குவாண்டனமோ சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அல்ஜஸீரா கேமராமேன்!

மெரிக்கப் படையினரால் குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டு, சொல்லவொண்ணாக் கொடுமைகளைச் சந்தித்த அல்ஜஸீரா செய்தியாளர் ஸாமி அல்-ஹாஜ், கடந்த வெள்ளியன்று (02-05-2008) விடுதலை செய்யப்பட்டுள்ளார். தன் மகன் பிறந்த போது கைதான ஸாமி, உருக்குலைந்த உருவத்துடன் நடைப் பிணமாகச் சொந்த நாட்டிற்குத் திரும்பி, தன் ஏழு வயது மகனை இப்போதுதான் சந்திக்கிறார்.

கடந்த டிசம்பர் 2001இல் அல்ஜஸீரா தொலைக்காட்சியின் செய்தி சேகரிப்பிற்காக ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பில் இருந்த கேமராமேன் ஸாமி, அல் காயிதா அமைப்பினைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்பட்டதாகக் காரணம் கூறி கைது செய்யப்பட்டார். சர்வதேசப் பத்திரிக்கைகளுக்கான சட்டப்பூர்வமான விசா விதிமுறைகளுடன் ஆப்கானிஸ்தான் எல்லையில் செய்தியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ஸாமி கைது செய்யப்பட்ட சில வாரங்களில் அமெரிக்கப் படையினரால் கியூபாவின் குவாண்டனமோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

அல்ஹஜ் கைது செய்யப்பட்ட மாத்திரத்திலேயே எவ்வித குற்றப்பத்திரிக்கையும் பதிவு செய்யப்படாமலே பயங்கரவாதிகள் பட்டியலில் ஸாமி சேர்க்கப்பட்டார் என்பதும் சிறையில் அடைக்கப்பட்ட நாட்களில் இதுவரை 130 முறைகள் விசாரணை என்ற பெயரில் அவர் கொடுமைக்குள்ளாக்கப் பட்டார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

ஸாமிக்காக வழக்குத் தொடுத்துள்ள ஜக்கரி கேட்ஜ் நெல்சன் என்ற வழக்கறிஞர் “இவ்விடுதலைக்கானக் காரணம் அநீதியை எதிர்த்து, கடந்த ஒன்றரை வருடங்களாக ஸாமி அல்-ஹாஜ் சிறைச்சாலைக்குள் நடத்திய உண்ணாநிலைப் போராட்டமே!” என்று கூறியுள்ளார். உணவு உண்ண மறுத்து, சாத்வீக முறையில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்த ஸாமிக்குக் கட்டாயப்படுத்தி கடந்த 16 மாதங்களாக மூக்கின் துளை வழியாக குழாய் மூலம் கட்டாயப்படுத்தி உணவு உட்செலுத்தப்பட்டுள்ளது. கடுமையான மன-உடல்ரீதியிலான கொடுமைகளால் அவரது சிறுநீரகமும் கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சிறுநீரகக் குறைபாடுகளால் புற்றுநோய் தாக்கியிருப்பதாகவும் இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இக்கொடுமைகளால் 39 வயதே நிரம்பியுள்ள ஸாமி 80 வயது முதியவரின் உடல் தோற்றத்தைப் பெற்றுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விடுதலை பெற்றுத் திரும்பிய நிமிடத்திலிருந்து மருத்துவமனையின் அவசரப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் ஸாமி.

 

இந்நிலையில் சூடான் தலைநகர் கர்த்தூமில் உள்ள ஸாமி அல்-ஹாஜின் இல்லத்திற்கு வருகை தந்துள்ள அல்ஜஸீராவின் பொது இயக்குனர் வாதாஹ் கன்ஃபார், அமெரிக்காவின் இச்செயல் பற்றி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். அல்ஜஸீரா தொலைக்காட்சியின் செயல்பாடுகளை அமெரிக்காவிற்கு ரகசியமாக அறிவித்துத் தரும் உளவாளியாக விலைபேசக் கடுமையாக முயன்றும் அதற்கு உடன்படாத காரணத்தாலேயே ஸாமி அல்-ஹாஜ் குவாண்டனமோவுக்கு அனுப்பி, துன்புறுத்தப்பட்டுள்ளதாக இவர் மேலும் கூறியுள்ளார்.

ஸாமி கைது செய்யப்பட்டு குவாண்டனமோவில் அடைக்கப்பட்ட நாள் முதல் அவரது விடுதலைக்கான நடவடிக்கைகளைப் பல கட்டப் போராட்டங்களாக அல்ஜஸீரா முன்னின்று நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை வாசித்தீர்களா? :   ஈராக்: மார்ச் - 2008 நினைவுகள்

நேர்மையான மற்றும் துல்லியமான செய்திகளினால் உலகப் புகழ்பெற்றுள்ள செய்தி நிறுவனமான அல்ஜஸீராவிற்கே இந்நிலை எனில் சாமான்யர்களின் கதி என்ன என்பதுதான் சர்வதேச அளவில் மக்களின் மனதில் எழுந்துள்ள கேள்வியாகும். பத்திரிகை சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசும் மேற்கத்திய உலகம் இக்கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருப்பது மனித நேயம் மிதிபடுவதையே மெய்ப்பிக்கிறது.

– அபூ ஸாலிஹா