முஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி

குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்து தொழிலாளி ஆதிமுத்து, கேரள முஸ்லிம்களின் உதவியால் திரட்டப்பட்ட ரூ.30 லட்சத்தின் மூலம், ஆயுள் தண்டனைக் கைதியாக மாறியுள்ளார். இந்த மத நல்லிணக்க சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா, பனக்காட்டைச் சேர்ந்த முனவர் அலி ஷிகாப்தங்கல் உள்ளிட்ட முஸ்லிம் நண்பர்கள், பணத்தைத் திரட்டி ஆதிமுத்துவின் குடும்பத்தினரிடம் அளித்துள்ளனர்.

தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த அர்ஜுனன் ஆதிமுத்துவும் (45), கேரளாவின் மலப்புரம் அருகே உள்ள ஹரிஞ்சாபாடி பகுதியைச் சேர்ந்த அப்துல் வாஜீதும் குவைத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றினர். இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அப்துல் வாஜீதை 2013-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி கொலை செய்ததாக அர்ஜுனன் ஆதிமுத்து கைது செய்யப்பட்டார். அவருக்கு குவைத் அரசு மரண தண்டனை விதித்தது.

குவைத் நாட்டுச் சட்டப்படி கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கினால், கொலை செய்தவர் விடுதலை செய்யப்படுவார். இதுகுறித்துத் தெரிந்ததும், அர்ஜுனன் ஆதிமுத்துவின் மனைவி மாலதி, தன் 14 வயது மகள் பூஜாவுடன் கேரளா சென்றார்.

மாலதி, தன் குடும்பம் ஏழ்மையில் இருப்பதையும், பெண் பிள்ளை இருப்பதையும் சுட்டிக்காட்டி, தன் கணவருக்கு மன்னிப்பு வழங்கி குடும்பத்தை வாழ வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கேரள நிர்வாகி காதர் மொகைதீனுக்கு தெரிய வந்தது. அவர் உயிர் இழந்த அப்துல் வாஜீத்தின் குடும்பத்திற்கு தெரியப்படுத்தவே, மன்னிப்பு வழங்க சம்மதித்தனர். அதேநேரத்தில் அப்துல் வாஜீத்தின் மரணத்தினால் அவர் குடும்பமும் வாழ்வாதாரம் இழந்துள்ளது. வாஜீத்தின் மனைவி, தன் மகள்களுடன் வாடகை வீட்டில் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டு, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரப்பட்டது.

சொந்த பந்தங்களை நாடியும், வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்தும் கூட ரூ.5 லட்சத்துக்கு மேல் அர்ஜுனன் மனைவி மாலதியால் புரட்ட முடியவில்லை. பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவர் பானக்காடு ஹைதர் அலி ஷிகாப்தங்கலின் உதவியை நாடினார். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தை சேர்ந்த முனவர் அலி ஷிகாப்தங்கல் பணம் திரட்டும் முயற்சியை முன்னெடுத்தார்.

நண்பர்கள், அறக்கட்டளைகளின் உதவியோடு 25 லட்ச ரூபாய் திரட்டப்பட்டது. மாலதி தன்னிடமிருந்த 5 லட்ச ரூபாயோடு சேர்த்து, ரூ.30 லட்சத்தை அப்துல் வாஜீத்தின் குடும்பத்துக்குக் கொடுத்தார். வாஜீத் குடும்பத்தின் சார்பில் அர்ஜுனன் ஆதிமுத்துவை மன்னிப்பதற்கான கடிதம் கொடுக்கப்பட்டது.

அக்கடிதம் இந்தியத் தூதரகத்தின் வழியாக, குவைத் நாட்டிற்குச் சென்றது. அதன் அடிப்படையில் அர்ஜுனன் ஆதிமுத்துவின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய முனவர் அலி, ”இறைவனுக்கு நன்றி. எங்களுடைய சிறு முயற்சியின் மூலம் ஒரு மனித உயிர் இறப்பில் இருந்து காக்கப்பட்டிருக்கிறது. மனிதத்தைக் குறித்து மகிழ வேண்டிய தருணம் இது.

இதை வாசித்தீர்களா? :   முஸ்லிமல்லாதவர் முஸ்லிமிற்கு வாரிசாக முடியுமா?

சொல்லப்போனால் நாங்கள் இரண்டு குடும்பங்களைக் காப்பாற்றி இருக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் ஏழ்மையானவர்கள். அவர்களின் பார்வையில் இருந்து பார்த்தால், பணம் கேட்டது தவறில்லை” என்றார்.

oOo

நன்றி : தமிழ்.திஹிண்டு

“ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்!”- (திருக்குர்ஆன்- 5:32)