தமிழகத்தை உலுக்கிய திண்டிவனம் குண்டுவெடிப்பு!

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று (7/4/2007) காலை TCQ 3033 என்ற எண்பலகை தாங்கிய ஒரு மஹிந்திரா ஜீப் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் மூவர் இருந்தனர். திண்டிவனம் அருகே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செண்டூர் எனும் கிராமம் அருகே வந்த போது 11:30 மணி அளவில் திடீரென காரில் இருந்து புகை வந்தது. உடனே உள்ளிருந்த அம்மூவரும் வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி புகை எங்கிருந்து வருகிறது என்று பார்த்தனர். புகையை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் அந்த மூவரும் காரை விட்டு விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே காரில் இருந்து புகை வருவதை கண்டதும் செண்டூர் பகுதி மக்கள் திரண்டு வந்து வேடிக்கைப் பார்த்தனர். நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல் வாகனத்தினுள் எட்டிப் பார்த்தனர். அப்போது மிகப்பயங்கர சத்தத்துடன் அந்த வாகனம் வெடித்துச் சிதறியது.

வாகனத்தினுள் இருந்த குண்டுகள் வெடித்ததால் அந்த பகுதியே அதிர்ந்தது. வாகனம் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டு சுக்கல், சுக்கலாக நொறுங்கியது. கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்த இந்த குண்டு வெடிப்பில் வேடிக்கை பார்க்க திரண்ட கிராம மக்கள் சிக்கிக்கொண்டனர்.

சுற்றி நின்றிருந்த சுமார் 15 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல் பாகங்கள் சாலை முழுக்க ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அருகிருந்த புளிய மரங்களில் புளி பறித்துக் கொண்டிருந்த சிலரது உடல் பாகங்ககள் மரக்கிளைகளில் சிக்கித் தொங்கின. அப்போது எதிரே வந்து கொண்டிருந்த ஒரு டாட்டா சுமோ வாகனத்தில் இருந்த அறுவர் அதிர்ச்சியில் உறைந்த நிலையிலேயே இறந்துள்ளனர்.

வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகள் அதிக சக்தி வாய்ந்தது என்று தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் 6 அடி (தற்போது 2 அடி எனக் காவல்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன) ஆழத்துக்கு பெரிய பள்ளம் விழுந்துள்ளது. அந்த பகுதியே சீர்குலைந்து சின்னா பின்னமாக மாறி விட்டது.

வாகன வெடிகுண்டு வெடித்த இடம் அருகே இருந்த சுமார் 25 வீடுகள் இடிந்து நொறுங்கின. சில வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்து விட்டன. இந்த வீடுகள் இடிந்ததோடு தீ பிடித்து எரிந்தன.

வீடுகளுக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். அதில் சுமார் 10 பேர் வரை இறந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் மொத்தம் 25 பேர் வரை பலியாகி விட்டனர். எனினும் 50 பேர் வரை இறந்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

இதை வாசித்தீர்களா? :   இராமநாதபுரம் தமிழகத்தின் உயிர்மூச்சு!

வெடிகுண்டு வெடித்த இடம் அருகே பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அந்த பள்ளிக்கூடம் கடுமையாக சேதமடைந்தது. சாலையோரம் இருந்த 2 தேநீர்க் கடைகளும் நொறுங்கின.

குண்டு வெடித்த சத்தம் பல மைல் தூரத்துக்கு கேட்டுள்ளது. செண்டூர் கிராமமே இந்த குண்டு வெடிப்பால் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. மக்கள் பிரமையில் பேச கூட இயலாதபடி காணப்பட்டனர்.

செண்டூர் கிராமத்தை அலறவைத்த இந்த குண்டு வெடிப்பில் மேலும் 60 பேர் சிக்கிக் கொண்டனர். இவர் களில் 50 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு திண்டிவனம், விழுப்புரம், ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவத்தில் செண்டூர் கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வாகனங்களும், 7 மோட்டார் சைக்கிள்களும் நொறுங்கின.

குண்டு வெடித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத் துக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பிரேஜிந்திர நவநீத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா விரைந்து சென்று பார்வையிட்டனர். விழுப்புரத்தில் இருந்து உயிர்காப்பு ஊர்திகள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டன.

கார் குண்டு வெடித்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

இனி இச்சம்பவத்தின் மூலம் நமக்கு எழும் சில கேள்விகள்:

குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண் TCQ 3033 என்று தெரிய வந்துள்ளது. இது மிகவும் பழைய பதிவு எண் ஆகும். கிட்டத்தட்ட 25 முதல் 30 ஆண்டுகள் பழைய, கிட்டத்தட்ட குப்பையில் வீசப்பட்ட இந்தவாகனத்தை விலைக்கு வாங்கி அதில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை கடத்தி இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள பெரும் ஆய்வு தேவையில்லை.

RDX வகை குண்டுகள்:

காரில் வெடித்த குண்டுகள் RDX வகையைச் சேர்ந்தவை என்று போலீசார் நடத்திய முதல் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த RDX குண்டுகள் யாருக்காக, எங்கு கொண்டு செல்லப்பட்டது என்ற விபரம் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை இத்தகைய வாகன வெடிகுண்டு வெடித்தது இல்லை. பின்னர் வந்து கொண்டிருக்கும் செய்திகளோ இது பாறை உடைக்கப் பயன்படும் குண்டுகள் என்று ‘தீவிரம்’ குறைத்துச் சொல்லப்படுகின்றன.

தொடர்புடையோர்:

குண்டுகள் வெடித்த வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரும் அவருடன் வந்த மேலும் 2 பேரும் வாகனத்தில் இருந்து புகை வந்ததுமே கீழே குதித்து தப்பி ஓடி விட்டனர். அவர்களின் இருவரின் பெயர்கள் சண்முகம், பாபு என்று தெரிய வந்துள்ளது. வாகனத்துக்குச் சொந்தக்காரார் சேகர் என்பவர் முறைப்படி வெடிபொருள் உரிமம் வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவருக்கு RDX வெடிபொருளுக்கும் சேர்த்தே அரசு உரிமம் அளித்ததா?

இதை வாசித்தீர்களா? :   திருவள்ளூர் இந்து முன்னணி தலைவர் கொலை: குமரி மாவட்ட வாலிபரிடம் விசாரணை

பள்ளம் குறித்த குழப்பம்:

வெடிகுண்டு வெடித்த இடத்தில் ஏற்பட்ட பள்ளம் முதலில் ஆறு அடியாகச் சொல்லப்பட்டது அதுவே பின்னர் வந்த தகவல்களில் இரண்டடியாகச் சொல்லப்படுகிறது. இதுவும் இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் தெரியவந்த பிறகு தானா?

இதற்கு முன் சென்னையில் பிடிபட்ட ராக்கெட் ஏவுபொருள் குறித்த விசாரணை என்ன ஆனது என நாம் அறிந்தவரை அரசிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை.

இந்த குண்டுவெடிப்பில் தமது நெருங்கிய சொந்தங்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவான விசாரணைகளும் பொதுவில் நிறைவேற்றப்படும் கடும் தண்டனைகளுமே இது போன்ற குற்றங்கள் குறைய வழிவகுக்கும்.