மாற்றத்திற்கு விதையிடும் திருவிதாங்கோடு முஸ்லிம்கள்!

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரையொருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும் மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (ஆல இம்ரான், வசனம் 200)

ருலக வெற்றியைக் குறிகோளாகக் கொண்டிருக்கும் தனது அடியார்களுக்கு இறைவன் இடும் மகத்தான கட்டளையிது. அல்லாஹ்வின் அடியார்கள் தம்மை ஒருவரையொருவர் பலப்படுத்திக் கொள்வதில்தான் ஈருலக வெற்றியும் அடங்கியுள்ளது என படைத்த இறைவனே தெளிவாக கூறிய நிலையில், முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்குத் தடையாக இருப்பது எது?

மனிதர்கள் ஒன்றிணைந்து விடாமல் அவர்கள் மனதில் ஈகோ, தற்பெருமை, கர்வம், அகங்காரம், தலைக்கனம் முதலான எல்லாவித தீய குணங்களையும் விதைத்து விரிசலை ஏற்படுத்திக் கொண்டிருப்பவனே ஷைத்தான். அதற்காக அவன் ஒரு நிமிடம்கூட இடைவெளி விடாமல் ஓயாது களமாற்றிக் கொண்டிருக்கிறான். இதனைச் சரியாக உணர்ந்து கொண்டவர்கள், தம் மனதில் மேற்கண்ட தீய குணங்கள் வருவதற்கு ஒரு சிறிதும் இடம் நல்க மாட்டார்கள். இவ்வாறு கவனமாக இருப்பவர்களிடையேதாம் பாசமும் இணக்கமும் ஏற்படும். அதுவே தம்மை ஒருவரையொருவர் பலப்படுத்திக் கொள்வதற்கு வித்திடும்.

ஒரு சமுதாயத்தின் எதிர்காலமே அச்சமுதாயத்தின் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கைகளிலேயே உள்ளது. கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரம் என அனைத்திலும் மிக மோசமான நிலையில் பின் தங்கியுள்ள முஸ்லிம் சமூகம், மிகத் தாமதமாக இதனை உணர்ந்து தற்போதுதான் சிறு அளவில் விழிப்புணர்வு பெற்று கல்வியை நோக்கி தம் சிந்தனையைத் திசை திருப்பத் தொடங்கியுள்ளது.

சமீப காலங்களில் தமிழக முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் மிக முக்கியமானவை, காவல்துறை மற்றும் உளவுத்துறையால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்மீது புனையப்படும் பொய் வழக்குகள். படித்துக் கொண்டிருக்கும், படித்து முடித்து வேலைக்காக முயற்சி செய்துகொண்டிருக்கும் மாணவர்களைக் குறிவைத்து, அவர்களை அநியாயமாக சிறையிலடைக்கும் அக்கிரமத்தை உளவுத்துறை மற்றும் காவல்துறையிலிருக்கும் சில விஷமத்தனம் கொண்ட அதிகாரிகள் செய்துவருகின்றனர்.

இவ்வாறு இளைய தலைமுறை முஸ்லிம்களை குற்றவாளிகளாகக் கட்டமைத்து, கல்வி – வேலைவாய்ப்புகளை பறித்துக் கொண்டு, நீதிமன்றத்துக்கு அலைய வைப்பதன் மூலம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தையும் அதலப்பாதாளத்தினுள் தள்ளுவதற்கு இத்தகைய அதிகாரிகள் திட்டமிட்டே செயலாற்றி வருகின்றனர் என்பது நிரூபணமாகிக் கொண்டே வருகிறது.

இத்தகைய அநியாயங்களைக் கண்டித்து, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய தமிழக முஸ்லிம்களோ பல்வேறு பெயர்களில் தனித்தனிக் குழுக்களாக பிரிந்து நின்று தத்தம் குழுக்களின் வளர்ச்சியை மட்டும் மையமாக்கிச் செயல்பட்டு வருகின்றனர்.

