அமெரிக்காவின் ‘ஈரானைத் தாக்கும்’ கணினி விளையாட்டிற்கு ஈரான் பதிலடி!

{mosimage}தெஹ்ரான்: ஹோர்முஸ் கடலில் உலாவி வரும் அமெரிக்க எண்ணெய்க் கப்பலை குண்டு வைத்துத் தகர்க்க ஈரானில் புதிதாக வெளியான கணினி விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது. பதிலடி (Counter Strike)  என்று பெயரிடப்பட்டிருக்கும் இவ்விளையாட்டு ஈரான் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக தெஹ்ரானிலிருந்து வெளிவரும் ஜம்ஹூரியே இஸ்லாமி என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ஏதேனும் தவறான நடவடிக்கை எடுக்க முயன்றால் அது வளைகுடாவிலிருந்து ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய் வியாபாரத்தைத் தகர்க்கும் என்ற ஈரான் இஸ்லாமிய தலைவர் ஆயத்துல்லா அலி காம்னயியின் அறிவிப்பு எவ்விதம் சாத்தியம் ஆகும் என இவ்விளையாட்டில் சித்தரிக்கப்பட்டுள்ளது.  சர்வதேச எண்ணெய் வியாபாரத்தில் ஐந்தில் இரண்டு பாகமும் ஹோர்முஸ் கடல்பகுதியினூடே கடந்து செல்கிறது. புதிய கணினி விளையாட்டில் ஹோர்முஸ் கடல் பகுதியில் நடக்கும் எண்ணெய்க் கப்பல் போக்குவரத்தை எவ்விதம் தடுக்கலாம் என்பது விரிவாக விவரிக்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிக்கை தெரிவிக்கிறது.

ஈரானின் அணுநிலையங்களை தகர்க்கும் யுஎஸ் இராணுவத்தினரை உள்ளடக்கிய இரண்டு கணினி விளையாட்டுக்களை அமெரிக்காவில் குமா ரியாலிட்டி கேம்ஸ் எனும் நிறுவனம் இதற்கு முன்பு வெளியிட்டிருந்தது. US Attack On Iran மற்றும் Assault On Iran என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்ட அவ்விரு கணினி விளையாட்டுக்களும் அமெரிக்காவில் பிரபலமாக விற்றுக் கொண்டிருக்கும் வேளையில் ஈரானில் இருந்து தற்போது இறங்கியிருக்கும் இக்கணினி விளையாட்டு இவ்விரு நாடுகளுக்கிடையிலான பிரச்சனையின் ஆழமான தாக்கத்தை தெரிவிப்பதாக அமைந்துள்ளது.

இதை வாசித்தீர்களா? :   வல்லரசுகளின் விளையாட்டில் தொலைந்து போன டாக்டர் ஆஃபியா சித்திக்கீ