கொரோனா தொற்று, தினமலருக்கு

Share this:

டெல்லி விழாவில் கலந்து கொண்ட அமேசான் எழுத்தாளர்கள் பத்து பேருக்கு கொரோனா தொற்றா…?

இதில் குறிப்பாக ஏழு பேர் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள். அமேசான் நிறுவனம் எழுத்தாளர்களுக்கான ஒரு போட்டி வைத்தது. அதில் நெடுங்கதை பிரிவில் ஐந்து பேரும், குறுங்கதை பிரிவில் ஐந்து பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஏழு இடத்தை தி.மு.கவினர் குறுக்கு வழியில் கைப்பற்றினர்.

ஒவ்வொரு பிரிவிலும், ஐந்து பேரில் முதல் மூன்று இடங்களுக்கான தேர்வு மார்ச் 12 ஆம் தேதி “டெல்லியில்” நடைபெற்றது. அதில் இந்த பத்து பேரும் கலந்து கொண்டனர். இவர்களுக்கு அந்த சமயத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திராவிட இயக்கத்தை சேர்ந்த ஏழு பேரில் ஒருவர் அரியலூர் தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர். இவர் முன்னாள் எம்.எல்.ஏவும் ஆவார். இவரால் கொரோனா தி.மு.கவில் பரவியிருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தி.மு.க தொண்டர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி பரிசோதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

தினமலரில் இப்படிச் செய்தி வந்திருக்க வேண்டியது, ஜஸ்ட் மிஸ்!

ஆமாம். போட்டி முடிவுகளுக்காக, எங்களுக்கு மார்ச் 12 டெல்லி வர டிக்கெட் போட, விமானம் வரை எங்களிடம் கேட்டு முடிவெடுத்துவிட்டனர் அமேசான் நிறுவனத்தினர்.

அந்த சமயத்தில் ஓமனில் கொரோனா பரவ ஆரம்பித்ததால், டாக்டர் சென்பாலன் வருவது சிரமம் என்ற சூழல் ஏற்பட்டது. நாங்களும் போவதற்கு யோசித்துக் கொண்டிருந்தோம்.

மார்ச் 3 அன்று, கொரோனா தொற்றால் நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அமேசான் நிறுவனம் தகவல் கொடுத்தது. அதனால் நாங்கள் டெல்லி செல்லவில்லை.

தினமலருக்கு தலைப்புச் செய்தி தவறிப் போனது.

யாரைக் குதறலாம் என்று தினமலர் காத்திருந்த நேரத்தில் தப்லிக் ஜமாத் சிக்கிக் கொண்டது. அதற்கு ஒரு காரணம் இருந்தது. கொரோனா சமூக விலகலை சுட்டிக்காட்டி, பார்ப்பனர்கள் கடைபிடித்த தீண்டாமை சரிதான் என ஒரு கார்டூனைப் போட்டுவிட்டு, பலரின் கண்டனத்திற்கு ஆளாகி விழித்துக் கொண்டிருந்தது தினமலர். அதில் இருந்து தப்பிக்க தப்லிக் ஜமாத்தைப் பிடித்துக் கொண்டது.

அது தான் இப்போது தப்லிக் ஜமாத் மீது பொய் எப்.அய்.ஆர் போடுகிறது தினமலர்.

தப்லிக் ஜமாத் கூட்டம் கூட்டியது தவறு இல்லையா என்று சங்கிகள் குதிக்கிறார்கள். கூட்டம் கூட்டியது தவறு இல்லை. அவர்கள் ஊர் திரும்ப வழி இல்லாமல் 24 மாலை லாக் டவுன் அறிவிக்கப்பட்டு விட்டது.

இஸ்லாமியர்கள் கூடுவதை பாரதிய ஜனதா அரசு கண்காணிக்காமலா இருக்கும். உளவுத்துறைக்குப் பணியே அது தானே. ஆனால் கண்காணித்துக் காத்திருந்தார்கள்.

