இசுலாமியர்கள் குறித்த ஆவணப் படம்

Share this:

“கதிகருடன் என்னும் வென்றிக் கடும்பறவை மீதேறி” பெருமாள் ஊர்வலம் போகும் காட்சியுடன் தொடங்குகிறது இசுலாமியர்களைப் பற்றிய ஆவணப்படம். ஊர்வலம் சென்ற சற்று நேரத்துக்குப் பின்னர், மசூதியில் இருந்து பாங்கு ஒலிக்கிறது.

மதத்தால் இசுலாமியர்கள். மொழியால் தமிழர்கள். ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே தமிழகத்தின் கலாசாரக் கூறுகளை ஏற்றுக் கொண்டு இந்த மண்ணில் செம்புலப்பெயர் நீர்போல் கலந்து போன தன்மையை இக்காட்சி உணர்த்துவதாக எடுத்துக் கொள்ளலாம்.

“யாதும்” என்ற பெயரில் அன்வர் உருவாக்கியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 13-ம் தேதி (2013) வெளியிடப்பட இருக்கிறது. “தன்னுடைய வேர்களைத் தேடும் ஒரு தமிழ் இசுலாமியரின் பயணம் இப்படம்” என்கிறார் அவர்.

பச்சைவண்ணம் போர்த்தியிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமர்ந்திருக்கும் கோம்பை கிராமத்தில் தான் இக்காட்சி படமாகியிருக்கிறது. அது அன்வரின் சொந்த ஊர்.

கோம்பை என்றாலே கிலியை ஏற்படுத்தும் நாய்கள் கண்முன்னே தோன்றுகின்றன. கோம்பை நாய்களைப் பார்த்து வியந்து போன திப்புசுல்தான், தன்னுடைய படைக்கு வேண்டிய நாய்களை பெற்று சென்றிருக்கிறார். அதற்குக் கைமாறாக ஒக்கலிகர் சமுதாய மக்களின் ஊர் கோயிலுக்கு அரங்கநாதர் சிலை செய்து தந்திருக்கிறார். 1980-களில் அது திருட்டுப் போனது.

படத்தை குறித்து விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, உள்ளே நுழைந்து, நாற்காலியில் ஏறு வதும், குதிப்பதுமாக இருக்கும் சின்னஞ்சிறு மகளைப் பார்த்து “அமிரா நாச்சியார் பேசாம இரு” என்று அன்வர் சொன்னதும் சற்று வியப்பு.

“தமிழ் இசுலாமியப் பெண்கள் நாச்சியார் என்று பெயரிட்டுக் கொள்வது புதிதல்லவே. என்னுடைய தாயாரின் பெயர் கூட செல்லம்மாள், என்று விளக்கம் தருகிறார் அன்வர். அவருடைய உறவினர்களி்ல் நைனார்களும், முத்துக்கனிகளும், இரத்தின முகமதுகளும் உண்டு.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இப்படம், இப்போதுதான் முடிவடைந்திருக்கிறது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் ஆயிரமாவது ஆண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றபோது, தொல்லியல்துறைக்காக அக்கோயிலைப் பற்றிய ஆவணப்படம் தயாரிக்கப் பணிக்கப்பட்டதால், இந்த கால அவகாசம் தேவைப்பட்டது என்கிறார் அன்வர்.

ஐம்பது நிமிடங்கள் ஓடும் யாதும், தமிழ் மண்ணில் இசுலாம் வேர் விட்ட வரலாற்றையும், இசுலாமியர்களின் மூதாதையர்களையும், அவர்களோடு வளர்ந்த, வளர்க்கப்பட்ட வணிகம், கல்வி, இலக்கியம் என எல்லா கூறுகளையும் ஆவணப்படுத்தியுள்ளது.

http://i1.ytimg.com/vi/k74WJg5pjVk/0.jpgஅன்று தமிழகத்தில் விளைந்த குறுமிளகு எனப்படும் நல்லமிளகு, ஏலக்காய் ஆகியவற்றுக்கு சீனத்திலும், ஐரோப்பா கண்டத்திலும் ஆப்பிரிக்கா விலும் பெரும் வரவேற்பு இருந்தது. வணிகம் மூலம் பெரும் பொருளீட்டி, உலகத்திலேயே செல்வச்செழிப்பு மிக்கதாக தமிழ்மண் விளங்கியது என்றால், மேற்கு ஆசியாவுடனும், பின்னர் குறிப் பாக இசுலாமியர்களுடன் செய்த வணிகமும் காரணம். அதனால்தான் 11-ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் அவர்களுக்கு வரவேற்பும் செல்வாக்கும் இருந்தன என்கிறார் அன்வர்.

இந்த நறுமணப் பொருள் வணிகம் தான் 7-ம் நூற்றாண்டில் அரேபியாவில் பரவிய இசுலாமை தமிழகத்துக்கும் கொண்டு வந்து சேர்த்தது. இப்படத்தில் தோன்றும் வரலாற்று ஆய்வாளர்களும் அக்கருத்தை வலியுறுத்துகிறார்கள்.

தஞ்சைப் பெரியகோவிலின் கல்வெட்டில் காணப்படும் சோணகன் என்ற வார்த்தை இசுலாமிய வியாபாரிகளைக் குறித்ததே. இராஜராஜனின் மகன் இராஜேந்திர சோழனின் அரசாணை யாக வெளியிடப்பட்ட ஆனைமங்கலம் செப்பேட்டில் அத்தாட்சியாக துருக்கன் அகமது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரி கோயில் மண்டபத்தில் காணப் படும் கப்பலில் நிற்கும் குதிரை சிற்பம், தமிழக கடற்கரைக்கு வந்திறங்கிய அராபியக் குதிரைகளை சித்தரிக்கிறது. இதே போன்றதொரு சிற்பம் திருக்குறுங்குடி கோயிலிலும் உண்டு. திருபுடைமருதூர் கோயிலில் ஓர் ஓவியம் உண்டு என்கிறார் அன்வர்.

