தொடரும் இஸ்ரேலின் பயங்கரவாதம்!

{mosimage}ஜெரூஸலம்: கடந்த புதனன்று (8-11-2006) இஸ்ரேலிய இராணுவம் காஸா கரையிலிருக்கும் பலஸ்தீனக் குடியிருப்புகளின் மீது நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதலால் 8 குழந்தைகள் உள்பட 18 அப்பாவிப் பொதுமக்கள் இறந்த சம்பவம் குறித்து உலக நாடுகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன.

பலஸ்தீனர்களின் கறுப்பு நாள் என அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்த இந்நாளில் நடைபெற்ற பொதுமக்கள் மீதான கொலை குறித்து ஐநா, ஐரோப்பிய ஒன்றியம், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியன கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் பலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிடும் ஐநா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா போன்றவை இது குறித்து கடும் வார்த்தைகளால் கண்டித்திருப்பினும்,  இது குறித்துத் தான் "வருத்தம்" தெரிவிப்பதாகவும், பலஸ்தீனர்கள் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

மத்திய கிழக்கிற்கான ஐநா சிறப்புத் தூதுவர் அல்வாரோ டிசோட்டோ இஸ்ரேலின் பைத் ஹனூன் மீதான தாக்குதல் குறித்து தாம் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகவும் இஸ்ரேல் இதுபோன்ற செயல்களை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை 22 நாடுகள் இணைந்திருக்கும் அரபு லீக் கூட்டமைப்பு இது குறித்து அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது.  இதன் பொதுச் செயலாளர் அமர் மூஸா பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்வது அநியாயமான எதிர்பாராத செயல் என்று கூறினார்.

இஸ்ரேலின் அரபு அண்டைநாடுகள் இது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜோர்டன் மன்னர் அப்துல்லா II இது கொடூரமான கொலைச் செயல் என்று வர்ணித்தார். இஸ்ரேலின் இது போன்ற இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தத் தம்மால் இயன்றதைச் செய்வதாக உறுதியளித்தார்.

சிரியா இது அரசுத் தீவிரவாதம் என்றும் ஐநா இஸ்ரேலைத் தண்டிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டுள்ள எகிப்து, இது மனிதத்தன்மையற்ற செயல் என்றும் சர்வதேச விதிகளுக்குப் புறம்பானது என்றும் கூறியுள்ளது. இது போன்ற செயல்கள் அமைதிக்கு வழிவகுக்கா எனவும் அது கூறியுள்ளது.

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் மார்கரெட் பெக்கெட், " இது போன்ற செயல் எதற்காக நடத்தப்பட்டது எனப் புரிந்துகொள்ள இயலவில்லை, இஸ்ரேல் இதுபோல் பொதுமக்களைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்" எனக் கூறினார்.

ரஷ்யா "இச்செயல் இஸ்ரேல் தங்கள் பகுதியின் மீது ராக்கெட் ஏவப்படுவதைத் தடுப்பதற்காகத்தான் என்று சொல்வதை நம்புவதற்கில்லை" என்று கூறியுள்ளது.

இஸ்ரேலுடன் ராணுவ உடன்படிக்கை செய்து கொண்டுள்ள மற்றொரு நாடான துருக்கியும் "இஸ்ரேலின் கண்மூடித்தனமான வெறித்தாக்குதல் இப்பகுதியின் அமைதி உருவாக எவ்வகையிலும் உதவப்போவதில்லை" என்று தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், "இஸ்ரேலுக்குத் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமையை அப்பாவிகளின் உயிரிழப்புகளின் மேல் நிலைநாட்டக் கூடாது" என்று கூறியுள்ளது.

இதை வாசித்தீர்களா? :   ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்பில் அவசரப்படக்கூடாது: தென்ஆப்பிரிக்கா!

அனைத்துத் தரப்பினரும் பலஸ்தீனியர்களைப் பொறுமை காக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். இஸ்ரேலிய அரசு இது குறித்து "வருத்தம்" தெரிவித்தாலும், இது போன்ற நடவடிக்கைகளைத் தொடரப் போவதாக அச்சுறுத்தியுள்ளது. இதனால் ஹமாஸின் அரசியல் தலைவர் காலித் மிஷால் தமது இயக்கம் இதற்குப் பழிதீர்க்கும் என்று கூறினார்.

கடந்த நான்கு மாதங்களில் இஸ்ரேலின் தாக்குதலால் இதுவரை இறந்துள்ள 300 பேர்களில் 66 பேர் குழந்தைகள் என்றும், 189 பேர் அப்பாவிப் பொதுமக்கள் என்றும் மனித உரிமை இயக்கம் ஒன்று தெரிவித்துள்ளது.

மனித உரிமை ஆர்வலர் திரு ஜான் டகார்டு, "இது போன்ற மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை ஒரு அரசே முன்னின்று நடத்துவதும், அது குறித்து சர்வதேச சமூகம் கண்டு கொள்ளாமல் இருப்பதும் மிகவும் ஆபத்தானது. அமைதிக்கான கண்காணிப்புக் குழு இது குறித்து உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. இது குறித்து ஐநாவால் ஒரு தீர்மானமும் எடுக்க இயலவில்லை, எனவே மத்தியகிழக்கில் அமைதி நிலவ வேண்டுமென்றால் அதிரடி நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்படவேண்டும்" எனக் கூறினார்

இதற்கிடையே ஐநா பாதுகாப்புக் குழுவில் இஸ்ரேலுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வழக்கம்போல அமெரிக்கா தனது வீட்டோ உரிமை மூலம் முறியடித்தது.