடத்தப்பட்டால், பார்ப்பனியர்களுக்கு இருக்கும் தொடர்பு நிச்சயம் வெளிவரும்.

13. உத்தரப்பிரதேசம் கான்பூரில் 2008 ஆகஸ்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் மகாராட்டிராவுக்கு உள்ள தொடர்பு வெளிப்பட்டுள்ளது. வெடி குண்டுகளைத் தயாரித்த பஜ்ரங் தளத் தீவிர உறுப்பினர்களான ராஜிவ் மிஸ்ரா, பூபிந்தர்சிங் ஆகிய இருவர் வெடிகுண்டுகளைச் செய்து கொண்டு இருக்கும்போது இறந்துவிட்டனர். சிறுபான்மையர் பெருமளவில் வசிக்கும் பெரோசாபாத் பகுதியில் வெடி வைக்கத் திட்டமிட்டு இருந்ததாக விசாரணையின் மூலம் தெரிய வந்தது; மேலும், குண்டு வெடிப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே மும்பையில் உள்ள இரண்டு செல்பேசிகளுடன் இவர்கள் பேசி வந்துள்ளனர். அவர்கள் யார் என்பதைக் காவல்துறை இன்னும் கண்டுபிடிக்க வில்லை. இதற்கு அய்.பி. ஆள்கள் கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக இருந்திருக்கலாம்.

14. மும்பையில் 26.11.2008 இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் போது சி.எஸ்.டி. நிலையத்தில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய செல்பேசிகள் மகாராட்டிராவின் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்தவை. அவை யாருடைய பெயர்களில் இருந்தன என்பதைக் கண்டுபிடித்தால் பார்ப்பனிய அமைப்புகளை அடையாளம் காட்டிவிடும் என்பதால், இந்தச் சங்கதி அய்.பி. அயல் அப்படியே அமுக்கப் பட்டுவிட்டது; மும்பை குற்றப் புலனாய்வுப் பிரிவும் (வெளிப்படையாகத் தெரிந்த காரணங்களுக்காக) சும்மா இருந்துள்ளது.

மேலே கண்ட சம்பவங்கள் எல்லாமே, சுருக்கமாக மகாராட்டிரத்தில் உள்ள பார்ப்பனிய அமைப்புகள், நாட்டில் வகுப்பு மோதல் சம்பவங்களைச் செய்து வருகின்றன என்பதைக் காட்டக்கூடியவை.

இந்துத்வ (பார்ப்பன) ஆய்வகமே மகாராட்டிரம்தான்

2002 குஜராத் இனப்படுகொலைச் சம்பவங்களுக்குப் பிறகு, குஜராத் மாநிலத்தை இந்துத்வ (பார்ப்பனிய) ஆய்வகம் என்றே ஊடகங்கள் குறிக்கின்றன. குஜராத்தைப் பொறுத்தமட்டில் ஆய்வகம் என்பதனை விட பரிசோதனைச் சாலை என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். 1893 முதலே மகாராட்டிராதான் இந்துத்வ ஆய்வுச் சாலை ஆகும்.

பார்ப்பனர்களை தவிர்த்து விட்டு, இந்துக்களையும் முசுலிம்களையும் மோதவிட்டு பார்ப்பன மேலாதிக்கத்தையும் பிற ஜாதியரைக் கீழ் நிலையில் வைத்திருக்கும் செயலையும் எப்படித் திட்டமிட்டுச் செயல்படுத்துவது என்பது பற்றி மகாராட்டிரப் பார்ப்பனர்கள் ஆய்வுப் பொருளாக வைத்துக் கொண்டனர். இத்தகைய ஆய்வுப் பணியைச் செய்து, பிற மாநிலங்களில் அதனைப் பரிசோதனை செய்து பார்த்ததன் விளைவுதான் – பாபர் மசூதி இடித்ததும் குஜராத் இனப்படுகொலையும்! இந்தச் சம்பவங்களில் எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். பார்ப்பனர்களைத் தவிர.

1960_களில் சிவசேனையில் திட்டமிட்டு நுழைக்கப்பட்ட பார்ப்பனரான மனோகர் ஜோஷி, பின்னாள்களில் மகாராட்டிராவின் முதலமைச்சராக ஆனார். மகாராட்டிரத்தை முதல் இந்து மாநிலமாக ஆக்கிக் காட்டுகிறேன் என்று சவால் விட்டுக் கூறியவர். இது தொடர்பாக பம்பாய் உயர்நீதி மன்றத்தில் தேர்தல் வழக்கு கூடப் பதிவாகி மனோகர் ஜோஷியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளிக்கப் பட்டது. அரசமைப்புச் சட்டத்தில் உறுதியளித்துள்ள மதச்சார்பின்மைக்கு விரோதமாக, வாக்குகள் சேகரிப்பதற்காக இந்து ராஷ்ட்ரம் அமைப்பேன் எனக் கூறியது தவறு எனக் கூறியது உயர்நீதிமன்றம். ஆனால் உச்சநீதிமன்றமோ 1996 இல் உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்துத் தீர்ப்பளித்தது. இந்து மாநிலம் அமைப்பேன் என்று பேசியது மத அடிப்படையில் வாக்கு கோரியதாக ஆகாது என நாங்கள் கருதுகிறோம் எனக் கூறியது.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம் 1996 இல் இந்துத்வா பற்றி வழங்கிய சான்றிதழ் அரசியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தாங்கள் செய்து வரும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பித்துக் கொள்ள சங்பரிவாரங்கள் இதனை மேற்கோள் காட்டி வருகின்றன. 1996 ஆம் ஆண்டைய இந்துத்வா பற்றிய இந்தத் தீர்ப்பை சட்டப்படி சமாதியாக்க அரசியலில் ஒன்றுபட்ட கருத்து உருவாக்கிட இதுவே சரியான தருணம் ஆகும் என்று ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டில் (டில்லி) 24/2/2009 இல் சட்ட விமர்சகர் மனோஜ் மித்ரா எழுதியுள்ளார்.மித்ராவின் அறிவுரையை, அரசியல் கட்சிகள் எந்த அளவுக்குத் தீவிரமாகக் கருதுகின்றன என்பதை எதிர்காலம்தான் கூறவேண்டும்.

