மனிதநேயத்தின் மறுபெயர் ‘பசியில்லா தமிழகம்’ முகம்மது அலி

ராத்திரி 2 மணி இருக்கும், 30 வயசு மதிக்கத்தக்க பொண்ணை சாக்கு மூட்டையில கட்டி யாரோ தூக்கி எறிஞ்சுட்டுப் போயிட்டாங்க.

“மனநலம் பாதிச்ச ஒருத்தர ஒருமுறை நானும் என் மகனும் குளிப்பாட்ட ஆரம்பிச்சோம். குளிச்சுப் பல வருசம் ஆனதால அவர் மேல கடுமையான துர்நாற்றம். உட்காரவைக்கும்போது அப்படியே மலம்வேற கழிச்சுட்டாரு. என் மகன் முகத்தைச் சுளிச்சுட்டு ஓடிப் போயிட்டான். அவனைக் கூப்பிட்டு, ‘அப்படில்லாம் போகக்கூடாது’னு பொறுமையாச் சொன்னேன்.

கொஞ்ச நேரத்துல அவனே அவரத் தேய்ச்சுக் குளிப்பாட்ட ஆரம்பிச்சுட்டான். அதுக்கப்புறம் அவன் எப்போதும் யாரைப் பார்த்தும் முகம் சுளிச்சதில்லை. எங்ககூட வர்ற நேரத்துல எல்லோரையும் அவன்தான் குளிப்பாட்டுறான்… ” – தன் 10 வயது மகனுக்கு, மானுடநேயத்தின் அவசியத்தை உணர்த்திய மகத்தான தருணத்தை மகிழ்வோடு நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், முகம்மது அலி ஜின்னா.

பசியில்லா தமிழகம்தென்காசியைச் சேர்ந்த முகம்மது அலி ஜின்னா, தன் நண்பர் முஸ்தஃபாவுடன் இணைந்து “பசியில்லா தென்காசி” என்னும் அமைப்பை உருவாக்கி, சாலைகளில் திரியும் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வருகிறார். கிழிசலான அழுக்கு உடையுடனும், பலநாள்கள் வெட்டாத தலைமுடியுடனும், யாரும் அருகில் நெருங்கவே தயங்கும் மனிதர்களுக்குத் தலைமுடி வெட்டி, குளிப்பாட்டி புத்தாடைகள் அணிவித்து, போர்த்திக் கொள்ள போர்வை கொடுத்து அன்பாகப் பராமரித்தும் வருகிறார். இவர் ஆரம்பித்த `பசியில்லா தென்காசி’, தமிழகமெங்கும் பரவி, `பசியில்லா காரைக்குடி’, `பசியில்லா வட மதுரை’, `பசியில்லா தேனி’ எனப் பல பரிமாணங்களை எட்டியுள்ளது. தற்போது அனைவரையும் ஒருங்கிணைக்கும் விதமாக `பசியில்லா தமிழகம்’ எனத் தன் அமைப்பின் பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.

எங்கிருந்து தொடங்கியது இந்தப் பயணம்… எத்தருணத்தில் உதித்தது இப்படியொரு மாந்தநேயச் சிந்தனை?

ராமகிருஷ்ணன் என்னும் மனிதருக்கு முடிவெட்டி முடித்த கையோடு நம்மிடம் பேசத் தொடங்கினார் முகம்மது அலி ஜின்னா.

முடி வெட்டும் ஜின்னா
முடி வெட்டும் ஜின்னா

“குப்பைத் தொட்டியில கெடக்குறத எடுத்துத் தின்னுட்டு, ரோட்டுல தன்நிலை மறந்து திரியிற பலபேரைப் பார்த்திருக்கேன். ஒவ்வொரு முறையும் அந்தமாதிரி மனுசங்களக் கடக்கும்போது மனசுல ஏதோவொண்ணு நெருடும். அப்படி ஆதரவற்றவங்களுக்கு நம்மால முடிஞ்ச உணவைக் கொடுக்கலாம்னு ஆரம்பிச்சதுதான் `பசியில்லா தென்காசி’ அமைப்பு.

முதல்ல, வெள்ளிக்கிழமை மட்டும் சாப்பாடு கொடுத்துக்கிட்டிருந்தோம். கொஞ்ச நாள்ல தினமும் மூணு வேலையும் கொடுக்க ஆரம்பிச்சோம். அப்போ ஒரு விஷயம் புரிஞ்சுச்சு. பிச்சை எடுக்குறவங்க, தங்களுக்குத் தேவையான சாப்பாட்டை எப்படியாவது சாப்பிட்டுடுறாங்க. ஆனா, மனநலம் பாதிக்கப்பட்டவங்க தங்களோடப் பசியைக்கூடப் புரிஞ்சுக்க முடியாம வாழ்றாங்கன்னு புரிஞ்சுச்சு. அவங்கள கொஞ்சம் கூடுதல் அக்கறையோட கவனிக்க ஆரம்பிச்சோம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கும்போது ஏதாவது காயத்தோட இருப்பாங்க. இல்லைன்னா ஏதாவது நோயோட இருப்பாங்க. சாப்பாடு குடுக்குறதோட மட்டும் இல்லாம மருத்துவ உதவிகளும் செய்யலாம்னு முடிவு பண்ணினோம்.

