யுத்தமும் சிலுவையும்

சிலுவையும் யுத்தமும்
Share this:

மெரிக்காவை உலுக்கி, உலகை வியப்பில் ஆழ்த்திய 9/11 சம்பவத்திற்குப் பிறகு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இராக்கையும் ஆப்கனையும் நோக்கிப் போர் தொடுத்தார். கிறித்தவ மதப் பற்றாளனரான அவர் அப்போது அமெரிக்கர்களுக்கு ஆற்றிய ஓர் உரையில் “இந்த சிலுவை யுத்தம், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தப் போர், நீண்ட நாள் எடுக்கும்” என்று உள்ளத்தில் உள்ளதை பட்டென்று சொல்லிவிட்டார்.

அமெரிக்கப் படைகளுக்கு நிலம் கொடுத்து, கணைகள் ஏவத் தளம் கொடுத்து, சம்பந்தம் செய்து கொள்ளாத குறையாகத் தோளில் கைபோட்டுக் கொண்டு “மூழ்காதே ஷிப்பே ஃபிரண்ட்ஷிப் தான்” என்று பாட்டுப் பாடிக் கொண்டிருந்த அரபு நாட்டு மன்னர்கள் சில நாட்களிலேயே அடுத்த கையைக் கன்னத்தில் வைத்துக் கொண்டனர்.

அது பிரச்சினை! “சிலுவைப் போர்” என்ற வாசகமே பிரச்னை. உள் நாட்டில் பொதுமக்களிடம் கிளர்ச்சியை உண்டாக்கும். அமெரிக்காவிடம் சங்காத்தம் வைத்துக் கொண்டு இராக், ஆப்கன் போருக்குத் தோள் கொடுப்பதற்கு மக்கள் சங்கடம் விளைவிப்பார்கள்.

தலையில் அடித்துக் கொண்ட புஷ்ஷின் அதிகாரிகள் அமெரிக்கக் காங்கிரஸிற்கு வாக்குத் தெரிவித்தார்கள் – “இது இஸ்லாத்திற்கு எதிரான போர் எல்லாம் கிடையாது. உலக ஞானம் குறைவாயுள்ள நம் ஐயா சற்று தட்டுக் கெட்டுச் சொல்லிவிட்டார், தீவிரவாத கெட்டப் பிள்ளைகளுக்கு எதிரான போர் மட்டுமே இது”.

அரபு மன்னர்களும், “ஆமாமாம். அதிபர் தப்பாய் சொல்லிவிட்டார். இது இஸ்லாத்திற்கு எதிரான போர் அல்ல. எனவே தோள் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம், நட்பின் இலக்கணம்” என்று தமது நாட்டில் அமெரிக்கப் படைகளுக்கு அனைத்து சௌகரியங்களும் செய்து கொடுத்தனர்.

போர் தொடங்கியது.

பின்னர் ஈராக்கில் சிறைக்கூடங்களில் நடந்தேறிய அவலங்களும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளும், குர்ஆன் அவமதிப்பு நிகழ்ச்சிகளும் – அவையெல்லாம் தனிக் கதை, தனி நாவல்.

சென்ற வருடம், ஆவணப்படம் தயாரிக்கும் அமெரிக்கர் ஒருவர் ஆப்கன் பாக்ராம் ராணுவ விமான தளத்தில் அமெரிக்க ராணுவ மதகுருமார்களின் உரையாடல் ஒன்றைத் தெரிந்தோ தெரியாமலோ பதிவு செய்து விட்டார். ஆப்கனியர்கள் பேசும் புஷ்த்து மொழியில் அச்சிட்டுள்ள பைபிளை எப்படி விநியோகம் செய்வது என்ற ஆலோசனை அளவளாவல் அது. எப்படியோ அல்-ஜஸீரா தொலைக்காட்சிக்கு அந்தப் பதிவு வந்து விட்டது. உடனே செய்தியை வெளியிட்டு விட்டார்கள். [வாசிக்க: http://english.aljazeera.net/news/asia/2009/05/200953201315854832.html]

ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் அஹ்மத் ஷா அஹ்மத்ஸை (Ahmed Shah Ahmedzai), “அமெரிக்கா இங்கு என்ன செய்ய வேண்டுமோ அதிலிருந்து முற்றிலும் வழி தவறி வேறு நோக்கத்துடன் நடந்து கொள்கிறது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டமே இதற்கு ஒத்துக் கொள்ளுமா என்று தெரியவில்லை” என்றெல்லாம் தைரியமாகப் பேசி, “அமெரிக்க வீரர்கள் முஸ்லிம்களைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயல்கின்றனர். அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்தார்.

