மறுமை வெற்றியே மகத்தான வெற்றி! (பிறை-14)

Share this:

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 14

எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு அல்லாஹ்வினால் சிறப்பாக வழங்கப்பட்ட ஈமான் – இறை நம்பிக்கை எனும் அருட்கொடைக்கு மட்டுமே கோடி கோடி நன்றி செலுத்தினாலும் காலமெல்லாம் அவனைப் புகழ்ந்தாலும் ஈடாகாது. ஏனெனில் ஈமான் என்ற இணையற்ற அருட்கொடை இல்லாவிட்டால் நாம் பெற்றுள்ள இதர எந்த வளமும் உண்மையில் அருட்கொடையில்லை எனலாம்.

இறை நம்பிக்கை இல்லாத நிலையில் செல்வம் எனும் அருட்கொடை அதிகமானால் மனிதனை அது வழிகேட்டிற்கும் தீமைகளுக்கும் இட்டுச் சென்றுவிடும் வாய்ப்புகள் உண்டு. கல்வி, அறிவு ஆகிய அருட்கொடைகள் ஆக்கத்தையும் அழிவையும் பிரித்துணராமல் கேடாக அமைந்திட வழிவகுக்கும் அபாயம் உண்டு. உடலழகு, வலிமை, திறமை, ஆற்றல்கள், அதிகாரம் போன்றவை ஈமான் எனும் இறை நம்பிக்கையில்லாத நிலையில் கிடைக்கப்பெற்றால் அவற்றைத் தவறான வழியில் மனோ இச்சையின்படி ஈடுபடுத்திட அதன் மூலம் தமக்கும் தம்மைச் சுற்றி உள்ளோருக்கும் கேடும் இழப்பும் ஏற்படுத்திட வாய்ப்புகள் அதிகம். ஈமான் (இறைநம்பிக்கை) மற்றும் இறையச்சம் என்பன நாம் பெற்றுக் கொண்ட அருட்கொடைகளுள் மிகச் சிறந்தவை.

இரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகமதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் பாவங்களில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியையும் கேட்க வேண்டும்.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும். அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில்தான், உங்க(ள் செயல்க)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை என்பது மயக்கவல்ல (அற்ப) வாழ்வேயன்றி வேறில்லை. (அல் குர்ஆன் 3 : 185).

இம்மை எனும் நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் மாயையிலும் அலங்காரங்களில் மூழ்கி உலகமே சதம் எனும் போக்கில் அவற்றைப் பெருக்கும் பேராசையில் தனது சொந்த ஆசாபாசங்களுக்கும் மனோயிச்சைகளுக்கும் தனது குடும்பத்தினர்களுக்கும் வாரிசுகளுக்கும் என்று மனிதன் அயராமல் உழைக்கின்றான். அவ்வாறு உழைத்துச் சம்பாதிக்கும், செலவிடும், சேமிக்கும் ஒவ்வொன்றிலும் மறுமை வாழ்க்கையை மறந்து, மனம் போன போக்கில் இறை வரம்புகள் மீறப்பட்டு அல்லது உதாசீனப் படுத்தப்படுமானால், மிகப்பெரும் வாழ்க்கை வசதிகளும் இன்பங்களும் பேரும் புகழும் சகல துறைகளில் வெற்றியும் பெற்றாலும் அது உண்மை வெற்றியாகாது. நிலையான மறுமை வாழ்க்கையின் வெற்றியே உண்மை வெற்றி என்பதை வலியுறுத்தும் மேற்கண்ட இறைவசனத்தை எந்நேரமும் மனத்தில் நிறுத்தி, அந்த வெற்றியைப் பெற்றிட நமது அயராத முயற்சிகள், தியாகங்கள், அர்ப்பணிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

oOo

(மீள் பதிவு)
-தொடரும், இன்ஷா அல்லாஹ் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.