நாஜிகளைப் போன்ற போர்க்குற்றங்களை நிகழ்த்துகிறது இஸ்ரேல்: சவூதி அரேபியா

ரியாத்: இஸ்ரேல் கடந்த சில நாட்களாக காஸா பாலஸ்தீனப் பொதுமக்கள் மீது நடத்தி வரும் மிருகத்தனமான மூர்க்கத் தாக்குதல்களில் இதுவரை குழந்தைகள் உள்பட 120க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அதோடு இஸ்ரேல் காஸாவின் மீது இன அழிப்பை நடத்தப்போவதாகவும் மிரட்டி இருந்தது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை நாஜிக்களின் போர்க்குற்றங்களுடன் ஒப்பிட்டுத் தமது கடும் கண்டனத்தை சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

“கடந்த சில நாட்களில் இஸ்ரேல் காஸாப்பொதுமக்கள் மீது நாஜிகள் இரண்டாம் உலகப்போரில் செய்ததைப் போன்ற போர்க்குற்றங்களை நிகழ்த்தி வருகிறது. இது காஸாவை எரியும் பெருந்தழலாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது. அமைதியை விரும்பும் உலக நாடுகளும், மத்திய கிழக்கு அமைதிக்காக ஏற்படுத்தப்பட்ட நான்கு உறுப்பினர் குழும அமைப்பும் (Middle east peace Quartet) இந்தப் போர்க்குற்றங்களை உடனடியாகத் தடுக்க வேண்டும். அமைதியை விரும்புவதாகக் கூறிக் கொள்ளும் இஸ்ரேலின் மனிதத் தன்மையற்ற செயல்கள் அதன் மீதான நம்பிக்கையைக் குலைக்கவே செய்கின்றன.” என்ற கடும் கண்டனத்தைத் தனது அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் SPA மூலம் சவூதி அரசு தெரிவித்துள்ளது.

சவூதி அரசின் இந்தக் கண்டன அறிக்கையை வரவேற்றுள்ள ஹமாஸ், இஸ்ரேல் நவீன நாஜிக்கள் என்பதற்கு இதுவே சான்று எனக்கூறியுள்ளது.

இதை வாசித்தீர்களா? :   ஒரு குத்துச்சண்டை வீரரின் அழுகை!