துபையில் சர்வதேசத் திருக்குர்ஆன் மனனப் போட்டி

தொழில் நுட்பம் காரணமாக கடந்த இரு தினங்கள் இணையதளம் இயங்குவதில் தடங்கல் ஏற்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ் சரி செய்யப்பட்டது, தளம் வழக்கம் போல் இயங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் – சத்தியமார்க்கம்.காம்

துபையில் சர்வதேசத் திருக்குர்ஆன் மனனப் போட்டி செப்டம்பர் எட்டாம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை துபை அல் மம்சார் பூங்கா அருகில் அமையப்பெற்றுள்ள கலாச்சார மற்றும் அறிவியல் கழகத்தில் நடைபெற இருக்கிறது.

இப்போட்டிகள் 1997ஆம் வருடம் துவங்கப்பட்டு 12வது வருடமாக அமீரக துணை அதிபரும், துபை ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களது ஆதரவில் நடைபெற்று வருகிறது. இவ்வருடம் 85 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க இருப்பதாக இப்போட்டிகளுக்கான ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் இப்ராஹிம் முஹம்மது பு மெல்ஹா தெரிவித்துள்ளார். முதல் முறையாக ஸ்விட்சர்லாந்து, உஸ்பெஸ்கிஸ்தான், போஸ்ட்வானா மற்றும் ஜான்சிபார் உள்ளிட்ட நாடுகள் முதல் முறையாகப் பங்கேற்கின்றன.

கடந்த காலங்களைவிட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத் தக்கது. அல்ஜீரியாவில் இருந்து பங்கேற்கும் ஒன்பது வயது மாணவர் பதேஹ் பாதி மிகவும் இளவயது போட்டியாளர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகள் வருடந்தோறும் பங்கேற்று வருகின்றன

இப்போட்டியினையொட்டி சிறப்பு தொலைக்காட்சி சேனலும் துவங்கப்பட இருக்கிறது. போட்டிகள் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தையும் உலகெங்கும் உள்ளோர் பார்க்கும் வண்ணம் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது

இப்போட்டி நடத்தும் அமைப்பின் சார்பில் வருடந்தோறும் சிறந்த இஸ்லாமிய அறிஞர் விருது, அமீரக அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டி, சிறைக்கைதிகளுக்கான திருக்குர்ஆன் மனனப் பயிற்சி, இஸ்லாமியச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், திருக்குர்ஆன் அறிவியல் நிகழ்ச்சி உள்ளிட்ட பலவேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன

சிறந்த இஸ்லாமிய அறிஞர் விருதுக்காகத் தேர்வு செய்யப்படுவருக்கு திர்ஹம் ஒரு மில்லியன் வழங்கப்படும். திருக்குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றி பெறும் முதல் பத்துப் போட்டியாளர்களுக்கு முறையே திர்ஹம் 250000, 200000, 150000, 65000, 60000, 55000, 50000, 45000, 40000, 35000 வழங்கப்படும்

இப்போட்டிகளுக்கான நடுவர்கள் சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், நைஜீரியா, சிரியா மற்றும் போஸ்னியா ஹெர்சகோவினா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகை புரிந்துள்ளனர். 

நன்றி: தட்ஸ்தமிழ்

தகவல்: சகோ. முதுவை ஹிதாயத்

இதை வாசித்தீர்களா? :   அமெரிக்கப் பொருளாதாரத்தை அதிரவைக்கும் இராக் போர் செலவினங்கள்