மிக அதிக நபர்களைச் சிறையிலடைத்து அமெரிக்கா சாதனை

Share this:

உலகிலேயே மிக அதிகமான நபர்களைச் சிறையில் அடைத்து கொடுங்கோன்மையில் முதல் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது என மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் நீதித்துறையின் புள்ளிவிவரம் வெளியிட்ட அறிக்கையைச் சுட்டியே மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம் இக்குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு இறுதிவரை 2.25 மில்லியன் நபர்களை அமெரிக்க அரசு ஏதேனும் ஒரு குற்றச் சாட்டின் அடிப்படையில் சிறையில் அடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லட்சம் அமெரிக்கர்களில் 751 நபர்கள் சிறையில் இருப்பது தெரியவந்துள்ளது. இது உலகிலேயே மிக அதிக எண்ணிக்கை ஆகும். "அரசியல் காரணங்களுக்காகக் கண்மூடித் தனமாகச் சிறையை நிரப்பும் சீனாவை விட இது மிக அதிகம்" என்று HRW-வின் அமெரிக்கப் பொறுப்பாளர் டேவிட் ஃபாதி தெரிவித்தார்.

 

ஓர் ஒப்புமைக்காக மேலும் சில தகவல்களை HRW அளித்துள்ளது. அதன்படி ஒரு லட்சம் நபர்களில் லிபியாவில் 217 பேரும், ஈரானில் 212 பேரும், பிரிட்டனில் 148 பேரும், சீனாவில் 119 பேரும், கனடாவில் 107 பேரும், பிரான்சில் 85 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இதைவிட அதிர்ச்சி தரும் செய்தி என்னவெனில் மனித உரிமைகளின் தாயகமாகவும் சமூக நீதியின் தொட்டிலாகவும் சித்தரிக்கப்படும் அமெரிக்காவில் 30க்கும் 34க்கும் இடைப்பட்ட  வயதுடைய கறுப்பின அமெரிக்கர்களில் 8 விழுக்காட்டினர் ஏதேனும் ஒரு காரணத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் இது வெள்ளையினத்தினரை விட ஆறரை மடங்கு அதிகம் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது தான்.

 

இது தவிர கணக்கில் காட்டப்படாத ஐரோப்பாவின் ரகசியச் சிறைகள், குவாண்டனாமோ, அபூகிரைப் போன்ற சிறைகளில் இருப்பவர்கள் குறித்து இந்த அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.