இராமநாதபுரம் தமிழகத்தின் உயிர்மூச்சு!

டந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் இராமநாதபுரம் தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளரின் வெற்றி என்பது, தமிழகத்தின் உயிர் துடிப்பு எது என்பதைக் காட்டிய வெற்றி. இங்குப் பாசிசத்தின் பருப்பு கொஞ்சங்கூட வேகாது என்பதை முகத்திலறைந்தாற் போன்று சொல்லியுள்ளார்கள் அந்தத் தொகுதி மக்கள்.

இத்தொகுதி, திமுக கூட்டணியில் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்டு, எதிராக அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட நிமிடத்திலிருந்தே பதற்றம் தொற்றிக் கொண்டது.

    • முக்குலத்தோர் அதிகமிருக்கும் இத்தொகுதி குறித்த அலசல்களில், எல்லா வகையிலும் முஸ்லிம் லீக் தோற்பது உறுதி என்ற வகையில் ஆரூடம் கூறப்பட்டிருந்தன.
      அதற்கேற்றாற்போன்றே,
    •  மக்களிடையே பரவலாக அறியப்பட்ட பாஜகவின் தாமரை சின்னத்துக்கு எதிராக, முஸ்லிம் லீக், தன் தனிச்சின்னத்திலேயே போட்டியிட்டது.
    • ‘முஸ்லிம் லீக் தனக்குக் கிடைத்த தொகுதியினைப் பணத்துக்காக நவாஸ்கனிக்கு விற்றுவிட்டது’ என உள்ளுக்குள்ளேயே சிலர் கன்னக்கோல் வைத்தனர்.
    • திமுகவின் உதய சூரியன் சின்னம் இல்லை என்பதால், திமுக பாரம்பரிய ஓட்டுகள் முஸ்லிம் லீகிற்குக் கிடைக்காது; திமுகவினர் குழிபறிப்பர் எனப் பரப்பப்பட்டது.
    • முஸ்லிம் ஓட்டுகளைத் தினகரனுக்குக் கொடுப்பதற்காக ஒரு குழு தீயாய் வேலை செய்தது.
    • கருப்பு முருகானந்தம் தலைமையில் ஆர்.எஸ்.எஸ் கும்பல், முஸ்லிம் லீகிற்கு ஓட்டளிக்கக்கூடாது என மதவெறியைத் தூண்டும் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். இதனால், கலவரம் ஏற்படுமோ என்ற அளவுக்குச் சூழல் உருவானது.

ஆனால்,
இவை அனைத்தையும் கடந்து, ஒரு லட்சத்து இருபத்தேழாயிரத்து நூற்று இருபத்தி இரண்டு ஓட்டுகள் வித்தியாசத்தில், நான்கு லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரத்து தொளாயிரத்து நாற்பத்தி மூன்று வாக்குகள் (44.08%) பெற்று, முஸ்லிம் லீக் வெற்றிவாகை சூடியுள்ளது.

இது சாதாரண வெற்றியல்ல; முஸ்லிம் லீக் வாங்கிய 4,69,943 ஓட்டுகள் அனைத்தும் மிக நிச்சயமாக முஸ்லிம் ஓட்டுகள் மட்டுமேயல்ல; அனைத்து மக்களும் சாதி, மதம், கட்சி பேதம் பாராமல் செலுத்திய வாக்குகள். இதன் மூலம்,

    • முஸ்லிமல்லாத பிற மத மக்கள், இங்கு மதவெறி துவேசத்துக்கு வேலையில்லை என இந்துத்துவ மதவெறியர்களின் முகத்தில் காறித் துப்பியுள்ளனர்.
    • திமுகவினர் குழிதோண்டுவர் என்ற தூற்றல்களைப் பரப்பிய குறைமதியோருக்குத் திமுகவினர் ஆப்பு அடித்துள்ளனர்.
    • தியாகத் தலைவியின் ஆசியுடன் பாசிசத்தை ஒழிப்போம் எனக் கூறிவந்தவர்களுக்கு, முஸ்லிம்கள் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளனர்.
    • “தமிழகம் இது!, பாசிசத்துக்கான இடமல்ல” என்ற செய்தியினை இராமநாதனின் புரத்திலிருந்தே பாசிச பாஜகவுக்கு இராமநாதபுர மக்கள் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் ஆன்மா, வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் அடையாளம் இராமநாதபுரம். அது, தமிழகத்தின் உயிர்மூச்சாகவும் தொடர வேண்டும்.

முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக வென்றிருந்தாலும், தம்மை இந்திய ஆன்மாவின் அடையாளமாக தேர்வு செய்துள்ள இராமநாதபுரம் மக்களுக்குத் தம் பொறுப்புணர்ந்து எவ்வித பாரபட்சமுமில்லாமல் திரு. நவாஸ் கனி கடமையாற்ற வேண்டும்.

இதை வாசித்தீர்களா? :   மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி - வசமாக சிக்கிய நந்தகோபால்!

நவாஸ் கனி முஸ்லிம்களின் பிரதிநிதியல்ல; அவர், இராமநாதபுரம் மக்களின் இந்துத்துவ மதவெறிக்கு எதிரான பிரதிநிதி!

வாழ்க இராமநாதபுரம் மக்கள்!

பரவட்டும் மத நல்லிணக்கம்! உயரட்டும் தமிழகத்தின் புகழ்!