ஆனால், “ஆப்கானியர்களை மதம் மாற்றும் திட்டமெல்லாம் ராணுவத்திற்கு இல்லை. பொறுப்பற்ற முறையில் செய்தி நிறுவனம் நடந்து கொள்கிறது” என்று அமெரிக்க கர்னல் க்ரெக் ஜுலியன் (Greg Julian) காட்டமாய் பதில் பேட்டி அளித்து முடித்து விட்டார். [வாசிக்க: முஸ்லிம்களை மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள்!]

போர் தொடர்ந்து கொண்டிருந்தது.

க்ளைன் பின்டான் (Glyn A.J. Bindon) என்பவர் தெற்கு ஆப்பிரிக்காவில் பிறந்தவர். 1950களில் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். பிரமாதமான பொறியியல் வல்லுநர். பட்டப்படிப்பு முடிந்த கையோடு நியூயார்க்கிலுள்ள ஒரு சிறு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தவர் அமெரிக்கக் கப்பல் படையின் F-8U Crusader எனும் போர் விமானத்தின் வால் பகுதிக்குச் சிறப்பான ஷாக் அப்ஸார்பர் (shock absorber) ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார். அதன்பின் படிப்படியாய் உயர்ந்தவர் Trijicon Inc. எனும் நிறுவனம் தொடங்கினார்.

இவர் செப்டம்பர் 2003ஆம் வருடம், தனது சிறு விமானத்தில் பயணம் செய்யும் போது விபத்துக்குள்ளாகி இறந்து போனார்.

இந்த நிறுவனத்தின் விசேஷ தயாரிப்புகளில் ஒன்று இரவிலும் ஊடுருவிப் பார்க்க வல்ல தொலைநோக்குக் கருவி. துப்பாக்கியின் மேல் பொருத்திக் கொண்டு எதிரிகளை துல்லியமாய்க் கண்காணிக்க உதவும். பிறகு சுடலாம். இந்நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பு நீர்வாயுவின் கதிரியக்க அடிப்படையில் அமைந்த tritium கொண்டு, ஒளி உருவாக்கி செலுத்தி துப்பாக்கியால் எதிரியை குறிபார்த்து சுடும் Trijicon’s rifle sights.

புரிந்து கொள்ளக் கஷ்டமென்றால், டிவி சினிமாவிலெல்லாம் காண்பிப்பார்களே சுடுவதற்கு முன் இலக்கின் மேல் கூர்மையான சிவப்பொளி ஒன்று பாய்ந்து நிலைகுத்துமே, அது. இதுவும் அமெரிக்க ராணுவம் கொள்முதல் செய்யும் மற்றொரு சரக்கு. சிறப்பான இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கு அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 1995-லிருந்து வாடிக்கையாளர். மாபெரும் வாடிக்கையாளர். 2009ஆம் ஆண்டு மட்டும் ஒன்றல்ல, இரண்டல்ல 66 மில்லியன் டாலருக்குச்  சரக்குகள் வாங்கியுள்ளனர்.

இந்தச் சரக்குகளில் பைபிள் வசன எண்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்று குற்றச்சாட்டு எழுந்து விஷயம் அம்பலமாகியுள்ளது. ஒரு மாதிரி தந்திரமாய் சரக்கு எண்களுக்கு இறுதியில் அவை உள்ளன. இருந்தாலும் அதைச் சாக்காக வைத்து இது அப்படியெல்லாம் இல்லை என்று அக்கம்பெனி மறுக்கவில்லை. “ஆமாம். பைபிள் வசன எண்கள்தாம் அவை. நாங்கள் அதை விளம்பரப்படுத்ததுவதில்லை. அதைப் பற்றி பெரிதாகப் பேசவும் ஒன்றும் இல்லை. அது பற்றி நாங்களாக சொல்வது இல்லை, யாராவது வந்து கேட்டால் ஆமாம் என்போம்” என்று இது குறித்து கேட்டதற்கு அந்நிறுவனம் பதில் அளித்துள்ளது.

