அணிசேரா நாடுகள் கூட்டமைப்பு அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கடும் விமர்சனம்

ஹவானா: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மிகக் கொடூரமான அக்கிரமச் செயல்களுக்கு எதிராகக் கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டு அணிசேரா நாடுகளின் 14 ஆம் உச்சி மாநாடு ஹவானாவில் நேற்று நிறைவடைந்தது.

மாநாட்டின் அறிக்கை லெபனானின் மீது இஸ்ரேல் நடத்திய அநியாயமான கொடூர தாக்குதல்களைக் கடும் வார்த்தைகளால் கண்டித்திருக்கிறது. 92 பக்கங்கள் கொண்ட அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டுப் பிரகடனத்தில் அமெரிக்காவிற்கு எதிரான கடும் விமர்சனங்களும் அடங்கியுள்ளன. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அணு ஆயுத பிரச்சனையில் சமாதான முறையில் தீர்வு காண்பது அவசியமாகும். உலக முழுமைக்குமான ஜனநாயகக் காவலனாகத் தன்னைத் தானே ஒரு நாடோ ஒரு பகுதியோ அறிவித்துக் கொண்டு செயல்படக் கூடாது எனவும் அவ்வறிக்கை அமெரிக்காவை கண்டிக்கிறது.

சர்வதேச உறவுகளில் அமெரிக்கா எடுக்கும் ஒருதலைப்பட்சமான நிலைபாடுகளை மாநாடு கடுமையாக எதிர்த்தது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தகர்ந்து வருவதாகவும் உலகம் துருவப்படுத்துதலை (Polarisation) நோக்கி விரைவாக நகர்ந்து வருவதாகவும் வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ ஷாவேஸ் கூறினார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை அமெரிக்கா அதன் அரசியல் இலாபங்களை பெறுவதற்கான இடமாக மாற்ற முயற்சிப்பதாக ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் குற்றம் சாட்டினார். அமெரிக்க அணுஆயுத மிரட்டலின் கீழ் உலக மக்கள் எதற்காக பயந்து வாழ வேண்டும்? என மேலும் அவர் கேள்வி எழுப்பினார்.

அமெரிக்காவுடன் ஒத்துழைக்காத நாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் தலையிட மனித உரிமை பிரச்சனைகளை அமெரிக்கா தவறாக உபயோகிக்கிறது என வடகொரியாவின் பாராளுமன்ற தலைவர் கிம் யோங் நாம் கூறினார். அமெரிக்காவின் மிரட்டல் காரணமாகவே தாங்கள் அணு ஆயுதம் நிர்மாணிக்க நிர்பந்தத்திற்குள்ளானதாக அவர் மேலும் கூறினார். வட கொரியாவின் அணு ஆயுத பரிசோதனைகளை இம்மாநாடு ஒருமனதாக ஆதரித்தது. சூடானின் தர்ஃபூருக்கு ஐநா பாதுகாப்புப் படையை அனுப்பவதற்கு வடகொரியா எதிர்ப்பும் தெரிவித்தது.

ஐக்கிய நாடுகள் சபையில் சிறு நாடுகளுக்கும் கூடுதல் பிரதிநிதித்துவமும் அதிகாரங்களும் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய இம்மாநாடு ஈரானின் அணுக்கருச் செறிவூட்டல் பரிசோதனைகளுக்கும் ஆதரவு தெரிவித்தது.

எல்லா விதத்திலும் வெளிப்படும் தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு எதிராக முழு எதிர்ப்பு தெரிவித்த இம்மாநாடு தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அங்கீகாரம் அளித்தது. தீவிரவாதத்திற்கு எதிராகப் போராட அணிசேரா நாடுகளிடம் இம்மாநாடு கோரியது. தீவிரவாதம் தொடர்பான அறிக்கையில் உள்ள சில விமர்சனங்களுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.

ஐக்கிய நாடுகள் சபையை விரிவாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு இம்மாநாட்டில் நல்ல ஆதரவு கிடைத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழுவை அதிக பலப்படுத்தவும், ஜனநாயகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இம்மாநாடு கோரியது. பழக்கவழக்கங்கள், நாகரிகங்கள், மதங்களுக்கிடையில் திறந்த விவாதம் தேவை எனவும் மாநாடு கருத்து தெரிவித்தது.

இதை வாசித்தீர்களா? :   இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம்!

அணிசேரா நாடுகளின் அடுத்த மூன்று வருடத்திற்கான சேர்மனாக கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த அணிசேரா நாடுகளின் மாநாடு 2009 ல் எகிப்து நாட்டில் நடைபெறும் என கியூபாவின் தற்காலிக அதிபர் ரோல் காஸ்ட்ரோ அறிவித்தார்.