இணையத்தில் நச்சுச் செயலியை (Malware) உலவவிடும் அமெரிக்க உளவுத்துறை!

இணையத்தில் உலாவும் பொழுது பலவகையான பயன்தரமிக்க நல்ல தளங்கள் வழியாக இலவசப் பயன்பாட்டு செயலிகள் கிடைப்பது நம்மில் பலருக்குப் பெரும்பயனைத் தருகிறது என்பது உண்மைதான். இணையம் மூலம் தான் நமது தளமான சத்தியமார்க்கம்.காம் தளத்தைக் கூட உங்களால் படிக்க முடிகிறது. எவ்வளவு பயன் இருந்தாலும் அதனைத் தவறான வழியில் பயன்படுத்த எத்தனித்திடும் மனித மனத்தின் அலைபாய்தலைக் கட்டுப் படுத்த இயலா சிலர் இணையத்தின் மூலம் நச்சு மென்பொருளை உலாவ விடுகின்றனர்.

ஒருசிலர் கயமை எண்ணத்துடன் கடன் அட்டை, தனிப்பட்ட தகவல்கள் திருட்டு, பணமோசடி இவற்றுக்காக இந்த செயலைச் செய்து குற்றம் இழைத்தும் வருகின்றனர். வேறு சிலர் தங்களின் சுய திருப்திக்காக இச்செயலில் ஈடுபடுகின்றனர். எது எப்படி இருப்பினும் இவர்கள் அனைவரும் இணையத்தில் சமூக விரோதிகளாகத் தான் பார்க்கப்படுகின்றனர். ஆனால் தற்போது அமெரிக்க அரசின் ஓர் அங்கமான அமெரிக்க உளவுத்துறை FBI-யே மேலே குறிப்பிட்டது போன்ற நச்சுச் செயலியை இணையத்தில் உலவ விட்டு பலரின் தனிப்பட்ட தகவல்கள் சேகரித்தது வைத்துள்ளது  தெரிய வந்துள்ளது.

இந்தச் செயலியை மின்மடல் மூலமாக உலாவ விட்டு சந்தேகம் சிறிதும் வராமல் ஐ.பி முகவரி சரிபார்க்கும் செயலி (Internet Protocol Address Verifier) என்ற பெயரில் அனுப்பி வைத்துள்ளது. இச்செயலி மாயவிளக்கு (Magic Lantern) என்ற கள்ள மென்பொருளை (Trojan)  நிறுவி, பயனருக்கு எந்த ஐயமும் வராமல் அவரின் அனுமதியின்றி அவருக்குத் தெரியாமலே அவர் தட்டும் விசைப்பலகை (Keyboard)  சாவிகளை அப்படியே ஒற்றி எடுத்தாற்போல FBI-யின் தலைமை வழங்கிகளுக்கு (Servers) அனுப்பி வைக்கும் என்று இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முறையான நீதிமன்ற அனுமதி வாங்கியுள்ளது என்றும் FBI தற்போது கூறிவருகிறது. காவல்துறையினர் ஒரு முறைகேடான செயலைச் செய்தால் மட்டும் அது நியாயமாகிவிடுமா என்ன? FBI உருவாக்கிய செயலியானாலும் இது போன்ற முறையற்ற செயலிகளைக் கண்டறியும் பிரபல நிறுவனங்களின் Anti-spyware செயலிகள் இச்செயலியையும் கண்டறிந்து அழிக்கும் என அறிவித்துள்ளன. எனினும் இவற்றை முறியடிக்கவும் உரிய அனுமதி பெற அமெரிக்க நீதிமன்றத்தை அணுக இருப்பதாக FBI அறிவித்துள்ளது.

இதை வாசித்தீர்களா? :   இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சுவார்த்தை முறிவு: அப்பாஸ் அறிவிப்பு!