ஆளும் அரசு இயந்திரங்கள், முஸ்லிம்களுக்கு எதிராக இழைத்துவரும் இன்னல்களை எதிர்கொள்ள, தனித்தனியாகப் பிரிந்து நின்று போராடுவது எவ்வகையிலும் பலனைத் தராது; பிரிவினை தரும் வலுவற்ற நிலையினால் திட்டமிட்ட சதிகளை எதிர்கொள்வதற்குச் சக்தியற்று போகிறது. இதனால், “தமிழக முஸ்லிம்கள்” என்ற பெரும்பான்மை சமூகம் பெறவேண்டிய அரசியல் சக்தியும் பெற முடியாமல் ஏதாவது பெரிய அரசியல் கட்சிகளின் பின்னால் ஒன்றோ இரண்டோ சீட்டுகளுக்காக அலையும் துர்பாக்கிய நிலையும் ஏற்படுகிறது.

இதை வாசித்தீர்களா? :   பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் - 8

இந்த அவல நிலையிலிருந்து மீள்வதற்கான வழிதான் என்ன?

மீண்டும் இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அல்லாஹ்வின் கட்டளையினை நினைவுகூர்வோம்.

அல்லாஹ்வின் கட்டளை ஒன்றாக இருக்க, அதனை மீறி தத்தம் விருப்பத்துக்குச் செயல்படும்போதே ஷைத்தான் வெற்றிபெறுகிறான். மீண்டும் அவனிடமிருந்து மீண்டு வெற்றிப்பாதை நோக்கி செல்ல, அல்லாஹ்வின் கட்டளைக்கு  மீள்வது மட்டும்தான் ஒரே வழி!

ஆம், “ஒருவரையொருவர் பலப்படுத்திக் கொள்வோம்!”

அல்லாஹ்வின் இந்தக் கட்டளையினைச் செயல்படுத்த தமிழகத்தின் தென் எல்லை குமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு முஸ்லிம்கள் தயாராகிவிட்டனர்.

இருக்கும் பல்வேறு இயக்க – அமைப்பு – ஜமாத் ரீதியிலான பாகுபாடுகளைக் களைந்து ஒன்றாக ஒரே அணியில் திரண்டு தமிழக முஸ்லிம்களுக்கே முன்னுதாரணமாக ஆகிவிட்டனர்.

தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் உள்ளதுபோன்றே திருவிதான்கோடிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இயக்கங்களிலுமாக முஸ்லிம்கள் பிளவுபட்டே கிடந்தனர்.

இயக்கங்களில் பிளவுண்டு சிதறிப்போன இளைஞர் சமூகத்தால் பல்வீனமானது ஊர் ஜமாத்துகளே. இவ்வூரும் அதற்கு விதிவிலக்கல்ல. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட உளவுத்துறை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இவ்வூர் இளைஞர்களைத் தொடர்ந்து பொய் வழக்குகளில் திட்டமிட்டு சிக்கவைத்து வேட்டையாடி வந்தது. இவ்வாறு உளவுத்துறையின் உதவியுடன் காவல்துறை கைது செய்து சிறையிலடைத்த எந்த இளைஞனின் ஒரு வழக்குகூட இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது முக்கியமானது. பல ஆண்டு வழக்கு விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக அல்தாஃப், நஸீர், ஷமீம், கலீமுல்லாஹ் போன்ற பல இளைஞர்களைக் காவல்துறை வேட்டையாடி சிறையிலடைத்தது. இவர்களில் கலீமுல்லாஹ் மார்க்க அறிஞர். ஷமீம், பொறியியல் படித்துக்கொண்டிருந்த மாணவன். காவல்துறையின் அராஜகம் ஒருபக்கம் இவ்வாறு தொடர்ந்து கொண்டே இருந்தாலும் அதற்கு எதிராக வலிமையாக ஒன்று திரளமுடியாத நிலையில் அவரவரால் இயன்ற வகையில் சிறு குழுக்களாகவே இவ்வூர் மக்கள் போராடி வந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் சித்தீக் என்ற பொறியியல் மாணவனை அநியாயமாகக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் மிகக்கொடூரமான முறையில் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.

