அசிங்கப்பட்டது ராகுலா? தினமலரா?

டந்த 1925 இல் ஆர்.எஸ்.எஸ் நிறுவுவதற்கான சத்தியப் பிரமாண பத்திரத்தில், “பொய்மையே வெல்லும்; கலவரம் இல்லையேல் கட்சி இல்லை!” ஆகியவற்றை அடிப்படை விதிகளாக வைத்திருப்பார்கள் போலும். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் இரத்தம் தரையில் தெறிக்கும்முன், கொன்றது முஸ்லிம் என்று இந்தியா முழுக்கக் கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்கள், இன்று வரை புதுப்புது திட்டங்களாகச் செயல்படுத்தப் பட்டுக்கொண்டே வருகின்றன.

‘பொய்ச் செய்தி (Fake news) பரவுவதைத் தடுக்க பாஜக அரசு இந்திய பீனல் கோடு எண்கள் 124A, 153A, 153B, 295A, 500, மற்றும் 505 சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் கைதுகள் செய்வது எதிர்கட்சியினரை மட்டும்; அதிலும் விழிப்புணர்வுள்ள மக்களுக்கு மட்டுமே, நம் சகாக்களுக்கு அல்ல’ என்பதை பாஜக அடிக்கடி தெளிவு படுத்திக் கொண்டே இருக்கிறது. அதனாலேயே பாஜகவுக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் மட்டும், இப் பொய்ச் செய்தி பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கோப்ரா போஸ்ட் நடத்திய Sting operation, தினமலர் குழுமம் எவ்வாறு பணம் பெற்றுக் கொண்டு பொய்ச் செய்திகள் தயாரித்து இந்துத்துவாவிற்கு ஆதரவாக இயங்குகிறது என்பதை வீடியோ ஆதாரங்களுடன் தோலை உரித்துக் காண்பித்திருந்தது.  அதில் பேசும்  தினமலரின் நிர்வாக இயக்குனர் தங்களின் சார்பாக, பிரஸ் கவுன்ஸில் ஆஃப் இந்தியாவில், நபர்கள் நியமிக்கப் பட்டிருப்பதை சொல்லிச் சிரிக்கின்றார்.

திருட்டுப் போய்விட்டது என்று புகார் செய்வதற்கு, பாதிக்கப்பட்டவர் காவல் நிலையம் சென்றால், திருடியவனே மேலதிகாரியாக உட்கார்ந்திருந்தானாம். அந்தத் திமிர் எப்போதுமே தினமலரிடம் இருக்கும். அதனாலேயே விஷமத்தனங்கள் பல செய்து அடிகள் பலமாக வாங்கினாலும் துடைத்துப் போட்டு விட்டு அடுத்த விஷமத்திற்கு தயார் ஆகிவிடுகிறது.

விஷயத்துக்கு வருவோம்!

கடந்த 11-01-2019 அன்று துபையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் ஒரு 14 வயது சிறுமி ராகுலைக் கேள்வி கேட்டு மடக்கியதாகவும், ராகுல் அசிங்கப்பட்டு நிகழ்ச்சியைப் பாதியில் நிறுத்திவிட்டதாகவும் போலிச் செய்தியை தயாரித்து வெளியிட்டது தினமலர். தினமலரைத் தொடர்ந்து, சொல்லி வைத்தாற்போன்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, தினகரன் மற்றும் சில தமிழ் ஊடகங்களும் இதைப் பதிவு செய்தனர்.

அந்த நிகழ்வில் அச்சிறுமி ராகுல் காந்தியிடம், “காங்கிரஸ் பல வருடங்களாக இந்தியாவை ஆண்டு வந்தது. ஆயினும் தற்போது மோடி ஆட்சியில் இந்திய மக்கள் அடைந்துள்ள அளவுக்கு நன்மைகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது வராதது ஏன்? நீங்கள் வாக்கு வேட்டையில் ஈடுபடுவதை விடுத்து ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளிக்கலாமே?” என்று கேட்டதாகவும், அசிங்கப்பட்ட ராகுல் காந்தி நேரலை நிகழ்ச்சியை நிறுத்திக் கொண்டதாகவும் அச் சிறுமியின் படத்தோடு ராகுல் காந்தியின் புகைப்படம் இணைத்து வெளியிட்டது தினமலர்.

இதை வாசித்தீர்களா? :   தமிழகத்தின் நெ.1 ஊடக விபச்சாரி (PRESSTITUTE) யார்?

துபையில் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் சென்று கலந்து கொண்ட தமிழர்கள், தினமலரின் இப்போலிச் செய்தியைக் கண்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்தனர். ஏனெனில் ஆயிரக்கணக்கானோர் குழுமியிருந்த அந்த நிகழ்ச்சியில் யாரும் கேள்வி கேட்கவும் இல்லை. ராகுல் காந்தி இறுதிவரை நிகழ்ச்சியை நிறுத்தவும் இல்லை. தங்கள் தரப்பில் கடுமையான கண்டனங்களைத் தமிழர்கள் சமூக வலைத் தளங்கள் மூலம் பதிவு செய்தனர். ஆயினும் தினமலர் மசியவில்லை.

அச் சிறுமியின் புகைப்படம் மூன்று வருடங்களுக்கு முன்பு “பெண் குழந்தைகளைக் காப்போம்” என்னும் தலைப்பில் 30-04-2016 அன்று பேசிய பழைய வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்டு ராகுல் காந்தியின் புகைப்படத்துடன் இணைத்து, போலிச் செய்தி தயாரிக்கப் பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

ஆதாரத் தரவுகளை சமூக வலைத் தளங்கள் முன்வைத்ததோடு, கண்டனங்கள் கடுமையானதைக் கண்ட தினமலர், அசிங்கப்பட்ட ராகுல் என்று தலைப்பிட்ட அந்தச் செய்தியை சத்தமின்றி தூக்கியது (பதிவு நீக்கப்பட்டு அம்மணமாக, வெட்கம் இழந்து வெற்றுப் பக்கத்துடன் காட்சியளிக்கும் தினமலர் செய்திக்கான சுட்டி: https://www.dinamalar.com/news_detail.asp?id=2190731)

தற்போது இது குறித்த குருமூர்த்தியின் வாந்திப் பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன.

பொய்ச் செய்தி பரப்பிய தினமலரை எதிர்த்து பிரஸ் கவுன்ஸில் சென்று புகார் அளித்தாலும் எதுவும் நடக்காது; என்றாலும்…

தினமலர் வகையறாக்களின் உதவியால் மக்கள் அரங்கில் மீண்டும் ஒருமுறை அசிங்கப்பட்டு அம்மணமாகி நின்றது, பார்ப்பணீயம்!

–அபூ ஸாலிஹா