இந்த ராணுவ தயாரிப்புகளில் ஒரு கருவியில் யோவான் 8:12 (மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்) என்ற வசனத்தின் குறியீடும், மற்றொன்றில் II கொரிந்தியர் 4:6 (இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப் பண்ணும் பொருட்டாக,எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்) என்ற வசனத்தின் குறியீடும் இடம் பெற்றுள்ளன.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இணைய தளத்தில் படங்கள் உள்ளன. அதில் இராக்கில் பயிற்சி பெறும் படையினரின் படங்கள் உண்டு. அவர்களின் ரைஃபிள் துப்பாக்கிகளின் மேல் இந்தத் தொலைநோக்குக் கருவிகள்தாம் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இதனால் என்ன குடிமுழுகி விடப்போகிறது என்று ஒரு தரப்பு கேட்கக் கூடுமல்லவா? கேட்டார்கள்.

ராணுவ மத சுதந்தர அமைப்பு (Military Religious Freedom Foundation) என்று ஒன்று அமெரிக்காவில் உள்ளது. ராணுவத்தில் மதப் பாரபட்சம் ஏற்பட்டுவிடுவதை எதிர்க்கும் நோக்கத்துடன் காவல் காக்கும் ஒரு லாபநோக்கற்ற அமைப்பு இது. இதன் தலைவர் மைக்கே வீன்ஸடைன் (Mikey Weinstein) சொன்னார்: “இதே அமெரிக்கத் துருப்புகளுக்கு இந்தக் கருவியில் பைபிள் வசனங்களுக்குப் பதிலாக குர்ஆன் வசனங்கள் இடம் பெற்றிருக்குமாயின் அது அமெரிக்க மக்களிடம் என்ன விதமான எதிர் விளைவை ஏற்படுத்தியிருக்கும் என்பதை என்னால் வெகு எளிதாய் எண்ணிப் பார்க்க முடிகிறது”

 

யோக்கியமான பேச்சு!

மேலும் கவலையுடன், “இந்த விஷயம் தாலிபன்கள் மற்றும் அமெரிக்க எதிரிப் போராளிகளுக்கு முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான சிலுவைப் போர்தான் இது என்ற வாதத்திற்கு வலு உண்டாக்கும்” என்றார்.

அப்படியாகும் பட்சத்தில் போராளிகள் நடத்தும் தாக்குதலின் உக்கிரம் மேலும் அதிகரிக்கும். அமெரிக்க வீரர்களுக்கு மேலும் அது அதிக பாதிப்பை உண்டாக்கும் என்பது ராணுவத்தில் உள்ள நடுநிலையாளர்களின் கருத்து. ஆனால் விமானப் படை மேஜர் ஜான் ரெட்ஃபீல்ட் (John Redfield), “அமெரிக்க டாலர் நோட்டில் கடவுளிடம் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம் (In God We Trust) என்ற வாசகம் உள்ளது. அதற்காகப் பணத்தை உபயோகிக்காமல் இருக்க முடியுமா என்ன? இந்தக் கருவிகள் படைக்கு உகந்ததாய் இருக்கும் பட்சத்தில் அதை உபயோகிக்கத்தான் போகிறோம்” என்றார். நாக்கில் சிக்லெட் இருந்ததா, தெனாவெட்டு இருந்ததா என்பதைப் பேட்டி எடுத்த பத்திரிகையாளர் குறிப்பிடவில்லை.

எப்படியோ விஷயம் கசிந்து கசமுசா ஆகிவிட்டதால் ராணுவத்தின் சார்பில் மின்னஞ்சல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது: இந்தப் பிரச்னை குறித்து அறிய வந்துள்ளோம். இதனை உலகம் எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்பது குறித்துக் கவலை கொண்டுள்ளோம். எங்கள் அதிகாரிகள் அந்நிறுவனத்துடன் சந்திப்பு நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர்” என்பது அதன் சாராம்சம். ஆனால் சரக்கு வாங்குவார்களா, நிறுத்தப் போகிறார்களா என்பது பற்றியெல்லாம் அந்த அறிக்கை தெரிவிக்கவில்லை. சரக்கில் தொடர்ந்து பைபிள் வசனம் தொடருமா என்பதும் தெரியவில்லை.

ஆனால் குர்ஆனில் ஒரு வசனம் உண்டு:


“திட்டமிடுவதில் அல்லாஹ்வே மிகவும் தீவிரமானவன்” என்று அவர்களிடம் (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நீங்கள் சூழ்ச்சி செய்து திட்டமிடுவதை யெல்லாம் எம் தூதர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். (அல்குர் ஆன் – 10:21)


போர்! அது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆக்கம்: -நூருத்தீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.