மறைக்கப் பட்ட உண்மை என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும். அன்றைய நாள் உண்மயான பயங்கரவாதிகளும் பயங்கரவாதமும் இணைத்து நசுக்கப்படும். அதற்காகவே முஷ்ரபின் இப்புத்தகம் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டியதும் நீதியை நிலைபெற செய்யவேண்டியதற்குமான தேவையாகும்.

அதன் ஆரம்பமாக, இப்புத்தகத்தின் சில முக்கியப் பகுதிகளைத் திராவிடர் கழகச் சகோதரர் சு. அறிவுக்கரசு மொழிபெயர்த்துத் தந்துள்ளார். நீதிக்காகப் போராடும் அவரது இப்பணி போற்றுதலுக்குரியது! அவரது தமிழாக்கத்தை, சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்காக நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்கிறோம்.

உண்மை நீண்டநாள் உறங்காது; இறுதியில் சத்தியமே வெல்லும்; நீதி நிலைபெறும்.

நாட்டைக் கூறுபோடும் பார்ப்பனீய பயங்கரவாதத்தை இந்திய மண்ணிலிருந்து அடியோடுத் துடைத்தெறியும் அந்த நாளை விரைவில் எதிர்பார்ப்போம்.

இந்திய மக்களின் ஒற்றுமை ஓங்குக!

நான் வலியுறுத்த விரும்புவதெல்லாம் – மகாராட்டிர பார்ப்பனியர்கள் எல்லா வகுப்பு மோதல்களிலும் கலவரங்களிலும் பின்னணியில் இருந்து தூண்டிவிட்டு அம்மாநிலத்தை இந்துத்வாவின் ஆய்வகமாக ஆக்கிவிட்டனர் என்பதுதான்.எளிதில் வசப்படுகிற வகுப்புவாதச் சூழ்நிலை நிலவினாலும் கூட, குஜராத் போல மகாராட்டிரா மாறவில்லை என்றால், அதற்கு முழுகாரணமும் அம்மாநிலத்தில் தோன்றியுள்ள சமூகச் சீர்திருத்த இயக்கங்களையே சாரும். மாநிலத்தில் இருந்த அறிஞர்களும் ஞானிகளும் வளர்த்த உணர்வு குறைந்து போய் இருந்தாலும் மகாராட்டிராவின் காவல்துறை (பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும்) வகுப்பு மோதல்கள் பற்றி மிகவும் விழிப்புடன் பணியாற்றுவதும் காரணம்.

பார்ப்பனியர்களைக் கண்டிக்க அரசியல் தலைவர்களின் அச்சம்

பிறமாநிலங்களில், பார்ப்பனர்களை எதிர் கொண்டு விமர்சித்துத் தாக்குதல் தொடுக்கும் தலைவர்களைப் போன்று மகாராட்டிரத்தில் அரசியல் தலைவர் ஒருவர் கூடக் கிடையாது என்பதும் ஒரு முரண்தான். பார்ப்பனர்களால் வீழ்த்தப்பட்ட அரசியல் தலைவர்களின் எலும்புக் கூடுகளை அடுக்கி வைத்துக் கொண்டு, எதிர்ப்பவர்களது நிலை இதுதான் எனஅச்சுறுத்தும் ஊடகங்களின் துணையும் பார்ப்பனர்களுக்கு இருப்பதால் மகாராட்டிர அரசியல் தலைவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்த பெரிய தலைவர்களாக இருந்தாலும் பார்ப்பனர்களை எதிர்க்க அஞ்சுகின்றனர்.

தங்கள் எதிர்கால அரசியலுக்கு ஊடகங்களின் இருட்டடிப்பு பாதகமாக அமைந்துவிடும் எனும் அச்சத்தின் காரணமாக, இரண்டாம், மூன்றாம் நிலை அரசியல் தலைவர்களும் பார்ப்பனர்களை எதிர்க்கப் பயப்படுகின்றனர். இதன் விளைவு என்னவென்றால், பார்ப்பனர்களின் கொடிய வன்செயல்கள் கட்டுப்படுத்தப்படாமல் மாநிலத்தில் அதிகமாகி வருகின்றன.

தமிழில்: சு. அறிவுக்கரசு

நன்றி : தமிழ் ஓவியா

-0-

தொடர்புடைய நமது பதிவுகள்:

மிருகங்களால் கொல்லப்பட்ட மனிதர்கள்

மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில் …

மும்பைத் தாக்குதல் வெளிப்படுத்தும் சந்தேகங்கள்

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்-1

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்-2

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்-3

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்-4

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்-5

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்-6


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.