குஜராத் அரசின் கவனக்குறைவே வதோதரா வன்முறை சம்பவத்துக்கு காரணம்’

Share this:

வதோதரா வன்முறை சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று (02-05-2005) ஐந்தாக உயர்ந்தது. நிலைமை சீரடைந்ததால் ஒரு சில மணி நேரம் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
குஜராத்தில் உள்ளது வதோதரா. இந்த வதோதரா மாநகராட்சி நிர்வாகத்தினர் ஐகோர்ட் உத்தரவின் பேரில் நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள், இந்து கோவில்கள், சர்ச்சுகள், மற்றும் முஸ்லிம் மசூதிகளையும் இடித்து வந்தனர். இதேபோல் நேற்று முன்தினம் பதேபூரா பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்காவை மாநகராட்சி நிர்வாகத்தினர் இடிக்க முடிவு செய்தனர்.

மாநகராட்சியினரின் இந்த முடிவுக்கு அப்பகுதியிலுள்ள சிறுபான்மையினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சற்று நேரத்தில் பெரிய கலவரமாக மாறியது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், அவர்கள் மீது கல்வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறை சம்பவம் சில மணி நேரத்தில் காற்றுத் தீ போல் அடுத்தடுத்துள்ள ஊர்களுக்கும் பரவியது.

அப்பகுதியிலுள்ள கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. நிலைமை மோசமடைவதைக் கண்ட போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், இறுதியில் 10 முதல் 20 ரவுண்டுகள் வரை துப்பாக்கி சூடு நடத்தியும் கலவர கும்பலைக் கட்டுப்படுத்தினர். போலீசார் நடத்திய இந்த துப்பாக்கி சூட்டில் நேற்று முன்தினம் இரண்டு பேர் பலியாயினர். மேலும், கலவரக்காரர்கள் கத்தியால் குத்தியதில் ஒருவர் பலியானார். நாற்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதையடுத்து, பதட்டம் நிறைந்த பானிகேட், ராவ்லபூரா, வாடி, மற்றும் கரேலிபர்க் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் துப்பாக்கி சூட்டில் இறந்த இருவரின் இறுதி சடங்கில் மீண்டும் வன்முறை வெடித்தது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பகுதிகளிலும் கலவரக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வதோதரா மேயர் சுனில் சோலங்கி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் நடந்த ஒரு வன்முறை சம்பவத்தில் நவாபூரா பகுதியில் இருந்த போலீஸ் அவுட் போஸ்ட்டை 500 பேர் கொண்ட கும்பல் முற்றுகையிட்டு திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரு விரைவு அதிரடிப்படையினர் உட்பட மூவர் படுகாயம் அடைந்தனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதையடுத்து, நேற்று நடந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து பலியானவர்கள் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து வதோதரா போலீஸ் கமிஷனர் தீபக் ஸ்வரூப் கூறுகையில்,

""நிலைமையை கட்டுப்படுத்த விரைவு அதிரடிப்படையினர் களமிறங்கி உள்ளனர். இவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வன்முறை சம்பவங்கள் ஓரளவு குறைந்துள்ளன. எனவே பானிகேட், மற்றும் ராவ்லபூரா பகுதியில் நேற்று பகல் 12.30 மணியிலிருந்து 2.30 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இதேபோல் வாடி மற்றும் கரேலி பர்க் பகுதியில் மாலை 3.00 மணியிலிருந்து 5.00 மணி வரையிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு இருந்தது. வதோதராவிலும் இரண்டு மணி நேரம் தளர்த்தப்பட்டது. வன்முறையால் கடைகள், பள்ளிகள் திறக்கப் படவில்லை,'' என்றார்.

""இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும், சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரை நியமித்து இந்த விசாரணையை நடத்த வேண்டும். கலவரத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்'' என அப்பகுதி முஸ்லிம் தலைவர் சுபேர் கோபாலனி தெரிவித்தார்.

மோடி அரசின் கவனக்குறைவே காரணம் : "குஜராத் அரசின் கவனக்குறைவே வதோதரா வன்முறை சம்பவத்துக்கு காரணம்' என சம்பவ இடத்தை நேற்று காலை நேரில் பார்வையிட்ட மத்திய உள்துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:

நிலைமையை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமோ அதை மாநில அரசு முறையாக துரிதப்படுத்த வேண்டும். இந்த சம்பவம் அரங்கேறியதற்கு காரணம் மாநில நிர்வாகத்தின் புறக்கணிப்பே காரணம். மத உணர்வுகளை வெளிப்படுத்தும் இது போன்ற செயல்களைக் கையாளும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதில் மாநில அரசு தவறிவிட்டது. போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகமும் தவறிவிட்டது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் செயல்பாட்டைப் பொறுத்தே நீதி விசாரணை நடத்த வேண்டுமா? என்பது குறித்து ஆலோசிக்கப்படும். நிலைமையை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு வேண்டிய உதவிகளை மத்திய அரசு செய்யத் தயாராக இருக்கிறது.

இவ்வாறு ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

நன்றி: NDTV


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.