மத்திய பிரதேச ஆட்சிக்கு பா.ஜ.க பெரும்பான்மை நிரூபிக்க, ஜனதா கர்ஃபியூவுக்கு பிறகு லாக் டவுனை தள்ளி வைக்க முடிந்தவர்களுக்கு, இது தெரியாதா?

இவர்கள் மட்டும் தான் இப்படி கூடினார்களா?

மார்ச் 6,7 மற்றும் 8ஆம் தேதிகளில், ஹைதராபாத்தில் ISAR annual conference நடைபெற்றது. ISAR என்றால் Indian society of Assisted Reproduction என்று அர்த்தம். இந்திய செயற்கை கருத்தரிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் ஆண்டு மாநாடு. முழுவதும் மருத்துவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு. கலந்து கொள்ள பதிவு செய்த 3500 மருத்துவர்களில் 1800 பேர் மாத்திரம் கலந்து கொண்டனர். கொரோனா பயத்தின் காரணமாக தான் எண்ணிக்கை குறைந்தது. சங்கமே இந்த நிகழ்வை தள்ளி வைத்திருக்க வேண்டும். ஆனாலும் நிகழ்வை நடத்தினர்.

பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்குக்கு பிறகும், உத்தரப்பிரதேச முதல்வர் ராமர் கோவில் பூஜையில் பெரும் கூட்டத்தோடு கலந்து கொண்டு சிறப்பித்தார். அது விமர்சனம் ஆகவில்லை.

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் லண்டனிலிருந்து கொரோனா உடன் வந்தார். பரிசோதிக்காமல் உள்ளே விட்டார்கள். அவரை சந்தித்த முன்னாள் ராஜஸ்தான் பா.ஜ.க முதல்வர் வசுந்தராஜே, அவர் மகன் எம்.பி துஷ்யந்த், உத்தரப்பிரதேச பா.ஜ.க அமைச்சர் என தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டார்கள். அரசு இவர்களை பரிசோதனை செய்யவில்லை. ஆனால் கனிகாவுக்கு தினம், தினம் சோதனை நடக்கிறதாம். யாருக்கு பயமோ. தினமலருக்கும், சங்கிகளுக்கும் இந்த செய்தி தெரியவே தெரியாது.

சீக்கிய குரு பல்தேவ் சிங். இவர் இத்தாலி, ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் போய் வந்தார். வந்தவர் கொரோனாவையும் அழைத்து வந்தார். 15 கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரசங்கம் செய்தார். கொரோனாவால் இறந்து போய் விட்டார். அவருடன் இருந்தவர்கள் பலர் பாசிட்டிவ் என உறுதி ஆகியுள்ளது. இப்போது அந்த 15 கிராமங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

சங்கிகளின் விமர்சனங்களுக்கு இடமளிக்காமல் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு சென்று வந்தவர்கள், அரசு அறிவிப்பு வந்த உடன் தாமாக பரிசோதனைக்கு வந்து விட்டனர்.

அதிலும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு இன்னும் சோதனையே செய்யப்படவில்லை. ஆனால் அதற்குள் அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என தினமலர் செய்தி போட்டு மகிழ்கிறது.

கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரி “உற்சாக நடனம்” ஆடியவர்களை குறித்து பல செய்திகள் வருகின்றன. ஈஷா மையம் உடனே அறிக்கை விடுகிறது. அங்குள்ள, வெளி நாட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார்களாம். யாருக்கும் கொரோனா இல்லையாம். அவர்களே பரிசோதனை செய்து பார்த்து விட்டார்களாம். இது தினமலர் கண்ணுக்கு தெரியாது. காரணம் ஜக்கிவாசுதேவ் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஆள்.

திருநெல்வேலி மேலபாளையம் இஸ்லாமியர் பகுதியில் சோதனை செய்கிற அரசு ஈஷாவில் நுழையாது. காரணம், பிரதமர் மோடியின் அன்பைப் பெற்றவர் ஜக்கி.

# கொரோனாவைவிட கொடுமை இவர்கள் அரசியல்…

oOo

நன்றி : எஸ்.எஸ்.சிவசங்கர்
திமுகவின் அரியலூர் மாவட்டச் செயலாளர், குன்னம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.