தீவிரவாதத்திற்கெதிரான போரில் அமெரிக்கா சட்டமீறல் – பிரிட்டிஷ் உயர் அலுவலர்

{mosimage}இலண்டன்: தீவிரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் அமெரிக்காவும் பிரிட்டனும் எதிர் எதிரான பாதைகளில் இருப்பதாக பிரிட்டனில் சட்டத்துறையின் தலைமை அலுவலர்களில் ஒருவரும், பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேய்ரின் நெருங்கிய நண்பருமான  சார்லஸ் ஃபால்கனர் ஒரு செவ்வியின் போது கூறினார்.

தீவிரவாதிகள் என முத்திரைகுத்தி உலகின் பல ரகசிய இடங்களிலும் குவாண்டனாமோ சிறைச்சாலையிலும் அநியாயமாகச் சித்திரவதைக்குள்ளாக்கும் அமெரிக்காவின் செயல்பாட்டிலிருந்து "தீவிரவாதத்திற்கெதிரான போர்" என்ற அமெரிக்காவின் முழக்கத்தில் உலகிற்கு சந்தேகம் வலுவடைந்துள்ளது. இந்த யுத்தத்தில் அமெரிக்காவின் பின்புலத்தைக் குறித்தும் உலகில் பரவலாக சந்தேகம் வலுவடைந்து வருகிறது என்று கூறினார்.

குவாண்டனாமோ சிறைச்சாலை "ஜனநாயகம்" என்ற மகத்தான கொள்கைக்கு எதிரான அறைகூவலாகும் என்றும் அமெரிக்காவை கண்டித்தார். இண்டிபெண்டண்ட் என்ற நாளிதழுக்கு வழங்கிய செவ்வியின் பொழுதே அமெரிக்காவின் தற்கால செயல்பாடுகளுக்கு எதிராக இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார். 

பிரித்தானியாவில் அயர்லாந்து குடியரசுப் படை(Irish Republican Army)யின் குண்டுவெடிப்புகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அன்று பிரித்தானிய அரசு பாடம் கற்றிருந்தது. நிரபராதிகள் அன்று அப்போதைய அரசால் கொல்லப்படவும், சித்திரவதைக்குள்ளாக்கப்படவும் செய்யப்பட்டிருந்தனர். அப்போது பிரித்தானியாவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா கடும் ஆட்சேபம் தெரிவித்தது. 1970-80 காலகட்டங்களில் பிரித்தானியாவின் செயல்பாடுகளுக்கு சமமான செயல்பாடுகளைத் தான் தற்போது அமெரிக்காவும் செய்து வருகிறது எனவும் ஃபால்கனர் சாடினார்.

எப்பொழுதும் நீதி, நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பது தான் அமெரிக்காவிற்குத் தான் வழங்கும் அறிவுரை என அவர் கூறினார். அமெரிக்காவும் பிரிட்டனும் ஜனநாயகத்தை மதிக்கின்றன என்றும் ஆனால் சில நேரங்களில் தங்களது சில தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்கா ஜனநாயகத்தை பலிகொடுப்பதாகவும் ஃபால்கனர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் இவர் அடுத்தவாரம் வாஷிங்டன் சென்று அமெரிக்க முதன்மைச் சட்ட அலுவலரான ஆல்பர்டோவைச் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

படம் நன்றி: விக்கிபீடியா

இதை வாசித்தீர்களா? :   லபனான் யுத்ததோல்வி: இஸ்ரேலிய இராணுவ கமாண்டர் இராஜினாமா!