இஸ்லாம் குறித்து போப் புகழ்மாலை

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாகத் துருக்கி தலைநகர் அன்காரா சென்றுள்ள போப் 16-ஆம் பெனடிக்ட் இஸ்லாமும் கிறிஸ்தவமும் சகோதர மார்க்கங்கள் என்றும், இரண்டும் ஒரே இறைவனையே வணங்கச் சொல்வதால் பொதுவான பல அம்சங்களைக் கொண்டிருப்பதாகவும், ஆக்கபூர்வமான பல நல்ல உரையாடல்கள் மூலம் இரு மார்க்கங்களும் ஒன்றையொன்று நன்கு புரிந்து கொள்ள இயலும் என்றும் தாம் அதற்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறினார்.

போப் பெனடிக்ட், இரு மாதங்களுக்கு முன் பைசாந்திய மன்னனின் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றிய களங்கம் கற்பிக்கும் கூற்றை மொழிந்து உலக முஸ்லிம்களின் கண்டனத்திற்கு ஆளானார்.

இதைத் தொடர்ந்து உலகளாவிய அளவில் இஸ்லாமிய அறிஞர்கள் பலர் போப்பை பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்தது நினைவிருக்கலாம். எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியதால் முறையான மன்னிப்பு எதுவும் கோராமல் இருந்தாலும் தான் இது குறித்து வருத்தம் தெரிவிப்பதாகத் தனது செய்தித் தொடர்பாளர் மூலம் தெரிவித்திருந்தார். மேலும் முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளை அழைத்து விளக்கமும் அளித்தார்.

அதற்குப் பின் இப்போது தான் வெளிப்படையாக தனது இஸ்லாம் குறித்த முந்தைய கூற்றுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தைப் பொதுவில் வெளியிட்டுள்ளார். எனவே இஸ்லாமிய உலகுடன் விரிசல் கண்டு வரும் வாட்டிகன் உறவை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்நடவடிக்கையை அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அன்காரா வந்திறங்கிய போப்பை துருக்கி பிரதமர் தய்யிப் எர்டோகன் விமான நிலையத்தில் முன்னின்று வரவேற்றதுடன் அவருடன் விமான நிலையத்திலேயே சிறிது நேரம் பேச்சுகள் நடத்தியபின் நேட்டோ மாநாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார். அப்போது இஸ்லாம் அமைதியை வலியுறுத்தும் மார்க்கம் என்று போப் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக எர்டோகன் துருக்கி ஆட்சிமன்றத்தில் நிகழ்த்திய உரையில், “இறைவன் அனுப்பிய அனைத்துத் தூதர்களையும் நம்பி அவர்களை உண்மைப்படுத்தும் மார்க்கத்தைப் பின்பற்றும் நாம், இறைத்தூதர் எனும் நமது நம்பிக்கைக்கு உட்பட்ட தூதரைப் பின்பற்றும் ஒரு சமுதாயத்தின் தலைவரை எவ்வாறு வரவேற்காமல் இருக்க முடியும்? நாம் போற்றிப் பின்பற்றும் நமது இறைத்தூதர் அவர்களைப் போலவே மற்ற இறைத்தூதர்களையும் நாம் போற்றுகிறோம், அன்பு செய்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைவதற்கு போப் ஆவதற்கு முன்புவரை கடும் எதிர்ப்பு தெரிவித்த போப் பெனடிக்ட், தற்போது துருக்கி EU-வில் இணைவதற்குத் தாம் ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.

போப்புடன் பேச்சு நடத்திய துருக்கியின் மதங்கள் தொடர்பான விவகாரங்களைக் கவனித்துவரும் துறையின் தலைவரான அலி பர்டகோக்லு, “மதத்தலைவர்கள் அமைதிக்கான வழிகளை அமைத்துக் கொடுக்கவேண்டுமே அல்லாது தகராறுகளுக்கும், பிரச்சினைகளுக்கும் வழிகோலக்கூடாது” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய போப், துருக்கியையும் இஸ்லாத்தையும் புகழ்ந்து பேசினார். மேலும் இரு மதங்களுக்கிடையேயான மனம் திறந்த உரையாடல் சுமுக உறவுக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.

இதை வாசித்தீர்களா? :   கிழிந்து தொங்கும் கருத்துப் போலிச் சுதந்திரம்!

இந்தப் பயணத்தின் போது போப், இஸ்தான்புல் நகரின் உலகப்புகழ் பெற்ற நீல நிற மஸ்ஜிதுக்கும் நல்லெண்ண அடிப்படையில் செல்கிறார். அதோடு உலகின் 25 கோடி ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்களின் தலைவரான பார்த்தலாமியோவையும் சந்திக்கிறார்.