வளைகுடாத் தொழிலாளர்களுக்கு வழியமைக்கும் கேரளம்

லகையே உலுக்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவினால், “மத்தியக் கிழக்கு நாடுகளின் நிறுவனங்களில் மிகுந்து போனவர்களாகக் கருதப்பட்டுப் பணி நீக்கம் செய்து தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்படும் பல்லாயிரக் கணக்கிலான இந்தியத் தொழிலாளிகளுக்குக் கடனுதவி வழங்கி அவர்கள் தமது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ள வழிவகுக்கப்படும்” என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

 

இந்தியாவின் கணிப்புப்படி மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து இரண்டு இலட்சம் பேர் தற்போதய பொருளாதாரச் சரிவின் விளைவாக வருகிற ஜூன் மாத இறுதிக்குள் வேலையிழந்து திரும்புவார்கள். அவர்களுள் அதிகமானவர்கள் வளைகுடா நாடுகளில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த கேரளத் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள நிதியமைச்சர் டி. எம். தாமஸ் ஐஸக் கூறுகையில், “இவ்வகையில் நாடு திரும்பும் பணியாட்களுக்கு ஒரு பில்லியன் இந்திய ரூபாய்கள் (சுமார் 74 மில்லியன் அமீரக திர்ஹம்கள்) கடனுதவிநிதியாகக் கேரள மாநில வருட பட்ஜெட்டில் ஒதுக்கப்படும்” என்று கடந்த (27.2.2009) வெள்ளியன்று அறிவித்தார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான எவ்விதத் திட்டமும் அறிவிக்கப்படாத மத்திய பட்ஜெட்டிற்குப் பின்னர் வெளியான கேரள மாநில பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையினைக் குறித்து, வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறையின் மத்திய அமைச்சர் வயலார் ரவி, “மாநில அரசுகள் செய்யும் அளவிற்கான திட்டங்களை மத்திய அரசினால் செய்ய இயலாது” எனக் கைவிரித்து விட்டு, இயன்றவரை மத்திய அரசும் உதவும் எனக் கூறியிருக்கிறார்.

வெளிநாடு வாழ் தம் மக்களைக் குறித்த நிஜமான அக்கரையோடு கேரள அரசு நிதி ஒதுக்கி, திட்டங்களையும் அறிவித்திருக்கும் இவ்வேளையில், இலங்கையில் பாதிக்கப்படும் தமிழ் மக்களின் பிரச்சனையில் மட்டுமே கவனத்தை வைத்திருக்கும் தமிழக அரசு, உலகப் பொருளாதாரப் பின்னடைவில் சிக்கி வேலையிழந்து நாடு திரும்பவிருக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு என்னென்ன மாற்றுத் திட்டங்கள் வைத்துள்ளது என்பதை அறிவிக்க வேன்டும்.

ஏறத்தாழ இரண்டாண்டுகளுக்கு முன்னர் வளைகுடா வாழ் பெரும்பாலான இந்தியர்களின் அவல வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டி, இரு பகுதிகளாக சத்தியமார்க்கம்.காம் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டதையும் அதையடுத்து, ‘பங்கு பெறுவீர்; பரிசுகளை வெல்வீர்‘ என்ற ஊக்கத் தலைப்போடு  உலகளாவிய கட்டுரைப் போட்டி அறிவித்து அதில் வாசகர்கள் எழுதியளித்த “வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா?” என்ற தலைப்பில் இரு ஆய்வுக் கட்டுரைகளையும் இங்கு வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்தப் பணம் வேலையிழந்து நாடு திரும்பியவர்களின் தேவைக்கு ஏற்ப, சிறுதொழில்கள் அமைத்துக் கொள்ளும் விதமாக முறையாக ஒதுக்கப்பட்டு (கடனாக) வழங்கப்படும் என்று அமீரகத்திலிருந்து வெளிவரும் ‘தி நேஷனல்‘ எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதை வாசித்தீர்களா? :   அமெரிக்கக் குண்டுகளால் இராக்கில் புற்றுநோய் அதிகரிப்பு!

 இதற்கும் மேலதிகமாக, “நூறு மில்லியன் ரூபாய்கள் (7.4 மில்லியன் அமீரக திர்ஹம்கள்) வேலையில் சேர்ந்து இரண்டு வருடத்திற்கும் குறைந்த காலத்தில் கட்டாயப் பணி நீக்கம் செய்யப்படவர்களுக்காக ஒதுக்கப்படும்” என்றும் ஐசக் கூறினார்.