அராபியக் குதிரைகளை வாங்கப் போன மாணிக்கவாசகருக்காகத்தானே இறைவன் நரிகளைப் பரியாக்கி திருவிளையாடல் புரிந்தான் என்கிறது புராணம்.

தமிழகத்தின் கடற்கரை நகரங்களில் பயணம் செய்து, தன்னுடைய தமிழ் வேர்களைத் தேடும் அன்வர், பழவேற்காட்டிலும், காயல்பட்டினத்திலும், கீழக்கரையிலும், நாகூரிலும் அவற்றைக் கண்டெடுக்கிறார்.

தமிழகக் கோயில்கள் ஒரு கட்டத்தில் கற்றளிகளாக மாற்றம் கண்டன. அதே போல் மசூதிகளும் கல்லுப்பள்ளிகளாக மாறின. தமிழகம் முழுவதும் நூற்றுக் கணக்கான அப்பள்ளிகள் உண்டு.

ஆழ்வார்த்திருகரியில் பொலிந்து நின்ற பிரான் கோயிலுக்கு அருகில் உள்ள பள்ளியே இதற்கு சாட்சி.

மிக அற்புதமான கல்லுப்பள்ளிகள் காயல்பட்டினத்திலும் கீழக்கரையிலும் இருக்கின்றன. கோயில்களி்ல் காணப்படும் கல்தூண்களுக்கும் பள்ளிகளில் காணப்படும் கல்தூண்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், பள்ளிவாசல்களில் உள்ள தூண்களில் மனித உருவங்களுக்கு முற்றிலும் இடமில்லை. மற்றபடி கல்தூண்களின் அலங்கரிப்பும், தூண்களின் முனையில் காணப்படும் வாழைப்பூ வடிவமும் திராவிடக் கட்டிடக்கலையின் சிறப்பை பறைசாற்றி நிற்கின்றன.

தமிழ் மாதங்கள் பொறிக்கப்பட்டு, தமிழிலேயே தொழுகைக்கான நேரத்தைக் குறிக்கும் எண்கள் பொறிக்கப்பட்ட கல்தூண்கள் தென் மாவட்டங்களில் பல பள்ளிவாசல்களில் உண்டு.

அன்வர் காட்சிப்படுத்தியிருப்பதில் முக்கியமானது மதுரை புட்டுக்கோயிலுக்கு ஓர் இசுலாமிய குடும்பம் ஆண்டுதோறும் செய்து வரும் கைங்கர்யம்.

ஆண்டுதோறும் பிட்டுக்கு சிவபெருமான் மண் சுமந்த கதை இக்கோயிலில் நிகழ்த்தப்படுகையில், யாகக் குண்டத்தைச் சுற்றி வேலி அமைத்துத் தரும் பணியை இந்த இசுலாமியக் குடும்பம் தலைமுறை தலைமுறையாக செய்து வருகிறது. விழா முடிந்ததும் அறங்காவலர்கள் இக்குடும்பத்தினருக்கு மரியாதை செய்கின்றனர்.

இசுலாமியர் தமிழறிஞர்களின் பங்களிப்பு குறித்து பேசும் கவிஞர் அப்துல்ரகுமான் முக்கியமான ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். தமிழில் ஏற்கெனவே வழக்கத்தில் உள்ள வடிவங்களில் பல படைப்புகளை உருவாக்கிய இசுலாமிய அறிஞர்கள், தாங்கள் பயின்ற பாரசீக, அரேபிய இலக்கியங்களின் தாக்கத்தால் புதிய வடிவங்களான படைப்போர், முனஜாத், நாமா போன்றவற்றை தமிழில் அறிமுகம் செய்தனர்.

இசை வடிவங்களிலும் தமிழே பரவி நிற்கிறது. ஆழிப்புலவர் எழுதிய மிகராஜ் மாலையில் இருந்து உருவிலியாய் உணர்விலியாய் என்ற வரிகளை காபி ராகத்தில் உருக்குகிறார் குமரி ஆபூபக்கர். அதில் நம்மாழ்வாரின் பாசுரம் இசையுருவாய் எழும் உணர்வு வெளிப்படுகிறது. விருத்தம் முடிந்ததும் “என்ன தவம் செய்தனை” என்று யசோதாவை அழைப்பாரோ என்று பீறிடும் எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை.

படத்தில் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் எடுத்துரைக்கும் நிகழ்வும் முக்கியமானது.

கடற்கரை கிராமங்களில் மஸ்கோத் அல்வா விற்கும் இசுலாமிய தாத்தா, யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்காமல் நேரடியாக அடுக்களைக்குச் சென்று, தட்டை எடுத்து சோற்றைப் போட்டு சாப்பிட முடிகிறதென்றால், கடற்கரை மீனவ மக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையேயான உறவு புலப்படும்.

நான் ஒரு தமிழன். நான் ஒரு இசுலாமியன் என்று பல அடையாளங்களை உள்ளடக்கியவன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாசகங்களுடன் இப்பயணத்தின் முதல் அத்தியாயம் முடிகிறது.

த ஹிந்து (நவம்பர் 11, 2013)

தொடர்புடைய ஆங்கிலச் செய்தி: http://www.satyamargam.com/english/2410-yaadhum-in-search-of-roots-and-identity.html

இப்படம் பற்றிய கூடுதல் தகவல் அறிய: http://yaadhum.com

 


 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.