மோடி அரசைத் தூக்கி எறிய வேண்டும்:பூரி சங்கராச்சாரியார்

புதுதில்லி: சிறுபான்மை சமூகத்தினர் மீது துவேசம் கொண்டு நடந்து வரும் நரேந்திர மோடி அரசால், இந்து சமுதாயத்திற்கே கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. இனியும் மோடி அரசு தொடரக் கூடாது. மோடியைப் பதவியிலிருந்து தூக்கி எறிய மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்று பூரி சங்கராச்சாரியார் அதோக்சானந்த் தேவ தீர்த்த சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளதால் பாஜக பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

சொராபுதீன் படுகொலை தொடர்பாக மோடி பேசிய பேச்சால் பாஜகவுக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் பாஜகவின் வெற்றியை இது பாதிக்குமோ என்ற பயம் பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், பாஜகவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், பூரி மடாபதி கருத்து வெளியிட்டுள்ளார். மோடியைப் பதவியிலிருந்து தூக்கி எறிய அனைத்து மதச் சார்பற்ற சக்திகளும் ஒன்று சேர வேண்டும் என்று பூரி மடாதிபதி அதோக்சானந்த தேவ தீர்த்த சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோத்ரா சம்பவத்திற்குப் பின்னர் சிறுபான்மையினரை ஒடுக்கும் முயற்சியில் மோடி தீவிரமாக இறங்கி விட்டார்.

மோடி அரசின் நியாயமற்ற, இரக்கத்தனமற்றச் செயல்கள், மத நல்லிணக்கத்தைக் கேள்விக்குறியாக்கி விட்டது. இந்து சமுதாயத்தினரை பெரும் அவமானத்தில் தள்ளி விட்டுள்ளது.

இந்துக்களின் நலம் விரும்பி, இந்துக்களைக் காக்க அவதரித்தவர் என்று கூறப்பட்ட மோடியால், இந்துக்கள் இன்று தலை குனிந்து நிற்கின்றனர்.

நந்திகிராம் போன்ற விவாகரங்களில் அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து நிற்கின்றனர். ஆனால் அதற்குப் பதிலாக, மோடிக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும். மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து விட்டு கை கோர்க்க வேண்டும். மோடி அரசை தூக்கி எறிய அனைவரும் முன்வர வேண்டும். அவருக்கு எதிராக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.

இந்து அமைப்புகள் மோடி விவகாரத்தில் இரட்டை நிலையை மேற்கொள்ளக் கூடாது. மோடி மீது அவர்களுக்கு அதிருப்தி இருந்தால் அதை வெளிப்படையாகத் தெரிவித்து அவருக்கு எதிராகச் செயல்பட முன்வர வேண்டும்.

பல்வேறு தீய செயல்களில் ஈடுபட்டும் கூட மோடி கடந்த ஐந்து ஆண்டுகளாக பதவியில் நீடித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இப்போது குஜராத் மக்களுக்கு சரியான நேரம் வந்துள்ளது. மோடியை விரட்ட இதுதான் சரியான நேரம். அனைவரும் ஒருங்கிணைந்து மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பூரி சங்கராச்சாரியார்.

பாஜகவுக்குத் தீவிர ஆதரவு தருபவர்களில் ஒருவரான பூரி சங்கராச்சாரியார் மோடிக்கு எதிராக இவ்வளவு கடுமையாக கருத்துத் தெரிவித்துள்ளதால் பாஜக தரப்பு ஆடிப் போயுள்ளது.

இதை வாசித்தீர்களா? :   ஸச்சார் அறிக்கை: முஸ்லிம்கள் சலுகைபெற சங்பரிவார் கடும் எதிர்ப்பு

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்


இதுவரை பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தித் தேர்தல் வாக்குச் சேகரித்து வந்த மோடி தற்போது வெளிப்படையாகவே சிறுபான்மையினருக்கு எதிரான வெறியூட்டும் பேச்சைப் பேசி வாக்குச் சேகரித்து வருவது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானதாக இருந்தாலும் இதுவரை மோடியின் இப்பேச்சு குறித்து உச்ச நீதிமன்றம் எந்த ஒரு கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை என்பது நினைவில் கொள்ளத் தக்கது.