இந்த அறிவிப்பினை வரவேற்கும் விதத்தில், “பிரச்சினையை இனங்கண்டு முறையான தீர்வுகாணும் பாதையில் இது நல்லதொரு துவக்கம்” என்று அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் தெரிவித்தனர்.

ஆயினும், “ஒதுக்கப்படுள்ள இந்த நிதித் தொகை உண்மையில் முறையான பலன்கள் விளைவித்திட மிகவும் குறைவானது” என்று சிலர் கருத்துக் கூறியுள்ளனர்.

“இது போன்றதொரு நடவடிக்கை மாநிலத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகையால் இதை வரவேற்கிறேன். அதேநேரத்தில், இது ஒரு சிறிய தொகையாகவே நான் கருதுகிறேன்” என்று வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஆலோசனை, உதவி வழங்கிடும் அமைப்பான ‘வெளிநாடு வாழ் உறவின் முறையினர் நல அறக்கட்டளை’ (பிரவாஸி பந்து வெல்ஃபேர் டிரஸ்ட்)இன் தலைவர் கே. வி. ஷம்ஷுத்தீன் கூறினார்.

கேரளாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகி, அது தற்போது கடும் சிரமத்தில் போராடிடும் நிலைக்கு முக்கிய காரணம் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பண வரத்து குறைந்துள்ளதே ஆகும்.

இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் மொத்தப் பணத்தில் 25 சதவீதம் கேரள மாநிலத்தின் கணக்கில் வருகிறது என்று திருவனந்தபுரத்தில் உள்ள ‘சென்டர் ஃபார் டெவலப்மண்ட் ஸ்டடீஸ்’ (Centre for development studies) எனும் மேம்பாட்டு ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி 1.9 மில்லியன் மலையாளிகள் இந்தியாவுக்கு வெளியே வசிப்பதாகவும் அதில் 90 சதவீதம் மத்தியக் கிழக்கு நாடுகளில் குறிப்பாக (U A E) ஐக்கிய அரேபிய அமீரகத்திலும் சவூதி அரேபியாவிலும் வாழ்வதாகக்கூறப் படுகிறது.

“வெளிநாடு வாழ் இந்தியர்கள் பல மில்லியன்கள் ரூபாயை இந்தியாவிற்கு (அந்நியச் செலவாணியாக) வருடந்தோரும் அனுப்புகின்றனர். அதோடு ஒப்பிடும்போது  அறிவிக்கப்பட்டுள்ள நிதியுதவி மிகவும் சொற்பமானதே” என்று துபையிலுள்ள இந்திய வெளிநாட்டு காங்கிரஸின் பொதுச் செயலாளர் என். பீ. இராமச்சந்திரன் கூறினார்.

“நாட்டிற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த பணத்தில் ஏற்பட்டுள்ள குறைவால் (கேரளா) பாதிக்கப் பட்டுள்ளதோடு, முந்திரிப் பருப்பு, மிளகு, இஞ்சி, ரப்பர் மற்றும் இதர கடற்பொருட்களின் ஏற்றுமதியிலும் சரிவு ஏற்பட்டு கேரளம் பாதிக்கப் பட்டுள்ளது” என்றும் ஷம்ஸுத்தீன் கூறினார்.

‘அரேபியன் பிஸினஸ்’ எனும் பத்திரிகை இரண்டு வாரத்திற்கு முன்னர் வெளியிட்ட செய்தியில் 20,000 தொழிலாளர்கள் மார்ச் மாத இறுதியில் துபையிலிருந்து நீண்ட விடுப்பில் அல்லது வளைகுடாவின் வேறொரு நாட்டில் வேலைகள் தேடி வெளியேறிட விமான முன்பதிவு செய்துள்ளதாகச் செய்தி வெளியிட்டிருந்தது இங்குக் குறிப்பிடத் தக்கது.

இதை வாசித்தீர்களா? :   அமெரிக்கப் படையெடுப்பும் ஆயிரக்கணக்கான விதவைகளும்!

செய்தி : அரேபியன் பிஸினஸ்

தமிழில் : இபுனு ஹனீஃப்