மக்களின் நண்பன் – தாரேஸ் அஹமது!

பெரம்பலூர் மாவட்ட மக்களின் புது ஹீரோ தாரேஸ் அஹமது. அதிரடியான மாவட்ட ஆட்சியர். ஒருநாள் பேருந்தில் மக்களோடு  மக்களாகப் பயணித்துக் கொண்டே அவர்களுடைய பிரச்னைகளை விசாரிப்பார். இன்னொருநாள் மாறுவேடத்தில் திரை அரங்குகளுக்குச் சென்று, டிக்கெட்டுக்குச் சரியான தொகைதான் வசூலிக்கிறார்களா என்று பார்ப்பார். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓர் அலுவலகத்துக்கு அதிகாரிகளுக்கே தெரியாமல் அதிரடி விசிட் அடிப்பார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் பிரச்னைகளுக்காக இயங்குபவர்கள் கைகளில் நிச்சயம் தாரேஸ் அஹமதின் செல்பேசி எண் இருக்கும். குடிநீர்ப் பிரச்னையில் தொடங்கி சாதிச் சண்டைகள் வரை எங்கே எது நடந்தாலும் ஒரே ஒரு அழைப்பில் பிரச்னையை முடித்துக் கொள்கிறார்கள் பெரம்பலூர் மாவட்ட மக்கள்.


“நான் மருத்துவம் படிச்சவன். மக்களுக்கு எல்லா வகையிலும் உதவ இதுதான் சரியான வழின்னு தெரிஞ்சிகிட்டுதான் ஐ.ஏ.எஸ் முடிச்சேன். விவசாயம்தான் நமக்கு முக்கியம்கிறது என்னோட பாலிஸி. அதனால்தான், அடிக்கடி விவசாயிகளைத் தேடி வயல்களுக்கே போறேன். மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டிலும் முதல்வர்கிட்டே விவசாயிகளுக்காகத்தான் பேசினேன். இப்பக்கூட ‘ஒருங்கிணைந்த விற்பனை நிலையம்’ திறக்கப் போறோம். மக்களைத் தேடிப் போறதுதான் இந்த வேலையோட அடிப்படை. அப்படிப் பார்த்தால், நான் என் வேலையை மட்டும்தான் செய்றேன்” என்று அடக்கமாகப் பேசும் தாரேஸ் அஹம்மதுவின் பணியைப் பாராட்டி முதல்வர் பரிசு வழங்கி இருப்பதுதான் பெரம்பலூரில் இப்போதைய ஹாட் டாபிக்!

மக்கள் சேவைகளுள் சில:

  • பதவி ஏற்ற ஐந்து மாதங்களில் “மக்களைத் தேடி வருவாய்த்துறை” என்கிற திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் சுற்றி மக்களிடம் இருந்து 45 ஆயிரம் மனுக்களைப் பெற்றுள்ளார் தாரேஸ் அஹமது.

  • அதில் 75 சதவிகித மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாம்.

  • இது தவிர, கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்தி 20 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்குக் கல்விக் கடனும் வழங்கி உள்ளார்!

நன்றி: ஆனந்த விகடன்

oOo

இவை போக, பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிமடம் எனும் ஊரில் அமைந்துள்ள Rural Education & Action Development (READ) எனும் மன நலம் குன்றிய மழலையருக்கான பயிற்சி மையத்தைக் கடந்த 23.6.2011இல் திறந்து வைத்து, இன்றும் அதன் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறார் தாரேஸ் அஹ்மது.


மூட நம்பிக்கை: தெளிவாக்கிய தாரேஸ் அஹமது!

‘ஒவ்வொரு அமாவாசைக்கும் பாம்பு சட்டையை உரிப்பது போலவே, எங்கள் ஊரில் சிறுவன் ராஜதுரையின் உடம்பிலும் தோல் உரிகிறது’ எனும் தகவல் ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) வரவே, பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரத்தை அடுத்த வெங்கலம் கிராமத்தில் ஆஜரானோம்.

ராஜதுரையின் வீட்டைக் கை காட்டிய உள்ளூர்​வாசிகள், குடும்பத் தகராறு காரணமாக அவனுடைய அம்மா கோகிலா, சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இருப்பதாகவும், அப்பா அசோக்குமார் மறுமணம் செய்துகொண்டு தனியாக வசிப்பதாகவும் கூறினார்கள். கூலிவேலை செய்து பேரனைக் காப்பாற்றி வரும் பாட்டி சூடாமணியிடம் பேசினோம்.

”நாங்க குடும்பத்தோட டெல்லியில கூலி வேலை செஞ்சிக்கிட்டு இருந்தோம். அங்கதான் இவன் பொறந்து வளர்ந்தான். கைக்குழந்தையா இருந்தப்பவே இவனுக்குத் தோல் உரிய ஆரம்பிச்சது. டெல்லியில பனி அதிகமா இருக்கிறதால, தோல் உரியுதுன்னு அசட்டையா இருந்துட்டோம். பிறகு, அங்க வேலையில்லாம ஊரோட வந்துட்டோம். இப்பவும் அமாவாசை வந்தா, இவனோட உடம்புல தோல் உரிய ஆரம்பிக்கும். அன்னையில இருந்து ஆறேழு நாள் பட்டை பட்டையா பாம்பு சட்டையை உரிப்பது போலவே, தோல் உரிஞ்சிக்கிட்டு வரும். ரத்தம் கசியும். அந்த நேரத்துல வெதுவெதுப்பா சுடுதண்ணியில குளுப்பாட்டணும். இல்லைன்னா வலியில துடிச்சிடுவான். இவனுக்கு என்ன நோய்னு டாக்டர்களுக்கும் தெரியலை. அமாவாசையில இருந்து 10 நாள் வரைக்கும் இவனை பள்ளிக்​கூடத்துக்கு அனுப்​​பாம வீட்டோடே வச்சிருப்​பேன். அமாவாசை வந்தாலே பயமா இருக்​கு…” என்றார் ஆதரவற்ற அந்த மூதாட்டி.

பாளம் பாளமாய் உடல்முழுக்க தோல் வெடித்துக் கிடக்க, தன் சகாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ராஜதுரையிடம் பேச்சுக் கொடுத்தோம். ”மாமா நான் ரெண்டாவது படிக்கிறேன். எனக்குப் படிக்கப் பிடிக்கும். ஆனா உடம்பு அரிக்குது… தூங்க முடியலை” என்றான் மழலை மொழியில்.

சிறுவன் ராஜதுரையை, மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமதுவிடம் அழைத்துச் சொன்றோம். அடிப்படையில் மருத்துவர் என்பதால் ராஜதுரையைப் பரிசோதித்த பிறகு நம்மிடம் பேசிய கலெக்டர், ”இந்த நோயை ‘ஆட்டோஇம்மியூன் டிஸார்டர் எகைன் சிண்ட்ரோம்’ என்பார்கள். கருத்தரிப்பில் ஏற்படுகிற ஜீன்களின் குறைபாடு அல்லது மரபுவழியாக இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. பனிக்காலங்களில் அதிகமாக தோல் உரியும். முழுதாகக் குணப்படுத்த இயலாவிட்டாலும் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். இவனுக்குச் சிறப்பு மருத்துவம் கொடுக்க சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பாடு செய்கிறேன். இவனை, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைக்கவும் ஏற்பாடு செய்கிறேன்” என்று உறுதியளித்தார்.

அந்த ஏழைகளின் சிரிப்பில் தெரிந்தது, நிஜ ஆனந்தம்.

நன்றி: ஜுனியர் விகடன்

இதை வாசித்தீர்களா? :   ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் !