அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குறித்த அருங்காட்சியகம் துபை நிர்மாணிக்கிறது!

மனித குலத்திற்கு வழிகாட்டியாக, வல்ல இறைவனின் இறுதித்தூதராக அவனால் அருளப்பெற்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அன்னார் அவர்களின் இறைச் செய்தியையும் அறிவிக்கும் முகமாக ஓர் அருங்காட்சியகத்தை நிறுவ துபையின் ஆட்சியாளரும் அமீரகத்தின் துணை அதிபருமான ஷெய்க் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் ஆணையிட்டுள்ளார்.

துபையின் கலை மற்றும் கலாச்சார மையம் இப்பணியை மேற்கொள்ள இருக்கிறது. மனித குல வரலாற்றில் வேறெவரையும் விட மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இறைச்செய்தியையும் அவர்களின் களங்கமற்ற வாழ்க்கை முறையையும் உலகிற்கு அறிவிக்கும் முகமாக இந்த அருங்காட்சியகம் அமையப்பெறும்.

 

அவர்களின் இறைச்செய்தி அக்கால அராபியர்கள் மட்டுமல்லாது இன்றும் மொழி, இனம், நாடு கடந்து பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. இறைச்செய்தி வரும் முன் அறியாமைக் காலத்தில் இருந்த நிலை, இறைச் செய்தியை அறிவிக்கும் போது அண்ணலார் அடைந்த துன்பங்கள், ஹிஜ்ரத், மதீனா வாழ்க்கை, மக்கா வெற்றி, அண்ணலார் அவர்களின் மரணம் போன்ற நிகழ்வுகளைப் படிப்படியாக ஆவணங்கள் மூலம் இவ்வருங்காட்சியகம் விளக்க இருக்கிறது.

 

இவை மட்டுமின்றி இங்கு இஸ்லாத்தின் தூண்களான ஐம்பெருங்கடமைகளையும் எளிதாக விளக்கும் வகையிலும் காட்சிப் பொருட்கள் இடம்பெறும்.

 

உலகின் பல்வேறு கலாச்சார, இன மக்கள் கூடும் பெரு நகரமான துபையில் இவ்வருங்காட்சியகம் அமைவதன் மூலம் உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து வரும் மக்களுக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் மனிதகுல உய்விற்குக் கொண்டுவந்த  செய்தி சென்றடையும் என நம்புவோம்.

இதை வாசித்தீர்களா? :   கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில்...