தெளிவடைந்த ஃபித்னா

Share this:

நெதர்லாந்தில் Geert Wilders என்பவர் தோற்றுவித்த Party for Freedom எனும் வலதுசாரி கட்சியின் உறுப்பினர் அர்னோட் வேன் டோர்ன் (Arnoud van Doorn). சமீபத்தில் இவர் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.  கடந்த சனிக்கிழமையன்று (20-04-2013) மதீனாவிற்கும், ஞாயிறு அன்று (21-04-2013) மக்காவிற்கும் வருகை தந்த டோர்ன் தனது உம்ராவை நிறைவு செய்துள்ளார். அத்துடன் ஷேக் அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸி உட்பட பல மார்க்க அறிஞர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். சரி இதில் என்ன பெரிய பிரமாதம் இருக்கிறது?

இவரது பின்னணியைப் பற்றி சற்று தெரிந்து கொள்வது நல்லது. இறைத்தூதரை இழிவு படுத்தும் நோக்கில் ஃபித்னா எனும் திரைப்படத்தைத் தயாரித்த Geert Wilders-ன் Party for Freedom தலைவர்களில் ஒருவராவார் டோர்ன். விஷமத்தனமான இத் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டு வியந்து போனார். “இந்த மனிதர் முஹம்மதுக்கு முஸ்லிம்களிடத்தில் அப்படி என்ன சிறப்பு?” என்று பெரும் ஆச்சரியம் அடைந்து அக் கேள்விக்கு விடை காணும் ஆய்வில் இறங்கி விட்டார்.

“அந்த ஒரு கேள்விக்கான தேடலே இன்று என்னை முஸ்லிம் ஆக்கியது” என்கிறார் டோர்ன். டட்ச் (Dutch) பாராளுமன்ற உறுப்பினரான இவர், தமது மன மாற்றத்தை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியுலகத்திற்கு பகிரங்கமாக அறிவித்தார். “லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்!” எனும் அவரது டிவிட்டர் ஷஹாதா அரபி மொழியில் அமைந்திருந்தது. 46 வயதான டோர்னின் இந்த மனமாற்றம் நெதர்லாந்தில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.

விஷயம் மெல்ல வெளியே கசிந்து பல நாட்களாகியும் இவரின் கட்சி உறுப்பினர்கள் பலருக்கு இது ஒரு வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ஒரு நகைச்சுவையாகவே இருந்தது. பின்னே? “I hate Islam” என்பது இவரது Party of Freedom கட்சியின் பகிரங்க அடிநாதம். அக்கட்சியைச் சேர்ந்த இவரே இப்போது “I follow Islam” என்றால்? சிரித்தார்கள்.

“இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கக் கூடிய நான் முஸ்லிம் ஆகி விட்டேன் என்பதை நம்ப மறுப்பர் என்பது எனக்கும் தெரியும். ஆனால், நான் கடந்த ஒரு வருடமாக பல முஸ்லிம் அறிஞர்களுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தி, மனத்திலுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக குர்ஆன், ஹதீஸ்களை முழுமையாக ஆராய்ந்து கொண்டிருந்தேன். அதை எனக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அறிவர்!” என்கிறார் அல் ஜஸீராவிற்கு பேட்டியளித்த டோர்ன்.

மனம் மாறிய கையோடு, தனது மாநகர மேயருக்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதிக் கோரிக்கை விடுத்திருந்தார் டோர்ன். ‘தமது பணி நேரத்தினூடாக தொழுது கொள்ள அனுமதி வேண்டும்’ என்ற கோரிக்கை.

“இஸ்லாத்தைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை அதிகமதிகம் கேட்டவன் நான். இன்னமும் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் என் கட்சியினர், என்னைத் துரோகி என்றே அழைக்கின்றனர். நல்லது. மனதை விசாலமாக்கி, முன் முடிவுகளை கைவிட்டு, ஆராய்ந்து இம்முடிவை நான் தேர்ந்தெடுத்ததை அறிந்த பலரோ எனக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மற்றவர்களைப் போலவே நானும் வாழ்க்கையில் இதுவரை மாபெரும் தவறுகளை இழைத்திருக்கிறேன். ஆனால், நான் செய்து வந்த தவறுகளிலிருந்து இப்போது நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் என் பாதை தெளிவாகி விட்டதையும் இதில் நான் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதையும் உணர்கிறேன்!” என்று தமது பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.

நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?”

அவதூறு மற்றும் பொய்களை மட்டுமே முதலீடாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் பற்றி நினைத்தால் வெட்கித் தலைகுனிவதாகக் கூறும் டோர்ன், நபியவர்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற மேற்கத்தியப் பொய்ப் பிரச்சாரங்கள் பற்றி உலகமெங்கும் சென்று எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளேன். இப்போது நினைத்தால் என்னால் வேதனையைத் தாங்க முடியவில்லை. நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?” என்கிறார்.

இட்டுக் கட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் ஏற்படுத்திய அவநம்பிக்கையை போக்க, டொராண்ட்டோ (Toronto) நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையமான Canadian Dawah Association – CDA வுடன் இணைந்து சர்வதேசத் திரைப்படம் ஒன்றினைத் தயாரிக்கப் போவதாகக் கூறுகிறார்.

“இம்முறை என் திரைப்படம் அப்பட்டமான உண்மையைப் பேசும். இஸ்லாத்தைப் பற்றியும் நபிகளாரின் சிறப்புப் பண்புகளையும் இது எடுத்துரைத்து, மேற்கத்திய நாடுகளிடையே பரப்பப் படும் இஸ்லாமோஃபோபியாவை அகற்றும்!” என்கிறார் உறுதியாக.

“உங்களது புனிதப் பயணம் எவ்வாறு இருந்தது?” என்ற கேள்விக்கு, “இதே இடத்திற்கு உம்ரா மற்றும் ஹஜ் செய்யச் செல்பவர்களை கிறுக்குப் பிடித்தவர்கள் (Lunatic) என்றெல்லாம் ஏளனம் செய்துள்ளேன். இப்படி கீழ்த்தரமாக பிறர் மனம் புண்படும்படி நடந்து கொண்ட நான், நபி (ஸல்) அவர்களின் கல்லறைக்கு அருகிலும் ரவ்தா ஷரீஃப்க்கு முன்பு நிற்கும் போதும் என்னுள் பொங்கிய உணர்வுகளை கட்டுப் படுத்த முடியவில்லை. இவ்விடங்களில் நான் தொழும் போது, சுவர்க்கத்தின் அருகே நெருங்கி விட்டது போன்ற தூய்மையானதொரு உணர்வு ஏற்பட்டிருந்தது. என் கண்கள் குளமாயின”

“இறைத்தூதர் மீது இத்தனை அன்பை வைத்திருக்கும் உலக முஸ்லிம்களைப் போன்றே நானும் என்னை உணர ஆரம்பித்திருக்கிறேன். அதே நேரத்தில், இறைத்தூதர் பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கும் சில மேற்கத்தியவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். எங்களிடையே தான் எவ்வளவு அறியாமை? எத்தனை பாரபட்சம்? இவற்றை எல்லாம் நான் எப்படி களையப் போகிறேன்?” என்று கவலைப்படுகிறார் டோர்ன்.

“உலக அளவில் முஸ்லிம்களுக்கும் பிற மதத்தினருக்குமுள்ள இடைவெளியைக் குறைத்து அவர்களிடையே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்படச் செய்வேன். இஸ்லாம் பற்றிய தெளிவை எனக்கு உணர்த்திய இஸ்லாமிய அழைப்பு மையமான CDA வுடன் இணைந்து, அழைப்புப் பணியினை முழு மூச்சுடன் மேற்கொள்வேன்.  இஸ்லாத்தைப் பற்றியும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் உண்மைச் செய்திகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல, என்னுடைய வாழ்க்கையை இனி அர்ப்பணிப்பேன்!” என்று Okaz/Saudi Gazette க்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

– அபூ ஸாலிஹா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.