முஸ்லிம் என்றாலே தீவிரவாதியா? – அதிகரிக்கும் இஸ்லாமோஃபோபியா!

ஹாரிஸ்பர்க்: அமெரிக்க அரசு நிர்வாகத்தில் இஸ்லாத்தின் மீதான பயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விமானநிலையங்களிலும் பொது இடங்களிலும் முகத்தில் தாடியுள்ளவர்கள் எவராக இருந்தாலும் அவர் முஸ்லிம் முஸ்லிமல்லார் என்றப் பாகுபாடின்றி அனைவரும் கண்காணிக்கப்படுகின்ற்னர். அமெரிக்க விமானநிலையங்களில் பல்வேறு பிரபலங்கள் முகத்தில் தாடி இருந்த ஒரே காரணத்திற்காக தீவிர பரிசோதனை மற்றும் கடுமையான கேள்வி கணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் இப்போக்குத் தற்பொழுது இஸ்லாத்திற்கு மாறிய அமெரிக்க இராணுவத்தினரையும் விட்டு வைக்கவில்லை.

இவ்வாறு அமெரிக்கா, கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இணைத்தவர்களில் ஓய்வுபெற்ற அமெரிக்க முன்னாள் இராணுவவீரரும் ஒருவர். எரிஷ் ஸ்கெர்ஃபென் என்றப் பெயர் கொண்ட அவர், அமெரிக்கப் பாதுகாப்புத்துறை செய்த இக்காரியத்தினால் தற்பொழுது தனது பணியினையும் இழந்து எதிர்காலமே சூனியமான நிலையில் தத்தளிக்கின்றார்.

அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய தீவிரவாதிகள் கண்காணிப்பு பட்டியலில் தனது பெயர் இணைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுவதற்கான விளக்கம் கோரியும் உடனடியாகத் தனது பெயரை அப்பட்டியலில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியும் அவர் அமெரிக்க உள்விவகாரம் மற்றும் பாதுகாப்புத் துறை(Department of Homeland Security) மீது தற்பொழுது வழக்கு தொடுத்துள்ளார்.

தனது மனுவில், “1994ம் ஆண்டில் இஸ்லாத்தை தழுவியது தான் தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் தனது பெயர் இணைக்கப்பட்டமைக்கான காரணம் எனத் தான் கருதுவதாக” அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “தனது மனைவிக்கும் தனக்கும் எதிராக இதுவரை எந்த ஒரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டதில்லை என்றும் எவ்வித குற்றங்களிலோ, தீவிரவாதிகளோடோ எந்த ஒரு தொடர்பும் தங்களுக்கு இல்லை” என்றும் கூறியுள்ளார்.

தமது மனுவில் இத்தம்பதிகள், “தாங்கள் சோதனைகளுக்காகவும் விசாரணைகளுக்காகவும் விமான நிலையங்களிலும் எல்லையை கடக்கும் போதும் 2006 முதல் பல முறை எவ்வித காரணங்களும் தெரிவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டோம்; வளைகுடா போரில் நாட்டுக்காகப் போரிட்ட தன் மீது எவ்வித அடிப்படையும் இன்றி அரசு காட்டும் அணுகுமுறை அவமானகரமானது” என்றும் தம்பதியினர்் முறையிட்டுள்ளனர்.

எரிஷ் ஸ்கெர்ஃபென் 13 ஆண்டுகள் அமெரிக்க இராணுவத்தில் அரசாங்க பாதுகாப்பு ஹெலிகாப்டர் பிரிவு உட்பட பணியாற்றியுள்ளார். அவர் முதல் வளைகுடா போரிலும் பங்கு பெற்றுள்ளார். பின்னர் அரசாங்க பாதுகாப்புத் துறையில் ஹெலிகாப்டர் விமானியாக பணி புரிந்தார். அவர் தமது அரசாங்க பணியிலிருந்து கண்ணியமான முறையில் விடுபட்ட பின்னர், Colgan Air Inc (கோல்கன் ஏர் இன்கோ) எனும் டெக்ஸாஸ் மாநிலத்தில் வட கிழக்கு பகுதியில் இயங்கும் ஒரு தனியார் விமான நிறுவனத்தினால் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் கோல்கன் நிறுவனத்தினர், ஸ்கெர்ஃபென் அரசாங்க தீவிரவாதிகள் பட்டியலில் கண்காணிக்கப் பட்டு வருவதால் அவர் பணி நீக்கம் செய்யப்படுவார் என்று அவரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 1 ம் தேதிக்குள் அவர் தனது பெயரை இப்பட்டியலில் இருந்து அகற்றிட வழிவகை செய்யாவிட்டால் அவர் கட்டாய பணி நீக்கம் செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளனர்.

இதை வாசித்தீர்களா? :   பிபிசியின் நிஜ முகம்

“எனது பணியின் எதிர்காலம் முழுமையும் இந்த பட்டியலில் இருந்து பெயரை நீக்கிக் கொள்ள வேண்டியதைச் சார்ந்துள்ளது. இந்தச் சந்தேகக் கறையை என் பெயருடன் இணைத்துள்ள நிலையில் ஒருகால் எனக்கு உலகில் எங்குமே பணி கிடைக்காமல் போகலாம்” என்று எரிஷ் ஸ்கெர்ஃபென் அஞ்சுகின்றார்.

