ஹஜ்ஜுப் பயணிகளுக்கு உதவும் நிரலி – ஜெர்மன் அறிஞர் கண்டுபிடிப்பு

Share this:

முஸ்லிம்களின் புனித கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜின் போது, அந்த புனிதக் கடமைகளை வரிசைக்கிரமமாக நினைவூட்டவும்,  மக்கா நகரிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் வழி தொலைந்து போகும் புனிதப் பயணிகளுக்கு உதவும் வகையிலும் புதிய திறன்பேசி பயன்பாட்டு நிரலி (Smart Phone Application) ஒன்றை ஜெர்மானிய கணினி அறிஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் பல்கலைகழகத்தில் கணிப்பொறி அறிவியலில் பட்டம் பெற்ற ஹபீபுர்ரஹ்மான் தஸ்தகீரி என்னும் அந்த  இளம் அறிஞர் இரு நாள்களுக்கு முன் “The Global Post” நாளிதழுக்கு அளித்த செய்தியில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். “ஹஜ்ஜுக் காலத்தில் யாத்ரிகர்களுக்கு வழியறிய உதவுவதாகவும், மார்க்கக் கடமைகளை நினைவூட்டக் கூடியதாகவும் கருவியொன்று வடிவமைக்க விரும்பினேன்” என்றார் அவர்.

“கடந்த 2006 ஆம் ஆண்டில் குடும்பத்துடன் உம்ரா செய்ய வாய்ப்பு கிடைத்த போதிலிருந்து இது பற்றி சிந்தித்து வந்துள்ளேன்”.

தனது பயன்பாட்டு நிரலிக்கு “அமீர்” என்று பெயர் சூட்டியுள்ளார் ஹபீபுர் ரஹ்மான். பொதுவாக, ஒரு பயணத்தில், இயக்கத்தில் தலைமைத் தாங்கிச் செல்பவருக்கு அரபுமொழியில் ‘அமீர்’ என்று கூறுவார்கள். (இந்த நிரலிக்கான சுட்டி: http://itunes.apple.com/tw/app/amir-personal-hajj-assistant/id473935680?mt=8)

உம்ரா, ஹஜ் ஆகிய புனிதக் கிரியைகளின் போது, தங்கியிருக்கும் இடம் திரும்புவதில் புனிதப் பயணிகள் படும் சிரமத்தைக் கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஹபீபுர் ரஹ்மான், “நாங்கள் எங்களை நன்கு தயார்படுத்திக்கொண்டிருந்தோம்; அப்படியிருந்தும் தங்கியிருந்த  இடத்தை அடைவதில் சிரமம் கண்டோம்” என்று நினைவு கூர்ந்தார்.

ஆஃப்கானிஸ்தானத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஹபீபுர் ரஹ்மான், பெற்றோர் தம் ஜெர்மானிய குடியமர்வுக்குப் பின்னர் மெய்ன்ஸ் நகரில் பிறந்தவர்.

அமீர் என்கிற இப்புதிய நிரலியின் மூலம், கலந்துரையாடலாக ஹஜ்ஜு, மற்றும் உம்ரா கிரியைகளின் சரிபார்ப்புப் பட்டியலையும்  காணமுடியும்.

இரண்டு வருட கால ஆய்வின் முடிவின் இந்நிரலியை தயாரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஹபீபுர் ரஹ்மான், தன் ஆய்வில் ஆஸ்திரேலிய முஸ்லிம் அறிஞரும், ஹஜ்ஜு பற்றி நிறைய நூல்கள் எழுதியுள்ளவருமான அபூமுனீர் இஸ்மாயில் டேவிட்ஸ் என்பவரை கலந்தோலோசித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு க்ளிக்கில் கிப்லா (தொழ வேண்டிய திசை) காட்டும் இன்னொரு நிரலியையும் இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்புதிய பயன்பாட்டு நிரலி இஸ்லாமிய மார்க்க வகையிலும்  நுட்ப வகையிலும் பிழைகள் ஏதுமில்லாமல் அமைவதில் கவனம் செலுத்தியதாகக் கூறும் ஹபீபுர் ரஹ்மான் தனது கருவி தற்போது துருக்கி, ஆங்கிலம், அரபு, ஜெர்மன் மொழிகளில் செயலாற்றுகிறது என்பதையும் தெரிவித்துள்ளார். ” மற்ற மொழிகளிலும் ஆய்வு தொடர்கிறது”

“ஆப்பிள் நிறுவனத்தின் ஐ ஃபோனில் இந்நிரலி செயல்படத் தக்கதாக உள்ளது” என்றும் ‘ஆண்ட்ராய்ட்’ வகை பேசிகளிலும் விரைவில் செயற்படத் தொடங்கும் என்றும் 32 வயதேயான ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

செய்திக் கட்டுரை: இப்னு ஹம்துன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.