இதை வாசித்தீர்களா? :   மாணவர்கள் 'அதிக மதிப்பெண்கள்' பெற ஓர் இணையதளம்!
குளிக்க வைக்கும் ஜின்னா
குளிக்க வைக்கும் ஜின்னா

அவங்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனா டாக்டர்கள் யாரும் பக்கத்துலயே வரல. ஆட்டோகாரவுங்க ஆட்டோவுல ஏத்த மறுத்திட்டாங்க. அவங்க தோற்றமும், துர்நாற்றமும்தான் அதற்குக் காரணம். முதல்ல அதைச் சரிசெய்யணும்னு முடிவெடுத்தோம்.

அவங்களுக்கு முடிவெட்ட, தென்காசியச் சுத்தி இருக்குற எல்லா சலூன்லயும் பேசிப் பார்த்தோம்… யாருமே முன்வரல. நாம ஏன் மத்தவங்கள கெஞ்சணும்… நானே முடிவெட்ட ஆரம்பிச்சேன். அப்படியே நகம் வெட்டி, குளிப்பாட்டி புதுத் துணி போட்டுவிட்டு தேவையான எல்லாத்தையும் செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சோம். அதுக்கப்புறம் மருத்துவமனைகள்ல சிகிச்சை கொடுக்கிறதுல பிரச்னை வரலே. புண்ணுக்கு நாங்களே மருந்து, டெட்டால் போட்டுவிடுவோம். அப்படியே அவங்கள தொடர்ந்து பராமரிச்சுட்டும் வருவோம்.

புதிய உடையுடன்அவங்களுக்கு சாப்பாடு கொடுக்குறது மட்டும் முக்கியமல்ல… அவங்க ஆரோக்கியமா வாழ்றதும் முக்கியம். எங்க சுற்றுவட்டாரத்துல கிட்டத்தட்ட எண்பது சதவிகிதம் பேரைச் சரிபண்ணிட்டோம். மனநலம் பாதிக்கப்பட்ட பலர் ஒரே இடத்தில் தங்காம நாடோடிகளாக இருக்காங்க. எல்லா இடங்களுக்கும் போய் எங்களால பராமரிக்க முடியலைங்கிற வருத்தம் இருக்கு. முதல்ல நானும் என் நண்பர் முஸ்தபாவும்தான் இதைச் செஞ்சோம். அடுத்த தலைமுறைக்கு இதைக் கொண்டு போகணும்னுதான் என் மகனையும் சேர்த்துகிட்டோம். ஆரம்பத்துல தயங்கினவன், இப்ப ரொம்ப ஆர்வமா இருக்கான்.

நாங்க கொடுக்குற உணவு எதையும் கடைகள்ல இருந்து வாங்குறது இல்ல, வீட்டுலயே சமைச்சுதான் எடுத்துட்டுப் போய் கொடுப்போம். என் அம்மா ரஹ்மத் பேகமும், மனைவி ஜமீனா பேகமும்தான் சமைச்சு, பார்சல் பண்ணித் தருவாங்க. எங்களை விட அவங்கதான் அதிகமா உழைக்கிறாங்க. அவங்க ரெண்டு பேரோட உதவி இல்லைன்னா என்னால இந்தச் சேவையைச் செஞ்சிருக்க முடியாது.

எங்களைப் பார்த்து கிட்டத்தட்ட பத்து ஊர்ல இந்தமாதிரி உதவி பண்ணிட்டு இருக்காங்க. சந்தோசம்தான்… ஆனா, அது பத்தாது. இது தமிழ்நாடு முழுக்கப் பரவணும். எல்லா மாவட்டத்துலயும், எல்லா ஊர்லயும் இதுமாதிரி சேவைகள் செய்ய பலர் முன்வரணும்.

எந்த இடத்துல தங்கியிருக்காங்களோ, அதே இடத்துல வச்சுத்தான் அவங்களைப் பராமரிக்கிறோம். அங்கே பாதுகாப்புப் பிரச்னைகள் வருது. பாதுகாப்பான இடத்துல தங்க வைக்கணும். அதற்கு யாராவது உதவி செஞ்சா நல்லது” எனும் முகம்மது அலி ஜின்னா, மனதைப் பாதித்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார்.

வாட்ச் அணிவிக்கும் ஜின்னா“போன மாசம் பதினைஞ்சாம் தேதி ராத்திரி 2 மணி இருக்கும், 30 வயசு மதிக்கத்தக்கப் பொண்ணை சாக்கு மூட்டையில கட்டி யாரோ தூக்கி எறிஞ்சுட்டுப் போயிட்டாங்க. விஷயத்தைக் கேள்விப்பட்டு நாங்க போய் பார்த்தோம். கூனிக் குருகிப் போய் இருந்தாங்க. உடனே பக்கத்துல இருக்குற அரசு ஆஸ்பத்திரியில சேர்த்து பராமரிச்சோம். ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டு மரணத்தோட இறுதித் தருவாயில இருந்துருக்காங்க. பதினைஞ்சு நாள்தான் உயிரோட இருந்தாங்க. அவங்களுக்கு இறுதி மரியாதை செஞ்சு நல்லடக்கம் பண்ணினோம். எந்த மதமும்னு தெரியல… அதனால மூன்று மதப்படியும் சடங்கு செஞ்சோம். தயவுசெஞ்சு யாரும் இப்படி நடந்துக்காதீங்க… உங்க வீட்டுல நோய்வாய்ப்பட்டுப் பராமரிக்க முடியாத நிலைமையில இருந்தா தயவு செஞ்சு எங்ககிட்டயாவது அனுப்பி விடுங்க ” என்று வேண்டுகோள் விடுக்கிறார்..!

இதை வாசித்தீர்களா? :   ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற்சிகள்!

இரா.செந்தில் குமார் (நன்றி: விகடன்)