அவருக்காகவும் அவர் மனைவியின் தரப்பிலும் வழக்கு தாக்கல் செய்து வாதாடும் அமெரிக்க சிவில் யூனியனின் (American Civil Liberties Union ) வழக்கறிஞர் விடோல்ட் வால்க்ஜாக், “அரசாங்கத்தின் இச்செயல் அநியாயமானது மற்றும் அநீதியானது” என்று கூறுகிறார்.

“அரசாங்கத்தின் இது போன்ற நடவடிக்கைகளால் பணி, வேலை வாய்ப்பு, மற்றும் தொழில் துறையில் எதிர்காலத்தை இழக்கும் சூழல் உள்ளதால், ஸ்கெர்ஃபெனின் பெயரில் உள்ள இக்களங்கத்தைக் களைந்திட அரசாங்கம் ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும்” என்று வால்க்ஜாக் கூறினார்.

கடந்த வாரம் பென்ஸில்வேனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், “ஸ்கெர்ஃபென் மற்றும் அவர் மனைவி ருபீனா தரீன் ஆகிய இருவருடைய பெயரும், எல்லா வித தீவிரவாதிகள் பயண கண்காணிப்பு பட்டியலில் இருந்தும் நீக்கப்பட வேண்டும்” என்று முறையிடப்பட்டுள்ளது.

“நான் ஏன் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளேன் என்பது எனக்கு தெரியவில்லை. அதிகாரபூர்வமாக என்னிடம் இதைபற்றி அவர்கள் ஏதும் கூறவுமில்லை” என்று ஸ்கெர்ஃபென் கூறினார். அமெரிக்க நீதித் துறையின் ஒரு அறிக்கையில் தேசிய பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, “தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் இத்தம்பதிகளின் பெயர் இருப்பது பற்றி உறுதி படுத்தவோ மறுக்கவோ இயலாது” என்று கூறப்பட்டுள்ளது.

நாங்கள் கண்ணியமாக அமெரிக்க அரசாங்கத்திற்காக பணிபுரிந்தோம்; நாங்கள் போரில் ஈடுபட்டும் சேவையளித்தோம்; ஆனால், அவர்கள் எங்களையே சந்தேகத்துடன் நோட்டமிடுகிறார்கள். இது தான் இன்றைய நிலையில் உண்மையிலேயே என்னை கவலைக்குள்ளாக்குகிறது” என்று ஸ்கெர்ஃபென் தனது மனவேதனையை வெளிப்படுத்தினார்.

அமெரிக்கராகிய இவர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர் ஆவார். அவருடைய மனைவி ருபீனா தரீன் தமது 17ம் வயதில் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். அவர் இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் இஸ்லாமிய குறுந்தகடுகள் வெளியிடும் ஒரு சிறிய நிறுவனத்தை நிறுவி தொழில் செய்து வருகிறார்.

மே மாதம் ஸ்கெர்ஃபெனும் அவருடைய மனைவியும் தேசிய பாதுகாப்புத்துறைக்கு சமர்பித்த கோரிக்கை மனுவில் இதிலிருந்து மீள உதவியை நாடினார்கள். அங்கிருந்து அவர்கள் பயண பாதுகாப்பு நிர்வாகத் துறையின் பயணிகள் பிரச்சனைத் தகவல் திட்ட (Transportation Security Administration’s Traveler Redress Inquiry Program) அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள பணிக்கப்பட்டனர். இந்த வாரம் அவர்களுடைய மனுவின் விபரங்கள் சம்பந்தமான தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கோரிக்கை இது வரை கண்டு கொள்ளப்படவில்லை

இதை வாசித்தீர்களா? :   மனநிலை பாதிக்கப்பட்டப் படையினர் அமெரிக்காவின் சமூகப் பிரச்சனையாகின்றனர்!

TSA (Transportation Security Administration) எனும் இந்தப் பயணிகள் பாதுகாப்பு நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர், “நாங்கள் இந்த தம்பதிகள் விஷயமாக ஒரு அர்த்தமுள்ள தீர்மானத்தை எதிர்நோக்கியுள்ளோம், ஆனால் அதற்கு ஏதும் கால வரம்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதி கோல்கான் நிறுவனத்தை, “ஸ்கெர்ஃபெனின் வேலை நீக்கத் தேதியை அக்டோபர் 1ம் தேதி வரை ஒத்தி வைக்குமறு கேட்டுக் கொண்டார். அந்த விமான நிறுவனமும் இதை ஏற்றுக் கொண்டு ஸ்கெர்ஃபென்னுக்கு அக்டோபர் 1 வரை தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து அவரது பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க அவகாசமளித்துள்ளது.

“துரதிஷ்டவசமாக இந்தப் பிரச்சனை தீவிரவாதத்தோடு சிறிதும் தொடர்பற்ற, எண்ணற்ற பலரும் சந்தித்து வரும் ஒன்றாக உள்ளது; இவர்களுக்குத் தீவிரவாதத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை; இதர குற்றங்களிலும் சம்பந்தம் இல்லை. எனினும் அவர்களின் பெயர் தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் உட்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இது கவலைக்குரியது” என்று American Civil Liberties Union ஐச் சேர்ந்த வழக்கறிஞர் வால்க்ஜாக் கூறினார்.

அவர் மேலும், “நாட்டைப் பாதுகாக்க அரசாங்கத்திடம் இது போன்ற கண்காணிப்பு பட்டியலும் கவனமும் வேண்டும், அதே நேரத்தில் இப்படி செய்யும் போது நிரபராதிகள் பாதிக்கப்படுவதைப் பற்றி அரசாங்கம் அக்கறைப் படுவதில்லை” என்றும் கூறினார்.