
சராசரியாக ஒரு மனிதன் இவ்வுலகில் வாழும் காலம் சுமார் 60 வருடங்கள் என நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். இவ்வுலகிலும் மறு உலகிலும் நிரந்தரமாக வாழ வேண்டும் என்ற அவா ஒவ்வொரு முஸ்லிமின் அடிமனதிலும் இருக்கும். மறு உலகில் நிரந்தரமாக வாழ்வதற்குப் பல வழிகள் உள்ளன. அது சாத்தியமும் கூட. ஆனால் இவ்வுலகில் நிரந்தரமாக வாழ முடியுமா? முடியும்.
ஆம், இஸ்லாம் முடியும் என கூறுகின்றது. மட்டுமல்ல, அது எவ்வாறு என அதற்கான வழிகளையும் பட்டியலிடுகின்றது. ஒருவன் மரணித்து விட்டால் பின்னர் இவ்வுலகோடு அவனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை – அவன் விட்டுச் சென்ற மூன்றைத் தவிர:
1. பயனுள்ள கல்வி
2. நிலையான தர்மம்
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் பிள்ளைகள்.
ஒருவன் செய்யும் இச்செயல்கள் இவ்வுலகம் அழியும் நாள்வரை அவன் இவ்வுலகில் மரணித்த பின்னரும் வாழ்வதற்குப் போதுமானவை. அத்தகைய சதக்கத்துல் ஜாரியாவைச் செய்து அறுபடாத நன்மைகளை அள்ளிக் கொள்ள ஒவ்வொரு முஸ்லிமும் முன்வரவேண்டும்.
இதோ அத்தகைய சதக்கத்துல் ஜாரியாவை எதிர்பார்த்து ஒரு சகோதரி.
தஞ்சை மாவட்டத்திலுள்ள பேராவூரணியை அடுத்த முடச்சிக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்தச் சகோதரியின் பெயர் ஸாஜிதா பேகம். சிறு வயதிலேயே தந்தையை இழந்தத் தனது மகளை வீடுகளில் ஏறி இறங்கி துணிகளை விற்று மேல்நிலை இரண்டாம் ஆண்டு வரை படிக்க வைத்திருக்கின்றார் இவரின் தாயார். குடும்பம் வறுமையில் வாடியபோதும் தனது படிப்பில் எவ்வித வெறுமையைக் காண்பிக்காமல் நன்றாகப் படித்து மேல்நிலை இரண்டாம் ஆண்டில் 1200க்கு 1080 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் சகோதரி ஸாஜிதா.
பேராவூரணி அரசு பள்ளியிலேயே பயின்று வந்த இந்தச் சகோதரி, 6ஆம் வகுப்பிலிருந்து வகுப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது. கணிணிப் பொறியாளராக வேண்டும் என்ற கனவு கொண்ட இச்சகோதரிக்கு உரிய உதவியைச் செய்ய, வீடுகளில் சென்று துணி விற்றுப் பிழைக்கும் இவரின் தாயார் சாராம்மாளால் முடியக்கூடிய காரியமல்ல. பணவசதியிருந்தும் படிக்காமல் போவது விதி. ஆனால், படிக்கக்கூடிய எண்ணமும் அறிவும் இருந்தும் வசதியின்மையால் படிக்க முடியாமல் போவதை விதி எனப் புறந்தள்ள முடியாது. இதற்கானப் பொறுப்பைச் சமுதாயம்தான் ஏற்க வேண்டும்.
6ஆம் வகுப்பிலிருந்தே முதல் மாணவியாகத் திகழ்ந்த இச்சகோதரி சமுதாயத்தால் அப்பொழுதே அடையாளம் காணப்பட்டு உரிய உதவிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். வீட்டை நிர்வகிக்க வேண்டிய ஆணின் துணையின்றி, தனியாளாக ஒரு தாய் கஷ்டப்பட்டுத் தனது மகளை மேல்நிலை வரை கொண்டு வந்திருப்பதே மெச்சத்தக்க, போற்றத்தக்க விஷயமாகும். இனிமேலும் அத்தாய் தனது மகளின் எதிர்காலத்திற்காகத் தனியாகக் கடுஞ்சுமை சுமக்கலாகாது. அதற்கான அனைத்து உத்தரவாதங்களையும் ஏற்க வேண்டியது சமுதாயத்தின் கடமையாகும்.
எனவே சமுதாய சிந்தனை கொண்ட உயர்ந்த உள்ளங்களே, உங்களின் கடமையைச் செய்ய ஓடோடி வாருங்கள். தனியொருவனின் நலனிலேயே சமுதாயத்தின் வளர்ச்சி அடங்கியுள்ளதை மறந்துவிட வேண்டாம்.
இஸ்லாம் இவ்வுலகில் நிரந்தரமாக வாழக் காண்பித்துத் தரும் வழியில் செல்லத் தக்கதொரு தருணம் இது. வசதியற்ற, நன்றாகப்படிக்கக் கூடியவர்களின் உயர்கல்விக்காக உதவுதல் மூலம் பயனுள்ள கல்வி இவ்வுலகில் உங்கள் மூலம் பரவ வழி செய்கின்றீர்கள். அழியாத கல்விக்கான உதவியின் மூலம் நிலையான தர்மத்தைச் செய்கின்றீர்கள்.
ஒரே உதவியில் இஸ்லாம் காண்பித்த மூன்று வழிகளில் இரண்டை அடைந்து கொள்ளத் தக்க இவ்வரிய வாய்ப்பைத் தவற விடாமல் உடனடியாக இச்சகோதரிக்கு நமது உதவிகளைச் சேர்த்து வைப்போம்.
நன்மை செய்வோம்; நன்மை கொள்வோம்!
சகோதரியின் முகவரி:
எம். ஸாஜிதா பேகம்,
தாயார் பெயர்: சாராம்மாள்,
98/495, முஸ்லிம் தெரு,
பள்ளிவாசல் அருகில்,
முடச்சிக்காடு,
பேராவூரணி – 614804.
தஞ்சை மாவட்டம்.