
கல்வியும், கல்வி வளாகமும் மனிதனுக்கு சரியான, முறையான, சமூகம் சார்ந்த அறிவை வழங்கி, சமூகத்தில் நிலவும் அநீதிகளை, பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு வழங்கும் இடமாகத் திகழ வேண்டும். சமூக அநீதிகள் அங்கும் அப்படியே பிரதிபலிக்குமானால் கல்வியும், கல்வி வளாகமும் இருந்து என்ன பயன்?
இந்திய தேசம் சுதந்திரமடைந்து 68 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளியில் இந்தியன் பல நிலைகளில், பல துறைகளில் வளர்ச்சியடைந்தும், மனிதன் எனும் நிலையில் ஏனோ இன்னும் வளர்ச்சியடையாமலே இருக்கின்றான். ஒரு மனிதன் சக மனிதனை தனது அன்பால், நேசத்தால் இணைக்காமல், அவனை துச்சமாக, இழிவாக பார்க்கும் அளவுக்கு ஆதிக்கவெறி என்னும் நெருப்புக் கற்கள் சிலரின் உள்ளங்களில் நிறைந்து காணப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான தொடர் தாக்குதலின் வெளிப்பாடே ஹைதராபாத் பல்கலைக்கழகத்தை சார்ந்த தோழர் ரோஹித் வெமுலாவின் தற்கொலை. (SatyaMargam.com)
ஒரு சித்தாந்தம், ஒரு கொள்கை தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அல்லது தன்னை மேலோங்க செய்வதற்காக அது தன்னிடமுள்ள சமூகப் பிரச்சனைகளுக்கான அழகிய தீர்வுகளை முன்வைக்க வேண்டும் அல்லது தான் பிறரிடமிருந்து எப்படி வேறுபட்டு சிறந்து விளங்குகின்றோம் என்று சொல்ல வேண்டுமே தவிர, பிற சித்தாந்தங்களின், பிற கொள்கைகளின் குரல்வளைகளை நெரித்துவிட்டு தான் சிறந்தவன் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
ஆராய்ச்சி மாணவரான ரோஹித் வெமுலா அம்பேத்கர் பேரவையின் மூலம் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதனை தாங்க முடியாத வி.ஹெச்.பி அமைப்பினரும், சில அமைச்சர்களும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நிர்வாகம் ரோஹித் வெமுலா உட்பட 5 மாணவர்களை விடுதியிலிருந்து நீக்கம் செய்ததோடு, அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர். தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக அவர்களின் மீது பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து மன அழுத்தத்தை தாங்க முடியாமல் இறுதியில் ரோஹித் வெமுலா தனது பிறப்பையே கேள்வி கேட்டவராக தற்கொலை செய்து கொண்டுள்ளார். நமது தேசத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளுக்கான இன்னொரு சாட்சியம் தான் ரோஹித் வெமுலாவின் மரணம்.
ஒரு சித்தாந்தம், ஒரு கொள்கை தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அல்லது தன்னை மேலோங்க செய்வதற்காக அது தன்னிடமுள்ள சமூகப் பிரச்சனைகளுக்கான அழகிய தீர்வுகளை முன்வைக்க வேண்டும் அல்லது தான் பிறரிடமிருந்து எப்படி வேறுபட்டு சிறந்து விளங்குகின்றோம் என்று சொல்ல வேண்டுமே தவிர, பிற சித்தாந்தங்களின், பிற கொள்கைகளின் குரல்வளைகளை நெரித்துவிட்டு தான் சிறந்தவன் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? கொள்கையை பரப்புவர்கள் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருந்தாலும் அது அநியாயமே….!
தேசத்தின் வளர்ச்சி என்பது அனைத்து தரப்பினரும் வளர்ச்சி பெறுவதுதானே தவிர ஒரு குறிப்பிட்ட சாரார் வளர்ச்சி பெற்று இன்ன பிற சாரார் வளர்ச்சி பெறாததல்ல…!
தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் காலம் காலமாக நடைபெற்று வருகின்றது, இப்போது பி.ஜே.பி அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு இந்த மாதிரியான தாக்குதல்கள் கல்வி வளாகங்களை குறிவைத்தும் நடத்தப்படுகின்றன. இந்த ஜனநாயக நாட்டில் ஆட்சியாளர்களை, ஆட்சி முறையை விமர்சனம் செய்வதற்கு என்ன தடை இருக்கின்றது? இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசாகத்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது. மேலும், தனக்கெதிராக பேசக்கூடிய, நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய குரல்களை அதிகாரத்தைக் கொண்டு நசுக்க நினைக்கின்றது மத்திய அரசு.
தேசத்தின் வளர்ச்சி என்பது அனைத்து தரப்பினரும் வளர்ச்சி பெறுவதுதானே தவிர ஒரு குறிப்பிட்ட சாரார் வளர்ச்சி பெற்று இன்ன பிற சாரார் வளர்ச்சி பெறாததல்ல…! பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் ஆராய்ச்சி களத்திற்கு வருவது என்பது வளர்ச்சிக்கான அடையாளம்! அதனை ஒடுக்க நினைப்பது ஆதிக்க வர்க்கத்தின் அகங்காரம்!
பி.ஜே.பி கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு கல்வி காவிமயமாக்கப் படுதலுக்கான பணிகளைத் தொடர்ந்து இப்போது கல்வி வளாகங்களையும் காவிமயமாக்க நினைக்கின்றது. காவிமயமாக்கலின் ஆரம்ப விளைவே மாணவர்களின் மீதான நடவடிக்கை. இதனை இப்படியே விட்டுவிடக் கூடாது. கல்வியும், கல்வி வளாகமும் காவிமயமாக்கப் படுதலுக்கு எதிராக மாபெரும் மாணவ கிளர்ச்சி ஏற்பட்டே ஆக வேண்டும். அதற்காக ஒட்டுமொத்த மாணவ சமூகமும் போராட வேண்டும். நமது போராட்டங்கள் மனித நேயமிக்க புதிய தலைமுறை உருவாக்குவதற்காகவும், நமக்கு மத்தியில் காழ்ப்புணர்வை, ஏற்றத்தாழ்வினை ஊட்டக்கூடியவர்களை அடையாளம் கண்டு தோல்வியுற செய்வதற்காகவும் பயன்படட்டும். நிச்சயமாக நமது இந்த ஆக்கப்பூர்வமான ஒவ்வொரு போராட்டமும் ரோஹித் வெமுலாவின் கனவை நனவாக்கலாம்.
– M. சையது அபுதாஹிர் M.Sc., M.Phil., (Ph.D)