தோல்வியைத் தழுவிய சியோனிச அராஜகம்!

காஸா பகுதிக்குரிய இன்றியமையாத சேவைகளை மனிதாபிமானம் சிறிதுமின்றி நிறுத்தி வைத்து அவர்களைப் பணிய வைக்கலாம் என்று நினைத்த இஸ்ரேலிய சியோனிச அராஜகத்திற்குக் கடும் தோல்வியே கிடைத்துள்ளது. காஸா பாலஸ்தீனியர்களின் இன்றியமையாத சேவைகளை நிறுத்துவதன் மூலம் ஹமாஸிற்கு எதிராகப் பொது மக்களைத் தூண்டிவிட்டு காஸா பகுதியைக் கலவரத்திற்குள்ளாக்கலாம் என இஸ்ரேல் கணித்தது.

ரஃபஹ் தவிர காஸாவுடனான வெளியுலகத் தொடர்புகள் அனைத்தும் இஸ்ரேலின் வழியாகவே இருந்து வருகிறது. ரஃபஹ் எல்லை காஸாவை எகிப்துடன் இணைக்கிறது. இந்த இடம் தவிர அனைத்து எல்லைகளும் இஸ்ரேலின் வசம் இருந்து வருகிறது. ரஃபஹ் எல்லையை எகிப்து மூடிவைத்தே வந்திருக்கிறது.

சென்ற ஆண்டின் இறுதியில் காஸாவிலிருந்து மக்கா நோக்கிப் புனித ஹஜ் பயணம் செய்வதற்காக ரஃபஹ் எல்லையை எகிப்து திறந்து விட்டிருந்தது. பாலஸ்தீனிய ஹாஜிகள் புனித ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பும் வழியில் எகிப்து இஸ்ரேலிய அரசின் நெருக்குதலின் பேரில் ஹாஜிகளை இஸ்ரேல் வழியாக காஸா திரும்பச் சொன்ன போதிலும், அவர்கள் ரஃபஹ் வழியாகவே தாயகம் திரும்பினர்.

தற்போது வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாத பொருட்கள் வரும் வழிகளை இஸ்ரேல் அடைத்துவிட்டதால், ரஃபஹ் வழியாக எகிப்தினுள் சென்று காஸாவினர் பொருட்களைக் கடந்த இரு நாட்களாக வாங்கி வந்தனர். இவர்களின் வருகையை எகிப்து கட்டுப் படுத்திய போதிலும் முற்றிலுமாக அவர்களைத் தடுக்கவில்லை. தொடர்ந்து காஸாவினர் தமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை எகிப்தினுள் சென்று வாங்கி வந்த வண்ணம் உள்ளனர்.

உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்ததாலும் தனது அராஜக நெருக்குதல் பலனளிக்காமல் கடும் தோல்வி அடைந்ததாலும் இஸ்ரேல் காஸாவின் மீதான தனது தடைகளை சிறிதளவு விலக்கிக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஹமாஸிற்கு காஸா பகுதியில் முன்பை விட இப்போது பொதுமக்கள் ஆதரவு கூடியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதை வாசித்தீர்களா? :   அமெரிக்க ஊடகங்கள் திவால்!!