கடந்த முறை போன்றல்லாமல் இம்முறை திருவிதாங்கோடு முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர். காவல்துறையின் தொடர்ச்சியான அராஜகப் போக்கிற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டுமென்பதை உணர்ந்து கொண்ட ஊர் மக்கள், தனித்தனியாக நின்று எதிர்கொள்வதால் எந்தப் பயனுமில்லை என்பதைப் புரிந்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவது என்ற முடிவுக்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து ஊரின் இரண்டு ஜமாத்களான திருவை ஜமாஅத் மற்றும் அஞ்சுவன்னம் ஜமாஅத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் இயக்கங்கள், கட்சிகள் சாராத மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து அவரவர் ஜமாத் மற்றும் இயக்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய “ஒருங்கிணைந்த முஸ்லிம் ஜமாஅத்” என்ற பெயரில் ஒற்றுமை குழுவினை உருவாக்கியதோடு, காவல்துறையின் அத்துமீறல் அராஜகத்தை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும்முகமாக ஒன்றிணைந்து கல்குளம் தாலுகா அலுவலகம் முன்னிலையில் திரண்டு பெரும் போராட்டத்தை நடத்திக் காட்டியுள்ளனர்.

இதை வாசித்தீர்களா? :   பஞ்சபாண்டவர்கள் போல் இந்துக்கள் 5 குழந்தைகளைப் பெற வேண்டும் - தினமலர்

விசாரணை என்ற பெயரில் மாணவர்கள், இளைஞர்களைக் கடத்திச் சென்று சட்டத்திற்குப் புறம்பான வகையில் கஸ்டடியில் வைத்து கொடுமைபுரிதல், நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து வீடுகளில் ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல் புரிவது, தேடும் நபர் கிடைக்கா நிலையில் உறவினர்களைக் கொண்டு சென்று காவல் தடுப்பில் வைப்பது, நள்ளிரவில் வீடு புகுந்து ஆண்கள் இல்லா நிலையில் பெண்களிடம் தகாத வார்த்தைகள் பேசி அட்டூழியம் புரிவது என சொல்லொண்ணா அராஜகங்கள் புரிந்துவரும் காவல்துறை கறுப்பு ஆடுகளின் செயல்களுக்கு எதிராக இனிமேல் ஒன்றாக செயலாற்றுவது என்ற மகத்தான முடிவுக்கு வந்துள்ளதன் மூலம் ஒருவரையொருவர் பலப்படுத்திக் கொள்ளுங்கள் எனும் இறை கட்டளைக்குச் செவிசாய்த்த ஊர்களில் முதன்மையானது என்ற மகத்தான அந்தஸ்துக்குத் திருவிதாங்கோடு முஸ்லிம் பெருமக்கள் வந்துள்ளனர்.

அராஜகங்களுக்கு முடிவுகட்ட, நியாயத்திற்காக போராட இயக்க, கட்சி பிளவுகளை மறந்து ஒன்றாக ஒருவரையொருவர் பலப்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தமிழக முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாக, திருவிதாங்கோட்டில் உள்ள அனைத்து இயக்கங்களும் ஊர் ஜமாத்துடன் ஒன்றிணைந்து செயலாற்ற முடிவெடுத்து செயலாற்றத் தொடங்கியுள்ளது மிகச் சிறந்த முன்னுதாரணமாகும்.

இந்த முன்மாதிரியினைத் தமிழகமெங்கும் பிற ஊர் முஸ்லிம்களும் கைக்கொண்டு செயலாற்ற முன்வருவது சமுதாயத்திற்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களை எதிர்கொள்வதற்கான ஆரம்பப்படியாகும். திருவிதாங்கோடு ஊர் தொடங்கி வைத்த இத்தீப்பொறி தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் விரைந்து பரவி மாபெரும் மாற்றத்தை விதைக்கட்டும்.

“ஒருவரையொருவர் பலப்படுத்திக்கொள்வோம்; ஈருலக வாழ்விலும் வெற்றியினை ஈட்டுவோம்!”

– அபூ சுமையா