ஒற்றுமையே முஸ்லிம்களின் தற்போதைய தேவை – மக்கா இமாம்

முஸ்லிம்கள் தங்களுக்கிடையே இருக்கும் வேறுபாட்டை மறந்து ஒன்றுபடுவது தான் காலத்தின் தேவை என்றும் அதற்காக மார்க்க அறிஞர்கள் உழைக்கவேண்டும் என்று மக்காவின் புனிதப் பள்ளியின் இமாம்களில் ஒருவரான முனைவர் ஸாலிஹ் பின் ஹுமைத் தனது வெள்ளி சிறப்புத் தொழுகையின் பேருரையின் போது வலியுறுத்தினார்.

மனித சமுதாயம் அனைத்தையும் பிறப்பின் அடிப்படையில் ஒன்றாகக் கருதும் இஸ்லாமியக் கொள்கைகளினால் தமது பலத்தை இழக்கவிரும்பாத ஆதிக்கச் சக்திகள் முஸ்லிம்கள் தங்களிடையே சண்டையிட்டு பலம் இழப்பதையே விரும்புகின்றன என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இராக்கில் நடைபெற்றுவரும் இனமோதல்களினால் இரு தரப்புகளிலும் உயிரிழப்புகள் அடைவது முஸ்லிம்களே என்று வருத்தத்துடன் சுட்டிக் காட்டிய அவர், இஸ்லாமிய அறிஞர்கள், இஸ்லாமிய நம்பிக்கையாளர்கள் அனைவரும் தம்மிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபடுவதை நோக்கமாகக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது போன்ற சண்டைகளை ஊக்குவிப்போர் ஆதிக்கசக்திகளும் அவர்களின் கைக்கூலிகளும் நயவஞ்சகர்களும் ஆவர் என்று கூறிய அவர் அவர்களின் முயற்சி வெற்றி அடையாமல் தடுப்பது முஸ்லிம்கள் ஒன்றுபடுவதில் தான் இருக்கிறது என எச்சரித்தார்.

தங்களுக்கிடையே ஆயுத சண்டையிட்டு பல அப்பாவிப் பாலஸ்தீனப் பொதுமக்களின் உயிரிழப்புக்குக் காரணமான ஹமாஸ், ஃபத்தாஹ் ஆகிய இரு அமைப்பினரும் மக்காவில் ஒன்றுகூடி பேச்சு நடத்தித் தமக்குள் சமாதானம் எட்டியதைப் பாராட்டிய அவர், இந்த இரு அமைப்பினரின் சண்டையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இஸ்ரேல் தற்போது அக்ஸா பள்ளியைத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதைச் சுட்டிக் காட்டினார்.

தற்போதை பேச்சுகள் வெற்றி அடையாமல் போயிருந்தால் இஸ்லாத்தின் எதிரிகள் மகிழ்ந்து போயிருப்பர் என்று அவர் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் ஒன்றுபடுவதைப் பற்றி இவர் இதற்கு முன்பே வலியுறுத்தி வந்துள்ளார் என்பதும் கத்தர் நாட்டின் தலைநகர் தோஹாவில் சமீபத்தில் நடைபெற்ற முஸ்லிம்களின் ஒற்றுமை குறித்த மாநாடு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கன.

இதை வாசித்தீர்களா? :   பாலஸ்தீனர்கள் படுகொலை: மத்தியகிழக்கில் அமைதிக்கு நடனமாடும் புஷ்?