யூனுஸின் படிப்புச் செலவை யூனுஸ் ஏற்றுக்கொண்டார்!

Share this:

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் சென்னையில் ‘இ-காமர்ஸ்’ நிறுவனம் நடத்தும் இளைஞர். டிசம்பர் 1ஆம் தேதி இரவு சென்னையை சவட்டி எடுத்தது மழை. அந்த நேரத்தில், ‘ஊரப்பாக்கம் பகுதியில் மக்கள் கழுத்தளவு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று முகமது யூனுஸுக்கும் ‘வாட்ஸ் அப்’பில் தகவல் பகிரப்படுகிறது.

அப்போது இரவு மணி 10.30. தன் நண்பர்கள் முஸாஃபர், கோபிநாத், ரியாஸ் இவர்களைக் கூட்டிக் கொண்டு கிளம்புகிறார் யூனுஸ். நால்வரும் பெசன்ட் நகரில் மீனவர்களிடம் ஏழு படகுகளைக் கேட்டு வாங்கி லாரியில் ஏற்றிக் கொண்டு ஊரப்பாக்கம் நோக்கிப் புறப்படுகிறார்கள்.

அடுத்து நடந்தவைகளை யூனுஸ் விவரித்தார்:

‘‘எங்களைவிட வேகமாக செயல்பட்டனர் மீனவ நண்பர்கள். நாங்கள் நால்வரும் ஆளுக்கொரு படகில் இருந்தோம். கிட்டத்தட்ட 6 அடிக்கும் மேல் சென்று கொண்டிருந்த தண்ணீர், நான் சென்ற படகைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டது. எனக்கு நீச்சல் தெரியாது. நல்லவேளை, மீனவ நண்பர்கள் காப்பாற்றிவிட்டார்கள்.

அப்போதுதான் அங்கிருந்த பெட்ரோல் பங்க் பக்கத்தில் ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் கழுத்தளவு தண்ணீரில் தத்தளித்தபடி எங்களைப் பார்த்துக் கை அசைத்துக் கொண்டிருந்ததை கவனித்தேன். அருகில் சென்று அவர்களை படகில் ஏற்றிய பிறகு தான் அந்த பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அவரது பெயர் சித்ரா. உடனிருந்தவர் அவருடைய கணவர் மோகன். அதிகாலை 5.30 மணி. பெருங்களத்தூர் அருகே ஒரு பாலத்தின் அருகே சித்ராவையும் மற்றவர்களையும் இறக்கிவிட்டு விட்டு மற்றவர்களை மீட்பதற்காக மீண்டும் ஊரப்பாக்கம் நோக்கிப் படகை செலுத்தினோம். அன்று மட்டுமே எங்களது குழுவினர் சுமார் 450 பேரை ஆபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறோம். இன்னமும் எங்களது பயணம் நிற்கவில்லை. அழைப்புகளைக் கேட்டு ஓடிக்கொண்டே இருக்கிறோம்’’ என்று சொன்னார் யூனுஸ்.

யூனுஸால் காப்பாற்றப்பட்ட சித்ரா அன்றைய தினமே பெண் குழந்தைக்குத் தாயாகி இருக்கிறார். தங்களையும் தங்களுடைய வாரிசையும் காப்பாற்றிக் கரை சேர்த்த யூனுஸைப் போற்றும் விதமாக அவரது பெயரையே தங்களுடைய பெண் குழந்தைக்கு வைத்திருப்பதாக ‘வாட்ஸ் அப்’பில் வாஞ்சையோடு தகவல் பகிர்ந்திருக்கிறார் சித்ராவின் கணவர் மோகன். இதில் நெகிழ்ந்து போன யூனுஸ், அந்தக் குழந்தையின் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய யூனுஸ், ‘‘இதற்கு முந்தைய மழைக்கு நுங்கம்பாக்கத்திலும் பள்ளிக்கரணையிலும் உள்ள எனது இரண்டு வீடுகளை மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் கொடுத்திருந்தேன். அங்குத் தங்கி இருந்த மக்கள் என்னை வாயாற வாழ்த்தினார்கள்.

சித்ரா – மோகன் தம்பதி தங்கள் குழந்தைக்கு என் பெயரை வைத்திருக்கிறார்கள். அந்தக் குழந்தைக்குப் படிப்புச் செலவை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். விவசாயிகளையும் மீனவர்களையும் அவர்கள் வாழும் நிலையில் இருந்து முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதும் மழை எங்களுக்குத் தந்திருக்கும் பாடம். நமக்குத் தெரிந்த டெக்னாலஜியை வைத்து அந்த இலக்கை எட்டுவதற்காக ஒரு குழுவை அமைத்துக் கொண்டிருக்கிறோம்’’ என்று சொன்னார்.

தற்போது கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுடன் இருப்பதாகவும் விரைவில் சென்னைக்குத் திரும்பி வந்து குழந்தை யூனுஸைப் பார்க்கப் போவதாகவும் யுனுஸ் கூறினார்.

oOo

நன்றி : தமிழ்.திஹிண்டு & இண்டியா டைம்ஸ்


குறிப்பு : “யூனுஸ்” என்பது முஸ்லிம்களின் வேதமான குர்ஆனில் உள்ள பத்தாவது அத்தியாயத்தின் பெயரும் அதில்  விவரிக்கப்படும் ஒரு தீர்க்கதரிசியின் பெயருமாகும்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.