ஈரான் அணுஆயுதம் வைத்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் – ராபர்ட் கேட்ஸ்

ஈரான் தன்னைச் சுற்றியுள்ள அணுஆயுத நாடுகளின் மிரட்டலைச் சமாளிக்கவே அணு ஆயுதம் தயாரிக்க முனைவதாக US-ன் புதிய வெளியுறவு அமைச்சர் திரு ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார். கிழக்கில் பாகிஸ்தானும் வடக்கே ரஷ்யாவும் தெற்கே இஸ்ரேலும் அணுஆயுதங்கள் கொண்டிருக்கும் நாடுகளாக இருக்கும் போது அவற்றின் மிரட்டலைச் சமாளிக்க ஈரானும் அணுஆயுதம் தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பது இயல்பு தான் என்று அவர் கூறினார்.

திரு கேட்ஸின் இந்த அறிக்கை குறித்து இஸ்ரேல் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. US இதுவரை இஸ்ரேலின் அணுஆயுதங்கள் கையிருப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடாத நிலையில் முக்கிய அமைச்சர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது முற்றிலும் எதிர்பாராதது என்று இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேலின் துணைப்பிரதமர் ஷிமோன் பெரஸ், “இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளனவா இல்லையா என்றெல்லாம் உறுதி செய்ய மாட்டோம். இது குறித்து எங்களின் எதிரி நாடுகளின் ஊகங்களில் குழப்பமான நிலை நீடிக்கவே நாங்கள் விரும்புகிறோம். அது தான் எங்களின் பலம்” என்று கூறினார்.

இஸ்ரேலிடம் 200 பேரழிவு ஏற்படுத்தும் சக்திவாய்ந்த அணுஆயுதங்கள் இருப்பதாக வல்லுனர்கள் அனுமானிக்கிறார்கள். அவை மத்திய கிழக்குப் பிரதேசம் மட்டுமல்லாது மனித குலத்தையே முடமாக்க வல்லன.

இஸ்ரேலிடம் அணுஆயுதம் இருப்பதை அதன் அணுஆயுத உலையில் 18 ஆண்டுகள் பணிபுரிந்த மோர்டேச்சாய் வனூனு எனும் தொழில்நுட்பியர் ஒருவர் அம்பலப்படுத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதை வாசித்தீர்களா? :   தூதுஆன்லைன் இணைய தளத்தின் புதிய வடிவ துவக்க விழா!